30/05/2023

 

சூழலுக் கேற்ப துணிவோடு செல்பவனே
வேழம்போல் நிற்கின்றான் வென்று!

29/05/2023

மௌனம் பேசியதே...

 #மௌனம்_பேசியதே

மௌனம் பேசுமா?
ஏன் பேசாது...

காதலில் பூக்கும்
மெளனப் புன்னகையில் தான்
எத்தனை வார்த்தைகள்?!!

ஊடலில் தூற்றும்
மௌனப் பார்வையில் தான்
எத்தனை மிரட்டல்கள்?!

கூடலில் கோர்க்கும்
மௌனக் கைகலப்பில்தான்
எத்தனை நேசங்கள்?!!

மழலையாய் மாறும்
மௌனக் கொஞ்சலில்தான்
எத்தனை துள்ளல்கள்?!

மகிழ்ச்சியில் உதிரும்
மௌனக் கண்ணீரில்தான்
எத்தனை அர்த்தங்கள்?

இப்படி...
ஒவ்வொரு மௌனத்திலும்தான்
எத்தனை இன்பங்கள்?!
எனில் மௌனம் பேசும் தானே...?!!

✍️செ. இராசா

26/05/2023

கத்தாரில் உள்ள இந்தக் கடைக்கும் எனக்குமான பந்தமென்பது

  


வந்த காலம் தொட்டு நானும்
.....வந்து வந்து போகிறேன்
அந்தக் காலம் போல இன்னும்
....ஆர்வம் மட்டும் தீரலை...
வெந்த சோறத் திண்ணு திண்ணு
.....நொந்து போகும் வாழ்வுல
இங்க வந்து பூரி திண்ணா
......எந்தன் சோகம் காத்துல....

✍️செ. இராசா

கத்தாரில் உள்ள இந்தக் கடைக்கும் எனக்குமான பந்தமென்பது கிட்டத்தட்ட 17+ வருடங்கள் உறவுகளே. ஆம் ....முதன் முதலாக இங்கே வரும்போது தெரியவில்லை, நான் இப்படி பந்தப்படுவேனென்று. சிறு இடைவெளிக்குப் பிறகு இன்று கத்தார் மனவளக்கலை போய்விட்டு, இந்த அல்சர்க்கா உணவகம் வந்தேன். என்னே வரவேற்பு......ப்பா... இது மலையாளி உணவகம்தான். ஆனால், இங்கே அனைத்து நாட்டினரும் வருகிறார்கள். குறிப்பாக அரபிகள் விரும்பும் இந்திய உணவகம் இது. உடனே....விலை அதிகம் என்று எண்ண வேண்டாம். 2006 முதல் இன்று வரை ஒரு பூரி ஒரு ரியால் (22 ரூ) மட்டுமே.

நல்ல மனிதர்கள்.
நல்ல உபசரிப்பு

நல்லா இருக்கனும்...
வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

24/05/2023

வாழ்க்கையெனும் விளையாட்டு



அடிக்கின்ற பந்தெல்லாம் ஆறுக்குப் போகா
முடிந்தவரை வேகமாய் ஆடு
(1)

பறந்துவரும் பந்தைப் பருந்துபோல் நோக்கித்
திறமோடு தொட்டால் சிறப்பு
(2)

பதட்டம் அடையாமல் பக்குவமாய் ஆடப்
பதக்கமாய்க் கிட்டும் பலன்
(3)

உணர்ச்சி வசமின்றி ஓர்மையில் நின்று
கணத்தைக் கணித்துக் களி
(4)

குழுவாய் இணைந்து கொடுக்கின்ற போதே
முழுவெற்றி யாகும் முடிவு
(5)

கணித்தது பொய்த்தால் கவலையுற வேண்டாம்
துணிவோடு செய்வாய் தொடர்ந்து
(6)

இயல்பான ஆட்டம் எழிலாய் இருக்கும்
முயன்றவரை ஆட முயல்
(7)

அணித்தலைவர் சொல்லை அவமதியா பேரே
அணித்தலைவர் ஆவர் அடுத்து
(8)

கடைசி கணமும் கணிப்புகள் மாறும்
கடைசிவரை ஆட்டத்தைக் காட்டு
(9)

ஒவ்வொரு நாளுமே ஒவ்வோர் அனுபவமே
எவ்வளவு ஆகுமோ செய்!
(10)

✍️செ. இராசா

20/05/2023

சென்னை_விமான_நிலையம்

 




பொதுவாக வெளிநாட்டைப் பார்த்தே வியந்த நான் முதன் முதலாக நம் தமிழ் நாட்டைப் பார்த்து வியந்தேன் என்றால் அது மிகையல்ல உறவுகளே...
அதாவது சென்னை அண்ணா நகரில் இருந்து திருமங்கலம் மெட்ரோ சென்று அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்றோம். தரையில் கால் படாமல் அங்கிருந்த படியே சென்னை விமான நிலையம் சென்றது வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
 
நம் சென்னை மெட்ரோவால் இது சாத்தியமானது என்றால் நம்புவீர்களா?!!
மெட்ரோ நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு தரையில் கால் படாமல் அப்படியே பன்னாட்டு விமான நிலையத்திற்கு போகும் வழியெங்கும் உலகத்தரம் வாய்ந்த ஒன்று. நகரும் தானியங்கி இயந்திரங்கள் அமைத்து மிகவும்
அருமையாக
செய்துள்ளார்கள்.
 
விமான நிலையத்தில் 20ரூபாய்க்கும் தேநீர் கிடைக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம்..தண்ணீர் பாட்டிலும் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் அளவில் உலகத்தரத்தில் செய்துள்ளார்கள்‌. ப்பா செம்மல்ல.....
திமுகவோ அதிகமாகவோ இரண்டுபேரும் போட்டி போட்டு செய்துள்ளார்கள் (மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது) உறவுகளே. நம் நாட்டில் ஒரு விமான நிலையம் இப்படியா என்பதுபோல் உள்ளது. இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஆட்சியாளர்களே....

19/05/2023

கிழங்கான் மீனுவச்சு


 

கிழங்கான் மீனுவச்சு
கேட்காமத் தந்தவளே...
ஆத்தாடி என்ன சொல்ல
அடிமனசும் துள்ளுதடி
........அடிமனசும் துள்ளுதடி!
 
நாட்டுக்கோழி நீ சமைச்சா
நாக்கடியில் வெள்ளமடி
காத்தாடி போல நெஞ்சு
கடபுடன்னு துடிக்குதடி
...........கடபுடன்னு துடிக்குதடி 
 
என்னாடி என்னவளே
எனக்காகப் பிறந்தவளே
உன்னைப்போல யாரு புள்ள?
உண்மையில யாருமில்லை‌..
 
✍️செ. இராசா

18/05/2023

இறுமாப்பு கொண்டசிலர்

 


வங்கக் கடல்காண
......வந்திருந்த போதன்று
பொங்கும் கடல்கண்டு
.......பொங்கியதால்- அங்கே
சிறுநீரைப் பாய்ச்சிய
.......சிந்தையில்லா நாய்போல்
இறுமாப்பு கொண்டசிலர்
.......இங்கு!
 
✍️செ. இராசா

16/05/2023

எல்லா மதுவும் மதுவல்ல டாஸ்மாக்கின் 

கொல்லா மதுவே மது

14/05/2023

மயிலையில் வாழுகின்ற .......கபாலீஸ்வரா

 

மயிலையில் வாழுகின்ற
.......கபாலீஸ்வரா
வந்துனை வணங்குகிறோம்
........வா...ஈஸ்வரா!
 
கயிலையை ஆளுகின்ற
........பரமேஸ்வரா
கண்டிட ஏங்குகிறோம்
.........பார்...ஈஸ்வரா!
 
உயிர்களின் நாயகனே
........சோமேஸ்வரா
உன்னருள் வேண்டுகிறோம்
......தா.. ஈஸ்வரா
 
ஜெயித்திட வைப்பவனே
.......ஜெகதீஸ்வரா
‌செய்பொருள் ஆ(க்)கிடவே
.......செய்..ஈஸ்வரா
 
✍️செ. இராசா

13/05/2023

கருத்த பெண்ணே

 

பல்லவி

 
கருத்த பெண்ணே- உன்னைக்
காணாமநான் நோகுறேன்- நீ
கிடைச்ச பின்னே - அந்திக்
கீழ்வானமா மாறுறேன்!‌...

கொஞ்சும் விழி
கூறும் மொழி
எந்தன் கவி
கண்ணே கவ்விடு கண்ணால

நெஞ்சின் வலி
நீங்கும் வழி
அன்பே சகி
பெண்ணே வந்திடு முன்னால

உன்னை நினைச்சு உருகி உருகி கரையுறன்டி
என்னை அணைச்சு உசுரு துடிக்க வழிசெய்யடி

கருத்த பெண்ணே...கருத்த பெண்ணே

(கருத்த பெண்ணே)

சரணம்-1

சாக்லெட் பெண்ணேவுன் தித்திக்கும் ஸ்மைலு
சுகரின் லெவல்கூட்டி எனைத் தூக்குதே
காஃபி பிரௌனேவுன் கண்ணாடி மேனி
சன்லைட் ரிஃப்லெக்டில் எனைத் தாக்குதே

என்ன அழகிதுவோ
என்னை வதைக்கிதடி...
கருப்புக் கலையிதுவோ
கண்ணப் பறிக்கிதடி..
ஒயினில் செஞ்சதுவோ
உதட்டில் தெரியுதடி..
பிரம்மன் கவியிதுவோ
பெண்ணே மயக்குதடி...

ஏய் கருத்தப் பெண்ணே....

Rap Portion

மல்லு வேட்டிக் கட்டிக்கிட்டு
மச்சினி உன்னைக் கூட்டிக்கிட்டு
புல்லட்டுல வச்சிக்கிட்டு
புடுபுடுன்னு ஒட்டிக்கிட்டு
அப்படி இப்படி சுத்தி வந்தா
எப்படி இருக்கும் சொல்லடி புள்ள..
கல்லடி பட்டாலும் தப்பில்லைடி
கண்ணடி பட்டாக்க என்னடி செய்ய
விட்டுடு விட்டுடு வேணாமடி
தப்புடி தப்புடி விட்டுடடி
இப்படி யாரேனும் சொல்லிவந்தா
உடனே கழட்டி விட்டுடடி
அப்படி உறவு ஏதுக்கடி
என்னைய மட்டும் வச்சுக்கடி....
என்னைய மட்டும் வச்சுக்கடி

சரணம்_2

ஓரக் கண்ணால நீபார்க்கும் பார்வை
உச்சம் தலைக்கேறி சூடேத்துதே
பேபி பேபின்னு நீகொஞ்சும் வார்த்தை
கூலிங் பியரைப்போல் மூடேத்துதே..

என்ன பவரிதுவோ?!!
சுண்டி இழுக்குதடி
எப்போ அடங்கிடுமோ?!!
கண்ணே வழிசொல்லடி...
பித்தம் குறையனுன்னா
முத்தம் மெடிசனடி...
சித்தம் தெளியனுன்னா
செய்வோம் தியானமடி

✍️செ. இராசா

12/05/2023

நல்ல தமிழ் பாட்டெழுதி

 


நல்ல தமிழ் பாட்டெழுதி
விண்ணைத் தொடும் பேரெடுக்க
உன்னை வரம் வேண்டுகின்றேன் வடிவேலா...
இல்லை எனும் பேர்களுக்கும்
தன்னைத் தரும் வள்ளளென
செய்யும் கரம் வேண்டுகின்றேன்
வடிவேலா..

