பாரி- க(வி)தை
******************
கடையேழு வள்ளல்களின்
கொடைபற்றி கவிசொல்ல
தடையேது மில்லாமல்
தமிழ்வந்து துணைநிற்கத்
தமிழ்த்தாயின் தாள்களினை
தலைகுனிந்து வணங்குகிறேன்!
ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம்போல்
பார் புகழ்த் தமிழனுக்கு
பாரியின் கதை போதும்!
அவன் கதை முழுமையுமே
அனைவரும் அறிந்தாலும்
அதனையும் சுருக்கிடவே
அடியேன் நான் முயல்கின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொருத்தருள்வீர்!
பாரி அறிமுகம்
**************
சிவகங்கைச் சீமையிலே
சிங்கம்புணரி அருகினிலே
பிரான்மலையில் கோட்டைகட்டி
பெருங்குணத்தின் கொடை காட்டி
பாரி என்ற சிற்றரசன்
பார் புகழ ஆண்டு வந்தான்
கபிலரின் நட்பு
*****************
பாடி வரும் புலவருக்கும்
நாடி வரும் அனைவருக்கும்
கொடையளித்துக் கரம் சிவந்த
கொடை வள்ளல் பாரியென்று
தென்னகத்துக் கவிஞரெலாம்
தேடிதினம் வருகையிலும்
தமிழ்க்குடி வேந்தனுக்கு
தமிழ்த்தாகம் தீரவில்லை!
தமிழ்ச் சங்கம் கண்டெடுத்த
தலைசிறந்த புலவர்களில்
கபிலரை வரவழைத்து
கவிதையிலே தமிழ் குடித்து
கவிஞரின் நட்போடு
கடமையிலே களிப்புற்றான்!
முல்லைக்குத் தேர்
******************
அந்தி சாயும் வேளையிலே
அரண்மனைக்குத் திரும்புகையில்
அவன் கண்ட ஓர் காட்சி
அகத்தினை வருடியது...
வாடிய பயிர் கண்டு
வாடி நின்ற வள்ளலார்போல்
ஆடிய முல்லை கண்டு
ஆடிப் போய் நிற்கின்றான்..
காற்றில் கவி பாடும்
காசில்லாக் கவிஞன்போல்
காற்றில் கொடியாடும்
காட்சியினைக் காண்கின்றான்...
பற்றிடத் துணைதேடும்
பச்சிளம் குழந்தையைப்போல்
முல்லைக் கொடிபடர
முழு வீச்சில் தேடுகின்றான்...
அந்நேரம் அவனுக்கு
ஆன பொருள் சிக்கவில்லை
ஆயினும் அவனன்று
அப்படியே வரவில்லை..
தான் வந்த தேரினையே
தானமாய்க் கொடுத்துவிட்டு
கொடியைப் படரவிட்டு
கொடை வள்ளல்
நடை போட்டான்!
மூவேந்தர்- சினம்
*****************
பாரியின் பெரும் புகழும்
பார் முழுதும் பரவியதில்
தமிழனின் தீக்குணமும்
தடையின்றிப் பற்றியதில்
பாண்டிய மன்னனோ
பாரி மகள் வேண்டுமென்றான்!
மண முடிக்க மறுத்தாலோ
மறு கணமே போரென்றான்!
அங்கவையும் சங்கவையும்
அந்தப்புரம் சென்றிடவா
பிரான்மலை அரசனிங்கே
பிராணனை வளர்க்கின்றேன்!
வாடா....தமிழ் மண்ணா(ன்னா)
வாங்கி நீ சென்றிடலாம்
கொடுத்தே பழகியவன்
கொடுப்பதை ஏற்பாயோ...?!!!
சப்பைக் காரணத்தை
சாக்காக வைத்திருந்த
மூன்று வேந்தர்களும்
முன்னேறி வருகின்றார்...!!
போர் திறம்
**********
குறுநில மன்னனுக்கு
பெரும்படை இல்லையென்று
சின்னக் கணக்கோடு
முன்னேறி வருகின்றார்...
மலையே அரணாக
மலையாளும் சிற்றரசன்
மலையின் மேலிருந்து
மழைபோலே தாக்குகிறான்...
கல்லையும் சரங்களையும்
கடல்போல வைத்திருந்த
குறுநில மறம் கண்டு
குழப்பத்தில் திகைக்கின்றார்!
மூவேந்தர் தோல்வி
*******************
மலைவழி அத்தனையும்
மடைபோல அடைத்தாலோ
மலைக்குடி அத்தனையும்
மலையிறங்கி வருமென்று
மூவேந்தர் படையன்று
முகாந்திரம் அமைத்திருக்க;
மூங்கிலின் அரிசியோடும்
முக்கனியில் பலாவோடும்
சுரக்கின்ற சுனையோடும்
சோர்வில்லாக் கபிலரோடும்
தேன்தமிழ்த் துணையோடு
தேவர்போலே வாழ்வதாக
கிளி தரும் உணவோடு
கிலியின்றி வாழ்வதாக
அம்பிலே பாட்டெழுதி
அங்கிருந்து அவனனுப்ப
அதனை பார்த்தவுடன்
அனைவருமே திரும்பி விட்டார்!
சூழ்ச்சி
*******
கபிலர் இல்லாத
கணம்தேடிக் காத்திருந்த
காக்காய்க் கூட்டமொன்று
கவ்வியது பாரியினை...
இல்லையெனச் சொல்லாத
எல்லையில்லாக் கொடையாளி
கொடிக்குத் தேரினைப்போல்
கொடுமைக்கு உயிர் தந்தான்!
கபிலரின் அன்பு
***************
தமிழினம் முழுமையுமே
தலை குனிந்த அந்நாளில்
அங்கவை சங்கவையை
ஔவையிடம் ஒப்படைத்து
விண்ணிலே கவி பாட
நண்பரும் உயிர் நீத்தார்!!!
வாழ்க தமிழ்!
***********
தமிழறம் காத்தவனின்
தன்மானப் பிள்ளைகளை
தமிழே காத்த கதை
தமிழ் மன்னன் கதையன்றோ?
✍️செ. இராசா
https://youtu.be/1fuPCCK3jqs