10/08/2022

மன்னராட்சி Vs மக்களாட்சி


மக்களைக் கூட்டி:அவர்
.......மண்டையில் கால்வைத்தால்
மக்கு:மன்னர் ஆள்கின்ற
........நாடு;அஃதே- சிக்கலின்றி
மக்(கு)களே முன்வந்து
.......மண்டைமேல் வையென்றால்
மக்களாட்சி செய்கின்ற நாடு!

09/08/2022

வியர்வை

 


பணக்கார மேனியில்
பார்த்திடாத; நீர்
பாட்டாளி மேனியில்
பாய்ந்து வருகிறாய்....

வாடை காலத்தில்
வற்றிவிடும்; நீர்
கோடை காலத்தில்
குதித்து வருகிறாய்....

ஊட்டி அறைக்குள்
உறங்கிவிடும்; நீர்
பூட்டிய அறைக்குள்
பொங்கி வருகிறாய்...

அசையாத தேகத்தில்
அடங்கியுள்ள; நீர்
அசைகின்ற தேகத்தில்
ஆர்ப்பரிக்கிறாய்...

காற்றின் கூடலில்
கானலாகும்; நீர்
காதலின் கூடலில்
கவிதையாகிறாய்...

உச்சி வேளையில்
நசநசக்கும் நீர்
உச்ச வேலையில்
கமகமக்கிறாய்....

உண்மையில்..
நீர் அதிசயமே...

#வியர்வை

இந்தத் கவச உடையைப் போட்டதால் ஏற்பட்ட வியர்வையில் உருவான வரிகள்....

வளர்ந்த மனிதர்கள் பக்கத்தில் நின்றால் நம் உயரம் தெரியாது என்பது இதுதானோ?!
அநியாயத்துக்கு வளர்ந்திருக்கான்... இந்த செர்பியாக்கார தம்பி.....படத்தின் Frameக்குள் கூட அடங்கல...


08/08/2022

உழவும் உயிரும் ----------- ஔவைத் திங்கள் - 003



உழுதுண்டு வாழ்வோர் உயர்வார் என்றீர்
அழுதுண்டு வாழ்கின்றார் ஏன்?
(1)

உற்பத்தி செய்யும் உழவர்கள் கீழிருக்க
விற்பவர்கள் எப்படி மேல்?
(2)

கடனுதவி தந்தாலும் கையில்;ஏன் இல்லை
நடைமுறைச் சிக்கல் நவில்.
(3)

செய்யும் பொருளுக்கு செய்வோனைக் கேட்காமல்
பொய்யாய் விலைவைப்போர் யார்?
(4)

உழவனைக் கொன்றபின் ஊணெங்கேக் கிட்டும்
இழவுதான் தீர்வா இயம்பு.
(5)

நீருக்காய்க் கையேந்தி நின்றிடும் முன்னாலே
மாரிநீர் போனதெங்கே சொல்.
(6)

உழுவுந்து வாங்கவும் ஒன்றுமே இல்லார்
விழுவதுதான் தீர்வா விளக்கு.
(7)

பணமுள்ளோன் தானா பணம்படைப்பான் இங்கே?
உணவளிப்போன் என்னாவான் ஓது!
(8.)

விளைநிலம் எல்லாம் விலைமனை ஆனால்
விளைவென்ன வாகும் விளக்கு.
(9)

வரிகளாய்ப் போட்டு வதைத்திடும் முன்னே
உரியவழி என்ன உரை.
(10)

✍️செ. இராசா

06/08/2022

குல்லாவின் சொம்புக்காக

 

தூக்கி அடிச்சிடுவோம்
......தூரமாப் போயிடு
பாக்கி இருக்குதுன்னா
......பார்ப்போம்வா- தாக்கிடலாம்
நாய்க்குக் கொடுத்தாதான்
..... நல்லபடி கேட்கும்னா
வாய்க்குள் வெடிவைப்போம்
.....வந்து
 
குல்லாக்கள் போட்டுவிட்ட
.........குல்லாய் வியாபாரி
நல்லாதான் போட்டார்போல்
.........நாய்க்குமோர்- குல்லாவை
என்நேரம் பார்த்தாலும்
........ எங்கெங்கோ போய்ச்சென்று
நன்றியுடன் ஆட்டுதுபார்
.......வால்
 
✍️செ. இராசா

என்னைப்போல் உள்ளதாய்

 


என்னைப்போல் உள்ளதாய்
.......என்னவள் சொல்லுகையில்
என்மகளோ வேகமாய்
......இல்லையெனச்- சொன்னாளாம்
தன்னைப்போய் ஏன்சொன்னார்
.......தந்தைபோல் என்றெண்ணி
தன்முகம் பார்த்தாளாம்
.......தாழ்ந்து!
 
✍️செ. இராசா
 
(என் சிறு வயது ஒளிப்படம் ஒன்றை, எம் பாசத்திற்குரிய உறவினர்/நண்பர் Saravana Mohan Karupaiah 🙏🙏🙏 அவர்கள் அனுப்பி வைத்தபோது, என் மகளின் கோபமான முகபாவம் கொண்ட ஒளிப்படத்தை சேர்த்து பார்த்தேன்....எப்படி உள்ளதென்று சொல்லுங்களேன்...)

04/08/2022

மெட்டு: என்ன விலை அழகே?

 


என்ன விலை விருதே?
என்ன விலை விருதே?
 
சொன்ன விலைக்கு விருதைத் தருவேன்
விலை தகுமென்றாலே வருவேன்...
உந்தன் நிலையைக் கண்டு கணக்குப்போடுவேன்- ஓ
நீ சரியென்றாலே பேரம்பேசுவேன்..
 
படைப்போன் உலகில் எவனோ
படிப்போன் அதுபோல் எவனோ
கவிதை படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது எனக்கென்ன வந்தது
புதிய புதிய பெயரில் கொடுக்கும்
ஷீல்டுக்கு காசுண்டு
தந்தால்தான் அதுவுண்டு
விரைவினில் வந்து கொடுத்திடு
விருதினை அள்ளி எடுத்திடு
கடன் சுமை கொஞ்சம் இருக்குது
கடவுளாய் நீயும் கனிந்திடு
நல்லவன் யாரெனச் சொல்லு
உள்ளவன் பேரையும் சொல்லு
செய்யலாம் எல்லாம் இங்கு விலையே..
நல்லவன் யாரெனச் சொல்லு
உள்ளவன் பேரையும் சொல்லு
செய்யலாம் எல்லாம் இங்கு விலையே..
இந்த விருதிக்கில்லை டேக்சு......
 
✍️செ. இராசா

03/08/2022

தலைப்பாகை

 



தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது
-இது பழமொழி
 
விலைக்கு விற்றது
வில்லங்கமாய்ப் போனது
-இது புதுமொழி
 
ஊரைக்கூட்டி பலியிட்டால் விருந்து
பேரைக்காட்டி பலியிட்டால் விருது
 
மற்றவர் சூடினால் தராதரம்
உற்றவரே சூடினால் தர்ரார்-தாரோம்
 
இறந்தபின் கிடைத்தால் வெகுமதி
இரந்தபின் கிடைத்தால் வெறும்-மதி
 
திருமால் கொள்வது சயனம்
திரு(ட்)டாள் கொள்வது சபலம்
 
வறுமைக்குப் பாடினால் புலவன்
வரும்-மொய்க்குப் பாடினால் கிழவன்
 
தமிழ்தான் என்றால் பெருமை
தமிழ்--தான் என்றால் வெறும்-மெய்
 
ஐயா என்றால் மரியாதை
ஐயே.....என்றால் அது-வாதை
 
அடியேன் என்றால் பணிவு
அடிப்பேன் என்றால் துணிவு
 
பிழையில் கற்பவன் உயர்வான்
பிழையிலே நிற்பவன் நயர்வான்
 
இணையவழி தூதென்றால் யோசி
இணைய-வழி யாதென்றால் வேசி
 
ஒருமுறை அடித்தால் கொள்ளை
பலமுறை அடித்தால் கொள்கை
 
அறம்செய்ய விரும்புதல் அழகு
புறம்செய்ய விரும்புதல் அழுக்கு
 
ஒருமையில் பேசினால் சிறுமை
ஒருபோதும் பேசாது கிழ(ம்)-மெய்
 
✍️செ.‌இராசா

01/08/2022

கீழ்மை அகற்று --------------- ஔவைத் திங்கள் - 002

 


 
காமப் பிசாசெல்லாம் கல்வியாளர் ஆகிவிட்டால்
ஈமச் சடங்குதான் இங்கு
(1)
 
செருப்பால் அடித்தும் திருந்தாத பேரை
நெருப்பால் பொசுக்கி விடு
(2)
 
கல்வி நிலையத்தில் கண்ணியமே இல்லாமல்
அல்லதைச் செய்தால் அடி
(3)
 
கீழ்மைக் குணம்கொண்டு கெட்டதைச் செய்வோர்கள்
கீழ்தானே வீழ்வார்கள் கெட்டு
(4)
 
கள்ள உறவுகளைக் கண்டறியும் மெய்யறிவை
உள்ளத்தில் ஏற்றி ஒழுகு
(5)
 
புழுவைக் கழுவேற்றி போடுகின்ற தூண்டில்
விழுந்தவுடன் தேடிவரும் மீன்
(6)
 
தமிழை வளர்ப்பதாய் தன்பெருமை கூறி
குமிப்பதும் செய்கையோ கூறு?
(7)
 
விருதென்று சொல்லி விடுவார்கள் தூது
வருதென்று போகாதே வம்பு
(8)
 
அடையாளம் கண்டே அணுகுகிறார் யாரும்
எடைபோட்டப் பின்னே இறங்கு
(9)
 
பலனை எதிர்பார்த்து பற்றுகின்ற நட்பும்
விலைமாதர் போலாம் வில(க்)கு
(10)

29/07/2022

இடைவெளி



காலத்தை மட்டுமல்ல
தூரத்தையும் கூறுபோடும் காரணியே
இந்த இடைவெளி...

இங்கே...
இடைவெளியே இல்லாமல்
எதுதான் சாத்தியம்?

பகலின் இடைவெளிதானே இரவு!
உழைப்பின் இடைவெளிதானே உறக்கம்!
உயிரின் இடைவெளிதானே மரணம்!

வார்த்தைகளின் இடைவெளியில்தானே
வாக்கியங்கள்....
வாய்ப்புகளின் இடைவெளியில்தானே
வாரிசுகள்....

வாரக் கடைசி என்பதென்ன?
இரண்டு வாரங்களுக்கான இடைவெளிதானே..
மாதக் கடைசி என்பதென்ன?
சம்பள நாளுக்கான இடைவெளிதானே..

உண்மையில்...
இடைவெளி மட்டுமல்ல
இடை-வெளிகூட அழகானதே...
ஆம்.....

தண்டவாள இடைவெளி என்பது
தடம்புரளாமல் இருக்கவே...
தாளலய இடைவெளி என்பது
இசைமீறாமல் இருக்கவே..

இடைவெளியே இல்லாமல்
எதுவுமே இல்லைதான்...
ஆனாலும்...
காதலில் இடைவெளி வலிக்கிறதே..
நட்பில் இடைவெளி வெடிக்கிறதே..
உறவில் இடைவெளி கசக்கிறதே...
கவியில் இடைவெளி கனக்கிறதே..

இடைவெளி துன்பம்தான்
ஆனால்..
இடைவெளியே இல்லாமல்
இன்பமும் இல்லை‌....

எனில்....
நாமும் விடுவோம்
ஒரு சிறு இடைவெளி

27/07/2022

கடவுளின் நாக்கு

 





கவிஞனின் வாக்குக் கடவுளின் நாக்கு
கவிஞனின் வாழ்த்து கடவுளின் அன்பு
கவிஞனின் சாபம் கடவுளின் கோபம்
கவிஞனின் ரூபம் கடவுளின் பிம்பம்
கவிஞனின் ராகம் கடவுளின் நாதம்
கவிஞனின் சோகம் கடவுளின் தூக்கம்
கவிஞனின் கூர்மை கடவுளின் ஓர்மை
கவிஞனின் நேர்மை கடவுளின் தன்மை
கவிஞனுள் நன்றாகக் காண்!
 
✍️செ. இராசா
 
(எம் குருநாதர் மாகவிஞர் திரு. விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்கள் எம்மை வாழ்த்தி 2018ல் ஓர் அணிந்துரை வழங்கி வாழ்த்திய வரிகள் மெய்யான தருணமிது.
இனிய மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏)