13/11/2018

குழந்தைகள் தின வாழ்த்துகள்-131 -வது கவிதைப்போட்டி-வெற்றிக்கவிதை)


மனமெனும் ஒன்று மலராப் பருவம்
மதமெனும் ஒன்று நுழையாப் பருவம்
குணமெனும் ஒன்று தோன்றாப் பருவம்
குறையெனும் ஒன்று காணாப் பருவம்
சினமெனும் ஒன்று தங்காப் பருவம்
ரணமெனும் ஒன்று தெரியாப் பருவம்

இறையெனும் ஒன்று இருக்கிற பருவம்
கறையெனும் ஒன்று இல்லாப் பருவம்
கணமெனும் ஒன்றில் மகிழ்கிற பருவம்
கனமெனும் ஒன்று அழுத்தாப் பருவம்
தாயெனும் ஒன்றில் நிற்கிற பருவம்
தானெனும் ஒன்று நிற்காப் பருவம்

வலியெனும் ஒன்றில் வருந்தாப் பருவம்
வந்திடும் ஒன்றில் மயங்காப் பருவம்
பெற்றிடும் ஒன்றில் பற்றிலாப் பருவம்
பற்றிடும் ஒன்றை மறக்கிறப் பருவம்
அன்பெனும் ஒன்றில் சிரிக்கிறப் பருவம்
அற்புதம் நிறைந்த குழந்தைப் பருவம்

குணமுள்ள மனிதராய் வாழ்வதற்கு
குழந்தைகள் மனம்போல் மாறிடுவோம்!
மனங்களில் மனிதம் கொண்டுவர
மழலைகள் தினத்தைப் போற்றிடுவோம்!
குழந்தையே தெய்வம் என்றுணர்ந்து
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவோம்!
*****************************************************************
------
தமிழ்ப்பட்டறை நடத்திய 131 -வது கவிதைப்போட்டியில் முதலிடம் தந்த கவிஞர் வாலிதாசன் ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த தலைவர் சேக்கிழார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும்.

(தமிழ்ப்பட்டறை என்பது 10 உள்நாட்டுக்கிளைகள் மற்றும் 2 பன்னாட்டுக் கிளைகளும் கொண்ட அமைப்பு. இதுவரையிலும் இந்த அமைப்பு நடத்தும் போட்டி தவிர வேறு எங்கும் நான் கலந்துகொண்டதில்லை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த இரண்டு முதலிடங்கள் கிடைத்துள்ளது. இவைகளை என் மாமன் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்)

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2179665502352354/

No comments: