10/11/2017

மழை பாடிட வாரீரோ-----களஞ்சியம் கவிதைப் போட்டி-79----(வெற்றிக் கவிதை)




(10.11.2017)


மதம்பற்றி பாடிடும் மாந்தர்களே-இனி
மழைபற்றி பாடிட வாரீரோ!
சாதியம் பாடிடும் மாந்தர்களே-இனி
சத்தியம் பாடிட வாரீரோ!

பார்புகழ் தமிழ்மறை வள்ளுவனே-மழைப்
பாயிரம் ஏற்றியே பாடியுள்ளார்!
வான்மகள் மழைநீர் இல்லையெனில்-ஒரு
புல்லும் புவியினில் இல்லையென்றார்!

கடலும் மேகமும் காதலிக்க-மழை
கூடலின் சாட்சியாய் வடிந்திடுமே!
பிறப்பும் இறப்பும் தொடர்வதுபோல்-நீர்
விழுவதும் எழுவதும் தொடர்ந்திடுமே!

பிறப்பினில் களங்கம் இல்லாத-மழை
மழலைபோல் என்றும் பரிசுத்தமே!
பிறப்பால் தனிநிறம் இல்லாத-நீர்
மனிதர்போல் பலநிறம் பெற்றிடுமே!

சார்ந்த பாதையில் கசடிருந்தால்-மழை
சாக்கடை சகதியாய் மாறிடுமே!
சிப்பியின் வாய்தனில் விழுமென்றால்-நீர்
சிப்பிக்குள் முத்தாய் மாறிடுமே!

கடவுளின் கருணையைக் காண்பதற்கு-மழை
கண்கொள்ளாக் காட்சியாய் தோன்றிடுமே!
இயற்கையின் பாதையை கெடுப்போர்க்கு-நீர்
இன்னலின் அரக்கனாய் மாறிடுமே!

வானத்தில் மேகமாய் உயர்ந்தாலும்-மழை
பூமியைக் குளிர்விக்க கீழ்வருமே!
வரம்புகள் மீறிச் சென்றாலும்-நீர்
பூமியை புரட்டிப் போட்டிடுமே!

அருவியாய் நதியாய்ப் பிரிந்தாலும்-மழை
கடைசியில் கடலில் கலந்திடுமே!
ஆயிரம் கிளைகளாய்த் தெரிந்தாலும்-நீர்
கடவுளின் ஓர்மையைச் சொல்லிடுமே!

 ----செ. இராசா-----



https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1956040691381504/?comment_id=1956230898029150&notif_id=1514709740474300&notif_t=group_comment_reply 

No comments: