12/12/2022

ஔவைத் திங்கள் - 20 ----------------- மூத்தோர் சொல் கேள்

வள்ளுவன் கம்பனென மாகவிகள் வார்த்ததெல்லாம்
தெள்ளுதமிழ் பாவடியும் தேன்
(1)
 
கற்றோரில் மூத்தோரைக் காண்கின்ற போதெல்லாம்
கற்பிக்கும் நூலகமாய்க் காண்
(2)
 
மூத்தோர்சொல் கேட்டபடி முன்னேறிச் செல்லுங்கால்
ஈர்த்தவண்ணம் கிட்டும் எளிது
(3)
 
வேம்பாய்க் கசந்தாலும் வெல்லும்சொல் சொல்பவரை
வீம்பாய் நினையாமை நன்று
(4)
 
பண்பில் உயர்ந்தவரைப் பக்கத்தில் வைத்திருந்தால்
எண்ணம்சொல் மாறும் இனிது
(5)
 
முன்பிறந்தோர் எல்லோரும் மூத்தோராய் ஆவதில்லை
தன்குணத்தால் மூத்தோரே சான்று
(6)
 
விட்டுக் கொடுக்கின்ற மேன்மை குணமொன்றே
சட்டென்று காட்டிவிடும் சான்று
(7)
 
மறைமொழி காட்டும் வழிபற்றிச் செல்லும்
நிறைகுண மாந்தர்பின் நில்
(8)
 
தப்பென்றால் தப்பில்லை தட்டிடலாம் அச்சொல்லைத்
தப்பாமல் கேளாமை தப்பு
(9)
 
பெரியவர்சொல் கேளாத பிள்ளையின் பிள்ளை
பெரிதானால் கேட்காது பின்
(10)
 
✍️செ. இராசா

No comments: