30/06/2022

தன்நிலையில் நிற்பர் தனித்து!


நிற்கும் இடம்நின்றே
.........நீர்தரும் தென்னைபோல்
நிற்கும் இடம்தன்னில்
.........நேராக- நிற்பவர்கள்
தன்னால் முடிந்ததை
.........தந்துதவும் நற்குணத்தால்
தன்நிலையில் நிற்பர்
.........தனித்து!
 
✍️செ. இராசா
 

29/06/2022

உங்கக் கழுத்தில் தொங்குதே.

 


இதுதான் இங்கேயே உங்கக் கழுத்தில் தொங்குதே... அப்புறம் ஏன்... அவ்வளவு கஷ்டப்பட்டுபோய் பார்த்தோம்.
----என் மகள் என் கழுத்தில் கிடந்த சிவலிங்கத்தைப் பார்த்து இராமேஸ்வரம் ஏன் போய் வந்தோம் என்பதற்காக கேட்ட கேள்வி.
ஆகா.... சிந்திக்க வைக்கும் கேள்வியே இங்கு கண்ணிகளாக.... சிவவாக்கியர் சந்தத்தில்..
 
எங்கிலோ உறையுமொன்றைத் தேடிப்
போகுமுன்னராய்
உன்னிலே உறையுமொன்றை நீயுங் காணவில்லையோ?
 
என்னிலே உறையுமொன்றை நானுங் கண்டுகொண்டதால்
எங்கிலும் உறையுமுண்மை ஒன்றாய் ஒன்றிநிற்கிறேன்!
✍️செ. இராசா

அர்த்தம் புரிந்தது.....

 




பனையோலை வாசம்
பதநீரில் மோத
இதழுறிஞ்சும் வேகம்
அடிநெஞ்சில் ஊற்ற
அமிர்தமெனில் யாதென்ற
அர்த்தம் புரிந்தது.....
 
✍️செ. இராசா

காத்து வாங்குது திரையரங்கு

 


காத்து வாங்குது திரையரங்கு
....கானல் ஆகுது பலர்கனவு
நேத்து வந்தது இணையரங்கு
.....நின்னு போனது கலையரங்கு
ஊத்தி மூடுது கவியரங்கு
.....ஊத்தக் கூடுது மதுவரங்கு
கூத்து கட்டுது பொழுதரங்கு
.....கூந்தல் ஆனது பொதுவரங்கு!
 
✍️செ. இராசா
 
(நேற்று பார்க்கப்போன படத்தின் நிலையிது. படமும் அப்படித்தான் இருந்தது‌.
நான் பாதியில் வந்த படங்களின் வரிசையில் இந்தப்படமும் சேரும். தயவுகூர்ந்து, அது எந்தப்படமென்று மட்டும் கேட்காதீங்க)

கை மாறினாலும்

 

எத்தனை கை மாறினாலும்
பரிசுத்தமாய் உள்ளது
புத்தகங்கள்

27/06/2022

இப்படித்தான் சொன்னீக

 


எங்கிருந்து வந்திடுமோ?
எப்படித்தான் குடிப்பீகளோ?!
........
"நல்ல நாளு பெரிய நாளு
நான் குடிச்சா என்ன தப்பு?"
இப்படித்தான் சொன்னீக
அப்பப்ப குடிச்சீக...
 
"வார நாளு ஒத்த நாளு
லீவு நாளு என்ன தப்பு?"
இப்படித்தான் சொன்னீக
வாராவாரம் குடிச்சீக..
 
"ராத்திரி மட்டும்தான்
பகலெல்லாம் தொடமாட்டேன்"
இப்படித்தான் சொன்னீக
எப்போதும் குடிச்சீக...
 
கண்ணு மண்ணு தெரியாமல்
கண்டபடி குடிச்சுப்புட்டு
குடிக்கிறது தப்பான்னு
கூசாம சொல்றீக....
 
என்ன...
கேக்கத்தான் நாதியில்ல....
 
✍️செ. இராசா

குறளுரையாடல்---கரு-பொது

#குறளந்தாதி
#ஒற்றைப்படை_தமிழ்ப்பேரொளி
#இரட்டைப்படை_இராசா

நடக்கின்ற உந்தன் நடையோ மிடுக்காய்த்
தடம்பதிக் கட்டும் தனித்து!
(1)

தனித்து நடந்தாலும் தள்ளிவிடப் பார்ப்பர்
துணிந்து தெளிவோடு செல்!
(2)

செல்லும் வழியில் செயலினைக் காட்டிடப்
புல்லும் வணங்கும் புரிந்து.
(3)

புரிந்தவர் மட்டும்தான் போகிறார் முன்னே
புரியாதோர்க் கில்லை பிழைப்பு
(4)

பிழைப்பினை நம்பி பிறழ்ந்தே உழல்வோர்
உழைப்பின்றி பெற்றிடுவார் ஊண்
(5)

ஊண்மிகு உண்டும் உறங்கிக் கழித்துமாய்
வீண்வாழ்வு வேண்டாம் விடு
(6)

விடுவது என்றாலும் விட்டொழிப்போம் வீணில்
கெடுவதென்றால் யாவருக்கும் கேடு
(7)

கேடில்லா நற்கூற்றைக் கேட்டபின்னும் மாறாதார்
வீடின்றிப் போவார் விடு
(8)

விடுதலை பெற்றே வியப்பு றுவாயே
கெடுதலை விட்டே கிளம்பு
(9)

கிளம்புகின்ற போதில் கிடைப்பதுதான் என்ன?
உளத்தில் நிறுத்தி ஒழுகு
(10)

ஒழுகிடும் அன்பினில் உன்னையே கண்டேன்
பழக இனித்திடும் பா
(11)

பாவில் சிறந்தநல் பாவொன்றைப் பாடுங்கால்
நாவில் சுவையேறும் நன்று
(12)

நன்றாய்ச் சுவைத்திட்டேன் நானிங்கு நல்லுணவு
உண்டீரோ நீரும் உணவு...
(13)

உணவும்தான் வேண்டுமோ ஓங்குதமிழ் சேர்ந்தால்
இணக்கமுடன் பாடல்  இனிது
(14)

இனிதாய்த் தொடங்கிய இன்றமிழ்ப் பாக்கள்
கனிபோல் இனிக்கும் கனிந்து
(15)

கனிந்துருகி பாடுங்கால் கைகொடுப்பான் என்றே
பணிந்துருகி பாடினர் பா
(16)

பாவினங்கள் எல்லாம் பழகிடும் தோழர்காள்
மேவிடுவார் ஒண்புகழ் மேல்
(17)

மேலிருந்து பார்த்தால் மிகச்சிறிதாய்த் தோன்றுவது
கீழிருந்தால் மாறும் குணம்
(18)

குணம்நாடி நற்செயலின் கொள்கைநாடிச் செல்ல
இனம்கூடி வாழும் இணைந்து
(19)

இணைந்தால் கிடைக்கும் இனிமைப் பயனை
நினைந்து தெளிந்து நட
(20)

✍️ இருவரும்

27.06.2022

26/06/2022

முற்றும் துறந்துவிட்டு

 


முற்றும் துறந்துவிட்டு
......முன்னோக்கிச் சென்றாலும்
சுற்றம் உரைக்கும்
.......சுகவாசி- சுற்றுவதாய்
சொல்லுக்கு சொல்லென்று
.......சொல்லுவதை விட்டுவிட்டு
நல்லதை எண்ணி
.......நட!
 
✍️செ. இராசா

25/06/2022

கசகச வேர்வையில்

 

கசகச வேர்வையில் காற்றாய் மாறி
நசநச கோடையில் வந்தால்- மசமசன்னு
தூங்கிடும் யாவும் துடிப்புடன் துள்ளிட
ஏங்கித் தவிக்குதே ஏன்?

22/06/2022

ந.ம. ஜெகன் அண்ணா- சந்தித்த தருணம் பற்றி குறள் வெண்பாவில்

 


இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான திரு ந.ம. ஜெகன் அண்ணா அவர்களைத் திருப்பூரில் சந்தித்த மகிழ்வான தருணம். அவரைப்பற்றி இங்கே குறள் வெண்பாவில் வழங்குகிறேன்.
 
#முள்ளில்_பனித்துளியில் முன்னோட்டம் காட்டிவிட்டு
சொல்லி அடிக்கின்றார் சூழ்ந்து!
(1)
 
இரண்டாம் படைப்பாய் இவரின்று செய்யும்
#வரதா வரும்போது பார்!!!
(2)
 
உயரத்தில் நின்றும் உருவத்தில் தாழும்
வியப்பூட்டும் வாமனரின் மீள்!
(3)
 
தன்னோடு சேர்ந்தே சகலரையும் ஏற்றிவிடும்
மின்தூக்கி போல்தான் இவர்!
(4)
 
முதல்படம் மூலம் முறையாகக் கற்றே
அதன்மூலம் போறார் அடுத்து!
(5)
 
செய்த பிழைகளைந்து செம்மையுடன் செய்வதினால்
எய்திடுவார் வெற்றி இலக்கு!
(6)
 
சொன்னசொல் காப்பாற்றும் சொற்பநபர் கூட்டத்தில்
அண்ணனுக்கே முன்வரிசை அங்கு!
(7)
 
வாய்ப்பிற்காய் ஏங்குவோர் வாசல் வருமுன்னே
வாய்ப்புதரும் நற்குண மாண்பு!
(8)
 
கலையின்மேல் கொண்டுள்ள காதலால் தானே
நிலையுயர்ந்து நிற்கின்றார் இன்று.
(9)
 
நல்லவராய் வாழும் நமஜெகன் அண்ணாநல்
வல்லவராய் வெல்லயெம் வாழ்த்து!
(10)
 
✍️செ. இராசா

 

21/06/2022

நான் வியந்த மனிதர்- 2

 

இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த அன்பு நண்பர் திரு. சதாசிவம் அவர்களை சந்தித்தது எம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. உண்மைதாங்க... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்காகவே வாழும் மனிதர்களில் முத்தானவர் இவர். இப்பதிவில் என்னால் இவர் செய்த நன்மையை வெளிப்படையாக பதிவிட முடியாவிட்டாலும் பிற்காலத்தில் ஆவணமாக்குவேன் என்பதை இங்கே உறுதியளிக்கிறேன்.
 
நேற்று இரவு 1:30 மணிக்கு விழுப்புரம் வந்த என்னை வரவேற்று, தன் வீட்டில் தங்க வைத்து, காலையில் மிகச்சிறந்த உபசரிப்பில் உணவு வழங்கி, பேருந்து நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தார். இப்படியெல்லாம், எல்லோர் மேலும் அன்பைப் பொழியும் நட்பு கிடைப்பதெல்லாம் அவரவர் செய்த தவமல்லாது வேறென்ன?!
 
இனிய மனமார்ந்த நன்றி ஐயா
🙏
(பிற்காலத்தில் ஒரு வெற்றி விழாவிற்குப்பின் வரும் பதிவில் கூடுதல் விபரங்களை வழங்குவேன்.)
✍️செ. இராசா

18/06/2022

வெக்காளியம்மன்

அகிலத்து நாயகியுன்
...............அன்பாலே தானே
அடியேனும் இன்றைக்கோர்
...............ஆளாக உள்ளேன்
உறையூரில் வாழ்கின்ற
..............உன்னாலே தானே
குறையேது மில்லாது
.............கோலோச்சு கின்றேன்!
 
இட்டவழி காட்டிடவே எம்காளி அம்மா
வெட்டவெளி வீற்றிருப்பாள் வெக்காளி அம்மா
உற்றவழி காட்டிடவே ஓம்காரி அம்மா
பெற்றவலி போக்கிடுவாள் வெக்காளி அம்மா
 
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா 
 
உறையூரை ஆளுகின்ற காளி வெக்காளி
உறவனவே வந்திடுவாள் காளி வெக்காளி
குறை-யூறை நீக்குகின்ற காளி வெக்காளி
குலங்காக்க வந்திடுவாள் காளி வெக்காளி
 
சீட்டெழுதும் பக்தருக்கு காளி வெக்காளி
சீக்கிரமே அருள்தருவாள் காளி வெக்காளி
பாட்டெழுதும் ராசனுக்கு காளி வெக்காளி
பைந்தமிழின் ஒளிதருவாள் காளி வெக்காளி
 
கேட்டவரம் தருபவளே காளி வெக்காளி
கேட்குமுன்னே ஓடிவர்றா காளி வெக்காளி
தேடிவரும் பிள்ளைகளைக் காளி வெக்காளி
தேற்றுகின்ற தாயவளே காளி வெக்காளி
 
சோழர்களின் தெய்வமவள் காளி வெக்காளி
சூழும்வினை வெட்டிடுவாள் காளி வெக்காளி
செந்தமிழின் கொற்றவையே காளி வெக்காளி
முந்தைக்கும் முந்தையவள் காளி வெக்காளி
 
✍️செ. இராசா

16/06/2022

ஔவையின் அளவுகோல்கொண்டு

 "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை"
எனும் ஔவையின் அளவுகோல்கொண்டு
முடிந்தவரை தேடிவிட்டேன்...
சொற்ப எண்ணிக்கையில் சிலர் மட்டுமே கற்புடன்...

சுத்திகரிப்பு

 

எனக்கும் ஆசைதான்
இந்தத் துரு ஏறிய மூளையை
சுத்திகரிப்பு செய்ய...
என்ன செய்வது?!
கழுவும் நீர்கூடக்
கழிவு நீராய் உள்ளதே... .

---செ. இராசா

13/06/2022

எப்போது பார்த்தாலும்

 


எப்போது பார்த்தாலும் இப்படியே பார்த்தீன்னா
எப்படி நான்பார்ப்பேன் ஏன்டியிது- தப்பாக்கும்
அப்பாட்ட வத்திவச்சேன் அம்புடுத்தேன் பார்த்துக்க
இப்போதே தாடி எனக்கு!
 
✍️செ. இராசா

அணிந்துரை--கவிக்குறிப்பேடு



அனைவருக்கும் இனிய வணக்கம்!
 
எளிமையும் அதிரடியும்,
கோபமும் நகைச்சுவையும்,
வேகமும் நிதானமுமென.... இப்படிப் பல முரண்களை தன்னகத்தே கொண்ட இந்தக் கவிஞனின் ஒவ்வொரு கவிதைகளும் மரபும் புதுமையும் கலந்த அழகிய முரணாய் இருப்பதில் ஆச்சரியமில்லைதான். 
 
இங்கே எது கவிதையென்று அடித்துக்கொள்பவர்களின் வாதத்தைக் கேட்டால், நகைப்புதான் வருகிறது. இலக்கண வரம்புக்குள் நெய்யப்படும் மரபுக்கவிதையே உயர்வென்பர் சிலர், இல்லையில்லை,
அதையெல்லாம் உடைத்த புதுக்கவிதையே உயர்வென்பர் சிலர்.
இப்படி ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு வாதம், பலவகை பேதம். அட... மலர்கள் பலவகைகளாய் இருந்தாலும் அனைத்துமே மலர்கள்தானே?. 
அதெப்படி வாடையில்லாத காகிதப்பூவும் மணக்கும் மல்லிகையும் ஒன்றா எனக்கேட்டால் நம்மால் மணமறிய முடிய இயலா காகிதப்பூகூட ஏதோ ஓர் ஜீவராசிக்கு மணம் தரலாம்தானே? என்னைப்பொறுத்தவரை கவிதையின் வரையறை இவ்வளவே. கவிதை கவிதையாக இருந்தாலே போதும்.
 
பாரதி கூறியதுபோல்
"கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"
அந்த வகையில் நம் கவிஞர் செல்வா அவர்கள் வெறும் கவிதை நெய்பவரல்ல,
கவியாகவே வாழ்பவர். அவரின் கவிதைகள் எப்படி இருக்குமென்பதற்கு நான் சொல்லத் தேவையில்லை. அப்படியே சொல்ல முயன்றாலும் அதற்கு ஒரு நூல் போதாது. இருப்பினும், நான் மிகவும் இரசித்த சில கவிதைகளின் வரிகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
* மாசக்கடைசி என்னும் கவிதையில் மாதச்சம்பளம் வாங்குபவர்கள் அனைவரின் மனசாட்சியாய் வருகிறது இவ்வரிகள்;
 
"அடுத்தமாத முதல் வாரத்தில்நான்
அவசரமாய் உயிர்த்தெழுந்து
இரண்டாம் வார இறுதியில்
இறந்து போய்விடுவேன்"
 
*அதேபோல் வாரக்கடைசியை எதிர்பார்த்து வரும் ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கிறதென்பதற்கும் சில கவிதைகள் தந்துள்ளார். 
 
"கண்மூடித் திறப்பதற்குள்
கண்ணைவிட்டு மறைந்துவிடும்
நாளுக்குப்பெயர்தான்
ஞாயிற்றுக்கிழமையாம்....."
 
*பிரிவினை, வலி......எனச் செல்கின்ற கவிதைகளிலெல்லாம் எங்கள் குரு விக்டர்தாஸ் அண்ணாவே வந்ததுபோல் உணர்ந்தேன். நான் "போல" என்று சொல்வதால், தவறாக எண்ண வேண்டாம். இதன் தனித்துவம் வேறு ரகம்.
பிரிவினை என்னும் கவிதையிலிருந்து சில வரிகள் பாருங்களேன்...
 
"படித்துப் பார்க்க
பக்கங்களை நீங்கள்
பிரித்துப் பார்ப்பது
பிரிவினை இல்லையா?
உதடுகளின் பிரிவினைதானே
சொற்கள்...."
 
* கவிஞரின் ஜீவ காருண்யத்தைக் காட்டும் கவிகள் ஏராளம்.
"இரவில் கடிக்கும் கொசுக்களை
இரண்டு கைகளாலும்
அடித்தே கொல்கிறோமே
அது வன்மமில்லையா"
 
இப்படி எறும்பு, சிலந்தி, கரப்பான்பூச்சி, கோழிமுட்டையென நீள்கிறது இக்கவிதை...
 
* பார்வையற்றவனின் பார்வையில் வெள்ளை நிறம் வெறுமையாத்தான் இருக்கும் என்னும் வரிகளெல்லாம் கவித்துவ உச்சம் மட்டுமல்ல மெய்யியல் சார்ந்ததும்கூட...
 
*  தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து- என்னும் வள்ளுவரின் சிந்தனையையொட்டிய கவிகளும் உள்ளது மிகச்சிறப்பு. உதாரணமாக நேர்படப்
பேசு என்னும் கவிதையைப் பாருங்கள்;
"கரத்தைக் குலுக்கும் கரத்தின் உள்ளே
கத்திகள் பதுக்கிய இனங்களும் உண்டு" 
 
*படைதிரட்டு என்னும் கவிதையில் அவர் ஓர் பாடலாசிரியராய்த் தெரிகிறார்.
 
*குடும்பத்தின் அச்சாணி என்னும் கவிதையில் ஒரு கேள்வி கேட்கிறார் பாருங்கள்;
"முச்சங்கம் கண்டுவிட்ட முன்னோடி புலவனெல்லாம்
இலக்கியத்தைப் பாடினானே இல்லாளைப் பாடினானா?!"
என்னிடம் பதிலே இல்லை. உங்களிடம் இருக்கிறதா?!
 
* உயிரும் மெய்யும் கவிதையில் உயிர்மை வரிகள் தத்துவார்த்தமாய் மின்னுகிறது. அதற்கு அவர் தரும் விளக்கம் இதுவரையிலும் யாரும் சொல்லாதது. 
 
"இரட்டைக் கிளவி எனும் பொருளும்
இனிய தமிழில் இங்கிருக்க
தனித்தே பொருளும் தருவதில்லை
தனியே அதற்கும் அர்த்தமில்லை" இந்த உவமை எதற்குத் தெரியுமா? நீங்களே படியுங்கள்.
 
* தியானம் என்னும் கவிதையில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பதைக் கூறிவிட்டு இறுதியாக ஒரு கேள்வி கேட்பார் பாருங்கள்....
"ஆனாலும்... பசிக்கிறதே என்ன செய்ய?" இங்கே எத்தனை கோடி பேர்களின் குரலை, எப்படி இவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டாரே என்றே வியந்தேன்.
 
* காதல் என்னும் கவிதையின் இறுதி வரிகளில் அவரின் வழக்கமான குறும்பு தெரிகிறது.
"கை கூடாவிட்டால்
கவலைப்படாதிரு
அடுத்த காதலுக்கு
அனுபவம் உதவும்"
 
* இப்படி பல வரிகளைச் சுட்டிக்காட்ட ஆசைதான். நீளம் கருதி, மேலும் சில வரிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்;
 
"யார் இரசிக்கப்படவென
காய்கிறது நிலவு?'
 
"புன்னகை புரிந்து வரும்
புரிந்த மனத்தோரிடத்திலெல்லாம்
இயல்பாகவே இருக்கிறது
இரு வெறிநாயின் பற்கள்"
 
"வலிக்காமல் ஒட்டடை அடிப்பது எப்படி?"
 
"அடிமனதின் ஆழத்தில்
வந்து போகாமலில்லை
அம்மா அரைத்துத்தந்த
அம்மிக்கல் துவையல்"
 
"வற்றிப்போனால் மட்டுமே
வலிகளின் வேதனை காட்டும்
குளம்"
 
"கோடையின் சூட்சமம் தெரியாமல்
வாழ்ந்து கெடும் மீன்கள்"
 
"அய்யனாருக்கு கறிச்சோறும்
அம்மனுக்கு கூழுமாய்
கடவுளுக்கம் உண்டோ
பெண்ணடிமைத் தனம்?"
 
"துர்க்கை அம்மனை
மனதிலெப்படி நிறுத்த
சுற்றுக்களை எண்ணுகையில்"
 
"சாணம் சாணமாவதும் சாமியாவதும்
இடத்தைப் பொறுத்தே"
 
"அடுத்தவர்களின்
வேண்டுதல்களுக்காக
தன்
உயிரையே விடுகின்றன
பலி ஆடுகள்"
 
"திருவிழா ஞாபகமும்
பலூன் காரன் மூச்சுமாய்
நேற்று வாங்கிய பலூன்கள்"
 
"செய்த பாவம் கழிக்க
சூலாயுதத்தில் சொருகப்பட்டது
கோழி"
 
"அழுதுகொண்டே வர
அழகாய்ப் பெய்கிறது
மழை"
 
"நீர் இறைக்கப் போய்
நிலவை உடைத்தேன்"
 
மொத்தத்தில் இந்தக் கவிக்குறிப்பேடு என்னும் கவிதை நூல் தொகுப்பு, என் கவிதைப் பயணத்தில் என்னை மட்டுமல்ல உங்களையும் புரட்டிப்போடும் என்றுகூறி, அவரின் கவிப்பயணமும் அவரைப்போலவே தேசாந்திரியாக வலம்வர என் மனமார வாழ்த்துக்களைகூறி விடைபெறுகின்றேன்.
 
நன்றியும் பேரன்பும்,
 
செ. இராசமாணிக்கம்.

12/06/2022

PARTY SONG

 


ஃபிகரா சூப்பர் ஃபிகரா
ட்ரிகரா டூப்பர் ட்ரிகரா
ஃபிகரா.....ஃபிகரா
ட்ரிகரா.......ட்ரிகரா
 
கண்ணு கண்ணோடு கவ்வும் வேளையில்
லப்பு டப்பென்று வெடிவெடிக்கும்
நெஞ்சு நெஞ்சோடு மோதும் வேளையில்
தப்பு தப்பென்று படபடக்கும்
போதும் போதுமென்று துறக்கும்வேளையில்
காதல் பூக்கும் பார்...
சந்தோச வாழ்கைக்கு
சரியான ஒத்திகை
சேர்ந்தேநாம் யாரென்று
.......செய்தே காட்டுவோம்...
வாவா......தப்பில்லை....
 
RAP PORTION:
 
ஃபிகரா ட்ரிகரா லெகரா ஸ்ட்ராங்கா
ஃப்ளவரா க்ளவரா மயக்கும் பியரா
இருக்கா செமையா இவளென் துணையா
வருவா தனியா வரவரப் பெரிதா
ஆசை மிகவே அவளிடம் சேர்க்க
after entry, we are தோஸ்தி
later தோஸ்தி, become Bestie..
after later..... later after.....
though though naughty
you are Beauty....
 
இரவில் நீயென் வெண்ணிலவல்லோ
தினமும் என்னுள் மார்கழியல்லோ
வாவாநீ நேரா நீயென்நயன் தாரா
இனிநாம் புதிதாய் பலராகத்தில் சங்கீதம் தருவோம்
புதுசங்கீதம் தருவோம்
 
OPTION-2 (சூழ்நிலை மாற்றப்பட்டுள்ளது)
 
ஃபிகரா சூப்பர் ஃபிகரா
ட்ரிகரா டூப்பர் ட்ரிகரா
பாம்பா ஆட்டம் பாம்பா
பியரா மயக்கும் பியரா
 
பிகரு பிகரு நான் சூப்பர் பிகராம்
பட்டி தொட்டிகள் கதைகதைக்கும்
டிரிகரு டிரிகரு நான் தோட்டா ட்ரிகராம்
பார்க்கும் விழிகளில் வெடிவெடிக்கும்
பாமு பாமு நான் ஆட்டோ பாமாம்
தொட்டால் தீ சிதறும்
இல்லாத ஒன்றுக்கு
ஏங்காதே என்றைக்கும்
யார்முன்னே யாரென்று
...வாவா காட்டுவோம்
போபோ....நிற்காதே....
 
பகலில் இங்கே தீபங்கள் ஏனோ?
உருகும் மெழுகே உந்நிலை வீணோ?!
வாவாநீ நேரா நான்தான் நயன் தாரா
இனிபார் புதிதாய் பலரூபத்தில்
பல-அவதாரம் அறிவாய்...

11/06/2022

உயிருள்ள பிணம்


 

இறந்த காலத்தைத் தொலைத்தவன்
நிகழ்காலத்தைப் பற்றாதவன்
எதிர்காலத்தைத் துறந்தவன்
காலமில்லா சூனியன்
அர்த்தமில்லா வாயாடி
நிர்வாண தேசாந்திரி
உயிருள்ள பிணம்
உளமில்லாப் பாத்திரம்
இப்படி....
எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்..
அவன் உங்களைப்
பைத்தியமென்றுதான் சொல்வான்...
 
✍️செ. இராசா

10/06/2022

ஈரடியால் இவ்வுலகை .......ஏற்றிவிட்ட வள்ளுவனார்

 


ஈரடியால் இவ்வுலகை
.......ஏற்றிவிட்ட வள்ளுவனார்
நேரடியாய்ப் பார்ப்பதுபோல்
........நிற்கின்றார்- பாருமென
காரைக்* குடிவீட்டைக்
........கண்டவர்கள் சொல்வதற்கு
யாரை வணங்கிடுவேன் யான்?!!
 
நற்சிலையை மாறாமல்
.........வார்த்தெடுத்த சிற்பியையா?
நற்சிலைக்குள் அன்புவைத்த
.........நட்பென்ற - கற்பினையா?*
அச்சிலையை ஏற்றிவைத்த
........ அத்தனைபேர் அன்பினையா?
உச்சத்தில் வைத்தேன் உணர்ந்து!!!!
 
✍️செ. இராசா 
 
** காரைக் குடிவீடு (அ) காரைக்குடி வீடு
காரை என்றால் சிமெண்ட் என்ற பொருளும் உள்ளதால் சிமெண்டால் செய்த வீடு என்றும் காரைக்குடியில் உள்ள வீடு என்றும் பொருள்படும். (சிலேடை)
 
*நட்பு கற்பைப்போன்றது
இச்சிலையை அன்பளிப்பாய் வழங்கியவர் நண்பர் சிவா.... 💐💐💐

09/06/2022

அப்பா...அப்பப்பா...

 


பத்து மாதங்கள் சுமந்து
பாலூட்டா விட்டாலும்
உடல் பொருள் ஆவியென
அத்தனையும் கொடுத்துவிட்டு
போய்வா எனச்சொல்லும்
புன்னகைக்குப் பின்னாலே
எத்தனை வலி இருக்கும்...?!!
அப்பா...அப்பப்பா...
 
✍️செ. இராசா

08/06/2022

பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர்

 


இதுவரையிலும் #கவிராகம் வெளியீடாக எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், இந்தக் #கடல் பற்றிய பாடல் என்னவோ அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் எழுத்தா? இசையா? காட்சிப்பதிவா? என்றெல்லாம் பிரித்திப்பார்க்காமல் இது ஒட்டுமொத்தக் குழுவினரின் ஒருமித்த கூட்டு முயற்சியின் வெற்றி என்றே சொல்லலாம். வெறும் 1.3 K பார்வையாளர்கள் வாங்குவதெல்லாம் ஒரு வெற்றியா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. உண்மைதான்....எங்களின் உயரம் வெறும் 1.2 K அல்ல. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது....ஆயினும், இப்பாடலில்தான் நான் முதன் முதலாக கவிஞர் என்று போட்டுக்கொள்ள மனமுவந்தேன்.
அது எப்படி...நமக்கு நாமே போடலாம்?! அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. (அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன்)
 
இந்தப் பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர் ஒருவர், வரிவரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதில் குறிப்பிட்ட சில வரிகள் பற்றி இப்படிக் கூறினேன்;
 
*மழை நீரின்றி உலகில்லை என்ற வள்ளுவரின் வான் சிறப்பைக் கூறி, அம்மழை உருவாகக் காரணமே கடல் என்றுணர்த்தும் வரியை விளக்கினேன்.
 
* இத்தனை கோடி வருடங்கள் ஆனபின்னும் கடல் நீரின் எல்லைகள் மாறினாலும் அதன் அளவு இன்னும் மாறவில்லை என்பது மட்டுமல்ல, அது தன் எல்லையை மீறி சுனாமியாக வந்தாலும், சுனாமிக்குக் காரணம் (ஊறுமூலம்) கடலில்லை என்றும், நிலத்தில் ஏற்படும் அழுத்தவிசையே காரணம் என்றும் உள்ளர்த்தத்தைச் சுட்டிக்காட்டினேன்.
 
*கடலும் கடல் சார்ந்த தொழிலும் இல்லையென்றால் சாப்பிட்டிற்கே வழி இல்லாமல் போகும் சூழலை விளக்கும் வரிகளைக் கூறினேன்.
 
அதில் ஈரம் கொண்ட என்றஇருபொருள் தரும் சிலேடை அணியை எப்படியோ விளக்கினேன்.
 
*இறுதியாக மீனவர்கள் எப்படி கறையைத் துறந்து, அலையைக் கடந்து, ஆழம் பார்த்து, கணித்து, வலைபோட்டு மீன்பிடிக்கின்றார்கள் என்னும் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியபோது, எப்படி இவை பற்றித் தெரியும் என்றார்? ஒரு புன்னகையை விடையாய்த் தந்தேன்.
 
அந்த மலையாளி பொறியியாளர் நண்பரை எமக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். இவரைப்போல் பல மாற்றுமொழி நண்பர்களும் நம் எழுத்தை மொழிமாற்றம் செய்தும் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது மிகுந்த மனமகிழ்ச்சி வருகிறதுதான் . அதிலும் இப்படி நாம் எழுதியதை நாமே விளக்கும் விடயம் இருக்கிறதே...அது மாற்றுமொழியாளர்கள் என்றால் சரி..ஆனால் நம்மவர்களுக்கே விளக்க வேண்டுமென்றால்தான் யோசிக்க வைக்கிறது. காரணம், நம் மொழியின் கூற்றை நம்மவர்க்கும் விளக்க வேண்டியுள்ளதே என்னும் ஆதங்கம்தான். 
இதுவரையிலும் #கவிராகம் வெளியீடாக எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், இந்தக் #கடல் பற்றிய பாடல் என்னவோ அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்ததாகப் பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் எழுத்தா? இசையா? காட்சிப்பதிவா? என்றெல்லாம் பிரித்திப்பார்க்காமல் இது ஒட்டுமொத்தக் குழுவினரின் ஒருமித்த கூட்டு முயற்சியின் வெற்றி என்றே சொல்லலாம். வெறும் 1.2 K பார்வையாளர்கள் வாங்குவதெல்லாம் ஒரு வெற்றியா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை. உண்மைதான்....எங்களின் உயரம் வெறும் 1.2 K அல்ல. இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது....ஆயினும், இப்பாடலில்தான் நான் முதன் முதலாக கவிஞர் என்று போட்டுக்கொள்ள மனமுவந்தேன்.
அது எப்படி...நமக்கு நாமே போடலாம்?! அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. (அதுபற்றிப் பின்னர் சொல்கிறேன்)
இந்தப் பாடலின் வரிகள்பற்றி என் மலையாள நண்பர் ஒருவர், வரிவரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதில் குறிப்பிட்ட சில வரிகள் பற்றி இப்படிக் கூறினேன்;
*மழை நீரின்றி உலகில்லை என்ற வள்ளுவரின் வான் சிறப்பைக் கூறி, அம்மழை உருவாகக் காரணமே கடல் என்றுணர்த்தும் வரியை விளக்கினேன்.
* இத்தனை கோடி வருடங்கள் ஆனபின்னும் கடல் நீரின் எல்லைகள் மாறினாலும் அதன் அளவு இன்னும் மாறவில்லை என்பது மட்டுமல்ல, அது தன் எல்லையை மீறி சுனாமியாக வந்தாலும், சுனாமிக்குக் காரணம் (ஊறுமூலம்) கடலில்லை என்றும், நிலத்தில் ஏற்படும் அழுத்தவிசையே காரணம் என்றும் உள்ளர்த்தத்தைச் சுட்டிக்காட்டினேன்.
*கடலும் கடல் சார்ந்த தொழிலும் இல்லையென்றால் சாப்பிட்டிற்கே வழி இல்லாமல் போகும் சூழலை விளக்கும் வரிகளைக் கூறினேன்.
 
அதில் ஈரம் கொண்ட என்றஇருபொருள் தரும் சிலேடை அணியை எப்படியோ விளக்கினேன்.
 
*இறுதியாக மீனவர்கள் எப்படி கறையைத் துறந்து, அலையைக் கடந்து, ஆழம் பார்த்து, கணித்து, வலைபோட்டு மீன்பிடிக்கின்றார்கள் என்னும் ஒட்டுமொத்த நடைமுறையையும் விளக்கியபோது, எப்படி இவை பற்றித் தெரியும் என்றார்? ஒரு புன்னகையை விடையாய்த் தந்தேன்.
 
அந்த மலையாளி பொறியியாளர் நண்பரை எமக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். இவரைப்போல் பல மாற்றுமொழி நண்பர்களும் நம் எழுத்தை மொழிமாற்றம் செய்தும் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது மிகுந்த மனமகிழ்ச்சி வருகிறதுதான் . அதிலும் இப்படி நாம் எழுதியதை நாமே விளக்கும் விடயம் இருக்கிறதே...அது மாற்றுமொழியாளர்கள் என்றால் சரி..ஆனால் நம்மவர்களுக்கே விளக்க வேண்டுமென்றால்தான் யோசிக்க வைக்கிறது. காரணம், நம் மொழியின் கூற்றை நம்மவர்க்கும் விளக்க வேண்டியுள்ளதே என்னும் ஆதங்கம்தான்.

நான் வியந்த மனிதர்கள் 1------------ மாமனிதர் ஹமாம் சார்

 



பொதுவாகவே உயர் பதவியில் இருப்பவர்கள், கீழே இறங்கிவந்து வேலைபார்ப்பதென்பது மிகவும் அரிதாகிவிட்ட இக்காலத்தில், கத்தாரின் மிக உயர்ந்த பல நிறுவனங்களின் முதலாளியாய் இருக்கும் ஒருவர், காலையில் முதல் ஆளாக வேலை பார்க்கும் இடங்களிற்குவந்து சுட்டெரிக்கும் பாலைவன வெயிலில் குழிவெட்டும் இயந்திரத்தின் அருகில் நின்றுகொண்டு வியர்வை சொட்டச்சொட்ட வேலை பார்ப்பதென்பதெல்லாம் யாரும் கேள்விப்படாதவொன்றே. அதுமட்டுமல்ல இன்று உலகமே கத்தாரை வியந்து பார்க்கக் காரணமாக இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டிக்கு வித்திட்ட முக்கியமான குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும் இவரே. பொதுவாக, கத்தார் மின்சாரத்துறையில் உள்ளவர்கள் அனைவருக்குமே இவரைத் தெரியாமல் இருக்காது. எப்பேற்பட்ட வேலையாய் இருந்தாலும் படுவேகத்தில் முடிப்பது இவரின் தனிச்சிறப்பு. 
 
அதுமட்டுமல்ல, தன்னோடுள்ள அனைவருக்கும் இவரேதான் தான் கொண்டுவந்த தேநீரைத் தன் கையால் வழங்குவார். இவரைப்பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், இவரிடம் முன்னர் ஒருமுறை தேநீர் அருந்தியிருந்தாலும், இன்றைய தினம் இவரிடம் பேசுகையில் இவரின் எளிமையும், ஆத்மார்த்தமான அன்போடு பழகும் விதமும், தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் என்னை மேலும் மேலும் வியக்க வைத்தது. இவரைக் கண்டாலே நடுங்குவோர்கள் மத்தியில் எம்மோடு சகஜமாகப் பழகியது என்னால் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இவர் நிறுவனத்தில் வேலை பார்த்த எத்தனையோ நபர்களுக்கு எவ்வளவோ செய்துள்ளார். பெரிய பெரிய வண்டிகளையும் (Fortuner type cars) பெரிய அளவிலான பணத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளார். அவ்வளவு பணம், பதவி, புகழ் என அத்தனை இருந்தும் இன்னும் வியர்க்க விறுவிறுக்க உழைக்கிறார்..... அப்பேர்ப்பட்ட மனிதரோடு தேநீர் அருந்தி நிறைய விடயங்கள் பேசியதென்பது, பெரிய விடயம்தானே உறவுகளே...?!!
நன்றி நன்றி ஐயா🙏🙏
🙏

07/06/2022

காடுவெட்டி காடுவெட்டி காடுவெட்டி யாரு

 

காடுவெட்டி பேரைச்சொன்னால்
கருவில் உள்ள குழந்தையும்
கையத்தூக்கி வணக்கம் சொல்லிக்
காட்டும் அன்பைப் பாருங்கோ..‌
 
காடுவெட்டி பெருமைசொன்னால்
கவலை கொண்ட மாந்தரும்
கண்ணில்ஈரம் போகும் முன்னே
கவலை தீரும் பாருங்கோ....
 
காடுவெட்டி காடுவெட்டி காடுவெட்டி யாரு
பட்டிதொட்டி நடுநடுங்கும் பாட்டாளி பேரு
 
காடுவெட்டி யாருயென்றால்
கட்சி பேதம் தாண்டியும்
காக்கும் தெய்வம் கருப்புசாமி
கண்ணில் வந்து போகுங்கோ...
 
காடுவெட்டி ஊரைச்சொன்னால்
கத்தும் வெற்றுக் கூட்டமும்
கையைக் கட்டி வாயை மூடி
கதறி ஓடிப் போகுங்கோ...
 
காடுவெட்டி காடுவெட்டி காடுவெட்டி யாரு
பட்டிதொட்டி நடுநடுங்கும் பாட்டாளி பேரு
 
✍️செ. இராசா

செந்தமிழ்த் தேன்மொழியால்

 

செந்தமிழ்த் தேன்மொழியால்
திடீரென உதிக்கும் கற்பனையால்(2)..
பௌர்ணமி இரவில் பைத்திய நிலையில்
படிக்கிற பாடலுங்கோ...
 
என்னப்பா....பாடலுங்குற படிக்கிறேங்குற
அப்ப...பாடமாட்டியா?!
 
பாடறியேன் படிப்பறியேன் பாட்டுக் கிளாசு
நானறியேன்
மூடறிவேன் முறையறிவேன் முழுசா கானா நான் தருவேன்
அதுசரி... ஆனால் பழசா கீதேப்பா...
இது ரீமிக்சு மாமு
 
ராஜா கைய வச்சா...அது மாசா ஆகும் மச்சி
நான் புல்லா ஏத்திக்கின்னா...
ஷோக்கா செய்வேன் பாரு மச்சி...
ராப்பு என்றாலும் பாப்பு என்றாலும்
சூப்பர் டூப்பர் மச்சி...
தர ரம்பம் பம்பம்
இந்த ராஜா கைய வச்சா...அது மாசா ஆகும் மச்சி
நான் புல்லா ஏத்திக்கின்னா...
ஷோக்கா செய்வேன் பாரு மச்சி...
 
ம்ம்...ஷோக்காதான் மச்சி கீது...எனக்கொரு ஆசை மச்சி....
 
ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை வா
வாழும் காலம் வரை வாட்டும் சோகம் துற வா
மனம் மாறப் பாடலாம் கணம் நாமும் வாழலாம்
அட வா வா....வந்தாடடா
அட வா டா....வந்தாடடா...
ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை வா
 
அவன சொல்ல விடுமச்சி
என்னதான் ஆசைன்னு கேப்போம்....நீ சொல்லு மாமு....
 
சின்னச் சின்ன ஆசை...டடடான்
... சிறுவயது ஆசை...டடான்
பட்டர்பிளையா மாறி டடான்
....பறந்துவர ஆசை டடான்...
தாயிலாந்து மண்ணை..டடான்
....தொட்டுவர ஆசை..டடான்
என்னை முற்றும் துறந்து..டடான்
....சாமியாக ஆசை..டடான்
 
மச்சி ‌‌....இதுவாடா சின்ன ஆசை...இது காஸ்ட்லியான ஆசை மச்சி.. 

நான் என்ன தனியாவா தீவு கேட்டேன்
 
தனியே தன்னந்தனியே நான் கன்னித் தீவா கேட்டேன்
கனவே என் கனவே அதில் மையம் ஆகி விட்டேன்...
தெரியாதா அதுதான்டா
தெரியாதா
தனியே...தனியே...
 
மச்சி இவன் வேற மாறி மச்சி....
 
ஆமான்டா ஆமாம்...இவன் வேற மாறி
தாங்காது சாமி...இங்க டப்பு லேது
ஆனாலும் ராசா இது ரொம்ப ஓவர்
ஆகாது சாமி.... என்றும் நெவர் நெவர்
நெகட்டிவா பேசாதடா....ஓ...
 
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...
ஏன் கையை..
ஏன் கையை...
அடச்சே...
 
புதுசு புதுசா டவுசர் போட்டு
பட பட படன்னு வருவாங்க..
தினுசு தினாசா ஸ்டெப்பு போட்டு
பர்சுல கைய வப்பாங்க...
உள்ள இருக்கும் அம்புட்டயும்
...உருவிவிட்டுப் போவாங்க
ஸ்வீட்டி நாட்டி பேர மாத்தி
அலையா அலையும் ஃபாரின் பார்ட்டி
நீ போவியா மாமா
....நீ நீ போவியா...
 
ஆகா....நீ சொல்றது சரிதான் மச்சி
 
குத்துவிளக்கு குத்துவிளக்கு
ஏத்த ஒரு பொண்ணிருக்கா குத்துவிளக்கு
மத்ததெதுக்கு மத்ததெதுக்கு
மத்ததேதும் தேவையில்லை அத்த ஒதுக்கு
செம்ம செம்ம மச்சி...
 
✍️செ. இராசா