உடல்நலம் காக்கின்ற உத்தியைக் கற்றோர்
திடமுடன் நிற்பர் தெளிந்து
(1)
உடலுறுதி வேண்டின் உடற்பயிற்சி வேண்டும்
கடமைபோல் செய்யக் கருது
(2)
நடைப்பயிற்சி செய்தால் நலம்பல கூடும்
தடையின்றி செய்வாய் தினம்
(3)
நிறையவே உண்டு நிலைகுலைய வேண்டாம்
நிறைவுடன் உண்டால் நலம்
(4)
நன்றாய் இருப்போர்க்கே நற்சிந்தை தோன்றுவதால்
நன்றாய் இருக்க நட
(5)
சாப்பிட்ட வேகத்தில் சட்டென்று தூங்கினால்
கூப்பிடா நோயெல்லாம் கூட்டு
(6)
படுத்தவுடன் தூங்குகின்ற பாக்கியம் பெற்றால்
உடல்நலம் நன்றென் றுணர்
(7)
உப்பும் புளியும் உடலுக்குத் தேவைதான்
எப்போதும் கொஞ்சம் எடு
(8)
கசப்பை எடுத்தால் கசக்காது வாழ்க்கை
நிசமே மனதில் நிறுத்து
(9)
மனவளம் கூட மகிழ்ச்சியும் கூடும்
தினமும் தவறாமல் செய்
(10)
செ. இராசா
10/05/2023
உடல்நலம் பேண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment