27/01/2026

முத்துமுத்து வென்று

 

முத்துமுத்து வென்று
.......முறையாக பேர்பொருந்த
முத்துமுத்தாய்ப் பெற்றதுவோ
.........முன்னிரண்டு- சத்தியமாய்
முத்தெடுத்த கத்தாரில்
.........முன்செய்த நல்வினையால்
முத்துமுத்தாய் பெற்றீர்முந்
.........நூறு!

சிங்களப்பாட்டு - தமிழப்பத்தி சொல்ல


தமிழப்பத்தி சொல்ல- ஒரு
எல்லை இங்கே இல்லை
தமிழரெங்கள வெல்ல- வேறு
யாரும் தேவை இல்லை!

என்னங்க பேசுறான்
எல்லாமே கலந்து - இதில்
கொஞ்சம் கொஞ்சம் தமிழ்
இது எங்கபோயி முடியும்?!

தமிழ்பாட்டுல தமிழே இல்லை
தமிழ்நாட்டிலும் தமிழே இல்லை
இதப்பத்தி கவலையே இல்லை

வயகாட்டுல விளைச்சல் இல்லை
வெளிநாட்டிலும் நிறைய தொல்லை
இதப்பத்தி கவலையே இல்லை

21/01/2026

குளிர் காலத்தில் வெயில்தேடிடும் நாம்தான்

 

குளிர் காலத்தில் வெயில்தேடிடும் நாம்தான்
கோடை காலத்தில் கொடைக்கானல் போகிறோம்!
வாரக் கடைசியில் ஓய்வுதேடிடும் நாம்தான்
வேலை இல்லையேல் வெறுத்துப் போகிறோம்!
இளமைப் பருவத்தில் இதயம்தேடிடும் நாம்தான்
இணைந்த பின்னரே சலித்துப் போகிறோம்!
தொலைவில் இருக்கையில் வியந்துபேசிடும் நாம்தான்
தொட்டுப் பார்க்கையில் விட்டுப் போகிறோம்!
கவிதை செய்கையில் கடவுளாகிடும் நாம்தான்
கற்பனை நிற்கையில் காணாமல் போகிறோம்!
ஆம்

15/01/2026

சிட்டாத் துள்ளிவரும் காளை

 

சிட்டாத் துள்ளிவரும் காளை- அட
விட்டாத் தூக்கிவிடும் ஆளை
தொட்டாச் சிலிர்த்துவிடும் தோளை- நீ
கெத்தாப் பிடிக்கவிழும் மாலை
ஏய்
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
மண்ணோட வீரத்தை விளையாடிக் காட்டு
உன்னோட வேகத்தைக் கூராகத் தீட்டு
ஜெயிச்சாலே விடுவாங்க ஊரெங்கும் வேட்டு
நமக்காக உருவாகும் இதுபோலப் பாட்டு
வாடிவாசல் நடுநடுங்க திமிறி வர்றான்பாரு
ஊருசனம் பார்க்குமுங்க ஜெயிக்கப் போவதாரு
ஆடியோடி ஜெயிச்சுவந்தா கொடுக்குறாங்க காரு
தமிழனோட வீரத்தைநீ மாறுதட்டிக் கூறு...
ஏய்
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும் புல்லாளே
ஆய மகள்...
(கொன்றுவிடும் என்றெண்ணி
காளையின் கொம்பைப்பார்த்து அஞ்சும் வீரனாநீ...
சீ உன்னை இப்பிறப்பில் அல்ல எப்பிறப்பிலும் தழுவேன்யான்...)
சிட்டாத் துள்ளிவரும் காளை- அட
விட்டாத் தூக்கிவிடும் ஆளை
தொட்டாச் சிலிர்த்துவிடும் தோளை- நீ
கெத்தாப் பிடிக்கவிழும் மாலை
ஏய்...
கட்டு கட்டு ஜல்லிக்கட்டு
கட்டுப்பட்டு காசக்கட்டு
தட்டு தட்டு தொடையத்தட்டு
கஷ்டப்பட்டு திமிலத்தொட்டு
பிட்றா பிட்றா பிட்றா
வர்றான் பாரு பிட்றா....
✍️செ. இராசா

13/01/2026

முயற்சி

 

முயற்சி தளராமல் முன்னோக்கிச் சென்றால்
இயற்கை துணைநிற்கும் ஏற்று!
(1)
விதைப்பவை யாவும் விளைச்சலாய் ஆகா
விதைப்பயன் கர்ம வினை!
(2)
முயலையும் வெல்லும் முயன்றபின் ஆமை
முயலாமை வேண்டாம் முயல்
(3)
தடைகளைத் தாண்டி தவிப்புடன் ஓடு
விடையென மாறும் விளைவு
(4)
கதைப்பவர்க் குண்டு கதைபல இங்கே
விதைப்பவர்க் கில்லை விரை
(5)
முயன்றபின் போனால் முடிவென ஆகா
முயலாமல் போனால் முடிவு
(6)
எளிதாய்க் கிடைத்தால் இலகுவாய்த் தோன்றும்
வலியின்பின் வந்தால் மகிழ்வு
(7)
விழவிழ மீண்டும் விரைவாய் எழும்பும்
குழந்தைபோல் மீண்டும் கிளம்பு.
(8)
விழுந்த இடத்தில் விழுதுபோல் ஊன்றி
முழுமை பெறுவாய் முயன்று
(9)
பெரிதோ சிறிதோ பிரியமாய்ச் செய்தால்
உரியது கிட்டும் உவந்து
(10)
✍️செ. இராசா

02/01/2026

பண்டிகைகள் யாவும்

 

பண்டிகைகள் யாவும்
.......பழக்கத்தில் வந்துபின்
பண்பாடாய் மாறுவதைப்
.......பார்த்துள்ளோம்- கண்குளிர
கொண்டாடும் சூழல்
........ குறையில்லை என்றானால்
வண்ண மயமாகும்
......வாழ்வு!

01/01/2026

அண்ணாச்சி அண்ணாச்சி தேவா சாரப் பாருஜி (பார்த்தாச்சி)

 

அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி (பார்த்தாச்சி)
அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி
கானா இப்போ ட்ரெண்டாச்சி
காரணம் யார் சொல்லுஜி
ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம்
தேவாசார ஃபாதருன்னு ஒத்துக்குறோம்
அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி
அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி
கானா இப்போ ட்ரெண்டாச்சி
காரணம் யார் சொல்லுஜி
ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம்
கானாவோட ஃபாதருன்னு ஒத்துக்குறோம்
ஹிட்டடிச்சாரு ஹிட்டடிச்சாரு எத்தனை பாட்டுலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு வேற லெவலுதான்
சூப்பர் ஸ்டாரு சுப்ரீம் ஸ்டாரு அத்தனை ஸ்டாருக்குந்தான்
எத்தனை சாங்கு எத்தனை சாங்கு
எல்லாம் சூப்பர்தான்
அவர் போட்டதெல்லாம் ஹிட்டு
அது எல்லோருக்கும் ஃபிட்டு
அத இப்பப்போட்றான் சுட்டு
ஹிட்டுன்னா ஹிட்டு
இப்பக்கூட ஹிட்டு
ஹெட்டுனா ஹெட்டுனா
அவர் எப்போதுமே ஹெட்டு
வச்சிருக்கோம் வச்சிருக்கோம் வச்சிருக்கோம்
தேவாசார நெஞ்சுக்குள்ள வச்சிருக்குறோம்
யப்பா..அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி
கானா இப்போ ட்ரெண்டாச்சி
காரணம் யார் சொல்லுஜி
பட்டிதொட்டில்லாம் பட்டிதொட்டில்லாம் பட்டைய கிளப்புது
பச்சப்புள்ளல்லாம் பச்சப்புள்ளல்லாம் சேர்ந்து ரசிக்குது
கானான்னாக்க கானான்னாக்க செம்ம மாசுதான்- அது
இல்லைனாக்க இல்லைனாக்க எல்லாம் போருதான்!
கிரிக்கெட்டுனா சிக்சு
அரசியல்னா ஃபிளக்சு
இருமலுனா விக்சு
மியூசிக்குனா பீட்சு....
பீட்டுனா பீட்டு
பட்டைய கிளப்பும் பீட்டு
பாட்டுனா பாட்டு- அது
தேவா சாரின் பாட்டு
ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம் ஒத்துக்குறோம்- சாரக்
கானாவோட ஃபாதருன்னு ஒத்துக்குறோம்
அண்ணாச்சி அண்ணாச்சி
தேவா சாரப் பாருஜி
கானா இப்போ ட்ரெண்டாச்சி
காரணம் யார் சொல்லுஜி
வச்சிருக்கோம் வச்சிருக்கோம் வச்சிருக்கோம்
தேவாசார நெஞ்சுக்குள்ள வச்சிருக்குறோம்
✍️செ. இராசா