30/04/2018

பிழையில்லா மனிதர்கள்

பிழைக்கத் தெரியாதவராய்
    பிழையுள்ள சமூகத்தில் வாழும்
    பிழையில்லா மனிதர்கள்

29/04/2018

அக்கினியாய்த் துணிந்திடு---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (102) பங்குபெற்ற கவிதை



தூத்துக்குடி மாநகரே
துக்கவீடா மாறுதய்யா..
தூத்துக்குடி உப்பில்கூட
துர்மணமே வீசுதய்யா..

பெற்றெடுத்த பிஞ்சுகூட
புற்றுநோயால் சாகுதய்யா
கொத்துக்கொத்தாய் சாவதற்கா
பெத்துநாங்க போட்டோமய்யா...

ஒருத்தன் சம்பாதிக்க
ஒருஊரே சாகனுமா?
ஒத்தூதும் தலைவர்களே
ஓருவார்த்தை சொல்லுமய்யா?!

ஸ்டெர்லைட்டு நிறுவனத்தால்
செல்லெல்லாம் மாறுதிங்கே
அடுத்தத் தலைமுறையே
அநாதை ஆகுதிங்கே....

அமைதியாய்ச் சொல்கின்றோம்
அரக்கனே ஓடிவிடு!
சாக்கடை நிறுவனத்தை
சீக்கிரமாய் மூடிவிடு!

மாட்டிற்குச் செய்ததைப்போல்
மாணவரே சேர்ந்துவிடு!
அமைதிப்படை கொண்டே
அக்கினியாய்த் துணிந்துவிடு!

✍️செ. இராசா

28/04/2018

விழிகள் திறந்தவுடன்



விழிகள் திறந்தவுடன்- உனை
விரலால் தீண்டுகின்றேன்- உன்
இமைகள் திறந்தவுடன்- என்
இதழால் சிரிக்கிறேன்- உன்

முகத்தில் முகம் பார்த்தே- என்
முழுநாளையும் கழிக்கிறேன்- என்
கண்கள் உறங்கும்வரை- உனைக்
கைகளால் தாங்குகின்றேன்!

ஐயோ விழுந்துவிட்டேன்- உன்
அடிமையாய் மாறிவிட்டேன்- நீ
விரித்த வலையினிலே- நான்
விழுந்தவன்(ள்) ஆகிவிட்டேன்- என்

காலத்தை வீணடிக்கும்- உன்
ஜாலத்தை நிறுத்திடுவேன்- உன்
மாய வலை அறுக்க- என்
மதிக்குச் சொல்லிவிட்டேன்- நீ

அடிக்கடி உரசிடவே- இனி
அனுமதி உனக்கில்லை- ஒரு
அளவுடன் பழகிடவே- நான்
அனுமதி தந்திடுவேன்- இனி

முகநூல் வலையினிலே- என்
மதிநூல் மயங்காது- சில
கட்செவி அழைப்பெல்லாம்- இனி
என்செவி கேட்காது!

---செ. இராசா

27/04/2018

“ஹலோ....ஹலோ



அறிவியல் படைப்பினிலே
அற்புத வருகையாக
அடித்தேச் சொல்லிடலாம்
அலைபேசி தானென்று...

தொன்னூறாம் வருடங்களில்
தொலைபேசி மணியோசை
“டிரிங் டிரிங்” ஒலியாக
காதுக்குள் கேட்டதன்று..

தொட்டுச் சுழற்றுகின்ற
தொலைபேசி தொலைந்தபின்னே...
செங்கல் வடிவம்கொண்ட
செல்லுலார் தொடர்ந்துவர;

கருப்பு வெள்ளையெல்லாம்
நிறங்களாய் உருமாற
தலைமுறை நான்கென்றே
அலைவரிசை நிலைமாற
கைக்குள் அடங்குகின்ற
கைப்பேசி வந்ததன்றோ?!!!

******************************
தொலைதூரம் சுருங்கச்செய்த
தொலைபேசித் தந்தையன்று
தொலைபேசியில் பதிவு செய்த
முதல் குரல் யாதெனில்:
“வாட்சன் இங்கே வாருங்கள்...
உங்களை நான் காண வேண்டும்”

அலெக்சாண்டர் கிராகம்பெல்லே
அறிந்திரா வார்த்தையாக
அகிலமே பேசுகின்ற
முதல் குரல் யாதெனில்:
“ஹலோ....ஹலோ.....”

அலைபேசி உலகிற்கே
அவ்வார்த்தை பொது வார்த்தை....

“ஹலோ” என்று சொல்லும்போது
அவரையும் நினைந்திடுவோம்
“ஹலோ” என்ற சொற்களிலே
அவரையும் வாழ்த்திடுவோம்...

“ஹலோ....ஹலோ.....”

—-✍️செ.இராசா

26/04/2018

தாயோடு சேய்கொண்ட பாசம்

தாயோடு சேய்கொண்ட பாசம்
தமிழோடு நான்கொண்ட நேசம்
உயிரோடு உடல்கொண்ட உறவு
உயர்தமிழோடு நான்கொண்ட உறவு

25/04/2018

எது நட்பு?!



