✳️✳️✳️✳️✳️
என்னுரை
**********
அறிந்த கதைக்குள்ளும்
அறியாத கதையுண்டு!
தெரிந்த கதைக்குள்ளும்
தெரியாத முடிச்சுண்டு!
புரிந்த கதைக்குள்ளும்
புரியாத செய்தியுண்டு!
அப்படி ஒரு கதையை
அடிக்கடி நினைப்பதுண்டு!
அடிதொட்ட அக்கதையை
அடிசுருக்க முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொறுத்தருள்வீர்!
முன்னுரை
**********
தாடகை வதம் முடித்த
தசரத மூத்த மகன்
மிதிலைக்குச் செலும்வழியில்
மிதிபட்ட கல்லொன்றில்
முனிவன் விட்ட சாபம்
முடிவுக்கு வந்த கதை
ஆண்களின் வேகத்தில்
பெண்ணுக்கு நேர்ந்த கதை!
இந்திர தந்திரம்
***************
கௌதம மாமுனியின்
கற்புநெறிப் பத்தினியை
எப்படி அடைவதென
திட்டமிட்ட இந்திரனும்;
கொக்கோக ஆசையிலே
கொக்கரக்கோ ஒலியெழுப்ப;
முற்றும் அறிந்த முனி
சற்றே தடுமாறி;
விடியலின் முன்னாலே
வேகமாய் வெளிக்கிட்டான்!
ஆசையின் பேரூற்று
அறிவைக் கெடுப்பதுபோல்
காமன் பெற்ற மகன்
கன்னியைக் கெடுக்க வந்தான்!
முனிவன் வருவதற்குள்
முடித்துவிட வேண்டுமென்று
தந்திர வேடமிட்டு
இந்திரன் புகுந்துவிட்டான்!
குளித்தவுடன் பூஜை செய்ய
குடிலுக்கா வருவார்கள்?!!
குடிலுக்குள் வந்தவனைக்
குழப்பமாய்க் காணுகையில்
கௌதமனாய் மாறிவந்த
காமுகனும் மெய் தொட்டான்!
பருந்தின் கைகளுக்குள்
பற்றிய குஞ்சினைப்போல்
பாவியின் நெருப்புக்கு
பத்தினியும் பஞ்சானாள்!
முனிவனின் சாபம்
******************
விடிந்தும் விடியாத
விடியலைக் கண்டதுமே
அகத்தின் கண்ணாலே
அனைத்தையும் உள்வாங்கி
சிங்கத்தின் கர்ஜனையில்
சீறிவரும் நடை கேட்டு
யானை வாகனத்தான்
பூனையாய் வெளிவந்தான்!
இந்திரன் அரங்கேற்றத்
தந்திரம் புரியாது
தன்னை இழந்தவளும்
தலை கவிழ்ந்து நிற்கின்றாள்!
இருவரின் நிலை கண்டு
எரிமலையாய்க் குமுறியவன்
கோபத்தின் வேகத்தில்
சாபத்தை உதிர்க்கின்றான்!
ச்சீ....ச்சீ...
நாயிலும் கீழோனே..
நாசத்தைச் செய்தவனே...
ஆயிரம் கண்ணோடு
அசிங்கமாய்த் திரிவாய் நீ!
கண்மூடித் தனமாக
கண்மூடித் திரிந்தவனே
கண்ணோடு திரிவாய் நீ!- பெண்
புண்ணோடு திரிவாய் நீ!
அடியே...அடியே...
அடி தாங்கும் கல்லில்தான்
அழகுச் சிலை பிறந்தாலும்
அடிவாங்கும் கல்லென்றும்
உளிபற்றி அறியாது!
அப்படியா உனக்கும்....?!!
ஆகவே சொல்லுகிறேன்..
ஆவாய் நீ கல்லாக...!!
கயவனின் கயமையினால்
காரியங்கள் நடந்தாலும்
கல்லாக இருந்ததினால்
கல்லாக மாறிடுவாய்!
சினம் அடங்குதல்
********^*******
சாமக் கோழியது
காமத்திலே கூவுவதை
விடியல் கோழியென
விளங்காமல் தவறிழைத்தேன்!
முற்றிலும் துறந்தவனே
கற்றதை மறக்கையிலே
இந்திரனின் தந்திரத்தை
எங்ஙனம் நீ அறிவாய்?!!
கற்பொன்று போனதென்று
கலங்காதே என்னவளே!
கற்பென்ன கடை சரக்கா?!
போவதற்கும் வருவதற்கும்!
உண்மையும் வாய்மையுமே
உண்மையில் கற்பாகும்!
பாலினம் மூன்றுக்கும்
பொதுவான சொல்லாகும்!
கல்லான உன்மேனி- ஒர்
காலாலே உருமாறும்!
பொல்லாத சோகங்கள்
சொல்லாமல் விட்டோடும்!
அன்றைய நாள் வரைக்கும்
அகலிகையே காத்திருப்பாய்!
அண்ணல் வரும் வரைக்கும்
அமைதியாய்ப் பார்த்திருப்பாய்!
முடிவுரை
*********
முனிவன் விட்ட சாபம்
முடிவுக்கு வந்தாலும்
சம்பவம் நடந்ததற்கு
சமாதானம் சொன்னாலும்
இறந்த காலத்தின்
இழப்பினை யார் தருவார்?!!
✍️செ. இராசா
No comments:
Post a Comment