நட்பின் பெயர் என்றுசொல்லி
உள்ள வரை கூடிவிட்டு
உள்ள வதை செய்பவர்க்கும் வடிவேலா...
வெட்கித் தலை நாணிநிற்க
மின்னும் படி ஏறிநிற்க
எந்தன் தரம் கூட்டிடுவாய் வடிவேலா...

கத்தர் நில மண்ணைவிட்டு
சென்னை வரும் சூழலுக்கு
என்னை வர வைத்தவனே வடிவேலா...
வித்தை பல செய்வதற்கா
புத்தம் புது வாழ்க்கையென
எந்தன் நிலை மாற்றினாயோ வடிவேலா...

✍️செ. இராசா

11/05/2023

 #அம்மாபாடல்முருகா

பல்லவி

யம்மோ....யம்மோ...யம்மோ....யம்மோ

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

என்னனு சொல்லுவேன்
எப்படிநான் சொல்லுவேன்
என்னைப் பெத்த தாயே உன்னை
எப்படிநான் சொல்லுவேன்.,...

இருந்தன்னு சொல்லுவனோ
இழந்தேன்னு சொல்லுவனோ
இருக்கன்னு சொல்லுவனோ
இல்லைன்னு சொல்லுவனோ..

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

சரணம்_1
கிள்ளிப் போட்ட சாம்பார சோற்றிலூற்றிக் கொடுப்பாயே..
தட்டிவிட்டுப் போனாக்க தனியாகத் தவிப்பாயே...
வெய்யயில நின்னாலே கொதிச்சுத்தான் போவாயே...
சீக்கிரமா ஓடிவந்து சேலைக்கொடை பிடிப்பாயே...

பார்த்துப் பார்த்துதான்
நீயும் வளர்த்த
பாசமில்லையே பாவிஎனக்கு
சேர்த்து சேர்த்துதான்
நீயும் கொடுத்த
தாங்க வில்லையே பாரம் எனக்கு

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

சரணம்_2
கண்ணைக் கட்டி விட்டது போல் என்னைவிட்டுப் போனாயே
உண்மைசொல்லு எப்படிநான்
உசுரவிட்டு வாழ்ந்திடுவேன்...
அப்பனென்ற வார்த்தைக்கும்
அர்த்தமாகி நின்னாயே...
இப்ப என்ன சொல்லிடுவேன்
ஏதுமின்றி நிக்கிறேனே.....(நிக்கேனே)

இரத்தம் சிந்தி தான்
நீயும் வளர்த்த
ஈரமில்லையே நெஞ்சில் எனக்கு
என்னை மட்டும்தான்
நீயும் நினைச்ச
எண்ணவில்லையே இந்தக் கிறுக்கு

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

திரையரங்க இருக்கைகள்

 


எத்தனை பேர்களை
சுமந்திருப்பேன்..
எத்தனை பேர்களால்
நசுக்கப்பட்டிருப்பேன்....

இங்கே....
காதலென்ற பேரில்தான்
எத்தனைக் காமுகர்கள்....
சீச்சீ...
கல்லூரி போவதாய்
கணக்கு காட்டிவிட்டு
அவர்கள் செய்யும் கூத்தை
உங்களைவிட நான்தானே அறிவேன்..

சிலரோ சுத்த சாத்வீகம்
எது நடந்தாலும் அப்படியே இருப்பர்!
ஆனால்...
எல்லோரும் அப்படி அல்லவே..
இவர்கள் போடும் சப்தத்தில்
காதுகள் கிழிபடும்..
இவர்கள் போடும் ஆட்டத்தில்
இருக்கை வதைபடும்...

இங்கே...
வாரக்கடைசியில்தான்
வந்து மொய்ப்பார்கள் என்றில்லை
எல்லா நாட்களிலும்தான்..
மொச் மொச்சென்று கொறித்துவிட்டு
நாறவும் அடிப்பார்கள்...

இதில்
மீசையே முளைக்காத
விடலைகளும் உண்டு..
ஆசையே அடங்காத
பெரிசுகளும் உண்டு

ஆனாலும்
அவர்கள் வராவிட்டால்
காத்து வாங்கவேண்டியது
நான் மட்டுமல்ல..
மொத்தத் திரையரங்கமும்தான்..

இப்படிக்கு,
திரையரங்க இருக்கைகள்

✍️செ. இராசா

(வித்தியாசமான தலைப்பு வழங்கிய பாடகர் தம்பி Mannargudi Ramesh அவர்களுக்கு இனிய மனமார்ந்த நன்றி)

10/05/2023

உடல்நலம் பேண்


உடல்நலம் காக்கின்ற உத்தியைக் கற்றோர்
திடமுடன் நிற்பர் தெளிந்து
(1)

உடலுறுதி வேண்டின் உடற்பயிற்சி வேண்டும்
கடமைபோல் செய்யக் கருது
(2)

நடைப்பயிற்சி செய்தால் நலம்பல கூடும்
தடையின்றி செய்வாய் தினம்
(3)

நிறையவே உண்டு நிலைகுலைய வேண்டாம்
நிறைவுடன் உண்டால் நலம்
(4)

நன்றாய் இருப்போர்க்கே நற்சிந்தை தோன்றுவதால்
நன்றாய் இருக்க நட
(5)

சாப்பிட்ட வேகத்தில் சட்டென்று தூங்கினால்
கூப்பிடா நோயெல்லாம் கூட்டு
(6)

படுத்தவுடன் தூங்குகின்ற பாக்கியம் பெற்றால்
உடல்நலம் நன்றென் றுணர்
(7)

உப்பும் புளியும் உடலுக்குத் தேவைதான்
எப்போதும் கொஞ்சம் எடு
(8)

கசப்பை எடுத்தால் கசக்காது வாழ்க்கை
நிசமே மனதில் நிறுத்து
(9)

மனவளம் கூட மகிழ்ச்சியும் கூடும்
தினமும் தவறாமல் செய்
(10)

✍️செ. இராசா

09/05/2023

காடுவெட்டி வெளியே வந்தா சோலை அண்ணன் பேரு வரும்

 

வேர்ல்ட் புல்லா வெயிட்டிங்கு
நாம தானே டிரெண்டிங்க்கு
காடுவெட்டி மூவி கமிக் சூனுடா
தரிகிட...
வாட்சப்புல சேட்டிங்கு
பேஸ்புக்குல பைட்டிங்கு
காடுவெட்டி பேரசொல்ல செம ஃபயருடா....
 
யாரு யாரு ஆறுமுகம்
ஊரு சனம் தேடிவரும்
காடுவெட்டி வெளியே வந்தா
சோலை அண்ணன் பேரு வரும் 
 
சாதிபேதம் பார்க்கவில்லை
சண்டை ஏதும் செய்யவில்லை
கட்டம் போட்டு தடையப் போட்டால்
தடைய உடைச்சு வெளியே வரும்...
பாரு பாரு நீயும் பாரு
காடுவெட்டி படத்தைப் பாரு
படத்தைப் பார்த்து மார்க்கப் போடு
அதுக்கு முன்னே வாயை மூடு
யாரு யாரு ஆறுமுகம்
ஊரு சனம் தேடிவரும்
காடுவெட்டி வெளியே வந்தா
சோலை அண்ணன் பேரு வரும் 
 
#காடுவெட்டி இயக்குநருடன்

08/05/2023

மதிப்பெண்


 
மதிப்பெண்ணால் இன்று மதிப்-பெண்ணாய் மின்னும்
மதிப்பை அறிந்து மதி
 
✍️செ. இராசா

 


பசுமை இழந்தபின்
துண்டித்து விடப்படுகிறது
சருகுகள்
 
✍️செ. இராசா

07/05/2023

இன்றைய நாள் எம் வாழ்வில்

 








இன்றைய நாள் எம் வாழ்வில், சென்னை பயணத்தில் மிக முக்கியமான நாளாக அமைந்தது. காரணம், இன்று நிறையவே முக்கியமான இடங்களுக்குப் போய்வந்தோம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா...
 