மெய்யோடு மெய்யும்
பொய்யோடு பொய்யும்
ஒருசேரும் நட்பு
பொருத்தமான நட்பு!

அதிகார குணமும்
அடங்கிடா மனமும்
ஒருமிக்கும் நட்பு
ஒவ்வாத நட்பு!

உள்ளதைச் சொல்லி
உடையதை விளம்பி
பெருகிடும் நட்பு
பெரியோரின் நட்பு!

ஒளித்து மறைத்து
ஒப்புக்குப் பழகி
சுருங்கிடும் நட்பு
சிறியோரின் நட்பு!!

உயிருள்ள வரைக்கும்
உவகையில் மணக்கும்
சந்தன நட்பே
சத்திய நட்பு!

——✍️செ.இராசா——

24/04/2018

வாரியம் கேட்பதற்கா.....?



நெஞ்சு பொறுக்குதில்லையே-தமிழா
நெஞ்சு பொறுக்குதில்லையே

வாரியம் கேட்பதற்கா- பல
காரியம் செய்கின்றான்!
உரிமையைக் கேட்பதற்கா- நமை
உயிர்வதைச் செய்கின்றான்!

பயிர்களை அழித்திடவா- இவன்
கெயிலினைக் கூட்டிவந்தான்!
நிர்க்கதி ஆக்கிடவா- இவன்
நீயூட்ரினோ கொண்டுவந்தான்

மக்களைக் கொல்வதற்கா- இவன்
மதுக்கடை நடத்துகின்றான்!
ஆட்களைக் கொல்வதற்கா- இவன்
ஆலைகள் திறக்கின்றான்!

நெஞ்சு பொறுக்குதில்லையே-தமிழா
நெஞ்சு பொறுக்குதில்லையே!

பொறுத்தது போதுமய்யா- நாம்
பொறுத்தது போதுமய்யா!
இன்னும் பொறுத்திருந்தால்-நம்
இழப்புகள் கூடுமய்யா!

✍️செ. இராசா

அன்புத் தம்பிக்காக....



வாழ்க்கை என்பது பயணமடா- நீ
வாழ்க்கையை வாழ்ந்திடப் புரியுமடா!
வாழ்க்கை என்பது பள்ளியடா- நீ
வாழ்க்கையைக் கற்றிட வேண்டுமடா!

வெற்றியும் தோல்வியும் சகசமடா- நீ
வெற்றென நினைப்பது மூடமடா!
வெற்றியும் ஒருவகைப் போதையடா- நீ
வெற்றியில் ஆடுதல் மடமையடா!

ஒருமுறை வாழ்ந்திடும் வாழ்க்கையடா- நீ
அறமுறை வாழ்வியல் வாழ்ந்திடடா!
பலமுறை வென்றிட முடியுமடா- நீ
வழிமுறை அறிந்திட வேண்டுமடா!

காலம் இங்கே சாட்சியடா- நீ
காலத்தை ரசித்தால் கவிஞனடா!
காலம் சொல்வது நீதியடா- நீ
காலத்தை அறிந்தால் ஞானியடா!

——✍️செ.இராசா

23/04/2018

கடிதங்கள்



சேர்த்து வைக்கவும்
சேர்ந்ததைப் பிரிக்கவும்;

விரும்பியது கிடைக்கவும்
வெறுப்பதை மறுக்கவும்;

விடுப்பு கேட்கவும்
தடுப்பில் போடவும்;

பணியைத் துறக்கவும்
பணியில் துரத்தவும்;

காலத்தைக் கடத்தவும்
காட்சியாய்க் காட்டவும்;

எல்லாம் செய்கின்ற கடிதங்கள்
என்றும் மறையா படிவங்கள்!

---செ. இராசா---

20/04/2018

சில துளிகள்

அறத்தோடு வாழ்பவனே
அறிவுரை கேட்பான்
*******************************
ஒருகூடை ஆரஞ்சில்
கெட்ட பழம் ஒன்றாயினும்
உடன் நீக்காவிட்டால்
மற்ற பழங்களும் கெடுமாம்
**********************************
விழுந்த துண்டு போர்வையானது
மாதக்கடைசியில்
**********************************
அறத்தின் பலனல்ல இன்பம்
அறமாய் வாழ்வதே இன்பம்
**********************************
 

19/04/2018

நான் தமிழுடன் பேசினேன்



நான் தமிழுடன் பேசினேன்...ஆம்
நான் தமிழோடு பேசினேன்..

தொலைப்பேசி வாயிலாக
தொன்னூறு நிமிடங்கள்..
விலைபேசி கணக்கிட்டால்
பலநூறு வைரங்கள்...

அப்பப்பா என் சொல்வேன்
அத்தனையும் அற்புதங்கள்..


தொல்காப்பியர் வந்தபோதே
கண்ணதாசர் கூட வந்தார்
வைரமுத்து வந்தபோதே
கலைஞரும் வந்துவிட்டார்

விசில் சத்தம்
விண்ணைப் பிளக்க
வீறுகொண்டார்
விக்டர் தாசர்..:

வீரத்தமிழ்ச் சொல்லாலே
வெற்றி கண்டார்
வெற்றி தாசர்...

தமிழாலே உரையாடல்
தமிழோடு உரையாடல் ...
வருங்கால உரைகளுக்கு
கருவான சொல்லாடல்...
உயிரான தமிழாடல்....

களிப்போடு பேசும்போதே
கனல்மூட்டும் களம்சென்றார்
ஆறுவது சினமென்றே
அறிந்ததால் அமைதியுற்றார்

அடுத்த கடமைபற்றி
அடுத்தடுத்து எடுத்துச்சோல்லி
அகத்தில் அன்போடு
அண்ணனவர் விடைபெற்றார்..

நான் தமிழுடன் பேசினேன்...ஆம்
நான் தமிழோடு பேசினேன்..

அன்புடன் தம்பி
செ. இராசா

பிற்சேர்க்கை:
***************
தூத்துக்குடித் துயரங்களும்
துக்கமான நிகழ்வுகளும்
தொண்டையை அடைத்ததினால்
தொடாமல் விட்டுவிட்டேன்
மன்னியுங்கள் அன்பு அண்ணா...

சொல்ல முடியா சோகத்தினை
கொல்ல முடியா பாவிகளை
சொன்னாலும் குத்தமென்றே
சொல்லாமல் விட்டுவிட்டேன்
மன்னியுங்கள் அன்பு அண்ணா..

கர்மவீரர் காமராசர்



மன்னராட்சிக் காலமெனில்
சோழராசர் ஆண்டகாலம்!
மக்களாட்சிக் காலமெனில்
காமராசர் ஆண்டகாலம்!

கற்காலக் காலம்தொட்டு
தற்காலக் காலம்வரை
பொற்காலச் சரித்திரமாய்
போற்றிடலாம் இரண்டையுமே!

கல்வியாளர் விழுக்காட்டை
கணிசமாக உயர்த்தியவர்
கற்காத மேதையான
கர்மவீரர் காமராசர்!

நீருயரும் பொழுதினிலே
பாருயரும் என்றறிந்து
நேருக்கு நேர்நின்றே
நீருயரச் செய்தவர்!

எதிர்த்தவரும் தோற்றவரும்
எதிரணியில் இருந்தாலும்
அமைச்சராய் அமரவைத்து
அழகுசெய்த பண்பாளர்!

சற்றும் ஆசையில்லா
பற்றில்லாத் துறவியர்!
தோற்றாலும் துவளாத
ஏற்றமிகு வீரரவர் !

தமிழினம் உயரவைத்த
தமிழ்நாட்டுக் காந்தியவர்!
தமிழனாய் உயர்ந்து நின்ற
தமிழறத் தலைவரவர்!

--செ. இராசா---

18/04/2018

பிரிவு


உடலோடு உயிராக
உதிரத்தில் உறைந்தவளே!
கண்ணோடு இமையாக
என்னோடு இருப்பவளே!
இசையோடு கவியாக
இதயத்தில் நுழைந்தவளே!
கவிபாடும் குயிலாக
கனவிலும் வருபவளே....!

பிரிவென்ற தமிழ்ச் சொல்லே
பருதியாய்ச் சுடுகுதடி!
அகராதியில் அச்சொல்லை
அழித்திடவே வேண்டுமடி!

--செ. இராசா---

(தமிழ்ச்சோலை வள்ளுவர் திங்கள்-10 நிகழ்விற்காக எழுதியது)

90வது கவிச்சரம்-முகநூல் குழுமம்


 💐💐💐💐💐💐

தமிழ்த்தாய் வணக்கம்
**********************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதையாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


கவிச்சரத்தலைமை வணக்கம்
*****************************
மருத்துவச் சேவையோடு
தமிழ்ச்சேவை செய்கின்ற
மாண்புமிகு நடுவரையும்
மனதார வாழ்த்துகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
********************************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

முகநூல் குழுமம்
****************
ஒத்த கருத்துடையோர்
ஒருகுடையில் சங்கமித்து
தம்தம் பதிவுகளை
தவறாமல் அரங்கேற்றி
குழுவின் விதியோடு
குழுமத்தில் பயணித்தால்
முகநூல் குழுமங்கள்
முழுநிலவாய் ஒளிவீசும்!!

⌨️💻📱💻📱🖥💻⌨️

நிர்வாகிகள்
***********
எண்ணித் துணிந்தேதான்
ஏற்கின்ற பொறுப்புகளை
மூத்தோர் சொல்கேட்டு
முறையாகச் செல்வோரே
இணையத்தில் சிறப்புருவர்!
இலக்கினை அடைந்திடுவர்!
அரங்கேற்றம் ஆவதிலே
அற்புதங்கள் குறைந்தாலும்
அதனுள்ளே நிறைகண்டு
அழகினைக் காண்போரே
குன்றாகத் தெரிந்திடுவர்!
எந்நாளும் சிறந்திடுவர்!

👨🏻‍💼👨🏻‍🏭👩🏻‍🏭👨‍✈️🧕👷‍♀️👩‍👧‍👧👨🏻‍💼

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையிலே
கவிஞர்கள் சபையிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையை
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா