31/12/2022
நான் டாடா பிர்லாவோட ஆளாய்யா? (ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரி)
தலைவரோட குணம் பாருங்கள் (இறைவனிடம் கையேந்துங்கள்)
29/12/2022
28/12/2022
26/12/2022
பற்றிடப் பற்றிட....
பற்றிடப் பற்றிடப் பற்றிடும் பற்றினைப்
பற்றுடன் பார்த்திடப் பற்றிடும்- பற்றுன்னை
பற்றிடும் பற்றுமே பற்றின்றிப் பார்த்திடின்
பற்றுமோ? பற்றாது பற்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா
தமிழாளுமை தனில்யாரென
.....தமிழ்த்தாயவள் வினவ
தமிழாண்டவர் மகன்நானென
......தளராதிவன் வருவான்!
உமியாகவே உழல்வோர்சிலர்
.....உனையாரென வினவ
தமிழாகவே இருந்தாலுமே
....தயவோடிவன் வருவான்!
கவியாளுமை புரிவோரிலே
.....கடல்யாரென வினவ
கவியாகவே கருவாகியே
.....கலையாகவே வருவான்!
புவிமீதிலே புகழ்நோக்கியே
....புனைவோர்பலர் இருக்க
தவிப்போர்குரல் மொழியாகவே
....தனியாகவே வருவான்!
உரியோரிலே உறவானவர்
.....உடன்யாரென நினைக்க
உரித்தாகவே உயிராகவே
.....உடனோடியே வருவான்!
தெரியாமலே அலைமோதியே
....திசைதேடியே திரிய
குருவாகவே விரைவாகவே
...குறைபோக்கிட வருவான்!
அண்ணாவின் அடிப்பொடி,
செ. இராசா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா....
ஊக்கமும் ஆக்கமும் ---- ஔவைத் திங்கள்- 22
#ஊக்கமும்_ஆக்கமும்
#ஔவைத்_திங்கள்_22
ஊக்கமாய்ப் பேசுகின்ற ஒவ்வொரு சொற்களும்
ஆக்கத்தின் வித்தாகும் அங்கு
(1)
நல்லுரம் தந்தபயிர் நன்றாய் விளைவதுபோல்
நல்லூக்கம் செய்விக்கும் நன்று
(2)
ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிப்போர் தேக்குவிப்பார்
ஊக்கமிகு வாலிசொல் ஓர்ப்பு
(3)
பொன்பொருள் வேண்டாம் புதியவர் மேலெழும்ப
நன்வார்த்தை போதும் நவில்
(4)
தன்னலம் பாராமல் தட்டிக் கொடுப்பவரை
நன்றியுடன் போற்றுமாம் நட்பு
(5)
கலைஞனைத் தூக்கிவிடும் கைதட்டல் ஒன்றே
விலையேதும் இல்லா விருது
(6)
படைப்பவனை ஊக்குவிக்கும் பாராட்டில் தானே
படைப்புகள் தோன்றும் பல
(7)
உன்னால் முடியுமென்ற உள்ளார்ந்த ஊக்கம்தான்
உன்னை உயர்த்தும் உணர்
(8.)
ஆக்கம் குறைந்துவிட்டால் அஃதொன்றும் தப்பில்லை
ஊக்கம் குறையாமல் ஓடு
(9)
உளமார்ந்த நட்பான ஊக்கத்தைக் கொண்டு
வளமான நல்வாழ்வு வாழ்
(10)
செ. இராசா
25/12/2022
தேவன் வந்தாரே பாடல்
#பல்லவி
தேவன் வந்தாரே.
தேடி வந்தாரே....
ஏகன் வந்தாரே
இறங்கி வந்தாரே...
பாவம் கண்டாரே
பாரம் கண்டாரே
பாசம் கொண்டாரே
பறந்து வந்தாரே....
அன்னை எங்கள் மேரிக்கவர் பிள்ளையானாரே
தந்தை ஏழைத் தச்சருக்கும் தனயன் ஆனாரே
பாவங்களை வேரறுக்க பறந்து வந்தாரே
பாமரர்கள் துன்பம்போக்க பிறந்து வந்தாரே
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas
#சரணம்-1
வானமுள்ள காலம்வரை
ஞாலமுள்ள காலம்வரை
ஞானம்தரும் வள்ளளென
வந்த இறைவா....
ஏழையுள்ள காலம்வரை
ஏழ்மையுள்ள நாட்கள்வரை
ஏற்றுமொளி தீபமென
வாரும் இறைவா...
நேசம்கொண்ட மாந்தருக்கு நீங்கள் தானே
.......நீங்கள்தானே....காக்கும் தேவன்.
யாரும் இல்லா மாந்தருக்கும் நீங்கள் தானே
.......நீங்கள்தானே தாங்கும் தோழன்...
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas
செ. இராசா
முழுப் பாடலையும் காண கீழே சொடுக்கவும்;
https://youtube.com/watch?v=zpVuugFTmOI&feature=shares
23/12/2022
பழக்கத்துக் கோசரம் பார்க்குறேன் இல்லை
(ஒரே படம்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
மூன்று கவிதைகளைப் பிரசவித்துள்ளது)
தொப்புள் கொடியிலே தூளிகட்டி
தொங்கியே வாழ்ந்த காலத்தைப்போல்
தோரணக் கொடியிலே காகிதமாய்
தொங்கிட வைத்தல் சரிதானா?!!
(டேய் அப்பா... இறக்கிவிடுறா.... முள்ளு குத்துது)
23.12.2018
எப்பப்பா ஏற்றினாய் எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா தப்பு!
03.08.2019
பழக்கத்துக் கோசரம் பார்க்குறேன் இல்லை
பழத்துலயா ஏத்துற பாடு- கிழபோல்டு
கீழ இறங்குனேன் கீச்சிறுவேன் பார்த்துக்க
வீழநான் மாட்டேன்டா வெல்ரு!
23.12.2022
செ. இராசா
விக்ரமராஜா ஐயா பாடல்-2 ------ நாகூர் ஹனிபா குரலில்
பல்லவி
எத்தனை பேர்களின் சார்பாக
அண்ணாச்சி முன்னே நிற்கின்றார்...
அத்தனை வணிகரின் குரலாக
அண்ணாச்சி அன்றோ முழங்குகின்றார்..
அனைவரும் சரிசமம் தானே
அண்ணாச்சி பார்வையிலே...
ஏழையும் பொழக்கனும்தானே
ஐயாவின் கொள்கையிலே...
நல்லதைக் கொடுக்கனும்
.......அல்லதை ஒதுக்கனும்
நுகர்வதும் நம்மவர் தாங்களே....
அயலவர் ஒதுங்கனும்
.......கயவர்கள் திருந்தனும்
தமிழறம் காப்பவர் நாங்களே...
முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும்
அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
சரணம்-1
பாரததேசம் பயனுறவேண்டி
பகிர்ந்திட வருவதும் நாங்களே..
மாநிலமெங்கும் பலதடைதாண்டி
வரிகளைத் தருவதும் நாங்களே...
எம்மால் வளர்ச்சி கிடைக்கயிலும்
எமக்கோ வளர்ச்சி கிடைக்கவில்ல
எதனால் தளர்ச்சி அடைகிறோம்?
அதனை உடைக்க முயல்கிறோம்
தலைவர் துணையில் வெல்லுவோம்...
தலைவர் துணையில் வெல்லுவோம்...
முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும்
அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
சரணம்-2
வாடிக்கையாளர் மகிழ்ந்திட வேண்டி
விலைகளைக் குறைப்பதும் நாங்களே
கோரிக்கையாக அரசிடம் வேண்டி
சலுகையைக் கேட்பதும் நாங்களே...
நாங்கள் அள்ளிக் கொடுக்கயிலும்
நமக்கோ அதுவும் கிடைக்கவில்லை..
பதுக்கல் எதுவும் நடந்தாலும்
அதையும் அடனே தடுக்கின்றோம்...
தலைவர் வழியில் செல்லுவோம்..
தர்மம் நின்றிட வெல்லுவோம்...
முழங்கட்டும் முழங்கட்டும் முழங்கட்டும்
அறவழியேநம் குரல் முழங்கட்டும்....
உயரட்டும் உயரட்டும் உயரட்டும்- நம்
தலைவரால் வாழ்க்கை உயரட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்
வணிகர்கள் கொடியிங்கு பறக்கட்டும்
பிறக்கட்டும் பிறக்கட்டும் பிறக்கட்டும்
நமக்கினி காலம் பிறக்கட்டும்
செ. இராசா
நிக்காஹ் வாழ்த்துப் பாடல்
21/12/2022
மெஸ்ஸினா மெர்ஸலு ........மேன்
20/12/2022
திருப்புமுனை
#திருப்புமுனை
நெடுஞ்சாலைகள் எல்லாம்
நேர்கோட்டில் இருந்தாலும்
திருப்புமுனைகள் வந்தால்
திரும்பத்தான் வேண்டும்.....
என்னதான் முக்கிய நாயகரே
முன் வந்து நடித்தாலும்
கதையில் திருப்புமுனை இல்லேல்
யாரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டர்...
திருப்புமுனைகள்
திடுதப்பென்று வந்தால்
திடுக்கிட வேண்டாம்...
முடிந்த அத்தியாயத்தில் நின்று
மூச்சுவாங்கிக் கொள்ளுங்கள்
அடுத்த அத்தியாயத்திற்காய்
ஆயத்தமாய் நில்லுங்கள்...
திருப்பு முனைகள்
திருப்பி விடக்கூடியவை...
அவசரம் வேண்டாம்.....
ஒழுங்காய் மடைமாற்றினால்
உச்சத்திற்கும் போகலாம்...
யோசித்துப் பாருங்கள்....
கல்லக்குடி போராட்டம்
கலைஞருக்குத் திருப்புமுனை...
திமுக வெளியேற்றம்
எம்ஜிஆருக்குத் திருப்புமுனை..
ராஜீவ் மரணம்
ஜெயலலிதாவுக்குத் திருப்புமுனை...
ஜெயலலிதா மரணம்
எடப்பாடிக்குத் திருப்புமுனை...
இங்கே....
சில திருப்புமுனைகள் சாதனையாகும்
மெஸ்ஸியின் வெற்றியைப்போல...
சில திருப்புமுனைகள் வேதனையாகும்
காமராஜரின் தோல்வியைப்போல...
சில திருப்புமுனைகள் ரோதனையாகும்
கோவிட் உயிரிழப்புபோல..
சில திருப்புமுனைகள் போதனையாகும்
சென்னைப் பெருவெள்ளம்போல...
திருப்புமுனை என்பது
காலம் பட்டை தீட்டும் உலைக்களம் மட்டுமல்ல
ஞாலம் தன்னைக் காட்டும் சமர்க்களமும்கூட..
அதில் வெற்றி தோல்வியல்ல சுவாரசியம்...
அந்தத் திருப்புமுனையே சுவாரசியம்...
வரட்டும் திருப்புமுனைகள்..
வரலாற்றில் கட்டாயம் இடமுண்டு...
செ. இராசா
19/12/2022
ஔவைத் திங்கள் - 21 (குறுகத் தரித்த குறள்)
#ஔவைத்_திங்கள்_21
#குறுகத்_தரித்த_குறள்
குறும்பா எழுதியதாய்க் கொக்கரிக்கும் முன்னர்
குறள்பா பயின்றாயா கூறு.
(1)
இரண்டே அடியில் எழுசீரில் வைத்த
தரமும் திறமும்தான் சான்று.
(2)
சொல்லுஞ்சொல் வெல்ல சுருக்கமாய்ச் சொல்லென்று
சொல்லாமல் சொல்லுமோர் நூல்
(3)
அறப்படி ஏறி அதன்படி வாழ்ந்தால்
முறைப்படி கிட்டும் முதல்
(4)
கற்க கசடற கற்பவை யாதென்றால்
கற்றவை எல்லாம் கடுகு
(5)
முப்பாலில் வைத்த முதலாம்பால் நன்கறிந்தால்
தப்பாமல் வாழலாம் தான்
(6)
குறுஞ்செய்தி போலக் குறைவாகச் சொல்லிப்
பெறும்குறள் செய்தி பெரிது
(7)
உள்ளதெல்லாம் கற்க ஒருபிறவி போதாது
வள்ளுவம்தான் மாற்று வழி
(8.)
காதல் கவியையும் கச்சிதமாய்க் கட்டியதால்
காதலர்க்கும் கூட்டும் களிப்பு
(9)
படிக்கப் படிக்கப் பலன்தரும் நூலை
படித்தபடி ஏறு படி
(10)
செ. இராசா
13/12/2022
கண்ணாலயே கவ்விடும் பெண்ணே
கண்ணாலயே கவ்விடும் பெண்ணே
உன்னாலயே உருகுறேன் நானே...
சொல்லாமலே சொல்லிடும் பெண்ணே
நில்லாமலே பறக்குறேன் தானே..
புனைப்பெயர் சூட்டிக் கொள்ளத்தான் வேண்டுமா...!?
12/12/2022
விளக்குமாறு
துக்குத்துக்கு
சின்னஞ் சிறிய வயதில்
ஔவைத் திங்கள் - 20 ----------------- மூத்தோர் சொல் கேள்
11/12/2022
ஹல்லோ பேபி நீ எனக்கு வேணும்
09/12/2022
வாங்கும் வரைக்கும்