#குறளுரையாடல்_13
#தொடர்_உரையாடல்
#கரு_பொறாமையின்றிப்_போற்று
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்
#ஐயா_1
பொறுமையே வாழ்த்தும் பொறாமையே வீழ்த்தும்
சிறுமை ஒழித்தல் சிறப்பு.
#நான்_2
சிறப்பான செய்கையால் சேர்க்கின்ற பேரை
மறவாமல் போற்றுதல் மாண்பு
#ஐயா_3
மாண்பு படைத்திடும் மான மனிதரில்
காண்க இறையின் கனவு
#நான்_4
கனவிலும் எள்ளாமை கண்ணியம் ஆகும்
நினைவிலே என்றும் நிறுத்து
#ஐயா_5
நிறுத்த மறுத்தது நில்லாமல் செல்லும்
பொறுமை ஒழுக்கத்தைப் போற்று.
#நான்_6
போற்றுவார் போற்றட்டும் போற்றாதார் போகட்டும்
ஆற்றும் கடமையை ஆற்று
#ஐயா_7
ஆற்றுச் சமவெளிப் பண்பா(டு) எனப்படுமாம்
ஆற்றும் ஒழுக்கம் அறி.
#நான்_8
அறியாத ஒன்றை அறிந்ததாய்ப் பேசும்
அறியாமை என்றும் அவம்
#ஐயா_9
அவச்சொல் அடையாத ஆண்மை உடன்வாழ்தல்
தவநெறி ஆகும் தவம்.
#நான்_10
தவமாய்த் தவமிருந்துத் தான்பெற்ற ஒன்றைக்
கவனமாய்க் காத்தல் கடன்
#ஐயா_11
கடன்பட்டார் உள்ளம் கலங்குவ தன்ன
அடம்பிடிக்கும் ஆசை அறி.
#நான்_12
அறிவாளி என்பான் அழுக்காறு கொள்ளான்
அறிவிலிக் கில்லை அது
#ஐயா_13
அதுவும் இதுவும் அகமும் புறமும்
எதுவும் இறையின் எழில்
#நான்_14
எழில்மிகு நற்படைப்பை என்றுமே தூற்றும்
இழிவான நட்பை இழ
#ஐயா_15
இழக்கும் இழிவ(து) இனிமை தருமாம்
உழலும் உளத்தை உகு
#நான்_16
உகுத்த இலைபோல் உயிர்நீங்கும் வாழ்வில்
பகுமானம் இன்றிப் பழகு
#ஐயா_17
பழக்கம் எனப்படும் பண்பே மனதின்
வழக்கம் எனநீ வழங்கு
#நான்_18
வழங்குவதைக் கண்டு வயித்தெரிச்சல் கொண்டோர்
விளங்குதல் இல்லை விடு
#ஐயா_19
விடுதலை என்பது விண்ட எழுத்தில்
கெடுதலைச் செய்யாத ஏடு
#நான்_20
ஏட்டில் எழுதிவிட்டால் எல்லாம் முடிந்திடுமா?
காட்சியாய் முன்நின்றுக் காட்டு
ஐயாவும் & நானும்
No comments:
Post a Comment