எங்கோ இசைக்கும் பாடல்கள்- அது
எங்ஙனம் அலைவழிப் பாயுமோ- நாம்
எங்கோ எழுப்பிடும் எண்ணமும்- அது
எளிதில் எவரையும் அடையுமே!
என்றோ பாடிய கீதங்கள்-அது
எப்படி பலகதை கூறுமோ- நாம்
என்றோ விதைத்த கர்மமும்- அது
இன்றைய நம்நிலை கூறுமே!
என்றோ கேட்ட கானங்கள்- நாம்
இன்றும் கேட்கையில் இன்பமோ- நாம்
என்றோ செய்த தர்மமும்- நமை
இன்றும் என்றும் வாழ்த்துமே!
உணர்ச்சியில் பாடிடும் ராகங்கள்- அது
உண்மையை எப்படி உரைக்குமோ- நல்
உணர்வுள்ள கவிதையின் வரிகளும்-அது
உயிர்ப்புடன் என்றும் நிலைக்குமே!
மேகங்கள் உரசிடும் முழக்கங்கள்- வரும்
மழையினை எப்படிச் சொல்லுமோ- மனித
வாழ்வினில் ஒலித்திடும் முழக்கங்கள்- அவன்
வாழ்க்கையை உலகுக்குச் சொல்லுமே!
பக்தியைப் போற்றிடும் நாமங்கள்- இறை
பரவசம் எப்படி கூட்டுமோ- நற்
பண்புள்ள மனிதரின் வார்த்தையும்- நிறை
பரவசம் தந்திடும் ஊக்கமே!
இதயம் எழுப்பிடும் ஓசைகள்- உயிர்
இருப்பினை எப்படி உணர்த்துமோ- நம்
பிரபஞ்சம் எழுப்பிடும் ஓசையும்- அது
படைப்பின் தன்மையை உணர்த்துமே
——செ. இராசா——-
No comments:
Post a Comment