05/04/2018

காலம்




காலம்-1 (குறளின் குரலில்)
************************
அலையாத மனத்தோடு
நிலையான குணத்தோடு
அசையாமல் சிலநேரம்
சிலையாக நின்றிருந்து

கொக்கைப்போல் செயல்பட்டு
கொத்துவது இலக்கானால்
கோட்டையை வசமாக்கி
கோபுரத்தைத் தொட்டிடலாம்!!!

ஆக்கத்தில் சிலநேரம்
தேக்கங்கள் வந்தாலும்
ஏக்கத்தால் சிலநேரம்
தாக்கங்கள் கொண்டாலும்

ஊக்கத்தில் குறையாமால்
ஆக்கத்தை கவனித்தால்
நோக்கத்தை அடைகின்ற
மார்க்கத்தைக் கண்டிடலாம்!!!

காலம்-2
*********
அறிஞரின் அறிவு கண்டு
அதனாலே வியந்து நின்று
சிந்தையிலே தாழ்வோடு
சிறியோனாய் எண்ணாமல்
காரியத்தை எந்நாளும்
கச்சிதமாய் செய்துவந்தால்
காலம் வெல்லும் நிச்சயமாய்!
காத்திருக்கப் பழகிடுவாய்!

இருநபர்கள் புகழ்ந்ததுமே
இறுமாப்பில் வலம் வந்து
சிந்தையிலே கர்வத்தோடு
சினம்கொண்ட சிரத்தோடு
வாய்ச்சவுடால் செய்துகொண்டே
வக்கினையாய் பேசிவந்தால்
காலம் கொல்லும் நிச்சயமாய்!
காலமெல்லாம் நினைந்திடுவாய்!

No comments: