நம்பித் தெளிந்தவர்மேல் நம்பிக்கை போகுமெனில்
வெம்பியழும் எம்மனமும் வெந்து!
(1)
வெந்தநெல் என்றைக்கும் வித்தாகா தென்பதுபோல்
முந்தையநல் நட்பாகா மீண்டு
(2)
மீண்டுவந்த பின்னாலும் மீண்டுமதைச் சொல்லாமல்
நீண்டிடச் செல்வாய் நினைத்து
(3)
நினைத்த உடனேயே நேருமெனச் சொல்லும்
வினைப்பயன் கிட்டிட வேண்டு
(4)
வேண்டுவது கிட்டிட வேண்டினால் பத்தாது
நீண்ட தவம்வேண்டும் நேர்ந்து
(5)
நேர்ந்தபின்னும் இல்லையெனில் நேருவதை ஏற்றுவிட்டால்
தீர்ந்துவிடும் முன்கணக்கு சேர்ந்து
(6)
சேர்ந்ததை வைத்தேதான் சேர்வது சேருமென்பர்
ஓர்ந்திதை நன்றாய் உணர்
(7)
உணர்ச்சி வசமின்றி உள்ளத்தில் ஆய்ந்தால்
கணமுன் வசமாகும் காண்
(8)
காண்கின்ற காட்சியெல்லாம் கைவேலை என்றறிந்தால்
மாண்புடையோர் தாரார் மதிப்பு
(9)
மதியில்லார் பொய்யுரையை நம்புவதை விட்டு
மதியுடையோர் மெய்யுரையை நம்பு
(10)
செ. இராசா
05/09/2023
உறவில் தெளிவு --- குறளந்தாதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment