29/11/2018

முக(ம்) நூல்


முகத்தை முகப்பில் வைக்காது
முகநூல் கணக்கில் உள்ளோரே...
முகத்தைக் காட்டிட தயக்கமெனில்-நின்
முகநூல் கணக்கு எதற்கய்யா?!

முகநூல் முழுவதும் நோட்டமிட்டு
முகத்தைக் காட்டிட மறுப்போரே...
முகநூல் வழியே புன்னகைத்தால்-நீர்
சகத்தில் இழப்பது யாதய்யா?

அகத்தின் அழகு என்னவென்று
முகத்தில் தெரியும் என்பதனால்
முகத்தை முதலில் வையுமய்யா!- பின்
முகநூல் கணக்கில் வாருமய்யா!

முகநக நட்பிலே ஆரம்பித்து
அகநக நட்பிலே இணைவதற்கு
முகநூல் என்பது வரமய்யா! -அதில்
முகவரி என்பது முகமய்யா!

28/11/2018

முதல் சிகரெட்



(1)
இதழ்களின் கொஞ்சல்
இறுதியைத் தேடுகிறது
புகைப்பழக்கத்தால்

(2)
சுவாசத்தில் கலப்பது
மோசத்தில் முடிகிறது
புகைப்பழக்கத்தால்

(3)
தொடரும் பயணெமென்று
தொடங்கும்பொது தெரியாது
முதல் சிகரெட்டை

27/11/2018

எதிர்பார்ப்பு மிகுந்தது



எதிர்பார்ப்பு மிகுந்தது
ஏமாற்றம் தருகிறது!
எதார்த்தமாய் செய்வது
ஏதேதோ செய்கிறது!

வெறித்தனமாய் முயல்வது
வெற்றியைத் தவிர்க்கிறது!
விளையாட்டாய் செய்வது
வியப்பினைத் தருகிறது!

விருத்தமாய் நினைப்பது
வருத்தமாய் முடிகிறது!
அலட்சியமாய் நினைப்பது
அற்புதமாய் வருகிறது!

கடலாய் நினைப்பது
கடுகாய் இருக்கிறது!
கசப்பாய் நினைப்பது
கவிதையாய் இனிக்கிறது!

அரணாய் நினைப்பது
முரணாய் இருக்கிறது!
முடிவாய் நினைப்பது
முதலாய்த் தொடர்கிறது!

26/11/2018

எண்ணம் ஆராய்தல்- பாடலாக


*********************************
எண்ணம் கொள்கிற அலைச்சுழலை
நான்காய் வகுத்த அறிவியலை
நன்றாய் நீயும் அறிந்துகொண்டால்
இனிதாய் வாழ்வை செதுக்கிடலாம்!

கோபக் குரோதப் பகையுணர்ச்சி
வேகம் கொள்கிற வெறுப்புணர்ச்சி
மனதில் அழுத்தமாய் உருவானால்
மரணம் உடனே சம்பவிக்கும்!

உணர்ச்சி நிலையாம் பீட்டாவை
உயர்ச்சி நிலையில் வைக்காமல்
அமைதி நிலையாம் ஆல்பாவில்
அமைத்தால் வாழ்வே சிறப்பாகும்!

தியான தவங்கள் செய்துவந்தால்
தீட்டா டெல்டா நிலைசென்றே
உண்மை அறிவுப் புலனாகி
உலகம் நம்மில் வசமாகும்!

எண்ணம் எழுகிற காரணத்தை
ஒன்று ஒன்றாய் ஆராய்ந்தால்
தீய எண்ணத்தை வேரறுத்து
மாய உலகை வென்றிடலாம்!

***************************************
வாழ்க வளமுடன்

25/11/2018

இயற்கை ஆடிய ஆட்டத்திலே


நிலத்தைத் தொடாத காவிரியால்
நிம்மதி போனது கொஞ்சமென்றால்
நிலத்தைத் தீண்டிய பெருங்காற்றால்
நிழலும் இங்கேத் தொலைஞ்சிடுச்சே...

தஞ்சையில் விளைந்த பொன்னிக்கு
தரணியில் மதிப்பு அதிகமென்று
நஞ்சையில் போட்ட முதலெல்லாம்
நட்டத்தின் கணக்காய் மாறிடுச்சே..

தென்னம் பிள்ளையை நம்பிநின்ற
அண்ணன் பிள்ளைகள் எல்லாமே
இன்னும் எதுவும் உண்ணாமல்
கண்ணீர்க் கடலில் மிதக்கிறதே..

ஆட்டையும் மாட்டையும் நம்பிநின்ற
ஆயிர மாயிரம் குடும்பங்கள்
அனைத்து உயிரையும் பறிகொடுத்து
அமைதியை இழந்து நிற்கிறதே...

இயற்கை ஆடிய ஆட்டத்திலே
இழந்தது அதிகம் உறவுகளே...
இருந்தும் இனிநாம் என்னசெய்ய
இதயத்தை வலுவாய் மாற்றிடுவோம்

இறைவன் போட்ட கணக்கினிலே
இதுயென்ன கணக்கோ தெரியவில்லை
இருந்தும் இனிநாம் என்னசெய்ய
இணைந்தே மீண்டு(ம்) வந்திடுவோம்...

#கொடுப்பது_நம்_கடமை_உறவுகளே
✍️செ. இராசா

19/11/2018

சாதிய நாக்கினைத் தொங்கவிட்டு

சொந்த மக்களைக் கொன்றுவிட்டு- நீ
எந்த சாதியை வளர்க்கின்றாய்?!
பந்த பாசத்தைக் கொன்றுவிட்டு- நீ
எந்த பாதையில் போகின்றாய்?!!

சாதியச் சேற்றை பூசிக்கொண்டு- ஏன்
சாக்கடைப் பன்றிபோல் திரிகின்றாய்!
சாதிய நாக்கினைத் தொங்கவிட்டு- ஏன்
சாக்காட்டு நாய்போல் அலைகின்றாய்!

சரித்திரத் தலைவர்கள் அனைவரையும்- ஏன்
சாதியத் தலைவராய் மாற்றிவிட்டாய்!
சிலைகளின் கழுத்திலே மாலையிட்டு- ஏன்
சாதியால் வயிற்றை வளர்க்கின்றாய்?

போதும் போதும் இளைஞர்களே- நாம்
பொறுத்தது போதும் இளைஞர்களே!
இனியும் இங்கே பொறுத்திருந்தால்- நாம்
இழப்பது அதிகம் இளைஞர்களே!

ஆரியம் புகுத்திய சாதியினை- இந்த
திராவிடர் வளர்த்ததை மறவாதீர்!
ஓட்டு அரசியல் செய்வதற்கு- இவர்
காட்டிடும் நாடகம் நம்பாதீர்!

ஆள்பவர் சரியாய் இருந்திருந்தால்- இந்த
ஆணவக் கொலைகள் தொடர்ந்திடுமா!
அன்றே சாதியை ஒழித்திருந்தால்- நாம்
இன்றையக் கொடுமையைக் காண்போமா?!

போதும் போதும் இளைஞர்களே- நாம்
பொறுத்தது போதும் இளைஞர்களே!
இனியும் இங்கே பொறுத்திருந்தால்- நாம்
இழப்பது அதிகம் இளைஞர்களே!

18/11/2018

வினைப்பதிவு(பாடல்)


பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும்
இடையில் போராடும் சீவன்- இவன்
இடையில் போராடும் சீவன்

தவறென்றே தெரிந்திருந்தும்
தவறைவிட முடிவு செய்தும்
தோற்றுப்போகின்ற மனிதன்- இவன்
தோற்றுப்போகின்ற மனிதன்

எத்தனை எத்தனைத் தவறுகளோ
அத்தனை அத்தனை பாவங்களே...
எத்தனை எத்தனை பாவங்களோ..
அத்தனை அத்தனைப் பதிவுகளே...

பதிவுகள் பிறகு வினையாகும்
பதிலுக்குப் பதிலாய் பதிவாகும்
மீண்டும் மீண்டும் வினையாகும்
மீளாத் துயரை உருவாக்கும்

பதிவினை முழுதாய் நீக்கிடவே
பயிற்சியால் முயல்வோம் வாருங்கள்
தினமும் செய்கிற பயிற்சியிலே
திருப்பம் இருக்குது கேளுங்கள்...

(பழக்கத்திற்கும்.......)

வாழ்க வளமுடன்

17/11/2018

பிறந்தநாள் வாழ்த்துகள்--சேக்கிழார் ஐயா


சிலருக்கு மட்டும்தான்
சிறப்பான பெயரமையும்..
சிலருக்கு மட்டும்தான்
பெயர்போல சிறப்பமையும்

எங்கள் தலைவருக்கு
எழிலான பெயர் பாரீர்...
அவரின் பெயர்போலே
அவர் செய்யும் செயல் பாரீர்...

“சேக்கிழார்” என்ற பெயருக்குள்
“சே” யும் “கிழாரும்” கண்டீரா?
அவரின் பெயரே சொல்கிறது
புரட்சியின் பொருளே அவரென்று...

அன்றைய சேக்கிழார் இல்லையெனில்
அறுபத்து மூவரை அறிவோமா?!
இன்றைய சேக்கிழார் இல்லையெனில்
இத்தனை கவிஞரை அறிவோமா?!!

வாழ்க பல்லாண்டு ஐயா!
வாழ்க வளமுடன்!

இது ராசா பாடும் கானா

 https://www.youtube.com/watch?v=wDdFIL5_aXE

இது ராசா பாடும் கானா-நீ
கேட்டுப் பாரு வேண்ணா-நீ
போக மாட்ட வீணா- நீ
ஆடிடுவ தானா..
ஆடிடுவ தானா...

தோடா.... மாமு கூவுது
கூவு மாமு

வெந்த சோறு துண்ணு துண்ணு
நொந்து சாக நினைக்கல-நான்
மேல மேல வேணுமேன்னு
மேல போக விரும்பல!
அங்க இங்க ஓடி ஓடி
எங்கும் ஓட நினைக்கல- நான்
காசு காசு காசுன்னுதேடி
காடு போக விரும்பல!

எங்க... இன்னொரு தபா... கூவு
.....(வெந்த சோறு....)

மேல சொல்லு மாமு...

கடன உடன வாங்கி வாங்கி
காரு வாங்க நினைக்கல- நான்
வட்டி மேல வட்டி கட்டி
கெட்டுப் போக விரும்பல!
திமிருப் பேச்சு பேசிப்பேசி
திமிரா பேசித் திரியல- நான்
சும்மா வாய மூடி மூடி
கம்முன்னு கிடக்க விரும்பல!

எங்க... இன்னொரு தபா... சொல்லு
....(கடன உடன)

இது ராசா பாடும்..,

மாமு இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி வா
சுண்டக் கஞ்சி குச்சு குச்சு
சும்மா சுத்த நினைக்கல- நான்
வண்டி வண்டியா பீலாவுட்டு
வாழ நானும் விரும்பல!
சொக்கா புச்சா போட்டு போட்டு
பக்கா பண்ண நினைக்கல- அட
ச்சும்மா ச்சும்மா டீலு வுட்டு
அம்மா ஆக்க விரும்பல

எங்க... இன்னொரு தபா... சொல்லு
(சுண்டக்கஞ்சி
(இது ராசா பாடும் கானா......

சூப்பர் மாமு

16/11/2018

காய கல்பம்

https://www.youtube.com/watch?v=uhD95dINqYs
காய கல்பம் என்றாலே...
மாய மருந்தாய் எண்ணாதே...
ஆய கலைகள் இருப்பதுபோல்
ஆயுள் கூட்டும் கலையிதுவே..


காயம் என்கிற உடலைநாம்
கல்லைப் போலவே மாற்றிடலாம்...
மாயம் மந்திரம் இல்லாதே
நோயைத் தூரவே விரட்டிடலாம்

சித்தர் பலரும் செய்துவந்த
வித்தை அற்புதம் அறிவீரோ...
ஆற்றல் உள்ளே பெருக்குகின்ற
அருமை ரகசியம் பயில்வீரோ

வாழ்க்கை வளமாய் ஆவதற்கே
வாழும் கலையைக் கற்பீரோ...
ஏழு நிமிடப் பயிற்சியிலே
ஏற்றம் பெறலாம் அறிவீரோ...

முகத்தில் பொலிவைத் தருகின்ற
முதன்மைப் பயிற்சி இதுவாகும்...
உயிரை வளமாய்க் காக்கின்ற
உயிரின் பயிற்சி இதுவாகும்.

காய கல்பம் கற்றாலே
மாய உலகை வென்றிடலாம்....(2 முறை)

வாழ்க வளமுடன்
சுதந்திர உலகத்தை ரசிக்கிறாள்
கம்பிகளுக்குள் இருந்தவாறு....

14/11/2018

மழலை

(1)
மலராத போதிலும்
அதிகமாய் மணக்கிறது
மழலையின் சிரிப்பூ

(2)
முளைக்காத போதிலும்
முழுமையைச் சொல்கிறது
குழந்தையின் இருப்பு//

பயணம்


சூரியனைச் சுற்றிவரும்
புவியூர்தி வண்டியில்
எங்கிருந்தோ வந்தமர்ந்த
எத்தனையோ பயணிகள்
பயணதூரம் முடியும்முன்னர்
பாதிவழியில் போகின்றார்!

பாதிதூரம் கடந்துவந்த
மீதியுள்ள பயணிகள்
தன்னுடைய பயணம் மட்டும்
இன்னுமென்ற ஆசையில்
அடங்காமல் ஆட்டமாடி
அடக்கமாகிப் போகின்றார்!

வந்தவரும் போனவரும்
வந்துவந்து போயினும்
சுற்றிவரும் பூமிப்பந்து
சுற்றிச்சுற்றி வருகையில்
நெஞ்சில் உள்ள உறவுகளே
நினைவாய்ச் சுற்றி வருகுது....

😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என் மாமன் மகள் இந்த பூமியில்
விஜயம் செய்து அன்பை விதைத்த நாட்கள்...

விதைக்க வந்த நாள்: 14.11.1990
விடைபெற்று போன நாள்: 06.08.2004

13/11/2018

குழந்தைகள் தின வாழ்த்துகள்-131 -வது கவிதைப்போட்டி-வெற்றிக்கவிதை)


மனமெனும் ஒன்று மலராப் பருவம்
மதமெனும் ஒன்று நுழையாப் பருவம்
குணமெனும் ஒன்று தோன்றாப் பருவம்
குறையெனும் ஒன்று காணாப் பருவம்
சினமெனும் ஒன்று தங்காப் பருவம்
ரணமெனும் ஒன்று தெரியாப் பருவம்

இறையெனும் ஒன்று இருக்கிற பருவம்
கறையெனும் ஒன்று இல்லாப் பருவம்
கணமெனும் ஒன்றில் மகிழ்கிற பருவம்
கனமெனும் ஒன்று அழுத்தாப் பருவம்
தாயெனும் ஒன்றில் நிற்கிற பருவம்
தானெனும் ஒன்று நிற்காப் பருவம்

வலியெனும் ஒன்றில் வருந்தாப் பருவம்
வந்திடும் ஒன்றில் மயங்காப் பருவம்
பெற்றிடும் ஒன்றில் பற்றிலாப் பருவம்
பற்றிடும் ஒன்றை மறக்கிறப் பருவம்
அன்பெனும் ஒன்றில் சிரிக்கிறப் பருவம்
அற்புதம் நிறைந்த குழந்தைப் பருவம்

குணமுள்ள மனிதராய் வாழ்வதற்கு
குழந்தைகள் மனம்போல் மாறிடுவோம்!
மனங்களில் மனிதம் கொண்டுவர
மழலைகள் தினத்தைப் போற்றிடுவோம்!
குழந்தையே தெய்வம் என்றுணர்ந்து
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவோம்!
*****************************************************************
------
தமிழ்ப்பட்டறை நடத்திய 131 -வது கவிதைப்போட்டியில் முதலிடம் தந்த கவிஞர் வாலிதாசன் ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த தலைவர் சேக்கிழார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும்.

(தமிழ்ப்பட்டறை என்பது 10 உள்நாட்டுக்கிளைகள் மற்றும் 2 பன்னாட்டுக் கிளைகளும் கொண்ட அமைப்பு. இதுவரையிலும் இந்த அமைப்பு நடத்தும் போட்டி தவிர வேறு எங்கும் நான் கலந்துகொண்டதில்லை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த இரண்டு முதலிடங்கள் கிடைத்துள்ளது. இவைகளை என் மாமன் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்)

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2179665502352354/

12/11/2018

எப்ப வருவாயோ? (பாடலாக)


எப்ப வருவாயோ?! மச்சான்
எப்ப வருவாயோ?!
எப்ப வருவாயோ?! மச்சான்
எப்ப வருவாயோ?!

அன்னம் தண்ணி சேரவில்லை
ஆறு மாசம் ஆயிடுச்சு
படுத்தா தூக்கமில்லை...
படும்பாடு கொஞ்சமில்லை (எப்ப.....)

லெட்சுமி போட்ட கன்னு
இரண்டு கன்னு போட்டிருச்சு
வாங்கிய கடன்கூட
வட்டியும் குட்டியும் போட்டிருச்சு (எப்ப...)

அன்னியக் காச நம்பி
அயல்நாடு போன மச்சான்...
நம்ம..சோகம் மட்டும்
ஏன் மச்சான் தீரவில்லை? (எப்ப..)

வாழை போட்டோமுன்னா
வாழ வைக்கும் வாங்க மச்சான்...
வாழ்க்கை போச்சுதுன்னா
வந்து என்ன லாபம் மச்சான்?! (எப்ப..)

அலட்சியம் செய்யும்




எதையும்அலட்சியம் செய்தால்
அவைகளும் அலட்சியம் செய்யும்
அன்பிலே இணங்கிச் சென்றால்
அவைகளும் வணங்கி நிற்கும்!

விதைப்பது வெறுப்பாய் இருந்தால்
விளைவது காயாய் கசக்கும்!
விதைப்பது விருப்பாய் இருந்தால்
விளைவது கனியாய் இனிக்கும்!

நினைப்பது அழுக்காய் இருந்தால்
நிறையவே குறைகள் தெரியும்!
நினைப்பது அழகாய் இருந்தால்
நிறைவிலே வாழ்க்கை அமையும்!

வாழ்க வளமுடன்!

இனிய காலை வணக்கம்

(புதுசா ஒன்னும் இல்லீங்க.... அதேதான்... இருந்தாலும் அப்பப்ப நாமலும் சொல்லணும்ல....)

11/11/2018

பிறந்த நாள் வாழ்த்துகள்- சுரேந்திர குமார்



தமிழ்ச்சோலைத் தாய்மடியில்
தவழுகின்ற தமிழ் மகனே.....

வள்ளுவர் திங்கள் போல
வளருகின்ற இளையவனே...

உயிர்மெய் தமிழ் கொஞ்சும்
உயிர்மை மிகு சகோதரனே...

முகநூலின் முகவரியில்
அகநூலில் நுழைந்தவனே.....

தமையனின் வார்த்தைகளை
இமைபோலக் காப்பவனே...

சுந்தரத் தமிழ் கொஞ்சும்
சுரேந்திரக் குமாரனே.....

நற்றமிழாய் வாழவேண்டி
நானுன்னை வாழ்த்துகின்றேன்...

செந்தமிழாய் சிறக்கவேண்டி
எந்தமிழில் வாழ்த்துகிறேன்...

வாழ்க வளமுடன் தம்பி Surendrakumar

என்ன இது?!!!

பரிதியின் காதலில் முளைத்த
பால்ப்பருவா?- இல்லை
வெக்கையின் வேகத்தில் வெடித்த
வியர்க்குருவா?

தனக்காக காதல் சொல்லும்
பனித்துளிகளா?- இல்லை
சத்தமின்றி சமிக்ஞை செய்யும்
முத்துப்பற்களா?

அழகுக்கு அழகு கூட்டும்
வைரக்கற்களா?- இல்லை
யாரையோ குறி வைக்கும்
மாய முற்களா?

விண்ணை விட்டு இறங்கிவந்த
விண்மீன்களா?- இல்லை
தன்னை விட்டு வெளியேவந்த
வெண்மீன்களா?

என்ன இது?!!!



(நான் எடுத்த இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது)

10/11/2018

தடுத்திட வாயடி கண்ணே

அலைகடல் போலவே
அடிக்கடி மோதியே
அலைகிறேன் பாரடி பெண்ணே- எனை
அணைத்திட வாயடி கண்ணே

தேய்பிறை போலவே
தேய்ந்தே உருகிடும்
தேகத்தைப் பாரடி பெண்ணே- எனைத்
தேற்றிட வாயடி கண்ணே!

கவிஞனைப் போலவே
கண்டதைப் பதிவிடும்
முகநூல் பாரடி பெண்ணே- அதில்
முழுவதும் நீயடி கண்ணே!

தமிழனைப் போலவே
தமிழினைக் கொன்றிடும்
தருதலை நானடி பெண்ணே- எனை
தடுத்திட வாயடி கண்ணே!

#தமிழ்_பெண்ணுக்காக

09/11/2018

மூத்தோர் நட்பு (குறளின் குரலாய்)


இருட்டில் உதவிடும் தீப்பந்தம்போல்-தன்
இருப்பில் உதவிடும் பெரியோர்கள்- உடன்
இருப்பது வாழ்வின் சிறப்பன்றோ?!- அது
இறைவன் அருளிய கொடையன்றோ?!

ஒற்றைச் சூரியப் பேரொளிபோல்- தமிழ்
கற்றோர் ஒருவரின் நட்பொளியில்-நமைச்
சுற்றிலும் அறிவொளி பரவுமன்றோ?!-அது
பெற்றோர் உவகையைக் கூட்டுமன்றோ?!

அறிநெறி நூல்கள் சொல்வதுபோல் - நாம்
அறிவுள்ள மூத்தோர் சொல்கேட்டால்- அது
என்றும் நம்மைக் காக்குமன்றோ?!- அது
பண்புள்ள மனிதரின் செயலன்றோ?!

08/11/2018

பெண்களால் முடியும்



மண்ணில் பிறந்து மடிவதற்கா
பெண்ணாய் நாங்கள் பிறப்பெடுத்தோம்?!
விண்ணில் பறந்து திரிந்திடவே
பெண்ணாய் மண்ணில் பிறந்துவந்தோம்!

பெண்ணினம் மெல்லினம் என்றுசொல்லி
பெண்களைக் குறைவாய் எண்ணாதீர்!
மண்ணையும் விண்ணையும் ஆள்வதற்கும்
பெண்களால் முடியும் மறவாதீர்!

துளிப்பா


(1)
நான்கு கரங்களால்
இரண்டு இதயங்கள் எழுதுகிறது
கருவில் ஓர் கவிதை
(2)
ஆணில் உள்ள பெண்மையும்
பெண்ணில் உள்ள ஆண்மையும்
அர்த்த நாரீசமாகும் அற்புதம்
(3)
நீர் கோடி விதைத்தாலும்
ஒன்றிரண்டே பிழைக்கிறது
கருவுக்கள் சிசு

07/11/2018

எங்கு சென்றாய்?



எங்கு சென்றாய்?-நீ
எங்கு சென்றாய்?
ஏன் சென்றாய்?-நீ
ஏன் சென்றாய்?

அழைத்த பொழுதெல்லாம்
அடிக்கடி வருவாயே...இன்று
அழுது புலம்புகிறேன்
அலட்சியம் செய்கிறாயே...

என்ன தவறிழைத்தேன்?- சொல்
என்ன தவறிழைத்தேன்?
ஏன் விலகிவிட்டாய்- எனை
ஏன் விலக்கிவிட்டாய்?!

பணியின் சுமையாலே- உனைப்
பார்க்க மறந்துவிட்டேன்- இந்தப்
பாவிப் பிழை பொறுத்து- ஓரு
பார்வை பாராயோ?!

ஐயோ... நீயின்றி- நான்
அனாதை ஆகிவிட்டேன்
சீக்கிரம் வருவாயோ- என்
சிந்தையில் நிறைவாயோ?!!

வாடா என் கவியே- என்
வார்த்தை நீயல்லவா....
வாடா என் தமிழே- உன்
வரவே உயிரல்லவா...

உனக்காய் என்றும் நான்
உயிர்ப்போடு காத்திருப்பேன்...
தமிழின் யாசகன் நான்
தனியாகக் காத்திருப்பேன்...

#IEI_Qatar_Chapter_news_in_Gulftimes

05/11/2018

தீபாவளி வாழ்த்துகள்


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞான ஒளியேற்றும்
தத்துவம் விளக்குகின்ற
அற்புதத் திருநாளில்
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

நமக்குள் இருக்கின்ற
நரகாசுரத் தீயவனை
நசுக்கியே அழிக்கின்ற
நன்நாளாய் ஆக்கிடவே
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

இராவண வதை முடித்து
இராமணன்று திரும்புகையில்
அயோத்தியில் ஏற்றிவைத்த
அகல் தீப விளக்குகளை
திரும்பும் திசையெல்லாம்
திரும்பவும் ஏற்றிடுவோம்!

சக்தியின் பேருருவை
சரிசமப் பாதியாக்கி
அரனின் பாதியோடு
அர்த்தநாரி ஆனநாளில்
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

சைவ வைணவர் முதல்
சமண சீக்கியர் வரை
சகல மனிதர்களும்
சமத்துவமாய்க் கொண்டாட
தீபங்கள் ஏற்றிவைத்து
தீபாவளி கொண்டாடுவோம்!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

(அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்)

இழப்புகள்

அன்பானோரின் இழப்புகள்
அடிக்கடி காதில் விழுவதும்,
அந்த நேரம் வருத்தப்பட்டு
அதைக் கடந்துபோவதும்
எதையோ உணர்த்துகிறது

03/11/2018

படகுகள்



(1)
கடல் மீன் கிடைக்காமல்
மிகவும் வருத்தப்படுகிறது
கரைதாண்டாப் படகுகள்

(2)
ஆடி அலைக்கழித்து
அமைதியாய் ஒதுங்கியது
கரையோரப் படகுகள்

(3)
ஆர்ப்பரிக்கும் காற்றிலும்
அசையாமல் இருக்கிறது
கரையில் படகுகள்

இருவரிக் கவிதைகள்


ஆசையென்னும் வலையில்
அகப்பட்டுக் கொண்டது உயிர்

இரை சிக்க வைக்கும்
இறை விடுவிக்கும்

தான் விரித்த வலையில்
தானே சிக்கும் உயிர் மனிதன்

01/11/2018

#வெட்டப்படும்_ஆடுகள்



உங்களைப்போல்தானே
நாங்களும் கருவுற்றோம்...

உங்களைப்போல்தானே
நாங்களும் பிறப்புற்றோம்....

எங்களைக் கண்டாலே
ஏன் எச்சில் வார்க்கின்றீர்...?!

அங்கங்கள் ஒவ்வொன்றாய்
ஏன் கண்ணில் அளக்கின்றீர்?

பின்னாலே மெல்ல வந்து
ஏன் எம்மைத் தொடுகின்றீர்!

என்ன தவறிழைத்தோம்
ஏன் எம்மைக் கொல்கின்றீர்?

#வெட்டப்படும்_ஆடுகள்

(தகவல்:

கிருபானந்த வாரியாரிடம் சைவம் அசைவம் பற்றி கேட்டதற்கு அவரின் பதில் என்ன தெரியுமா?

ஆட்டைப் பார்க்கும்போது கண்ணில் தண்ணீர் வந்தால் அது சைவம். நாக்கில் தண்ணீர் வந்தால் அது அசைவம்)

ஆண்டவர் கையிலே ஆயுதங்கள்


ஆன்மீக நாட்டிலே
..............ஆயிரம் தெய்வங்கள்
ஆண்டவர் கையிலே
...............அழிக்கும் ஆயுதங்கள்

அற்புதக் கடவுளுக்கு
...............ஆயுதம் எதற்கென்ற
அறிவின் கேள்விக்கு
................அளிக்கும் பதிலென்ன?!


பகுத்தறிவு நாட்டிலும்
................பலநூறு பேய்கள்
பேய்களின் கையிலும்
................பலநூறு ஆயுதங்கள்

அழிந்த உடலுக்கு
............... ஆயுதம் எதற்கென்ற
அறிவின் கேள்விக்கு
................ அளிக்கும் பதிலென்ன?!!

நல்லவை என்பது இறைநிலை வடிவம்!
அல்லவை என்பது சாத்தான் வடிவம்!
இவைகள் கைகளில் இருக்கிற ஆயுதம்
விளைவை விதைக்கும் அறிவின் வடிவம்!
*****************************************************************
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பேய்களின் விழாவிற்காக (Halloween) விற்பனைக்கு வைத்திருந்த இந்தத் திரிசூலத்தைக் கண்டேன். அதை அப்படியே வீட்டில் பூஜையறையில் சேர்த்துவிட்டேன். இந்த ஆயுதத்தைப்பற்றி சிந்தித்தபோது தோன்றிய படைப்பு இது)

#அறிவே_ஆயுதம்

வாழ்க வளமுடன்