1. நான்:
கற்றுத் தெளிந்திடவே காமுற்றேன் நற்றமிழே
கற்றுக் கொடுப்பாய் கவி!
2. மாமா:
கற்பிக்கும் ஆசானே கற்கின்ற மாணவனாய்ச்
சொற்ப அறிவேயென் சொத்து!
3. நான்:
சொத்தில் சரிபாதி சோதரனாய்க் கேட்கவில்லை
சொத்தில் துளியேனும் தூவு
4. மாமா:
தூவித் தமிழ்வளர்க்கத் தோன்றும் மனத்துக்குள்
ஆவி சிரிக்கிறதே ஆழ்ந்து.
5. நான்:
ஆழ்ந்து படித்தாலும் ஆழிபோல் செல்கிறதே
தாழ்ந்தும்மை வேண்டுகிறேன் தா
6. மாமா:
தாருமென் றென்னுயிரை தட்டிப் பறித்தாலும்
வாருமென் றேயழைப்பேன் வாழ்த்து
7. நான்:
வாழ்த்தில் மகிழ்கின்றேன்; மாகவியைப் போற்றுகிறேன்!
ஆழ்போலே நிற்பீர்பல் லாண்டு!
8. மாமா:
ஆண்டு புவியளக்கும் ஆசை கவிவடிக்கும்
நீண்டு நினைவுகளில் நில்.
9. நான்
நிற்கின்ற பாட்டெழுத நெற்றிக்கண் நாயகரைப்
பற்றினால் வந்திடாதா பா
10. மாமா
பாடல் பிறந்து பறந்துவரும் பாடுங்கள்
கூடவே சொற்சுவையும் கோத்து
11. நான்
கோத்ததைத் தானிங்கே கூவியே விற்கின்றேன்
பார்க்காமல் போகின்றார் பார்!
12. மாமா
பார்த்தேன் பரிதவித்தேன் பாடாய்ப் படுத்துகிறார்
யார்வந்து மாற்றுவரி தை
13. நான்
தையல் கவிதைகளைச் சந்தையில் விற்கப்
பையன்போல் கட்டவா(ப்) பா?!
14. மாமா
பாக்கட்டிப் பார்த்தேன் படிக்கத்தான் ஆளில்லை
பூக்களிலும் தேனில்லாப் பூ
14. நான்
பூவோடு நார்சேர்ந்து பூவாசம் கொள்வதுபோல்
பாவோடு நான்செய்’தேன்’ பாட்டு!!
15. மாமா
பாட்டுக்குப் பாட்டெழுதிப் பார்த்துவிட்டேன் பாடவொரு
கூட்டமில்லை கூட்டமில்லாக் கூத்து.
16. நான்
கூத்து நடத்துகையில் கூட்டமே இல்லையெனில்
கூத்தெதற் கிங்கென்று கூறு?
(என் வேண்டுகோளுக்கிணங்க இதற்குமேல் தொடரவில்லை)
#பிற்சேர்க்கை (Anbu Logu அண்ணாவின்
வேண்டுகோலுக்கிணங்க மீண்டும் தொடர்ந்தோம்)
17. நான்
கூறுவதைக் கூறிடுவோம் கோபிக்கத் தேவையில்லை
மாறுபவர் மாறட்டும் மாமு
18. மாமா
மாமுன் நிரைவந்தால் வெண்டளை என்பார்கள்
மாமுன்நேர் வந்தாலென் செப்பு.
19. மாமா
செப்பென்ற சொல்கேட்டுத் தப்பித்துப் போனவர்கள்
இப்போது பாவலர்கள் ஆம்.
20. நான்
ஆமாம் எனச்சொன்னால் ஆகிறது மாமா;நான்
போமா எனச்சொன்னால் போச்சு!
பலரும் வெண்பாவில் மாறிமாறி எழுதும்போது அதை வியந்துபோய் பார்த்ததுண்டு. நாமும் அப்படி எழுதமுடியும் என்று அன்றைக்கு நான் நினைக்கவில்லை. ஆனால் இன்று நான் பெரிதும் மதிக்கும் பெருங்கவிஞர் திரு. அகன் அரியலூர் அவர்களின் பதிவில் ஒரு பின்னூட்டமிடும் போது இருவரும் மாறிமாறி எழுதியதால், என் அக்கனவு நிறைவேறியுள்ளது. உண்மையில் அவருக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விடயம்தான், அப்படிப்பட்ட அவர் என்னோடு எழுதியது எனக்கு மிகப் பெரிய விடயம் அல்லவா?!!!
மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏
No comments:
Post a Comment