
#தென்னைப்பத்து
#குறள்_வெண்பாக்கள்
காயென்றும் ஓர்நாள் கனியாகும் ஆகாதே
மாயக்காய் தேங்காய் அது
(1)
உப்புக் கடல்நீரை உள்வாங்கிக் கொண்டாலும்
உப்பில்லை அந்நீரில் பார்
(2)
பல்லடுக்குப் பாதுகாப்பில் பத்திரமாய் நீர்வைத்த
வல்லமையை என்சொல்வேன் நான்
(3)
மின்சாரம் இல்லாமல் நீரேற்றி மாற்றுகின்ற
நன்னீர்செய் ஞானம் நவில்
(4)
ஓரிடம் காலூண்றி ஓங்கி வளர்வதை
யாரிடம் கற்றாயோ நீ
(5)
ஆழக்குழி தோண்டி அடியிலே நீர்விட்டால்
வாழவழி காட்டுவாய் நீ
(6)
நேராய் நிமிர்ந்தோர்க்கு நேர்கின்ற தீங்கைப்போல்
பாரேன் தடுக்கிறார் 'கள்'
(7)
தென்னங்கள் என்றவுடன் தீங்கெனச் சொல்வோரின்
எண்ணங்கள் சாராயங் கள்
(8)
இளநீரின் இன்சுவைபோல் ஈடேதும் உண்டோ?
உளமாற வந்திங்(கு) உரை
(9)
நீர்விட்டால் நீர்செய்யும் நேர்த்தியைக் கண்டதினால்
வார்த்தேனே வெண்பாவில் வாழ்த்து
(10)செ.இராசா
#சைனா_கொரோனா அடடா
சைனா கொரோனோ- அட
சைனா மேடு போனபின்னே
லண்டன் கொரோனா அடஇது
லண்டன் கொரோனா
அடிச்சத் துவைச்சுக் கிழிச்சிடுச்சு அப்பப்பா
இதுக்கு மேலே என்ன இருக்கு சொல்லப்பா
புடிச்சு நசுக்கிப் போட்டிடுச்சு அப்பப்பா
பொழைக்க என்ன வழி இருக்கு சொல்லப்பா
கொரானான்னு சொல்லி சொல்லி
குறைச்சுப்புட்டான் சம்பளத்தை (2)
சூமுரூமு (zoom room) பிலிமு காட்டி
அள்ளிப்புட்டான் ஸ்கூலு ஃபீசை (2)
சானிட்டைசர் போட வச்சு
சாச்சுப்புட்டான் சைனாக் காரன் (2)
கார்ப்பரேட்டு கணக்குப் போட்டு
ஏவிப்புட்டான் வெள்ளைக் காரன்(2)
ஒன்னும் புரியல - எங்களுக்கு
ஒன்னும் புரியல
இன்னும் எங்கே போகுமுன்னு
எதுவும் தெரியல- எங்களுக்கு
எதுவும் தெரியலசெ.இராசா
(இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உருவான பாடல் இது)
கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு
நீ சிந்தும் ஓர் சிறு பருக்கை
ஒரு எறும்புக்கூட்டத்தின் பசி போக்கும்!
நீ செய்யும் ஓர் சிறு தானம்
பல எளியோர் வாழ்வில் ஒளி ஏற்றும்!
கொடு! கொடு!
இங்கே....
இருக்கும்போது கொடுப்பதல்ல கொடை
இல்லாதபோதும் கொடுப்பதே கொடை
இதில் சிறிதென்ன பெரிதென்ன
கொடு! கொடு!
இன்னும்.......
கொடை என்றால் கர்ணனும் பாரியும் தானா?
கொடுப்போர் அனைவரும் கொடையாளியே..
கொடுத்தால் அனைவரும் கொடை ஆழியே....
கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு
--செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_142
#கொடை
#தமிழ்ப்பத்து
#குறள்_வெண்பாவில்
#பாரதியாரின்_கண்ணன்_பாடல்_தலைப்பில்
#தமிழென்_தாய்
பாரா திருந்தால் பதராவேன் என்றெண்ணி
நேராமல் செய்தாயே நீ
#தமிழென்_தந்தை
சிந்தைக்குள் வந்தென்னுள் சீராய் அணிசெய்ய
எந்தைபோல் வந்தாயே நீ
#தமிழென்_குரு
இருளை விலக்கும் எரிதீபம் போன்ற
குருவென நின்றாயே நீ
#தமிழென்_தெய்வம்
வேண்டிடும் போதெல்லாம் வேகமாய் வந்திடும்
ஆண்டவன் ஆனாயே நீ
#தமிழென்_தோழன்
துயர்வரும் காலமும் தோழனாய் நிற்கும்
உயர்வுற வானாயே நீ
#தமிழென்_அரசன்
வரியில்லா போதும் வரிதர வேண்டி
அரசன்போல் கேட்பாயே நீ
#தமிழென்_சேவகன்
ஏவிய வேகத்தில் ஈட்டிபோல் பாய்ந்துவரும்
சேவகனாய் மாறாயோ நீ
#தமிழன்_சீடன்
பாடலின் ராகத்தைப் பற்றியதும் பாடுகிற
சீடனாய் வாராயோ நீ
#தமிழென்_குழந்தை
பழகிய ஒன்றையேப் பற்றென பற்றா
மழலையாய்ப் பேசாயோ நீ
#தமிழென்_காதலி
மோதலால் ஊடியே முட்டியே நில்லாமல்
காதலால் கூடாயோ நீசெ.இராசா
முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை எழுதினேன்
முறைத்து முறைத்துப் பார்த்தாள்..
எளிய நடையில் ஓர் புதுக்கவிதை
எழுதினேன்
ஏனோ... மீண்டும் முறைத்தாள்..
மீண்டும் ஓர் ஹைக்கூ எழுதினேன்
இம்முறை “ம்கூம்” என்று முனங்கினாள்
என்னதான் உன் பிரச்சனை? என்றேன்
இதுதான் தமிழா?!! என்றாள்செ. இராசா
(வருங்காலத் தலைமுறைகளிடம் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.....அதை நாமே தொடங்கவேண்டும்)
#இது_விமர்சனமல்ல
தமிழரும் தமிழ்ப்படங்களும்
தாயும் சேயும்போல்
ஒன்றுக்குள் ஒன்றாய்
ஒன்றிப்போன விடயங்கள்..
யார் மறுதலித்தாலும்
இது மறுக்கமுடியாத உண்மை...
தெருக்கூத்தில் தொடங்கி
நாடகத்தில் வளர்ந்து
திரைப்படமாய் விரிந்த சினிமா
தலைநிமிர்ந்து நிற்கிறதா இல்லை
தலைகுனிந்து போகிறதா?
'#என்_பெயர்_ஆனந்தன்" பாருங்கள்!
கதை
கதைக்குள் கதை
கதைக்கின்ற கதையென.....
இப்படம் வெறும் படமல்ல
இனி படம் எடுப்பவருக்கான பாடம்..
யார் சொன்னார்கள்?!
வர்த்தகப் படம் வேறு
கலைப்படம் வேறென்று?!
யார் சொன்னார்கள்?!
பிரம்மாண்டமே படைப்பென்று?
யார் சொன்னார்கள்?!
எதார்த்தப் படங்கள் ஒடாதென்று?
நாலு பாட்டு
நாலு சண்டை
நெகிழ்ச்சி வசனம்
கவர்ச்சி நடனம்
இவ்வளவு தானா படம்?!!
கொடுமை!!!
ஒன்றைச் சொல்லுங்கள்?!
படம் பொழுதுபோக்கா? கலையா?!
பார்ப்பவர்க்கு எப்படியோ...
படைப்பவர்க்கு எப்படி?!
நல்ல கவிதையைப் போல்
நல்ல கட்டுரையைப்போல்
நல்ல ஓவியத்தைப்போல்
படம் பார்ப்போரைத் தூண்ட வேண்டும்
இல்லையேல்....
படம் படைக்காமல் விட வேண்டும்
'என் பெயர் ஆனந்தன்" பாருங்கள்
நம்மை நாமே பரிசோதிக்க முடியும்!!செ.இராசா
(இப்படத்தில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்)
#அவன்_பேசிய_வார்த்தைகள்
தன்னிகர் இல்லாத் தமிழ்போல் அழகினில்
உன்னிகர் இல்லா உலகு
கம்பனில் கண்ட கவின்போல் சிரிக்கையில்
சிம்பொனி போன்ற சிலிர்ப்பு
பாரதி ஏற்றிய பாபோல் சினக்கையில்
பேரிகை கொட்டிடும் பேச்சு
வள்ளுவன் செய்த வரிபோல் அடிஅடி
உள்ளத்தைத் தூண்டும் உணர்வு
இராஜா இசையின் இதம்போல் இரவில்
இராஜாங்கம் செய்யும் எழில்
#நினைவு_திரும்புதல்
உயர்த்தி உயர்த்தி உசுப்பிடும் பேச்சு
மயங்கிட வைக்கும் மது
மயக்கும் மொழியால் மனதை மயக்கி
வியந்தபின் வைத்தான் விதை
விதைத்தது வேகமாய் வேர்விடும் முன்னே
அதைவிட்டுப் போனான் அயல்
அயலகம் சென்ற அவனையே எண்ணி
மயங்கிக் களிக்கும் மனம்
#அவன்_திரும்பிவந்தபோது
பிரிந்தோன் திரும்பினான் பேசவே இல்லை
எரிந்து குளிர்ந்த இரவுசெ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_141
#மயக்கும்_மொழி
#கத்தார்_தேசிய_நாள்
#டிசம்பர்_18
#கத்தாருக்காக_ஒரு_பாடல்
#அரேபிய_மெட்டில்_எழுதியது
எல்லோரும் நன்றாக வாழ்கின்றனர்- எங்கே
சொல்லென்றால் அந்நாடு கத்தர்
நெஞ்சில் துடிப்புள்ள தீரர்கள் வாழ்கின்ற
நன்நாட்டில் ஓர்நாடு கத்தர்
தன்னம்பிக்கை கொண்டு தன்னந்தனி நின்று
.........தானே வளர்கின்ற நாடு
யாராலும் என்றைக்கும் ஏதேனும் வந்தாலும்
........தானாய் வெல்லுமிந்த நாடு
WE LOVE QATAR WE LOVE QATAR
WE ARE ALL LOVING- YES- WE LOVE QATAR
நம்ம கத்தர் நம்ம கத்தர்
அரேபிய சிங்கம்தான் நம்ம கத்தர்
உலகத்தின் வேகத்தில்
...........உச்சத்தில் நின்றாலும்
எளியோரை மதிக்கின்ற நாடு
இளைஞர்கள் படைகொண்டு
...........நடைபோட்டுச் சென்றாலும்
முதியோரும் புகழ்கின்ற நாடு
வரியேதும் போடாமல்
.......... வதையேதும் செய்யாமல்
ராஜாங்கம் செய்கின்ற நாடு
மனமேதும் கோணாமல்
...........மறைவார்த்தை மீறாமல்
மதிப்போரை மதிக்கின்ற நாடுசெ.இராசா
#நற்பண்பு
#மாண்புப்_பத்து
#ஒரே_ஈற்றுச்சீரில்_குறள்_வெண்பாக்கள்
எதிர்க்கட்சி ஆனாலும் ஏற்பதை ஏற்று
மதிப்பதே மண்ணாள்வோர் மாண்பு
(1)
எதிர்க்கட்சி என்போர்கள் எப்போதும் வைதால்
மதிப்பின்றி போய்விடும் மாண்பு
(2)
எதிரியின் வீழ்ச்சிக்கும் எள்ளாத தன்மை
மதிப்புள்ள சான்றோரின் மாண்பு
(3)
காட்சிக் கெளியோராய் கண்ணியம் காப்போரின்
மாட்சிமை போற்றுதல் மாண்பு
(4)
எளியோரின் தேவையை எப்போதும்
ஆய்ந்தே
வழிகாட்டும் நல்லரசின் மாண்பு
(5)
உரிய முறையில் உழைக்கின்ற பேரை
மரியாதை செய்தலே மாண்பு
(6)
உறவென்று சொல்லி உறவாடி விட்டு
மறப்பதா நல்மக்கள் மாண்பு?!
(7)
உண்மையாய் எண்ணும் உறவினர் மேலேயே
மண்ணையள்ளிப் போடுவதா மாண்பு?
(8)
அறமென்ற ஒன்றே அறியாதான் நட்பை
மறப்பதே நல்லோரின் மாண்பு
(9)
தன்னையே ஆராய்ந்து தன்தவற்றை காண்போரை
மன்னித்தல் நல்லோரின் மாண்பு
(10)செ.இராசா
#வள்ளுவர்_திங்கள்_140