(ஒன்பது வருடங்களாக குடியிருந்த வீட்டில்
நாங்கள் வரும்முன்னே ஒரு முருங்கை மரம் இருந்தது. அந்த மரத்தைவிட்டு விடைபெறுவதை எண்ணி எழுதிய வெண்பாக்களே இவை....)
........வரவேற்றல் போல்;யாம்
வருமுன்னர் வந்த
........மரமாம்- முருங்கை
வளர்ச்சியே இல்லாமல்
........வாழ்ந்தாலும் எம்போல்
தளர்ச்சி அடையவில்லை
.........தான்!
(1)
நீரில்லை என்றாலும்
........நிற்கின்றாய் இங்கேயே..
யாருன்னை வைத்தனரோ
........யாரறிவர்?- ஊரில்
வருபவர் எல்லாம்
.......வதைக்கின்ற போதும்
தருகின்றாய் இன்றைக்கும்
.......தான்!
(2)
ஒன்ப(து) ஆண்டுகளாய்
.....உன்னோடு வாழ்ந்திருந்தோம்
ஒன்பது பத்தாக
.....ஒப்பவில்லை- என்றல்ல..
ஒன்பதைத் தொட்டபையன்
.....உச்சநிலை கல்விதொட
ஒன்பதில் போகின்றோம்
.....ஓர்ந்து!
(3)
முருகன்போல் நிற்கும்
.......முருங்கை மரமே
வரும்முன் குடிபுகுந்த
......வாஞ்சை- தருவே
இருப்பதை ஈயும்
......இறையின் கொடையே
வருவேன் திரும்பவும்
......நான்!
(4)
பிள்ளைபோல் நானுன்னைப்
.....பேணியதை நன்கறிவாய்!
உள்ளத்தால் பேசியதை
.....உண்மையிலே- உள்ளுணர்வாய்!
தொல்லைபோல் எண்ணியுன்னை
.... தூரத்தில் வைத்தேனா?
எல்லையில்லா அன்புற்றேன்
.....இங்கு!
(5)
பெற்ற மகளைப்
.....பிரிகின்ற தந்தைபோல்
உற்ற உறவை
.....உதறிய- அற்பன்போல்
உன்னை விடுகையில்
..... உண்மை உணர்கின்றேன்
என்செய்ய நீயே
......இயம்பு?
(6)
கீரையில் சாம்பாராய்
.....கீரையில் கூட்டுமாய்
கீரையில் பல்வகைகள்
.....கிட்டுவதால் - யாரையும்
பச்சை நிறம்காட்டி
....பற்றுகின்றாய் போலும்;பார்
இச்சை மிகவைத்தார்
....இங்கு!
(7)
பிறந்தகம் விட்டுப்
... பிரிகின்ற பெண்போல்
உறவாய் நினைப்பேன்
...உளத்தால் - மறவேன்
வரவா முருங்கை
... வழிவிடு மீண்டும்
வரநான் வரம்தரு
.......வாய்!
(8)
வாழ்ந்த இடம்விட்டு
......வந்தவரே நன்கறிவர்!
ஆழ்ந்த மனதிற்குள்
.....அன்போடு- மூழ்கிடுவர்!
மாடும் பறவையும்போல்
.....நம்மையே சூழ்ந்திருந்(து)
ஆடும் மரம்மேலென்
.....அன்பு!
(9)
பாக்கிய ராஜைப்போல்
.....பாக்கியம் கிட்டுமெனில்
பார்க்கும் படமொன்றில்
......பாத்திரமாய்- ஆக்கிடுவேன்
கத்தார் முருங்கையுன்னைக்
..... காலத்தில் ஏற்றிவைத்து
கெத்தாய் நிறுத்திடுவேன்
......கேள்!
(10)
செ. இராசா
No comments:
Post a Comment