தமிழ்த்தாய் வணக்கம்:
***********************
ஆதியில் தோன்றிய அன்னைமொழி!
ஆயிரம் இலக்கியம் தந்தமொழி!
ஆண்டவன் பேசிடும் அமுதமொழி!
அம்மொழி செம்மொழி தமிழ்மொழியை
சிந்தையில் வைத்து போற்றுகின்றேன்!
தலைமை வணக்கம்
*******************
பன்முகம் கொண்ட பண்பாளர்!
பாடல்கள் புனைவதில் பெருங்கவிஞர்!
பாஷிகாபுரம் திருவாளர்!
நடுவர் தலைமையை வணங்குகின்றேன்
அவை வணக்கம்
****************
தமிழ்அக்கறை காட்டிடும் தளங்களிலே
தமிழ்ப்பட்டறைத் தளத்தின் மாண்பறிந்து
கவிச்சரச் சபையை வணங்குகின்றேன்!
தலைப்பு- நட்பு
**************
உறவுகள் எத்தனை இருந்தாலும்
உறவினில் சிறந்தது எதுவென்றால்
உரிமையில் பழகிடும் நட்பாகும்!
நட்பில் பலவகை இருந்தாலும்
நட்பில் சிறந்தது எதுவென்றால்
நல்லதை உரைத்திடும் நட்பாகும்!
சூழ்நிலை எதுவாய் இருந்தாலும்
சுதந்திரம் தருவது எதுவென்றால்
சூதில்லா நண்பரின் நட்பாகும்!
வருத்தம் ஆயிரம் வந்தாலும்
வலிகள் போக்கிடும் மருந்தென்றால்
வறுமையில் விலகா நட்பாகும்!
புதுப்புது நண்பர்கள் கிடைத்தாலும்
புதிதுபோல் இனித்திடும் நட்பென்றால்
பள்ளியில் கிடைத்த நட்பாகும்!
உபதலைப்பு-பள்ளி நட்பு
***********************
சாதியும் சமயமும் கலக்காத
சரித்திடும் பொய்கள் இல்லாத
வாதும் சூதும் அறியாத
வசதியும் வறுமையும் தெரியாத
பள்ளியின் நட்பு தொடர்கிறதா?!
பாக்கியம் அதுவென உணர்ந்திடுவீர்!
நன்றியுறை
**********
களஞ்சியக் கவிதைகள் புனைந்தாலும்
கவிச்சரம் அடியேன் தொடுக்கவில்லை!
மேடைத் தமிழின் எழுத்துக்களாய்
மலர்ந்திடும் கவிதைகள் இருப்பதினால்
மேதகுத் தலைவரை வணங்குகின்றேன்!
வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும்
நன்றியைக் காணிக்கை ஆக்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment