29/09/2023

அந்த ஒற்றை வார்த்தைதானே..

 


எப்போதோ விடுமுறையில் வரும்
பேரனுக்காய் பேத்திக்காய்
எப்போதிருந்தோ தயாராகும்
அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன?
அந்த ஒற்றை வார்த்தைதானே..
அட....
ஐயான்னு...சொல்லுய்யா
அப்பத்தான்னு...சொல்லுய்யா..

✍️செ. இராசா

28/09/2023

ஆயுர்வேத ஆனந்தம்

 


தலைக்கும் தோள்பட்டைக்கும்
ஒரு வித எண்ணெயும்
உடம்பு முழுமைக்கும்
இரு வேறு எண்ணெய்களுமாய்
ஒன்றன்பின் ஒன்றாகச்
சூடுபறக்கத் தேய்த்துவிட்டு
நரம்பையும் சதையையும்
நளினமாய் உறுவிவிட்டு
தலை வெளியிருக்க
உடலை உள்ளேவைத்து
மூலிகை நீராவியில்
முக்கியபடி அமரவைத்து
துண்டால் துவட்டியபின்
மீண்டும் குளித்துவந்தால்
இறந்த செல்கள் நீங்கி
புதிய செல்கள் துளிர்த்து...
அடா...அடா...அடா...
ஆனந்தமோ ஆனந்தம்: அது
ஆயுர்வேத ஆனந்தம்!
 
✍️செ. இராசா

26/09/2023

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே

 செந்தமிழ் கொஞ்சிடும் கவியே
உன் கோபமும் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நல்ல நர்த்தனம் ஆடுது தனியே...

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி....என் சொந்தமே நீதான்டி

ஆண்:

மேகதூதம் படிக்க
உந்தன் மேனியைத் உற்றுப் பார்த்திடவா..
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகைக் காட்டிடவா..

பெண்:

எம்மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும் சேதிகள் சொல்லிடுமா?
சந்தோச தியானம் நடத்த
இது உன்தனி மலரல்லவா...

ஆண்:
கற்சிலைக் கவியென மாறி கனவென வந்ததோ முன்னாலே
கண்ணிமை இருப்பது மெய்யா அடிக்கடி பார்க்கிறேன் உன்னாலே..

பெண்:

சொற்பிழை புரிபவன் நீயா? சொற்களின் வித்தகன் நீதானே...
கற்றிட ஆசை எனக்கும் சொல்லிக் கொடுத்திடு என்மானே..

ஆண்:
தந்தானே தகதிமி தானே
தந்தாலே சம்மதந் தானே

பெண்:
பிறந்ததே உனக்கென நானே..
பிறகென்ன அவசரம் வீணே

✍️செ. இராசா

25/09/2023

ரித்திக்கா சர்மா

 


ரித்திக்கா சர்மான்னு
........ரெக்கொஸ்டு தந்தீன்னா
எத்திக்ஸே இல்லாம
.........ஏற்கின்ற- தத்தியல்ல
கீர்த்தியே வந்தாலும்
.........கீர்த்தி இருந்தாத்தான்
சேர்த்திடுவேன் என்நட்பில்
........தேர்ந்து!
 
✍️செ. இராசா

24/09/2023

  


அடிகள் இரண்டில் அளந்து சென்ற
...ஐயன் அடியைத் தொடுகையில்
அடியேன் மனதில் அளவு மீறி
...ஆவல் பெருகி வருகுதே‌!

கதம்ப மாலை கழுத்தில் போட
...கைகள் மேலே உயர்கையில்
கதம்ப மான நினைவு நெஞ்சில்
...காட்சி போல விரியுதே!

✍️செ. இராசா

பெப்சி எதற்கு?

 


இனிய பதநீர் இருக்கின்ற போதில்
இனிதில்லா பெப்சி எதற்கு?
 
✍️செ. இராசா

21/09/2023

நினைப்புதான் பொழப்ப இங்கே கெடுக்குது- நீ

 #மெட்டு_கருப்புதான்_எனக்கு

நினைப்புதான் பொழப்ப இங்கே கெடுக்குது- நீ
நினைக்கும் போதே நல்லா நினைச்சா
நல்ல வாழ்க்கை கிடைக்குது..
நினைப்புதான் பொழப்ப நல்லா கொடுக்குது..

வாழும் நினைப்புதான்
வாழ்வை மாத்தும் இனிப்புதான்
நாளும் நினைப்புதான்
நம்மைச் செதுக்கும் நினைப்புதான்..

உன்னை மாற சொல்லி சொல்லும்போது
மாத்த வேணும் நினைப்புதான்
உசத்தும் நினைப்புதான்...

கனவில் கண்ட நோயைப் பார்த்து

 

கனவில் கண்ட நோயைப் பார்த்து
...களங்கிப் போயி நிக்கிற
மனதில் உள்ள மாயை கூட
...மல்லு யுத்தம் போடுற
தினமும் உந்தன் தேகம் எண்ணி
...தெளிவா நடக்க விரும்புற
சுணக்கம் கொண்டு சும்மா சும்மா
....சுருண்டு.. ஏனோ படுக்குற!
 
✍️செ. இராசா

18/09/2023

எதிரியை வாழ்த்துங்கள்...

 எதிரெதிர் கருத்திருந்தால்
எதிரியென்ற அர்த்தமில்லை..
எதிரொலி வருகுதென்றால்
எதிர்ப்பென்றும் அர்த்தமில்லை..

இங்கே ..
வடக்கென்ற ஒன்றிருந்தால்
தெற்கென்ற ஒன்று இருக்கவே
செய்யும்
இதுவொன்றும் அரசியல் அல்ல
அறிவியல்...

இன்று சரியெனத் தோன்றுவது
நாளை தவறாகலாம்
இன்று தவறெனத் தோன்றுவது
நாளை சரியாகலாம்..
ஆக..
எதிர் நிலைப்பாடெல்லாம்
எதிரி நிலைப்பாடாய் அர்த்தமாகாது..
அப்படி ஆகுமெனில்
நமக்கு நாமே எதிரிதானே...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

நம் கருத்தை
நாமே மறுதலிக்கவும்
தைரியம் வேண்டும்
இதைச் சொன்னவர் ஓஷோ...

இங்கே...
நாம் எதிரியாக நினையாவிட்டாலும்
நம்மை எதிரியாக நினைப்போரும்
இருக்கத்தானே செய்கிறார்கள்..
உண்மைதான்...
ஆனால்...
ஆதரிப்போரின் சொல்லைவிட
எதிர்ப்போரின் சொல்லில்தானே
எரிபொருள் உள்ளது....
எனில்...
‌எதிரிகளும் மறைமுக
நண்பர்கள்தானே?!

உண்மைதான்...
ஆனால்‌‌....
எதிரிகள்தரும் இன்னல்களை
எப்படி ஏற்பது?!
பகைவர்கள்தரும் பக்கவிளைவை
எப்படி பொறுப்பது?

தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதுவும் தெரியும் தானே?
ஆனால்
தீதுசெய்யாப் போதும்
தீது வருதென்றால்
யாதுரைப்பது?!

எனில்...அது
இன்றைய புதுக் கணக்கல்ல
நேற்றைய பழைய கணக்கே....
ஆம்...
கழிவதைக் கவனியுங்கள்
அழுவதை நிறுத்துங்கள்
எதிர்ப்பிலே நீந்துங்கள்
எதிரியை வாழ்த்துங்கள்...

வாழ்க வளமுடன்!

✍️செ இராசா

17/09/2023

தொப்பையுரு சக்தித்திருமகன்

 


தொப்பையுரு சக்தித்திருமகன்
வித்தைபல கற்கத்தருபவன்
பக்கம்வர பற்றிப்பிடித்திடு
....அதுபோதும்

எத்தர்பலர் இன்னல்கொடுப்பினும்
சித்தர்நிலை சிந்தையடைந்திட
நித்தம்தொழ தன்னைப்பழக்கிடு
.....நிலைமாறும்

பட்பட்டென பாவம்பொடிபட
சட்சட்டென காலம்கனிந்திட
சட்புட்டென பாதம்பணிந்திடு
.....கணம்மாறும்

பொல்லாயிருள் எல்லாமோடிட
சொல்லாப்புகழ் எல்லாங்கூடிட
சொல்வாயவன் பேரைச்சுகம்பட
.... தினந்தோறும்

இல்லாதினி இல்லாதென்றிட
நல்லோரினி வெல்வாரென்றிட
சொல்லாமலே செய்யுமிறையென
....வருவானே!
....தருவானே!
....அருள்வானே!

✍️செ. இராசா

16/09/2023

 அத்தனை ஓசையிலும்
மௌனமாய் இருக்கிறது
அடர்ந்த காடு


✍️

11/09/2023

மெய்ப்பொருள்

  


மெய்ப்பொருள் காணாமல் மேம்போக்கில் பேசாமல்
உய்த்தறிந்(து) என்றும் உரை
(1)

பொய்கள் பலகூடி பொல்லாங்கு சொல்லுமெனில்
மெய்க்குரல் மௌனிக்கும் நீர்த்து
(2)

விலைபோன ஊடகங்கள் வேதமா ஓதும்?
நிலையுணர்ந்து காண்பாய் நிஜம்
(3)

எண்ணிக்கை வைத்தோர் எடைபோடும் முன்னாலே
கண்மூடிக் கௌரவரைக் காண்
(4)

மாயைக்குள் சிக்கி மதியிழக்க வேண்டுமென
தீயை வளர்க்கின்றார் சேர்ந்து
(5)

பொய்கூறும் வாய்களுக்கே போஜனங்கள் கிட்டுமெனில்
மெய்கூற மாட்டார் நினைந்து
(6)

சாதியே இல்லையெனச் சாடுகின்ற பேருக்குச்
சாதிச் சலுகையேன் சொல்?!
(7)

ஏட்டிலே ஓர்மதம் ஏற்றதோ வேறுமதம்
காட்டிடுவர் முற்போக்காய்க் காண்
(8)

சித்தர்கள் கூறாத சித்தாந்தக் கூற்றினையா
எத்தர்கள் கூறிவிட்டார் இன்று?
(9)

கிரிப்டோக்கள் போலிருந்து கேடுபல செய்வோர்
தெரியும்நாள் வீழ்வதுதான் தீர்வு
(10)

✍️செ. இராசா

10/09/2023

 


புல்மேல் உறையும்
பனித்துளிபோல்
சொல்மேல் உறையும்
கவித்துளியே நான்!

கல்வெட்டிப் பொறிக்கும்
கலையுருபோல்
சொல்கட்டிப் பொறிக்கும்
கவியுருவே நான்!

சந்திரனில் ஆயும்
சந்திராயன்போல்
சிந்தனையுள் ஆயும்
சிறுகவியே நான்!

ஓட்டுக்காய் ஏங்கும்
வேட்பாளன்போல்
பாட்டுக்காய் ஏங்கும்
பாவலனே நான்!

சனாதனம் பேசும்
தலைவனைப்போல்
சதாதினம் பேசும்
குடிமகனே நான்!

✍️செ. இராசா

நல்ல மனதிருந்தால்

 

நல்ல மனதிருந்தால்
.......நல்லதெல்லாம் கூடிவரும்
பொல்லா மனதிருந்தால்
.......போய்விடும் - எல்லாமும்
உள்ளத்தின் போக்கில்தான்
.......ஓங்குமென நன்குணர்ந்தும்
பள்ளத்தில் வீழ்கின்றார்
.......பார்!

05/09/2023

காலொடிந்த ஆடுகண்டு

  


 காலொடிந்த ஆடுகண்டு
.....கண்கலங்கி நிற்பவர்
காலுரெண்டு போடுயென்று
.....காசுதந்து கேட்கிறார்!
ஓலமிட்டு மாருதட்டி
.....ஒப்பாரி வைப்பவர்
வாழுகின்ற நாளிலெங்கும்
.....ஊறுசெய்து கொல்கிறார்!

சாதியற்ற சாதியென்று
.....தன்னையிங்குச் சொல்பவர்
நாதியற்ற சாதிகண்டும்
.....நாலுகாலில் பாய்கிறார்!
தேதியென்ன காலமென்ன
.....தேவையில்லை என்பவர்
தேதிநல்ல தேதிகண்டு
.....தேர்தலன்று நிற்கிறார்!

✍️செ. இராசா

உறவில் தெளிவு --- குறளந்தாதி

நம்பித் தெளிந்தவர்மேல் நம்பிக்கை போகுமெனில்
வெம்பியழும் எம்மனமும் வெந்து!
(1)

வெந்தநெல் என்றைக்கும் வித்தாகா தென்பதுபோல்
முந்தையநல் நட்பாகா மீண்டு
(2)

மீண்டுவந்த பின்னாலும் மீண்டுமதைச் சொல்லாமல்
நீண்டிடச் செல்வாய் நினைத்து
(3)

நினைத்த உடனேயே நேருமெனச் சொல்லும்
வினைப்பயன் கிட்டிட வேண்டு
(4)

வேண்டுவது கிட்டிட வேண்டினால் பத்தாது
நீண்ட தவம்வேண்டும் நேர்ந்து
(5)

நேர்ந்தபின்னும் இல்லையெனில் நேருவதை ஏற்றுவிட்டால்
தீர்ந்துவிடும் முன்கணக்கு சேர்ந்து
(6)

சேர்ந்ததை வைத்தேதான் சேர்வது சேருமென்பர்
ஓர்ந்திதை நன்றாய் உணர்
(7)

உணர்ச்சி வசமின்றி உள்ளத்தில் ஆய்ந்தால்
கணமுன் வசமாகும் காண்
(8)

காண்கின்ற காட்சியெல்லாம் கைவேலை என்றறிந்தால்
மாண்புடையோர் தாரார் மதிப்பு
(9)

மதியில்லார் பொய்யுரையை நம்புவதை விட்டு
மதியுடையோர் மெய்யுரையை நம்பு
(10)

✍️செ. இராசா

02/09/2023

தக்காளி ரசம்

இருப்பு சட்டியில
எண்ணெய விட்டு
கடுகோடு வெந்தயமும்
கருவேப்பிலையும் போட்டு
காஞ்ச மொளகாயில
ரெண்டு மூனக் கிள்ளிப்போட்டு
மொளகு சீரகத்த
பூண்டோடு நச்சுப்போட்டு
அப்படி இப்படின்னு
கரண்டியில கிண்டிவிட்டு
தக்காளிக் கரைசல
சட்டியில ஊத்திவிட்டு
மஞ்சப் பொடிதூவி
நொறைகட்டி வரும்போது
உப்புக் கல்லோடு
பெருங்காயத்தை தூவிவிட்டா...
அட...அடா..அடா
அதுபோல் ரசமெதுங்க?!
அதுவே ரச மதுங்க...!!!


✍️செ. இராசா

புயலானவன்....(Echo வரதா) புதிரானவன்

 (Echo வரதா)

புயலானவன்....
புதிரானவன்...
அசராதவன்...
அடங்காதவன்...
 
மலையானவன் ...
நிலையானவன்...
தலையானவன் ...
தரமானவன்‌‌.
 
இளநாயகன்..
இதமானவன்....
தடம்மாறினால்
படுபாதகன்...
 
உடையாதவன்‌..
வளையாதவன்...
வருவானிவன்‌.
‌வரதாயிவன்‌‌.
 
எக்கச்சக்க எச்சைகளிங்கே
அக்கப்போரு செஞ்சா
எக்குத்தப்பா ஆகிடுமுன்னே
என்ட்ரியப்போட்டிடும் வரதா..
 
வெட்டவெட்ட தழைச்சிடுமிங்கே
நச்சப்பரப்புற கூட்டம்
ஒட்டவெட்டிப் போட்டிடயிங்கே
பட்டெனப்பாஞ்சிடும் வரதா..
 
வர்றான் பாரு
வர்றான் பாரு
வர்றான் பாரு...இங்கே
வரதா வரதா வரதா வரதா
வர்றான் பாரு...இங்கே
தர்றான் பாரு
தர்றான் பாரு
தர்றான் பாரு- சும்மா
நச்சு நச்சு நச்சுன்னுநல்லா
தர்றான் பாரு யம்மா
 
✍️செ. இராசா

பால்நிலவே நான்வைப்பேன் பார்!

 

எத்தனையோ பேருன்னை
.......இங்கிருந்தே பார்த்திருக்க
சத்தியமாய் வந்துன்மேல்
.......தன்கொடியைக் - குத்தியதார்?
நீல்ஆம்ஸ்ட்ராங் மட்டும்தான்
.......நின்மேல்கால் வைப்பானோ?!
பால்நிலவே நான்வைப்பேன்
........பார்!