30/11/2019

மாவு மாவு மாவு- உன் மேலு எல்லாம் மாவு!!!



மாவு மாவு மாவு- உன்
மேலு எல்லாம் மாவு!!!
சீனு சீனு சீனு- நீ
செஞ்சுப்புட்ட சீனு!!!

பாலு புட்டிப் பாலு- அது
போரு மாமு போரு!
மாமு மாமு மாமு- நீ
மாவப் போடு மாமு!

வேஸ்டு மாமு வேஸ்டு- இந்த
டிவி டேபு வேஸ்டு!
பூஸ்டு மாமு பூஸ்டு- இந்தப்
பவுடர் கேமு பூஸ்டு!

பியூட்டி மாமு பியூட்டி- நீ
டோரா போல பியூட்டி!
நாட்டி நீயும் நாட்டி- நீ
ஸ்வைப்பர் போல நாட்டி!

✍️செ. இராசா

உள்ளம் தெளிந்தேன் உவந்து!




பாலைவன நெஞ்சுக்குள்
..........பைய்யவந்து பால்வார்த்து
சோலைமன வாழ்வென்னும்
........சொர்க்கத்தைக் காண்பிக்கும்
பிள்ளை(கள்) பெறுவதினால்
.........பெற்றோர்கள் என்றனரோ?!
உள்ளம் தெளிந்தேன் உவந்து!

29/11/2019

உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?!

உனக்கு என்னை
அவ்வளவு பிடிக்குமா?!
........
வருகிறாய்..
வந்த வேகத்தில் கழுத்தைக் கவ்வுகிறாய்
பின் என்னை விடவே விடாமல்...
ச்சை...
நீ செய்யும் சேட்டை இருக்கிறதே..
அப்பப்பா...முடியலை...
போய்விடு இருமலே போய்விடு
....

✍️😊😊😊

28/11/2019

சிறுவயதில் ஜீவ காருண்யம்!
சிரமேந்திப் பேணுகிறாள்
செல்ல மகள்!

எண்ணச் சமரடக்கி

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்!

✍️(எண்ணத்தரசன்...தலைப்பு தம்பி Manikandan KR​)

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்ணென்றே- எண்ணியதால்
எண்ணத் தரசனென என்னைநீ சொன்னாயோ?!
எண்ணி வியக்கின்றேன் இன்று!

27/11/2019

வெண்பாவில் வாழ்த்து!-- #முனைவர்_இளஞ்செழியர்



என்னுரை
💐💐💐💐
தூரிகையில் மைத்தொட்டுத்
...........தோற்றுவித்த ஓவியத்தைக்
காரிகையின் கைத்தொட்டே
...........காமுற்றக் காதலன்போல்
பார்த்தகண் மூடாமல்
...........பார்த்தபடி நின்றவனாய்
வார்க்கின்றேன் வெண்பாவில் வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#முனைவர்_இளஞ்செழியர்
.............முற்போக்கில் மூத்தோர்
வினையின் விளைந்திட்ட
............வித்தைகள் காத்தோர்
துணையின் விளைவாலே
............தொண்டுகள் செய்யும்
அணையா விளக்கென்றால் ஆம்!

#கவிஞர்_இளஞ்செழியர்
..........கற்பனைத் தேரில்
கவிதைக் குதிரையின்
.........கட்டவிழ்த்து விட்டாற்போல்
காட்டாற்று வெள்ளமாய்க்
........கண்டபடி ஓடியெம்மை
ஆட்டுவிக்கும் பாவலனா? ஆம்!!

#ஓவியரி_ளஞ்செழியர்
...........ஓவியமாய்த் தீட்டுகின்ற
ஓவியத்தின் உட்பொருளில்
...........ஒன்றிப்போய் நிற்கின்ற
காவியத்தில் கம்பனைப்போல்
.........காட்சிகளைக் காட்டுகின்ற
ஓவியத்தின் நாயகனா? ஓம்!

மூன்றே முகங்கள்தான்
........முத்தாய்ப்பாய்ச் சொன்னாலும்
சான்று பலவுண்டு
.........சான்றோனை யாம்போற்ற;
ஆண்டு பலவாழ்ந்திங்(கு)
.........ஆற்றிடுவீர் நற்தொண்டு!
வேண்டிப் பணிகின்றேன் வீழ்ந்து!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

கானம் ஒலிக்கிறது கருவிகள் எங்கே?!

கருவிகள் இசைந்தது
கானம் பிறந்தது!
கானம் ஒலிக்கிறது
கருவிகள் எங்கே?!

26/11/2019

இயற்கை விதி!




இதைஇதைச் செய்தால்
இதுவே நடக்கும்
என்பதே இயற்கை விதி!

இங்கேத் தொடங்கினால்
இங்கே முடியும்
இதுவும் இயற்கை விதி!

இயற்கை அமைத்த விதிகளினை
இயற்கை விதிக்கு ஊறின்றி
மதியால் முயன்று வெல்வதையே
விதியை வென்றதாய்ச் சொல்கின்றார்!!!

✍️செ. இராசா

25/11/2019

அத்தனையும் தூசியெனில்; ஆம்!




சுத்தவெளிக் காட்டுக்குள்
..........சூரியனே தூசியெனில்
சுத்துகின்ற கோள்களும்
...........தூசியடி- சத்தியமாய்ச்
சுத்திவரும் பூமியின்மேல்
...........தொத்திவரும் எல்லோரும்
அத்தனையும் தூசியெனில்; ஆம்!
✍️

24/11/2019

வெகுமானம் கிடைக்கிறது சர்வருக்கு

சமையல் ருசிக்கு
வெகுமானம் கிடைக்கிறது
சர்வருக்கு
(1)

ஒவ்வொரு வருடமும்
ஒன்றரை மாதம் விடுமுறையாம்
குடிமகன்களுக்கு..
(2)

கொடுத்த சுதந்திரம்
கொடிகட்டிப் பறக்கிறது
கவர்னர் மாளிகையில்..
(3)

23/11/2019

துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்



துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்
💐💐💐💐💐💐💐💐💐💐💐

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவு செய்யலைன்னா
எப்படித்தான் போகும்நம்ம நாடு? - சொல்
எப்படித்தான் போகும்நம்ம நாடு?!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குப்பைமேல குப்பைகொட்டி
குப்பையாகச் சேர்ந்ததுன்னா
கப்பாலே நாறும்நம்ம நாடு- ஆமாம்
கப்பாலே நாறும்நம்ம நாடு!

பாதாளச் சாக்கடைகள்
பாழாகிப் போச்சுதுன்னா
நோயாகிப் போகும் நம்ம நாடு- ஆமாம்
நோயாகிப் போகும் நம்ம நாடு!

நெகிழியெல்லாம் கூடியிங்கே
நிலமெல்லாம் கெட்டுச்சுன்னா
நீரின்றி வாடும் நம்ம நாடு- ஆமாம்
நீரின்றி வாடும் நம்ம நாடு!

ஆனால் பாருங்க....

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவா வேலை செய்ய
கையுறையும் காலுறையும் இல்லை-பாவம்
கையுறையும் காலுறையும் இல்லை!

சரிதான்னு சம்மதிச்சு
சாக்கடைய அள்ளப்போனால்
உயிருக்கும் உத்திரவாதம் இல்லை-அது
வயிறுக்கும் புரியிறது இல்லை!

சந்திரனில் தண்ணிதேட
சந்திராயன் விட்டபோதும்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை- ஆமாம்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை!

சரி விடுங்க...
இனிமேலாவது....

துப்பரவுத் தோழர்களை
எப்போதுமே ஆதரிச்சு
சிங்கப்பூரா மாற்றிடுங்க ஐயா- ஆமாம்
சீக்கிரமா மாற்றிடுங்க ஐயா!!

மக்கா..நமக்குந்தான்

சுத்தம்செய்யும் சாமிகளை
பத்திரமாப் பாதுகாத்து
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா- நாமும்
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

செ. இராசா

இப்பாடல் பள்ளிக் குழந்தைகளுக்காக பாசமிகு தம்பி பெனடிக் அருள் அவர்களின் வேண்டுகளோளுக்கிணங்க படைக்கப்பட்டது.

மனமார்ந்த நன்றி தம்பி💐💐💐🙏🙏🙏🙏💐💐💐

அனுபவம்_2


புசிக்காத பழமொன்றின்
ருசிபற்றிக் கேட்டால்
இதுபோல்...அதுபோலெனப்
பொதுவாய்ச் சொல்லிடலாம்!
எதுபோல் எனக் கேட்டால்
எப்படி நாம் சொல்லுவது?!

ஒரு மரத்தின் கனிகளே
ஒரு சுவை தராதபோது
ஒவ்வொரு கனியையும்
உரைப்பது எப்படி?!

அனுபவித்து உணர்ந்ததாய்
அனுபவஸ்தர் சொல்வது
அனுபவித்த அவர்களின்
அனுபவங்களை மட்டுமே!
இங்கே
அனுபவ உரைகொண்டு
அனுமானிக்க முடியும்!
ஆனால்
அனுபவ உண்மையினை
அனுபவமே தரும்!

💐💐💐💐💐💐💐💐💐

ஆம்..
அனுபவங்கள் அத்தனையும்
அகத்திலேப் பதிவாகி
பதிவான அத்தனையும்
புதுப்புது எண்ணங்களாகி
...........எண்ணங்களின் கூட்டணியில்
...........எழுச்சிமிகு சொற்களாகி
...........சொற்களின் கூட்டணியில்
...........சொற்பொருள் செயலாகி
அனைத்துச் செயல்விளைவும்
அழுத்தமாய்ப் பதியுமெனில்
அனுபவங்கள் அத்தனையும்
ஆசானாய் ஆகுமன்றோ?!

✍️செ. இராசா

#அனுபவம்_2

22/11/2019

நாய்க்கும் வருமே நகைப்பு




காய்க்கும் பொழுதெல்லாம்
........கல்லால் அடிப்பார்போல்
வாய்க்கும் பொழுதெல்லாம்
.........வம்பு வளர்ப்போரைப்
பேய்க்குண ஊடகங்கள்
.........பேட்டி எடுக்குமெனில்
நாய்க்கும் வருமே நகைப்பு😁😁😁!

எண்ணத் திரையில் எதையும் விரித்திட

எண்ணத் திரையில் எதையும் விரித்திட
வண்ணப் படமாய் வருவது- திண்ணம்
எதனை விரித்திட ஏற்றம் வருமோ
அதனை விரிப்பாய் அறிந்து!

21/11/2019

பொதிந்த நினைவுகள் பூக்கும் தருணம்



பொதிந்த நினைவுகள் பூக்கும் தருணம்
மதியின் அறைகள் மகிழ்வில்- அதிர்ந்து
முதன்முதல் காதல் முளைத்தது போலே
இதயத்தில் கேட்கும் இசை!

✍️செ. இராசா

கத்தாரில் சபாரி என்ற பல்பொருள் அங்காடியின் முதல் தளத்தில் எவ்வளவு அழகாக தேனீர் கடை வடிவமைத்துள்ளார்கள் பாருங்கள். தபால் பெட்டி, குருவிக்கூடு, பேருந்து நிறுத்தம், கிணறு, சாலை..... இப்படி..ஆகா

கருப்பட்டி



கச்சை கட்டிய கருப்பட்டி- என்
இச்சையைத் தூண்டுதடி!
பச்சை வர்ணப் புதுப்பெட்டி- என்
உச்சியைக் கிளறுதடி!

ஓலைப் பெட்டிப் புன்சிரிப்பு- என்
மூளையைப் பிசையுதடி!
ஆலைக் கட்டிய நின்வனப்பு-என்
வேலையை மாற்றுதடி!

உச்சம் தொட்ட உன்னழகில்- என்
அச்சம் தொலைந்ததடி!
மச்சம் கொண்ட உன்னிதழில்- என்
எச்சில் வேண்டுமடி!

#கருப்பட்டி

கருப்பட்டி இக்கவியின் கருப் பெட்டியாய் ஆனதற்கு யாழ்ப்பாணக் கருப்பட்டியே காரணம். கண்டிப்பாக நானல்ல😊😊😊😊
நன்றி நன்றி நண்பர் Siva Mathavan

✍️செ. இராசா

20/11/2019

அப்பாவின் அன்பு

மறைந்து இருந்தாலும்
நிறைந்து இருக்கிறது
அப்பாவின் அன்பு

ஓவ்வொரு அடியும்
உரக்கச் சொல்கிறது
அப்பாவின் அக்கறையை

19/11/2019

ஆனந்தம் ஆனந்தம்

அங்கும் இங்கும் போவோமா
விண்ணும் மண்ணும் வாழ்வோமா
ஆனந்தம் ஆனந்தம்
ஆயிரம் ஆனந்தம்
புலனம் வழியே ஏன் வந்தாய்?!
புதிய பயணம் நீ தந்தாய்
வா ரா யோ நீ
வா ரா யோ


ஆனந்தம் ஆனந்தம்
ஆயிரம் ஆனந்தம்
நீ விட்ட தூதில் நானும் மாட்டிக் கொண்டேன்
வாடா நீ வாடா
என்னைக் கரையேற்ற வாடா

பூக் கும் பூ வாய் நான் இருந் தா லோ
வீ சும் காற் றாய் நீ வரு வாயே
உலகைச் சுற்றியே நாம் மணப்போமா

நீ போட்ட மெட்டில் நானே ராகம் ஆனேன்
வாடா நீ வாடா
என்னை அரங்கேற்ற வாடா
ஆப் பிள் போ னாய் நான் இருந் தா லோ
ஆப் பாய் என் னுள் நீ வரு வாயே

இணைய அலையிலே நாம் மிதப்போமா
விண்ணைத் தாண்டிப் போவோமா
விண்மீன் சமையல் செய்வோமா

மாயஜால வித்தைகோடி



💐💐💐💐💐💐💐💐
வாழ்விலே........ஈசனே
💐💐💐💐💐💐💐💐
மாயஜால வித்தைகோடி
.......காட்டுகின்ற வாழ்விலே
ஞாலஞான வித்தைகாட்டி
.......காத்திடுவாய் ஈசனே!!
கோடிகோடி சூதுகோடி
.........சூழுகின்ற வாழ்விலே!
கோடிசூதை மோதிமோதிக்
..........கொன்றிடுவாய் ஈசனே!

கானமோடும் பானமோடும்
........ஆடுகின்ற வாழ்விலே
ஞானமோடும் பக்தியோடும்
........பாடுகின்றேன் ஈசனே!
அங்குமிங்கும் இங்குமெங்கும்
..........ஓடுகின்ற வாழ்விலே!
இங்குமங்கும் எங்குமுன்னைத்
..........தேடுகின்றேன் ஈசனே!

💐💐💐💐💐💐💐
ஊரிலே.........ஈசனே
💐💐💐💐💐💐💐

சாதிபேதம் என்றுசொல்லி
...........தாழ்த்துகின்ற ஊரிலே
நீதிவேதம் ஒன்றுதந்து
...........காத்திடுவாய் ஈசனே!
ஓதியோதி தீதுசொல்லி
...........தூற்றுகின்ற ஊரிலே
ஆதியோகி யாகிவந்து
...........மாற்றிடுவாய் ஈசனே!

சேரிசேரி என்றுசொல்லி
..........சேர்த்திடாத ஊரினை
நாரியர்த்த நாரிபோலே
...........ஆக்கிடுவாய் ஈசனே!
ஏறிஏறி எம்மிலேறி
............எம்மையாளும் ஊரிலே
மாறிமாறி நீயுமாறி
............காட்டிடுவாய் ஈசனே!
🌲🌲🌲🌲🌲🌲
ஓம் நமச் சிவாய
அன்பே சிவம் (2)
ஓம் நமச் சிவாய
🌲🌲🌲🌲🌲🌲

💐💐💐💐💐💐💐
வீட்டிலே......ஈசனே
💐💐💐💐💐💐💐

சோறுசோறு என்றுமட்டும்
...........சோறையூட்டும் வீட்டிலே
சோறுகூட ஞானமூட்ட
..........வந்திடுவாய் ஈசனே!
போட்டிபோட்டு சண்டைபோட்டு
...........காளியாடும் வீட்டிலே!
போட்டியின்றி அன்பையூட்டி
...........வேலிபோடு ஈசனே!

கொஞ்சமேனும் கிள்ளியேனும்
..........தந்திடாதோர் வீட்டிலே
அஞ்சிடாமல் அள்ளியள்ளி
..........தந்திடவை ஈசனே!
எல்லைமீறி என்றுமெங்கும்
..........தொல்லைதரும் வீட்டிலே
தொல்லையென்ற சொல்லுயில்லை
...........என்றுமாற்று ஈசனே!

💐💐💐💐💐💐💐
நெஞ்சிலே.....ஈசனே
💐💐💐💐💐💐💐
நானேநானே என்றுசொல்லி
........ஆடுவோர்கள் நெஞ்சிலே!
நீனேதானே நானுமென்று
.........காட்டிடுவாய் ஈசனே!
மானேதேனே மங்கையென்று
...........கொஞ்சிடுவோர் நெஞ்சிலே!
கோனே!கோச மங்கையென்று
............காட்டிடுவாய் ஈசனே!

ஆத்திகத்தை ஆத்திரத்தால்
..........தூற்றுவோர்கள் நெஞ்சிலே
ஆத்மநாத சாமிநீயே
..........ஆண்டிடுவாய் ஈசனே!
சாத்திரத்தில் கோத்திரத்தைப்
...........போற்றுவோர்கள் நெஞ்சிலே
கோத்திரத்தின் சூத்திரத்தை
............மாற்றிடுவாய் ஈசனே
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌲🌲🌲🌲🌲🌲
ஓம் நமச்சிவாய
அன்பே சிவம்(2)
ஓம் நமச்சிவாய
🌲🌲🌲🌲🌲🌲

✍️செ.இராசா

18/11/2019

இத்தனை முண்டங்கள்



நேரிசை வெண்பா
*****************
இத்தனை முண்டங்கள்
.............எப்படி இப்படி
ஒத்தைத் தலையுடன்
.............ஒட்டியதோ?!-ச
த்தியமாய்
வித்தையைக் காட்டிய
............மேதகு சிற்பியின்
உத்தியைக் கற்றால் உயர்வு!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
*****************************
எத்தனுக் கெத்தன்கள்
............எங்கிலும் உள்ளதால்
வித்தைகள் செய்ததாய்
.............வெட்டியாய்ப் பேசாமல்
சித்தம் தெளிந்தால் சிறப்பு!

ஐயப்பன் பாடல் (மெட்டுக்கு எழுதியது)






💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எட்டுத் திசையெங்கும் கூட்டம்
சாமி சரண கோசம்
பாடிவரும்......ஆடிவரும்....
சாமி திந்தக்கத் தோம் தோம்..(2)

சாமி சரணம் சொல்லி
துளசி மாலையைப் போட்டு
துறவி போலொரு கோலம்
ஏற்போம் புதிய பயணம்! ——-(2)
நாளெல்லாம் சொல்லும் நாமம்!
பாடிடுவோம் கானம்!
சாமி சரணம் ஐயப்ப சரணம்!
சாமியே சரணம்!—————(2)

பக்திச் சின்னங்கள் ஏந்தி
நெஞ்சில் ஐயனைத் தாங்கி
யாரும் யாவரும் ஒன்றாய்
கூட்டுச் சரணம் சொல்லும்!
..(BGM - சாமியே சரணம் ஐயப்பா) (2)
மகா தேவன் அருளும்
பார்த்த சாரதி அழகும்
ஒன்றாய்ச்சேர்ந்த உருவம்!
எங்கள்ஐயனின் உருவம்!——(2)

வர்ணச் சாயங்கள் பூசி
வாபர் கோவிலில் தொடங்கி
யாரும் யாவரும் ஒன்றாய்
பேட்டைத் துள்ளிடும் ஆட்டம்—(2)
உள்ளேத் தொழுகை நடக்கும்
வெளியே சரணம் முழங்கும்
மதங்களெல்லாம் இங்கே
சங்கமமாய்ப் போகும்

💐💐💐💐💐💐💐💐💐💐

பல்லவிக்கு மட்டும் வழக்கம்போல் நிறைய எழுதினேன்.... உங்களுக்குப் பிடித்த பல்லவியைச் சொல்லுங்களேன்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

(1)
எட்டுத் திசையெங்கும் கூட்டம்
சாமி சரண கோசம்
பாடிவரும்......ஆடிவரும்....
சாமி திந்தக்கத் தோம் தோம்..

(2)
சாமி திந்தக்கத் தோம்தோம்
ஐயப்ப திந்தக்கத் தோம்தோம்
பேட்டைத்துள்ளி பாட்டுப்பாடி
போடுதிந்தக்கத் தோம்தோம்

(3)
கொட்டும் மேளங்கள் கொட்டி
கோஷம் போடுது கூட்டம்
சாமிதிந்தக்க ஐயப்பத் திந்தக்க
சாமிதிந்தக்கக் தோம்தோம்

(4)
செண்டை மேளங்கள் கொட்டி
விண்ணில் அதிரும் முழக்கம்
சாமிதிந்தக்க ஐயப்பத் திந்தக்க
சாமிதிந்தக்கக் தோம்தோம்

(5)
கொட்டி முழங்கிடும் கூட்டம்
பேட்டைத் துள்ளிடும் கூட்டம்
பாடிவரும் ஆடிவரும்
சாமி திந்தக்கத் தோம்தோம்

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
ஹரி ஓம் சாமியே சரணம் ஐயப்பா
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

17/11/2019

நந்தி நகராமல்..




நந்தி நகராமல்
.......நாயகனின் பேருருமுன்
குந்தி இருப்பதினால்
..........கூறிடுமா- விந்தையெனப்
பந்தி நடத்துகையில்
.........பான்பீடா உள்ளதுபோல்
இந்தி* இருக்கட்டும் இங்கு!

*ஹிந்தி/Hindi

ஆப்பம்



உப்பிய கன்னத்தின்
........மேல்மின்னும் பால்பருவை
எப்பவும் பார்க்கின்ற
........இக்கால நங்கையைப்போல்
ஆப்பத்தின் மேனியினை
........ஆராய்ந்து பார்த்துவிட்டு
ஏப்பமிட்டேன் நன்றாக இன்று!

✍️...

#ஆப்பம்

16/11/2019

சிலைகள் பேசினால்


சிறை சென்று செக்கிழுத்த எம்மை
சிறுபிள்ளைபோல் ஏன் இன்று சிதைக்கின்றீர்?

நீதி வேண்டி சட்டம் தந்த எம்மை
நீதியின்றி ஏன் பறை சாற்றுகின்றீர்?

நாடெல்லாம் பள்ளி தந்த எம்மை
நாடார்போல் ஏன் சிலர் பார்க்கின்றீர்?

தேன்தமிழ்த் தோழனான எம்மை
தேவரென ஏன் சொல்லிப் பிரிக்கின்றீர்?

நாத்திகர்க்கும் பொதுவான எம்மை
ஆத்திகனாய் ஏன் பட்டை அடிக்கின்றீர்?

சிலைவணக்கம் பிடிக்காத எம்மை
சிலைவைத்து ஏன் மொட்டை அடிக்கின்றீர்?

#சிலைகள்_இன்னும்_பேசும்....!!!!

யாருக்கு மதம் பிடிச்சாலும்...

யானையோ மனுசுனோ
யாருக்கு மதம் பிடிச்சாலும்
ஊருக்கு ஊறுதான்

14/11/2019

புவியூர்தி மேலமர்ந்து



புவியூர்தி மேலமர்ந்து
........போகின்ற யாரும்
புவியூரை விட்டொருநாள்
........ போயிடுவர் என்றப்
புவிஞானத் தத்துவத்தை
.........பொய்யென்றா எண்ணி
புவிப்பந்தில் செய்கின்றார் போர்?!

✍️செ. இராசா

(இப்படம் இன்று காலையில் சூரிய உதயத்திற்குமுன் எடுத்தது)

13/11/2019

அனுபவம்


“அனுபவம் இருக்கா?!”

இந்தக் கேள்விதான்
எத்தனை அபத்தமானது!!

படிப்பை முடித்தவுடன்
படியேறிப் படியேறி
அலைந்து களைத்த
அனைவரும் அறிவார்கள்!

அந்தக் கேள்வியால் வரும்
அழுத்த அனுபவத்தை!
அனுபவம் முக்கியம்தான்

ஆனால்,

நீச்சல் பயிலும் முன்;
நீந்திய அனுபவம் கேட்போமா?- இல்லை
சம்சாரி ஆகும் முன்
சமாச்சார அனுபவம் கேட்போமா?!

உறிஞ்சிக் குடிப்பது என்பது
பிறந்த பிஞ்சுக்குள்
பொதிந்த அனுபவம்!

இப்படித்தான் நடக்கும் என்பது
எப்போதோ விதைத்த
ஊழ்வினை அனுபவம்!

நெருப்பு சுடும் என்பது
நெருப்பால் கிட்டிய
முதல் அனுபவம்!

நெருப்பால் சுட்டு உண்டது
நெருப்பால் விளைந்த
கற்கால அனுபவம்!

வெப்ப ஆற்றலை வேறு ஆற்றலாக்கியது
விஞ்ஞானத்தால் விளைந்த
தற்கால அனுபவம்!

ஒளிந்த சக்தியை உணர்ந்து சொன்னது
மெய்ஞானத்தால் உதிர்ந்த
மெய்யியல் அனுபவம்!

அழுத்த சக்தியை வெடிக்க வைத்தது
விளைவை அறியாமல் வந்த
விபரீத அனுபவம்!

அறிந்த அறிவை வைத்து
அனுபவ அறிவைப் பெறுவதும்;
அடைந்த அனுபவத்தை வைத்து
அறிவின் இலக்கை விரிப்பதும்
ஒரு சக்கர சுழற்சியே...

இங்கே..
அனுபவம் இல்லையென
அறிவாளிகளை ஒதுக்காதீர்!
அதே சமயத்தில்
அறிவாளிகள் கிடைத்துவிட்டால்
அனுபவஸ்தரை விலக்காதீர்!
அறிவு அனுபவமாகட்டும்!
அனுபவம் படிகளாகட்டும்!

✍️செ. இராசா

(இந்தப் படம் என் செர்பிய நண்பர் ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....படித்தவுடன் பயங்கரமாக சிரித்தேன். உலகம்பூரா... அப்படித்தான்போல😀😀😀😀😀)

#தீக்குச்சி



ஹைக்கூ
*********
உரசும் போதெல்லாம்
உயிரே போகிறது
தீக்குச்சிக்கு..

புதுக்கவிதை
************
விரல்கள் இரண்டாலும்
வேகமாய்ப் பற்றி;
இன்னும் சற்று வேகமாய்
மேனியை உரசி;
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு கணமும்
இன்னும்...இன்னுமென
இப்படியே....
எரிக்கத்தான் படைத்தீரோ?!

#தீக்குச்சியின் கேள்விகள்

தீக்குச்சி- வெண்பா
********************
சிரத்தில் இருக்கும் சிறிய கனமும்
உரசும் கணத்தில் உயிரை- எரிக்கும்
அளவில் குறைந்த அசுத்த குணமும்
உளத்தைக் கெடுக்கும் உணர்!

தீக்குச்சி- சந்தக்கவிதை
************************
பிறந்தவீடு விட்டுவந்து
புகுந்தவீடு வந்ததுமே
மருமகள்கள் ஏற்றுமொரு பெட்டி- அதுத்
திருமகள்கள் பற்றவைக்கும் தீப்பெட்டி!

சமையலறைப் போனாலும்
சாமியறைப் போனாலும்
எப்போதும் தேவையொரு பெட்டி- அது
லைட்டராக மாறியுள்ளத் தீப்பெட்டி!

வெண்சுருட்டை எரிச்சாலும்
நம்முடம்பை எரிச்சாலும்
அப்போதும் தேவையொரு பெட்டி- அது
எப்போதும் தேவையானத் தீப்பெட்டி!

நவீனக் கவிதை
***************
தலையில் ஏற்றிய காரணத்தால்
தன்னுயிரை மாய்க்க்கும்
ஒவ்வொரு தருணங்களும்
எதையோ ஒன்றை உணர்த்தினாலும்
மீண்டும் மாய்வதற்குத்
தயாராகிக் கொண்டுதான் இருக்கின்றன
இந்தத் தீக்குச்சிகள்

✍️செ. இராசா

(நாங்களும் உரசுவோம்ல...நான் தீக்குச்சியச் சொன்னேன்...😀😀😀)

12/11/2019

உன்னை அறிந்தால் உயர்வு

எல்லாம் தெரியுமென
........எப்போதும் எண்ணாமல்
கல்லா விடயத்தைக்
........கற்பனையாய்ச்-சொல்லாமல்
தன்னை உயர்வென்றே
.........தற்பெருமை கொள்ளாமல்
உன்னை அறிந்தால் உயர்வு!

நீரினை மீன்கள் துறந்தால்...


நீரினை மீன்கள் துறந்தால்- அதன்
நிலைதான் என்ன ஆகும்?- உந்தன்
நினைவினை நானும் துறந்தால்- அதன்
நிலையே அவையும் ஆகும்!

தமிழைத் தமிழன் மறந்தால்- அவன்
தலைவிதி என்ன ஆகும்?- கண்ணே
உன்னை நானும் பிரிந்தால்- ஐயோ
என்விதி போலே மாறும்!

மனிதம் நன்றாய் மலர்ந்தால்- இந்த
மதங்கள் என்ன ஆகும்?!- நாம்
காதலில் ஒன்றாய் இணைந்தால்- நம்
கண்களின் நிலையாய்ப் போகும்!

செ. இராசா

******************************************
👇👇👇இது ச்சும்மா கொசுறு👇👇👇
******************************************

கட்சிகள் கொள்கையை விடுத்தால்- இங்கே
காட்சிகள் எப்படி மாறும்?!- நாம்
கவிதைகள் செய்வதை விடுத்தால்- இந்தப்
புவியின் சுழற்சியா மாறும்?!!

11/11/2019

பாலைமண்ணில் சோலைப்பூவாய்



#பாலைமண்ணில்_சோலைப்பூவாய்
பூத்தமகன் நீயே-இந்த
ஏழைநெஞ்சில் அன்புத்தேனாய்
இன்பம்சேர்த்தாயே..
எந்தனுள்ளே சுவாசமாய்
இதயம்போடும் தாளமாய்
கண்ணிலுள்ளே பாவையாய்
எண்ணம்பாடும் ராகமாய்
விண்ணில் இருந்து மண்ணில் தோன்றிட
என்னுள் வந்தோனே- நீயென்
தங்கத்தேர்தானே!!!

சரணம்- 1
**********
நீ பிறந்த நாள்;
தாயாய்த் தரம் உயர்ந்த நாள்!!
உன்னில் எந்தன் தந்தை பிம்பம்
பார்த்து வியந்தேன் நான்!

நீ நிமிர்ந்த நாள்!- தத்தி
நீ தவழ்ந்த நாள்!
நீ அமர்ந்த நாள்!- மண்ணில்
நீ நடந்த நாள்!
நீ வளர்ந்த நாட்களெல்லாம்
நானும் வளர்ந்தேனே
நீ படித்த பாடமெல்லாம்
உன்னில் கண்டேனே
உன்னால் கண்டேனே 

சரணம்-2
**********
நீ மணந்த நாள்;
மேலும் நான் உயர்ந்த நாள்!
உன்னில் எந்தன் தாயின் பிம்பம்
பார்த்து வியந்தேன் நான்!

நீ வளர்ந்ததால்- எம்மை
நீ பிரிந்ததால்;
தீ பிடித்ததாய்- என்னுள்
நான் அழுவதால்;
நோய் பிடித்த விலங்குபோலே
நானும் ஆனேனே!
நான் துடிக்கும் வேதனையை
நீயும் அறிவாயோ..
வந்து பார்ப்பாயோ!!

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி--Surendra Kumar



கோவையில் வாழும்
.......கொடைக்கானல் பாமலரே!
சேவையின் பட்டறையில்
.......செந்தமிழாய் வந்தவனே!
வள்ளுவர்த் திங்களாய்
.......மின்னுகின்ற நல்லவனே!
உள்ளம்போல் பெற்றாய் உயர்வு!

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

10/11/2019

வெளிநாட்டுக் கணவரின் பிரிவு பாடல்


உசுரு விட்ட உடலுபோல
உன்னை விட்டு உழலுறேன்
என்ன சொல்லி என்ன ஆக..
என்னைநானே நோகுறேன்..

எண்ணையில்லா விளக்குபோல
எண்ணத் திரிய எரிக்கிறேன்...
கண்ணுக்குள்ள உன்னை வச்சு
கண்ணீராலே நனைக்கிறேன்..

அடியே அடியே... அடியே அடியே..
அடிமேல் அடியே..வாழ்க்கை இடியே..
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல்...கொடுமை கொடியே!

சரணம்-1

உந்தன் பார்வையில
மின்னல் வேகத்தில
மின்சாரம் பாஞ்சதுலதானே- நான்
சம்சாரியாக இன்று ஆனேன்!!

என்ன செய்யலான்னு
நினைக்கும் முன்னாலே
மூனு தேவதையைப் பெத்தேன்- இப்ப
மூச்சு முட்டித்தான் நிக்கேன்!

காசு பத்தாமல்
கடனை வாங்கியதில்
எல்லாமே மூழ்கியதால்தானே- நான்
இங்கேயே வந்தேனடி மானே!

சரணம்- 2

கொஞ்சம் காசெடுக்க
நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு
நாயாக உழைக்கிறேன்டி இங்கே- நீங்க
நன்றாக வாழணுமே அங்கே...

இந்தா வந்துடுறேன்னு
இப்பத்தான் சொன்னதுபோல்
இன்னும் தோனுதடி எனக்கு- ஆனால்
இன்னும் போகுதடி கணக்கு!

ஜெயிலுக்குப் போனவுக
பெயிலிலே வர்ரதுபோல்
என்னாடி நம்மோட வாழ்வு- அடி
என்னைக்கு கிட்டுமோ தீர்வு?!!

✍️செ. இராசா

09/11/2019

கீழடி பாடல்... #நாசா_பார்க்குண்டா


#நாசா_பார்க்குண்டா_நம்மாளு_ஆண்டா
மாசே நாம்தான்னு ஊர்பேசுண்டா
பீட்டா பேட்டான்னு யாராச்சும் வந்தால்
டாட்டா காட்டிட்டே ஊர்போகுண்டா
வாடா....வாடா
ஆதாரம் எங்கேன்னா நீகேட்ட- கீழடி
போதாதா உன்மூக்க நான்பேர்க்க

ஊர்போற்றவே பார்போற்றவே
கோலோச்சியே வாழ்ந்த இனமடா!
ஏர்பூட்டியே தேரோட்டியே
பாராட்டிலே வாழ்ந்த இனமடா!
யார்பார்த்ததால் கண்பட்டதோ
ஊர்கெட்டதே நீயும் யோசிடா!
யார்யாரையோ மேலேற்றவா
நாம்வாழ்கிறோம் நீயும் யோசிடா!

தோண்டத் தோண்ட மண்ணுக்குள்
தமிழன் ஊரு டா
தோண்டத் தோண்ட எங்க பேரு டா

அன்றைக்குப் பிரிவினை
இங்கு இல்லையேடா..
இன்றைக்கு இத்தனை
பிரிவு வந்ததேன்டா?!
எம்பாட்டன் வள்ளுவன்
எங்கசாமி தான்டா!
என்றைக்கும் பைந்தமிழ்
எங்கவேதம் போடா!

கெத்தா வாழ வேணும் வாடா!
மத்தப் பேச்சே வேணாம் போடா!

தமிழனென்கிற ஒற்றைவார்த்தைதான்
நம்ம சேர்க்குண்டா
ஒன்னாசேருடா... ஒன்னாசேருடா
கோட்டைகட்டி கொடியுமேத்தி
வாழ்ந்தவீரன் நாமதானடா!

தோண்டத் தோண்ட
மண்ணுக்குள் தமிழன் ஊரு டா!
தோண்டத் தோண்ட எங்க பேரு டா!

எல்லைகள் என்பதே
அன்று இல்லையேடா!
இன்றைக்கு எல்லையால்
எங்கும் தொல்லையேடா!
ஊரெல்லாம் உறவுன்னு
சொன்னநாம தாண்டா!
தாய்மண்ணைத் தோண்டியே நம்மைத்தேடுறோண்டா!

சொத்தக் காண வேணும் வாடா!
செத்த ஆழம் இன்னும் போடா!

தமிழனென்கிற ஒற்றையுணர்வுதான்
நம்ம சேர்க்குண்டா!
ஒன்னாசேருடா ஒன்னாசேருடா!
நாடுதாண்டி ஆழிதாண்டி
வாழ்ந்தவீரன் நாமதானடா!

✍️செ. இராசா

கண்ணே நான் கவிக்க....



இருள் விலக
ஒளி தேவை- கண்ணே
நான் மிளிர நீ தேவை!

கொடி படரக்
கோல் தேவை- கண்ணே
நான் உயர நீ தேவை!

கவி எழுதக்
கரு தேவை- கண்ணே
நான் மகிழ நீ தேவை!

தலை நிமிரத்
தமிழ் தேவை- கண்ணே
நான் கவிக்க நீ தேவை!

#நீயும்_நானும்

#கோலிக்குண்டின்_வேதனை



இறுகிய பனித்துளிகள்
இறங்கியே வந்ததுபோல்
இருக்கிற மேனியினை
இதழ்களில் கொஞ்சியபின்
விரல்நுனியில் மேல்வைத்து
விளையாடும் விளையாட்டில்
கண்ணால் குறிவைத்து
டொங்கென்று அடிப்பீரே....
அப்பா... அப்பப்பா...
என்ன வலி..என்ன வலி..

#கோலிக்குண்டின்_வேதனை

07/11/2019

பள்ளி ஆண்டுவிழா என்றாலே
ஒரே மகிழ்ச்சிதான்...
கடைகாரருக்கு
அறவழி சென்றாயேல் ஆலயமே வேண்டாம்!
அறமே இறையென்(று) அறி!

#எம்பாட்டன்_வள்ளுவன்

ஆத்திகரே என்போரும்
.........ஆதாரம் காட்டிடலாம்
நாத்திகரே என்போரும்
..........நாத்திறம் காட்டிடலாம்
ஆத்திரமேன் தேவையில்லை;
...........ஆதவனைக் கொண்டாடக்
கோத்திரம் தேவையா கூறு!

✍️செ. இராசா

#எம்பாட்டன்_வள்ளுவன்_எங்கசாமிடா
#என்றைக்கும்_பைந்தமிழ்_எங்கவேதம்டா

அனைவருக்கும் பொதுவானவரை
அனைவரும் கொண்டாடுங்கள்
திருக்குறளைப் படித்தபின்....