13/06/2022

அணிந்துரை--கவிக்குறிப்பேடு



அனைவருக்கும் இனிய வணக்கம்!
 
எளிமையும் அதிரடியும்,
கோபமும் நகைச்சுவையும்,
வேகமும் நிதானமுமென.... இப்படிப் பல முரண்களை தன்னகத்தே கொண்ட இந்தக் கவிஞனின் ஒவ்வொரு கவிதைகளும் மரபும் புதுமையும் கலந்த அழகிய முரணாய் இருப்பதில் ஆச்சரியமில்லைதான். 
 
இங்கே எது கவிதையென்று அடித்துக்கொள்பவர்களின் வாதத்தைக் கேட்டால், நகைப்புதான் வருகிறது. இலக்கண வரம்புக்குள் நெய்யப்படும் மரபுக்கவிதையே உயர்வென்பர் சிலர், இல்லையில்லை,
அதையெல்லாம் உடைத்த புதுக்கவிதையே உயர்வென்பர் சிலர்.
இப்படி ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு வாதம், பலவகை பேதம். அட... மலர்கள் பலவகைகளாய் இருந்தாலும் அனைத்துமே மலர்கள்தானே?. 
அதெப்படி வாடையில்லாத காகிதப்பூவும் மணக்கும் மல்லிகையும் ஒன்றா எனக்கேட்டால் நம்மால் மணமறிய முடிய இயலா காகிதப்பூகூட ஏதோ ஓர் ஜீவராசிக்கு மணம் தரலாம்தானே? என்னைப்பொறுத்தவரை கவிதையின் வரையறை இவ்வளவே. கவிதை கவிதையாக இருந்தாலே போதும்.
 
பாரதி கூறியதுபோல்
"கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"
அந்த வகையில் நம் கவிஞர் செல்வா அவர்கள் வெறும் கவிதை நெய்பவரல்ல,
கவியாகவே வாழ்பவர். அவரின் கவிதைகள் எப்படி இருக்குமென்பதற்கு நான் சொல்லத் தேவையில்லை. அப்படியே சொல்ல முயன்றாலும் அதற்கு ஒரு நூல் போதாது. இருப்பினும், நான் மிகவும் இரசித்த சில கவிதைகளின் வரிகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
* மாசக்கடைசி என்னும் கவிதையில் மாதச்சம்பளம் வாங்குபவர்கள் அனைவரின் மனசாட்சியாய் வருகிறது இவ்வரிகள்;
 
"அடுத்தமாத முதல் வாரத்தில்நான்
அவசரமாய் உயிர்த்தெழுந்து
இரண்டாம் வார இறுதியில்
இறந்து போய்விடுவேன்"
 
*அதேபோல் வாரக்கடைசியை எதிர்பார்த்து வரும் ஞாயிற்றுக்கிழமை எப்படி இருக்கிறதென்பதற்கும் சில கவிதைகள் தந்துள்ளார். 
 
"கண்மூடித் திறப்பதற்குள்
கண்ணைவிட்டு மறைந்துவிடும்
நாளுக்குப்பெயர்தான்
ஞாயிற்றுக்கிழமையாம்....."
 
*பிரிவினை, வலி......எனச் செல்கின்ற கவிதைகளிலெல்லாம் எங்கள் குரு விக்டர்தாஸ் அண்ணாவே வந்ததுபோல் உணர்ந்தேன். நான் "போல" என்று சொல்வதால், தவறாக எண்ண வேண்டாம். இதன் தனித்துவம் வேறு ரகம்.
பிரிவினை என்னும் கவிதையிலிருந்து சில வரிகள் பாருங்களேன்...
 
"படித்துப் பார்க்க
பக்கங்களை நீங்கள்
பிரித்துப் பார்ப்பது
பிரிவினை இல்லையா?
உதடுகளின் பிரிவினைதானே
சொற்கள்...."
 
* கவிஞரின் ஜீவ காருண்யத்தைக் காட்டும் கவிகள் ஏராளம்.
"இரவில் கடிக்கும் கொசுக்களை
இரண்டு கைகளாலும்
அடித்தே கொல்கிறோமே
அது வன்மமில்லையா"
 
இப்படி எறும்பு, சிலந்தி, கரப்பான்பூச்சி, கோழிமுட்டையென நீள்கிறது இக்கவிதை...
 
* பார்வையற்றவனின் பார்வையில் வெள்ளை நிறம் வெறுமையாத்தான் இருக்கும் என்னும் வரிகளெல்லாம் கவித்துவ உச்சம் மட்டுமல்ல மெய்யியல் சார்ந்ததும்கூட...
 
