31/10/2019

பிழைகளைப் படிகளாக்கினால்
வெற்றி வெகுதூரமில்லை

ஓவியத்தைத் தீட்டுகின்ற



ஓவியத்தைத் தீட்டுகின்ற
.............ஓவியத்தின் பின்னாலே
ஓவியமாய் நிற்கின்ற
..............ஒப்பற்ற-ஓவியனே💐💐
ஓவியத்துள் ஓவியமாய்
.............ஓவியத்தின் நாயகனாய்
ஓவியத்தில் செய்தாய் ஒளி!

#ஒருவிகற்ப_நேரிசை_வெண்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

படைத்தவன் செய்யும்
..........படைப்பில் வியந்து
படைத்தோன் செயலைப்
............ படமாய் விளக்கப்
படைத்துக் கொடுத்த
.............படத்தில் வியந்து
படைத்துக் கொடுத்ததிந்தப் பா!

#ஒருவிகற்ப_இன்னிசை_வெண்பா

✍️செ. இராசா

ஓவியர்: முனைவர் Elanchezian Sav ஐயா

நன்றி நன்றி ஐயா💐💐💐💐💐

#ஒற்றுப்_பிழைகளை_உற்றுப்_படித்தினி
#முற்றும்_களைவேன்_முயன்று

#குறள்_வெண்பா

வாயில் வலைவீசி

வாயில் வலைவீசி
வயிற்றை வளர்க்கின்றன
சிலந்திகள்

30/10/2019

#கவிதைத்_திருட்டு--வெண்பா



#கவிதைத்_திருட்டு
******************
(கவியரசர் கண்ணதாசரின் மரணத்தின்போது கவிஞர் வாலி அவர்கள் எழுதிய வரிகளை அப்படியே எடுத்து ஒரு கவிஞர் தன் கவியாய் மாற்றி எழுதி நிறைய பாராட்டுக்களை வாங்கினார். நானும் வியந்துதான் போனேன். ஆனால், அதே வரிகளை வேறு இடத்தில் படிக்கும்போது மனம் வலிக்கிறது. அட...வரி பிடித்தால் எழுதிய கவிஞர் பெயரைப்போடுங்கள் ஐயா...அதை விடுத்து இப்படி மற்றோரின் வரிகளை எடுக்காதீர்கள். அது கவிதைத் திருட்டு.

முன்பெல்லாம் கவிதையைத் திருடுவார்கள் இப்போது வரிகளை உருவுகிறார்கள். இப்படி எமக்கு நிறைய அனுபவங்கள் உண்டு உறவுகளே....சரி கடந்துபோவோம்)

வெண்பா
********
அடுத்தோர் வரியை அழகாய் உருகித்
தொடுக்கும் கவிதைத் திருட்டை-விடுத்துப்
படைத்தவன் தந்த படைப்பின் கருவில்
படைப்பினைத் தந்திடப் பார்!

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாயே!



தங்கையொன்று இல்லாது
....................தந்தையுற்ற வேதனையை
எங்கேயுன் அண்ணனும்
..................ஏற்பானோ என்றெண்ணித்
தங்கையொன்று வேண்டுமெனத்
...........தாய்க்கவியை வேண்டுகையில்
தங்கமென வந்தவளென் தாய்!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தாயே!

✍️செ. இராசா
30.10.2019

29/10/2019

#பாலும்_கள்ளும்_நிறத்தால்_ஒன்றே



கொள்கை இருக்கிற நல்லோரும்
கொள்ளை அடிக்கிற தீயோரும்
கொண்ட லெட்சியம் நிறைவேற
திண்ணிய எண்ணம் கொள்கின்றார்!

மனத்தை ஒருமையில் வைக்கின்ற
மனத்தவம் போன்ற பயிற்சிகளில்
கற்றோர் நம்பிக்கை வைத்தாலும்
மற்றோர் முன்னிலை வகிக்கின்றார்!

அறநெறி போற்றும் அறிஞரைப்போல்
அறநெறி போற்றாக் கயவர்களும்
#பால்போல் ஒன்றாய்த் தெரிந்தாலும்
#பாழ்_கள்(ல்) மனத்தால் பிரிகின்றார்!

✍️செ. இராசா

#பாலும்_கள்ளும்_நிறத்தால்_ஒன்றே

பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: கயமை / Baseness

குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

மு.வரதராசன் விளக்கம்:

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

28/10/2019

எதையோ இழந்ததே இன்று (ஏன்?)

எதையும் எழுதிட எண்ணமின்றி உள்ளம்
எதையோ இழந்ததே இன்று (ஏன்?)

24/10/2019

எழுத்துப் பிழைகள்

எழுத்துப் பிழைகள் எழாமல் இருக்க
எழுத்தைத் தவம்போல் எழுது!

#விஸ்வரூபம் காட்டி




 விஸ்வரூபம் காட்டி என்னை
........வியக்கவைத்த மாதவா- யாம்
பஸ்பமாகிப் போகும் முன்னே
........பா-ரதத்தை மாற்றவா!
அற்புதமாய்க் காட்சித் தந்திங்(கு)
.......அசரவைத்தக் கேசவா- யாம்
கற்பனையாய் வாழும் வாழ்வில்
......கவியொளியை ஏற்றவா!

23/10/2019

வெட்டுண்ட இடத்தில்...


வெட்டுண்ட இடத்தில்
மீண்டும் துளிர்க்கிறது
நம்பிக்கை

22/10/2019

பாம்பாட்டி இல்லாமல்



பல்லைப் பிடுங்கிடும் பாம்பாட்டி இல்லாமல்
பல்லாலே கொல்லுதே பாம்பு

(வரவர எந்தப் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் மரியாதையே இல்லை)

மனிதனும் தெய்வமாகலாம்



நம்மைப் பெற்ற பெற்றோரையும்;
நாம் பெற்ற பிள்ளைகளையும்;

பற்றிய துணை(வி)யையும்;
பற்றற்ற துறவியையும்;

வறுமையில் இருப்போரையும்;
வறுமையில் இறந்தோரையும்;

தெய்வநிலை ஆத்மாவையும்;
தெய்வப் பரமாத்மாவையும்

விருந்துக்கு வந்தோரையும்;
வருந்துகின்ற சொந்தத்தையும்;

இத்தனை பேர்களையும்;
அத்தோடு தன்னையும்;

அன்போடும் அறத்தோடும்
அனைவரையும் மதிப்போனே
மனித குலம் போற்றுகின்ற
மாணிக்கம் என்றறிவோம்!

#மனிதனும்_தெய்வமாகலாம்
மனிதம் இருந்தால்....!!!

20/10/2019

என்னதான் செய்கிறான்?




என்னதான் செய்கிறான்?
.........என்போர்க்குக் காட்டுவோம்
எண்ணம்போல் செய்கிறான் என்று!

என்னமோ செய்கிறான்!
..............என்போரை மாற்றுவோம்
என்னமாய்ச் செய்கிறான் என்று!

கஞ்சிக்கு இத்தனை அக்கப்போறா...

 

நெஞ்சிலுள்ள ஆசையெந்தென்
..............நெஞ்சைவிட்டு நீங்கலை
கெஞ்சினாத்தான் கிட்டுமுன்னா
..............கெஞ்சிடவும் அஞ்சலை
வஞ்சிதரும் கஞ்சியில 
..............வாசமின்னும் போகலை
கொஞ்சியுன்னைக் கெஞ்சுகிறேன் தா!

செ. இராசா

(அட...இந்தக் கஞ்சிக்கு இத்தனை அக்கப்போறான்னு கேட்குறீங்களா😊😊😃😃😃😃....ஆம்...கஞ்சி என்பது வெறும் உணவல்ல, அது பல நோய்களை நீக்கும் மருந்து)

18/10/2019

கண்ட இடம் சொர்க்கமென


கண்ட இடம் சொர்க்கமென
கண்மூடித் தூங்குகிறாய்!
வந்த இடம் வாழ்க்கையென
எங்கேயும் தூங்குகிறாய்!

நாளை என்ற எண்ணமின்றி
காலையிலேத் தூங்குகிறாய்!
வேலை வெட்டி ஏதுமின்றி
காலைநீட்டித் தூங்குகிறாய்!

பொண்டாட்டி பிடுங்கலின்றி
எங்கேயும் தூங்குகிறாய்!
பிள்ளைகுட்டி கவலையின்றி
நல்லாவேத் தூங்குகிறாய்!

வேண்டுமென்ற ஆசையின்றி
மாண்டதுபோல் தூங்குகிறாய்!
ஆண்டுபல போனபின்னும்
ஆண்டவன்போல் தூங்குகிறாய்!

முகவரி



முகவரி தந்தவரின்
முக வரியே சொல்கிறது
முகவரி முதியோர் இல்லமென

17/10/2019

கண்ணனின் தாசனே

கண்ணனின் தாசனே! கம்பனின் நேசனே!
பண்ணிசை ஏற்றிநான் பாடிட- வேண்டியே  
யாரிடம் போயிங்கு யாசகம் வேண்டுவேன்
மாரியாய் என்னுள்ளே வா!

16/10/2019

அகலிகை


✳️✳️✳️✳️✳️
என்னுரை
**********
அறிந்த கதைக்குள்ளும்
அறியாத கதையுண்டு!
தெரிந்த கதைக்குள்ளும்
தெரியாத முடிச்சுண்டு!
புரிந்த கதைக்குள்ளும்
புரியாத செய்தியுண்டு!

அப்படி ஒரு கதையை
அடிக்கடி நினைப்பதுண்டு!
அடிதொட்ட அக்கதையை
அடிசுருக்க முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொறுத்தருள்வீர்!

முன்னுரை
**********
தாடகை வதம் முடித்த
தசரத மூத்த மகன்
மிதிலைக்குச் செலும்வழியில்
மிதிபட்ட கல்லொன்றில்
முனிவன் விட்ட சாபம்
முடிவுக்கு வந்த கதை
ஆண்களின் வேகத்தில்
பெண்ணுக்கு நேர்ந்த கதை!

இந்திர தந்திரம்
***************
கௌதம மாமுனியின்
கற்புநெறிப் பத்தினியை
எப்படி அடைவதென
திட்டமிட்ட இந்திரனும்;
கொக்கோக ஆசையிலே
கொக்கரக்கோ ஒலியெழுப்ப;
முற்றும் அறிந்த முனி
சற்றே தடுமாறி;
விடியலின் முன்னாலே
வேகமாய் வெளிக்கிட்டான்!

ஆசையின் பேரூற்று
அறிவைக் கெடுப்பதுபோல்
காமன் பெற்ற மகன்
கன்னியைக் கெடுக்க வந்தான்!

முனிவன் வருவதற்குள்
முடித்துவிட வேண்டுமென்று
தந்திர வேடமிட்டு
இந்திரன் புகுந்துவிட்டான்!

குளித்தவுடன் பூஜை செய்ய
குடிலுக்கா வருவார்கள்?!!
குடிலுக்குள் வந்தவனைக்
குழப்பமாய்க் காணுகையில்
கௌதமனாய் மாறிவந்த
காமுகனும் மெய் தொட்டான்!

பருந்தின் கைகளுக்குள்
பற்றிய குஞ்சினைப்போல்
பாவியின் நெருப்புக்கு
பத்தினியும் பஞ்சானாள்!

முனிவனின் சாபம்
******************
விடிந்தும் விடியாத
விடியலைக் கண்டதுமே
அகத்தின் கண்ணாலே
அனைத்தையும் உள்வாங்கி
சிங்கத்தின் கர்ஜனையில்
சீறிவரும் நடை கேட்டு
யானை வாகனத்தான்
பூனையாய் வெளிவந்தான்!

இந்திரன் அரங்கேற்றத்
தந்திரம் புரியாது
தன்னை இழந்தவளும்
தலை கவிழ்ந்து நிற்கின்றாள்!

இருவரின் நிலை கண்டு
எரிமலையாய்க் குமுறியவன்
கோபத்தின் வேகத்தில்
சாபத்தை உதிர்க்கின்றான்!

ச்சீ....ச்சீ...
நாயிலும் கீழோனே..
நாசத்தைச் செய்தவனே...
ஆயிரம் கண்ணோடு
அசிங்கமாய்த் திரிவாய் நீ!

கண்மூடித் தனமாக
கண்மூடித் திரிந்தவனே
கண்ணோடு திரிவாய் நீ!- பெண்
புண்ணோடு திரிவாய் நீ!

அடியே...அடியே...

அடி தாங்கும் கல்லில்தான்
அழகுச் சிலை பிறந்தாலும்
அடிவாங்கும் கல்லென்றும்
உளிபற்றி அறியாது!

அப்படியா உனக்கும்....?!!

ஆகவே சொல்லுகிறேன்..
ஆவாய் நீ கல்லாக...!!

கயவனின் கயமையினால்
காரியங்கள் நடந்தாலும்
கல்லாக இருந்ததினால்
கல்லாக மாறிடுவாய்!

சினம் அடங்குதல்
********^*******
சாமக் கோழியது
காமத்திலே கூவுவதை
விடியல் கோழியென
விளங்காமல் தவறிழைத்தேன்!

முற்றிலும் துறந்தவனே
கற்றதை மறக்கையிலே
இந்திரனின் தந்திரத்தை
எங்ஙனம் நீ அறிவாய்?!!

கற்பொன்று போனதென்று
கலங்காதே என்னவளே!
கற்பென்ன கடை சரக்கா?!
போவதற்கும் வருவதற்கும்!

உண்மையும் வாய்மையுமே
உண்மையில் கற்பாகும்!
பாலினம் மூன்றுக்கும்
பொதுவான சொல்லாகும்!

கல்லான உன்மேனி- ஒர்
காலாலே உருமாறும்!
பொல்லாத சோகங்கள்
சொல்லாமல் விட்டோடும்!

அன்றைய நாள் வரைக்கும்
அகலிகையே காத்திருப்பாய்!
அண்ணல் வரும் வரைக்கும்
அமைதியாய்ப் பார்த்திருப்பாய்!

முடிவுரை
*********
முனிவன் விட்ட சாபம்
முடிவுக்கு வந்தாலும்
சம்பவம் நடந்ததற்கு
சமாதானம் சொன்னாலும்
இறந்த காலத்தின்
இழப்பினை யார் தருவார்?!!

✍️செ. இராசா


மற்ற கவிதைகளின் தியாகத்தில்தான்
ஓர் நல்ல கவிதை உதயமாகிறது

15/10/2019

மண் வாசம் மாறா உணவும் மன வாசம் குறையா அன்பும்



ஒரு பக்கம்
சாப்பாட்டுப் பெட்டியை மறந்த நான்;
மறு பக்கம்
சாப்பாடு வேண்டாமே என்று எண்ணும் தம்பி
பிறகென்ன?!
பிரபஞ்ச விதி வேலை செய்தது..

மண் வாசம் மாறா உணவும்
மன வாசம் குறையா அன்பும்
ஒன்றாய் சங்கமித்த
அந்தத் தருணம் இருக்கிறதே...

அட அட அடா....

******************************************
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்?!!!

******************************************
(என் நிறுவனத்தில் பணிபுரியும் மண்வாசம் மாறா மேலூர் தம்பியோடு Dinesh Ard சேர்ந்து ஒரு படம் எடுப்போம் என்று நினைத்தபோது எனக்கு புலனம் வழியாக அதே நேரத்தில் என் மலையாளி நண்பர் Ashik Koorimannil (🙏🙏🙏) இந்தப் படத்தை அனுப்பி வைத்த இந்த நிகழ்வும்கூட பிரபஞ்ச விதி என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை)
வயது ஏறஏற
அதிகமாய் வருகிறது
மறதி

14/10/2019

இறைவனின் அன்பு இங்கேயே கிட்டும்!



மெல்லிசை பாட்டிற்கு
துள்ளிசை போட்டால்
இன்னிசைக் கச்சேரி
இரைச்சலாய் மாறும்!

நெஞ்சிலே ஈரம்
நில்லாது போனால்
கண்ணிலும் ஈரம்
காணாமல் போகும்!

நெஞ்சத்து நட்பே
நஞ்சினை ஈந்தால்
அகத்தின் அன்பு
அதையும் ஏற்கும்!

உயிர்களின் இடரில்
உருகி நீ நின்றால்
இறைவனின் அன்பு
#இங்கேயே_கிட்டும்!

எங்கள் கனவுகள்





(பன்னாட்டுத் தமிழ் மாநாடு-2019ல், வெளியிடப்பட்ட தமிழ்ப்பட்டறை நூலில் இடம்பெற்ற அடியேனின் கவிதை)

உள்ளங்கைகளின்
உட்சூட்டை
எத்தனைநாள் தொட்டிருப்போம்!


உதடுகளின்
உச்சரிப்பை
எத்தனைநாள் கேட்டிருப்போம்!

விரல்களின்
வித்தைகளில்
எத்தனைநாள் வியந்திருப்போம்!

பெருமூச்சின்
சுவாசங்களில்
எத்தனைநாள் நனைந்திருப்போம்!

கடகடக்கும்
ஓசைகளில்
எத்தனைநாள் இணைந்திருப்போம்!

ஆனால்...
ஒரு பெருவெள்ளம்
புரட்டியதில்
எப்படியோ புதையுண்டோமே..!!

ஆம்..

#பகடைகளாய் வாழ்ந்துவிட்டு
படுகையிலே கிடந்தாலும்;
#கீழடியின் காலடியில்
கீழிருந்த காலத்திலும்;
சங்கத்தமிழ் வாழ்வினையே
என்றைக்கும் நினைந்திருந்தோம்!

எங்களின் கனவெல்லாம்
உங்களைக் காண்பதுவே...

ஆமாம்... 
#தமிழர்கள்_எங்கே...?!!

✍️செ. இராசா

மனமார்ந்த நன்றி திரு சேக்கிழார் அப்பாசாமி ஐயா 🙏🙏🙏
மனமார்ந்த நன்றி திருமதி முல்லை நாச்சியார் அக்கா. 🙏🙏🙏
ஒளியின் பார்வையில்
பெரிதாய்த் தெரிகிறது
நிழல்கள்

13/10/2019

கண்ணனின் தாசன் நீ



கண்ணனின் தாசன் நீ- பலர்
கண்களில் ஈசன் நீ!
கவிஞரில் சிகரம் நீ- பலர்
கவிதைக்கு அகரம் நீ!

நாத்தீகம் அறிந்தோன் நீ- பின்னர்
நாத்-தீய உதைத்தோன் நீ!
ஆத்தீகம் உணர்ந்தோன் நீ- அதில்
ஆத்திரம் தணித்தோன் நீ!

மன்மதக் காதலன் நீ- பின்னர்
மனம்மாறிய கோவலன் நீ!
கவிக்கையில் கம்பன் நீ- அந்தக்
கவி-கையில் மைந்தன் நீ!

உண்மையின் உரைகல் நீ- என்றும்
உன்-மெய்யை உரைத்தோன் நீ!
சந்தத்தில் கவித்தோன் நீ- வரும்
சந்ததிக்கும் கதைத்தோன் நீ!

மதம்பிடித்தத் தத்துவன் நீ- ஆனால்
மதம் பிடிக்கா வித்தகன் நீ!
முரண்பாட்டில் மூத்தவன் நீ- ஆனால்
முரண்படாத நல்லவன் நீ!

#கண்ணதாசன்

12/10/2019

மணலில் கோட்டை கட்டுகின்றார்




மழலைகள் எல்லாம் ஒன்றிணைந்து-இங்கே
மணலில் கோட்டை கட்டுகின்றார்!
கட்டி முடித்த மறுகணமே- அதைக்
காலால் எட்டி உதைக்கின்றார்!

மீண்டும் மீண்டும் கட்டுகின்றார்-அதை
மீண்டும் எட்டி உதைக்கின்றார்!
உதைத்ததை நினைத்தும் வருந்தவில்லை- அது
உடைந்ததே என்று(ம்) கலங்கவில்லை!

இவர்கள் ஆடும் ஆட்டத்திலே
இறைவனின் ஆட்டம் இருக்குதன்றோ?!

11/10/2019

கருவிழி தீட்டக் கருமை எதற்கு?



கருவிழி தீட்டக் கருமை எதற்கு?!!
கருமெய்க் கடலாய்க் கணவன்-இருக்கக்
கருவிழி போதும் கவிதை எதற்கு?!
கருப்பொருள் நீயே கவி!

ஒற்றைக் காலிலே ஆடுகின்றான்




ஒற்றைக் காலிலே ஆடுகின்றான்- இவன்
ஒய்யார நடனம் ஆடுகின்றான்!
ஒப்பனை இன்றியே ஆடுகின்றான்-இவன்
அப்பனைப் போலவே ஆடுகின்றான்!

ஊருக்கு வேண்டியும் ஆடவில்லை-இவன்
யாருக்கு வேண்டியும் ஆடவில்லை!
தன்னை மறந்தே ஆடுகின்றான்- இவன்
தகப்பனைப் போலவே ஆடுகின்றான்!

வெற்றியின் களிப்பிலும் ஆடவில்லை- அதைப்
பற்றிடும் நினைப்பிலும் ஆடவில்லை!
சிந்தையின் சிரிப்பில் ஆடுகின்றான்- இவன்
தந்தையைப் போலவே ஆடுகின்றான்!

ஆடிடு ஆடிடு என் மகனே- நீ
ஆடிடும் ஆட்டம் அற்புதமே...!!!
✍️செ. இராசா

10/10/2019

மொழி என்பது



#மொழி என்பது
ஒலிகளின் கலவை மட்டுமல்ல!
மொழி என்பது
மொழிபவரின் அடையாளம்!

மொழி என்பது
மனித இனத்திற்கு மட்டுமானதல்ல!
மொழி என்பது
சமூகமாய் வாழும்
சகலஉயிர்களின் சாதனம்!

ஆனால்...இங்கே
ஒலி எழுப்பும் உயிரினங்களில்
ஒலியைப் பதிவு செய்து
தன் அறிவையும் வரலாற்றையும்
மேம்படுத்திய இனம் உண்டென்றால்
அது
மனித இனம் மட்டுமே...!!

இருந்தும்...
ஆதியில் தோன்றிய
அனைத்து இனங்களுக்கும்
அந்த அறிவு இருந்ததா? என்றால்
அது நமக்குத் தெரியாது!
அது தன் தலைமுறைகளுக்குக்
அவற்றைக் கடத்தியதா என்றால்
அதுவும் ஆராய்ச்சிக்குரியதே...

ஆனால்...
சில இனங்கள் மட்டும்..
மிகச் சரியான முறையில்
தன் மொழியைத்
தன் தலைமுறைகளுக்கும்
கடத்தும் பேரறிவு கொண்டிருந்ததை- நாம்
கண்கூடாகக் காண்கிறோம்

ஆம்...
இரண்டே அசைகளில்
எழில்மிகு சீர்களாக்கி;
அடிகளுக்குள் அடக்கியதைத்
தளைதட்டாது பிண்ணி;
இலக்கண வரம்பு கட்டியதில்
இலக்கிய நீரை வார்த்து;
மொழியின் வடிவத்தை
ஒலியின் வரிகளாக்கி
கல்லிலும் ஓலையிலும்
சுடுமண் பானையிலும்;
கற்ற வித்தைகளை
கடத்தும் வழியறிந்து;
தமிழி தமிழென்று.....
தமிழைக் கடத்திய
ஓர் இனம் உண்டென்றால்
அது நம் தமிழினம் மட்டுமே...!!!

அப்பேர்ப்பட்ட தமிழைவிட்டு
ஆழமே இல்லா மற்ற மொழிகளை
அறிவின் அடையாளமாய் நினைப்பது
அறிவீனமல்லவா?!

ஒன்றை உணருங்கள்!!
“தமிழ்” அவமானமல்ல
அது நம் அடையாளம்!!!
ஆம்
தமிழே நம் அடையாளம்

நிலம் போனால் மீளும்
மொழி போனால் மீளுமா?
மொழி ஓர் இனத்தின் அடையாளம்!
தமிழா...
நீ தமிழின் அடையாளம்!

தமிழ் பேசு!
தமிழில் பேசு!!!

✍️செ. இராசா

07/10/2019

சொன்னது நீ தானா?



கரையினைத் தழுவும்
.........கடலலை நான்!
கருவிழி கவ்வும்
.......கண்ணிமை நீ!

தூரிகை கொஞ்சும்
.......ஓவியம் நான்!
காரிகை விஞ்சும்
.......காவியம் நீ!

கணினியை இயக்கும்
......மென்பொருள் நான்!
கவியிலே இயங்கும்
.......நன்பொருள் நீ!

உன்னுள் உறைகிற
.....மறைபொருள் நான்!
எங்கும் தெரிகிற
....இறை பொருள் நீ!

இப்படி எல்லாம் சொன்னாயே...!!!
இன்று நீயும்..........!!

#சொன்னது_நீ_தானா?

06/10/2019

நானும் உதவலாம்

என்னை ஆராய முற்பட்டால்
என்னிடம் சொல்லுங்கள் 
உங்கள் முயற்சிக்கு
நானும் உதவலாம்...!!!

#தேங்காய்த்_தண்ணீர்!




விழிகளால் அளவெடுத்து
விரல்களால் சுண்டிவிட்டு
குலுக்கிடும் வேகத்தில்
குலுங்கிடும் மொழிகேட்டு
பற்றிய வேகத்தில்
படக்கென்று அடித்தபோது
சிதறிய வேகத்தில்
சிந்தியது கண்ணீர்!
#தேங்காய்த்_தண்ணீர்!

05/10/2019

அப்பத்தா.....டொங்கு... டொங்குன்னு




டொங்கு...
டொங்குன்னு
வெத்தலைய இடிச்சுக்கிட்டு;
புளிச்சு..
புளிச்சுன்னு...
போனியில துப்பிக்கிட்டு;
இடிச்ச வெத்தலைய
அதக்கி வச்சுக்கிட்டு;
அடுத்த வெத்தலைய
இடிக்கும் முன்னால
காம்பக் கிள்ளி விட்டு
கைவிரலில் வச்சுக்கிட்டு
அப்பு...அப்புன்னு
#அப்பத்தா கொடுக்கையில

என்ன கெளவின்னு
எகத்தாளம் செஞ்சிக்கிட்டு
வெத்தலைப் பொட்டியில
விளையாட்டு காட்டயில
படவா ராஸ்கோல்னு
பொய்க் கோவம் காட்டிக்கிட்டு
பொட்டிய கொடுத்தாக்கா
#பொக்கையெல்லாம் தெரியுமே...!!!!

அட அட அடா...

✍️செ. இராச

ஓவியம்: முனைவர் Elanchezian Sav ஐயா

02/10/2019

அகர வரிசையில் அறிவுரை வாழ்த்து



அன்பின் உருவாய் அரும்பிய மைந்தனே
அன்பின் குற(ர)ளிது கேள்!

ஆலயம் தாண்டிய ஆன்மீகப் பார்வையில்
ஆழமாய் உள்ளதுதான் அன்பு!

இன்சொல் வழங்கியும் இன்முகம் காட்டியும்
இன்பம் பெறுதல் இனிது!

ஈரடி வைத்தே இயற்றிய நற்குறள்
சீரடி கற்றால் சிறப்பு!

உண்மையில் உண்மையை உண்மையாய்ப் பற்றினால்
உண்மையில் போற்றும் உலகு!

ஊரும் உலகும் உனையேற்றிப் போற்றிட
சீரும் சிறப்பும் சேர்!

எங்கும் எதிலும் இறைவனைக் கண்டிட
எங்கும் பெருகிடும் அன்பு!

ஏற்றிய கல்வியை என்றும் நினைந்திட
ஏட்டிலே மீண்டும் எழுது!

ஐம்புலன் யாவும் அடக்கிடும் ஞானத்தை
ஐங்கரன் பற்றி அறி!

ஒன்றாய்ப் பலவாய் உருவாகி நிற்கிற
ஒன்றினைப் பற்றி ஒளிர்!

ஓதும் மறைகள் உரைக்கிற யாவிலும்
யாதுமாய் நிற்பவன் யார்?!

ஔவியம் இல்லா அறத்தினைக் கற்றிட
ஔவைத் தமிழை அறி!

✍️செ. இராசா

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_செல்லம்
#அன்பு லோகநாதன் அண்ணாவின் மைந்தன்
— with அன்பு லோகநாதன்.

01/10/2019

குளி(ர்வி)த்தல்

“குளித்தலின்” மூலம் “குளிர்வித்தல்” ஆகும்
குளிருகின்ற நீரில் குளி!

✍️

*குளி(ர்வி)த்தல்

எதிர்மறைச் சேதி

எதிர்மறைச் சேதி எளிதாய்க் கவர்ந்து
மதிக்குள் நுழைந்து மறைவாய் இருந்திங்(கு)
அதுமெல்ல பின்னர் அழுத்தம் அடைந்தால்
புதுப்புது நோய்கள் புகும்!
உலகத்து மாந்தர்கள் உள்ளத்தில் எல்லாம்
அலைபோல் பரவட்டும் அன்பு

❤️வாழ்க வளமுடன்❤️