அண்ணாநகரில் உள்ள ஐயப்பன் கோவில் என்பது ஒரு தனியார் கோவிலே. இங்கே சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல முடியாதவர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றார்கள். அப்படியே கேரள அமைப்பை ஒத்திருப்பது இக்கோவிலின் கூடுதல் சிறப்பு.
 
2. #மயிலாப்பூர்_கபாலீஸ்வரர்_கோவில் (சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோவில்)
மிகப் பழமையான சிவத்தளமான இக்கோவில் அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட மிகவும் தொன்மையான தளமாகும். இங்கேயும் அதிஅற்புதமான வழிபாடு கிடைத்தது. தரிசனம் முடித்தபின் புகழ்பெற்ற #அக்கா_அடைக்கடையில் காலைச் சாப்பாடு முடித்தோம். ஆகா...என்னே சுவை.
 
ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரான ராமகிருஷ்ணானந்தரால் 1907ல் தொடங்கப்பட்ட கோவில் இது. என்னை ஆன்மீகப் பாதைக்கு 2001ல் அழைத்து வந்த இடமெனச் சொல்லலாம். எத்தனை மதங்களோ அத்தனை பாதைகள் என்று கூறும் சமரச சன்மார்க்க கருத்தை உள்ளடக்கிய ஓர் உன்னதத் தளம். இங்கே சிறிது நேரம் தியானம் செய்துவிட்டே கிளம்பினோம்.
 
இந்தக் கோவில் வந்தால் கண்டிப்பாக பக்தியோடு சேர்த்து வயிறும் நிரம்பும். இம்முறை ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்தாலும், மீண்டும் ஒரு சிறு இடம் இருந்ததால் அங்கே கிடைத்த
அருமையான
பொங்கலையும் தள்ளு தள்ளென்று தள்ளினோம். நண்பனின் கட்டிட வேலையும் இதே கோவிலில் நடப்பதால் இக்கோவில் விஜயம் கூடுதல் சிறப்பென்றே சொல்லலாம்.
 
#கோவில் (இதுவும் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோவில்)
வைணவத் தளங்களில் 108 முக்கிய திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கே உள்ள கிருஷ்ணருக்கு மீசை இருந்தது வித்தியாசமாக இருந்தது. அற்புதமான தரிசனம். இங்கேதான் கோவில் யானை ஒன்று பாரதியை தாக்கியதாம். அதேபோல் யானை ஏதும் இன்று தென்படவில்லை. தப்பிச்சோம்.... ஆனால் நம்மதான் பாரதி இல்லையே...
 
ஆகா...ஆகா... எவ்வளவு அற்புதமான இடம். 2001 அல்லது 2002 வாக்கில் போயிருந்தேன். வரலாற்றில் ஐஸ்ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட கட்டிடம் இது. இங்கேதான் வெள்ளையர்கள் ஆடம்பரமாக மது பானங்களோடு ஐஸ்போட்டு சாப்பிட தங்கள் நாட்டில் இருந்து ஐஸ் கட்டிகளை வரவழைத்தார்களாம். (எவ்வளவு கொழுப்பு?) இங்கே உள்ள அறையில் 1897ல் விவேகானந்தர் தங்கியுள்ளார். அதே அறையில் மீண்டும் தியானம் செய்யும் வாய்ப்பு கிட்டியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அதைவிட முக்கியம் தற்போது நிறையவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மூன்று வகையான திரையரங்குகளில் (VR, 4D, 3D) என்று மிகவும் அழகாக யார் விவேகானந்தரென இளைஞர்கள் அறியும் வண்ணம் அமைத்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
 
எக்மோரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் என்பதை நான் குறைத்து எடைபோட்டுவிட்டேன். அதாவது ஒருமணி நேரம் போதுமென்று எண்ணிவிட்டேன். அடேங்கப்பா....மூன்று மணிநேரம் நடந்தாலும் முடியவே இல்லை. (அட போங்கப்பா) அவ்வளவு இருக்கிறது உள்ளே.... எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லுவார்... கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றென்று. உண்மைதான்.... . கற்சிலை, வெண்கலச்சிலையென்று எவ்வளவோ சிலைகள்... அவ்வளவும் காலத்தை ஏந்தி நிற்கும் பொக்கிஷங்கள். அதைப்பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
 
அத்தனை இடங்களையும் சுற்றிக்காட்டிய நண்பன் AP. செந்தில் குமாருக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
✍️செ. இராசா

05/05/2023

தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா

 #கூடுதல்_வரிகளுடன்
தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
தேவை உனக்கில்லையோ..
பாடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
பார்வை உனக்கில்லையோ..

நேற்று கதைக்கயிலே கண்ணம்மா
நெஞ்சம் குளிர்ந்ததடி..
காற்றுப் புயல்மழையோ கண்ணம்மா
கண்கள் நனைந்ததடி..

என்ன தவறிழைத்தேன் கண்ணம்மா
என்னைத் துறந்தனையோ...
அன்பின் பிழைபொறுத்தே கண்ணம்மா
அள்ளித் தழுவாயோ...

தென்றல் பொசுக்கிடுமோ கண்ணம்மா
தேகம் எரியுதடி.‌‌
என்ன கொடுமையிதோ கண்ணம்மா
எல்லாம் கசக்குதடி..

காலம் கடந்தபின்னே கண்ணம்மா
காட்சி தெரியுதடி....
ஞாலம் இதுதானோ கண்ணம்மா
ஞானம் கிடைத்ததடி...

✍️செ. இராசா

04/05/2023

ஊர்த்திருவிழா --------- குறள் வெண்பாக்கள்




நல்லிணக்கச் சான்றாய் நடக்கும் விழாக்களில்
எல்லோரும் சேர்ந்தால் இனிது
(1)

விழாவெனக் கூடி விருந்துண்ணும் போதில்
பலானதைத் தீண்டாமைப் பண்பு
(2)

துள்ளிவரும் காளையின் தோள்களைப் பற்றுகையில்
உள்ளத்தில் வீர உணர்வு
(3)

பறையொலி சப்தம் பலதிசை கேட்க
நிறைவுடன் நிற்கும் நினைவு
(4)

பொங்கல் படையலைப் பார்க்கின்ற போதெல்லாம்
எங்களின் ஊரென்ற இன்பு
(5)

நாட்டார் நகரத்தார் நம்மூர் கிராமத்தார்
வீட்டார் ஒருங்கிணைய வேண்டு
(6)

சொந்தவூர் தேடிவரும் சொந்தங்கள் யாவரையும்
பந்தமென பார்த்தல்தான் பண்பு
(7)

நன்நினைவை எல்லாம் மனதிற்குள் போட்டபடி
நன்றியுடன் போகும் நகர்வு
(8)

இன்பம் தருகின்ற இன்னிசைக் கச்சேரி
நெஞ்சிற்குள் செய்யும் நெகிழ்வு
(9)

வருடம் தவறாமல் வந்திடும் போதில்
அரும்பும் உறவுக்குள் அன்பு
(10)

✍️செ. இராசா

(மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் எடுத்த ஒளிப்படம்)