*  தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து- என்னும் வள்ளுவரின் சிந்தனையையொட்டிய கவிகளும் உள்ளது மிகச்சிறப்பு. உதாரணமாக நேர்படப்
பேசு என்னும் கவிதையைப் பாருங்கள்;
"கரத்தைக் குலுக்கும் கரத்தின் உள்ளே
கத்திகள் பதுக்கிய இனங்களும் உண்டு" 
 
*படைதிரட்டு என்னும் கவிதையில் அவர் ஓர் பாடலாசிரியராய்த் தெரிகிறார்.
 
*குடும்பத்தின் அச்சாணி என்னும் கவிதையில் ஒரு கேள்வி கேட்கிறார் பாருங்கள்;
"முச்சங்கம் கண்டுவிட்ட முன்னோடி புலவனெல்லாம்
இலக்கியத்தைப் பாடினானே இல்லாளைப் பாடினானா?!"
என்னிடம் பதிலே இல்லை. உங்களிடம் இருக்கிறதா?!
 
* உயிரும் மெய்யும் கவிதையில் உயிர்மை வரிகள் தத்துவார்த்தமாய் மின்னுகிறது. அதற்கு அவர் தரும் விளக்கம் இதுவரையிலும் யாரும் சொல்லாதது. 
 
"இரட்டைக் கிளவி எனும் பொருளும்
இனிய தமிழில் இங்கிருக்க
தனித்தே பொருளும் தருவதில்லை
தனியே அதற்கும் அர்த்தமில்லை" இந்த உவமை எதற்குத் தெரியுமா? நீங்களே படியுங்கள்.
 
* தியானம் என்னும் கவிதையில் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பதைக் கூறிவிட்டு இறுதியாக ஒரு கேள்வி கேட்பார் பாருங்கள்....
"ஆனாலும்... பசிக்கிறதே என்ன செய்ய?" இங்கே எத்தனை கோடி பேர்களின் குரலை, எப்படி இவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டாரே என்றே வியந்தேன்.
 
* காதல் என்னும் கவிதையின் இறுதி வரிகளில் அவரின் வழக்கமான குறும்பு தெரிகிறது.
"கை கூடாவிட்டால்
கவலைப்படாதிரு
அடுத்த காதலுக்கு
அனுபவம் உதவும்"
 
* இப்படி பல வரிகளைச் சுட்டிக்காட்ட ஆசைதான். நீளம் கருதி, மேலும் சில வரிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்;
 
"யார் இரசிக்கப்படவென
காய்கிறது நிலவு?'
 
"புன்னகை புரிந்து வரும்
புரிந்த மனத்தோரிடத்திலெல்லாம்
இயல்பாகவே இருக்கிறது
இரு வெறிநாயின் பற்கள்"
 
"வலிக்காமல் ஒட்டடை அடிப்பது எப்படி?"
 
"அடிமனதின் ஆழத்தில்
வந்து போகாமலில்லை
அம்மா அரைத்துத்தந்த
அம்மிக்கல் துவையல்"
 
"வற்றிப்போனால் மட்டுமே
வலிகளின் வேதனை காட்டும்
குளம்"
 
"கோடையின் சூட்சமம் தெரியாமல்
வாழ்ந்து கெடும் மீன்கள்"
 
"அய்யனாருக்கு கறிச்சோறும்
அம்மனுக்கு கூழுமாய்
கடவுளுக்கம் உண்டோ
பெண்ணடிமைத் தனம்?"
 
"துர்க்கை அம்மனை
மனதிலெப்படி நிறுத்த
சுற்றுக்களை எண்ணுகையில்"
 
"சாணம் சாணமாவதும் சாமியாவதும்
இடத்தைப் பொறுத்தே"
 
"அடுத்தவர்களின்
வேண்டுதல்களுக்காக
தன்
உயிரையே விடுகின்றன
பலி ஆடுகள்"
 
"திருவிழா ஞாபகமும்
பலூன் காரன் மூச்சுமாய்
நேற்று வாங்கிய பலூன்கள்"
 
"செய்த பாவம் கழிக்க
சூலாயுதத்தில் சொருகப்பட்டது
கோழி"
 
"அழுதுகொண்டே வர
அழகாய்ப் பெய்கிறது
மழை"
 
"நீர் இறைக்கப் போய்
நிலவை உடைத்தேன்"
 
மொத்தத்தில் இந்தக் கவிக்குறிப்பேடு என்னும் கவிதை நூல் தொகுப்பு, என் கவிதைப் பயணத்தில் என்னை மட்டுமல்ல உங்களையும் புரட்டிப்போடும் என்றுகூறி, அவரின் கவிப்பயணமும் அவரைப்போலவே தேசாந்திரியாக வலம்வர என் மனமார வாழ்த்துக்களைகூறி விடைபெறுகின்றேன்.
 
நன்றியும் பேரன்பும்,
 
செ. இராசமாணிக்கம்.

No comments: