31/05/2020

கண்ணமூடி கண்திறந்தால்...



கண்ணமூடி கண்திறந்தால் கண்ணுலநீயும் விழுகுற
உன்னதீண்டிப் பார்க்கசொல்லி என்னநீயே உசுப்புற
விலகிவிலகிப் போனாலும் விரலசீண்ட வைக்கிற
பழகிப்போனப் போதைபோல பாதையத்தான் காட்டுற

வாட்சப் ஃபேஸ்புக் வச்சான் ஆப்புஆப்பு
வாழ்வே போச்சு மச்சான் டிக்குடாக்கு

✍️செ.இராசா

30/05/2020

ஆசைகள் ஓய்வதில்லை


கோடிகோடி உயிரணுக்கள்
.........கூடுகின்ற ஓட்டத்தில்
ஓடிஓடி இடம்பிடித்தேன்
.......உள்ளார்ந்த ஆசையால்!
ஆடிஆடி அடங்கிவிடும்
........ஆத்மார்த்த ஓட்டத்தில்
பாடிபாடிப் பழகவந்தேன்
.........பற்றிவந்த ஆசையால்!


தேடிதேடித் தெளிவடையும்
..........சித்தார்த்த ஓட்டத்தில்
நாடிநாடி நலிவுற்றேன்
.........நங்கூர ஆசையால்!
ஊடிஊடிக் குலவுகின்ற
.........ஓய்யார ஓட்டத்தில்
வாடிவாடி வதங்குகின்றேன்
........வந்துபோகும் ஆசையால்!

மூடிமூடி மயக்குகின்ற
.........முன்வினைகள் ஆட்டத்தில்
கூடிக்கூடிக் குலைகின்றேன்
..........குன்றிடாத ஆசையால்!
ஓடியாடி ஒடுக்குகின்ற
..‌....... ஓம்கார ஆட்டத்தில்
ஊடியாடி உணர்கின்றேன்
..........ஓய்ந்திடாத ஆசையால்.!

#ஆசைகள்_ஓய்வதில்லை
✍️செ.இராசா
இறைவனின் கையில் எழுதுகோல் ஆனால்
மறைபொருள் காணும் மனம்

29/05/2020

வேச நாசம் போடாதடா

#வேச_நாசம்_போடாதடா டேய் டேய்- நீ
#பாச_மோசம்_பண்ணாதடா டேய் டேய்
எவனும் எவன நம்பி
.........யாரும் பிறக்க வில்லை
சிவனும் எவன நம்பி
...... சீவன் கொடுக்கவில்லை
பண்ணுற பாவம் பார்த்து- அவன்
பண்ணுற பிறவி பாரு!
செய்யுற புண்ணியம் பார்த்து- அவன்
செய்யுற பிறவி நாறு!
போதும் போதும் போதுண்டா
.....யாதும் இங்கே கர்மம்டா....
நீயும் நானும் யாருடா
......பாயும் சின்னத் தூசுடா..

வேச நாசம் போடாதடா டேய் டேய்- நீ
பாச மோசம் பண்ணாதடா டேய் டேய்

✍️செ. இராசா

#கிராமத்து_மொழியில்_வேதனை_வெண்பா



பாய்வித்த என்புழைப்பும்
.......பாயின்றி தூங்கிடுச்சு
 நோய்காத்த நல்லரசும்
.....நோய்தாக்க விட்டிடுச்சு
வாய்க்கூடு போடணும்னு
......வாழ்வுக்கே போட்டிடுச்சு
தாய்போல நிற்காமல்
..... தண்டனைதான் தந்திடுச்சு
சேய்போலப் பார்க்கலையே சீ!!!

#கிராமத்து_மொழியில்_வேதனை_வெண்பா

✍️செ.இராசா

ஓவியம் Elaiyaraja S A V ஐயா
— with Elaiyaraja S A V.

வெட்டுக் கிளியெல்லாம்...


வெட்டுக் கிளியெல்லாம் வேகமாய் வந்தாலும்
கட்டுப் படுத்துகிற காப்பானாய்- பட்டென்று
சுட்டுப் பிடிக்கின்ற சூத்திரம் உள்ளதா
பெட்டிக் கிளியேநீ பாரு

✍️செ.இராசா

ஓவியம் Elaiyaraja S A V ஐயா
— with Elaiyaraja S A V.

28/05/2020

கவி பாடு

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு- இந்த
மெட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு- உன்
பட்டுச்சிறகினை விரித்தாடு- நீ
கொட்டும்முரசென கவி பாடு

தாடி



#தாடி வளர்ப்பதை விடுத்து
மூளையை வளருங்கள்..
இது...
தெரிந்த குரல்களின்
தெளிவில்லா வாதம்

உண்மையைச் சொல்லுங்கள்
உள்ள அறிவுக்கு
உரமூட்ட முடியும்; ஆனால்
உள்ளே ஹார்மோனுக்கு
உயிரூட்ட முடியுமா?

தானாய் வளரும் ஒன்றை
நாமாய் வளர்க்க முடியுமா? இல்லை
வைத்ததாய்ச் சொல்லும் ஒன்றை
வளர்த்ததாய்ச் சொல்ல முடியுமா?

எனில் ஏன் வைத்தீர்கள்
இந்த சோகமான தாடியை?

தாடி என்றால் சோகமா?
இது..
சினிமாவில் சொன்ன சித்தாந்தம்
சிக்காதவன் சொன்ன வேதாந்தம்

தோற்றவனின் அடையாளமெல்லாம்
தோல்வியின் அடையாளமல்ல..
சோம்பேறித்தன அடையாளமெல்லாம்
சோகத்தின் அடையாளமல்ல..

விஞ்ஞானியின் தாடி
முடிவெட்ட நேரமின்றி
முயற்சித்ததன் அடையாளம்

மெய்ஞானியின் தாடி
அலங்கார போகமின்றி
அகங்கண்டதன் அடையாளம்

சித்தனின் தாடி
சிரைக்கும் எண்ணமின்றி
சிந்தித்ததன் அடையாளம்

பித்தனின் தாடி
சிந்தனையே ஏதுமின்றி
சிதைந்ததன் அடையாளம்..

பிச்சைக்காரனின் தாடி
வழிக்க வழியின்றி
வாழ்வதன் அடையாளம்..

எனில்.
தாடி முகமூடி இல்லையா?!
தாடி சிலருக்கு முகமூடிதான்
ஆனால்...
முகமூடிகளே முகமில்லையே

தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
---இது கவிஞர் வைரமுத்து
கற்பனை மூடர்களுக்குக்
கடிவாளமிட்ட கூற்று

மழித்தலும் வேண்டாம்
நீட்டலும் வேண்டாம்
---இது பாட்டன் வள்ளுவன்
போலித் தாடிகளுக்குப்
பாடை கட்டிய கூற்று

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..
சாக்ரடீஸின் தாடி முதல்
பெரியாரின் தாடி வரை
வள்ளுவரின் தாடி முதல்
வேதாத்திரியின் தாடி வரை
தாடிகளுக்கே பெருமை தவிர
தாடிகளால் பெருமை அல்ல...

வையுங்கள் தாடி
வாழ்ந்ததன் அடையாளமாய்
வைக்காதீர் தாடி
வளர்ந்ததன் அடையாளமாய்...

✍️செ.இராசா

காணொளியாய்க்காண இங்கே சொடுக்கவும்

https://www.facebook.com/1529793087155445/posts/1919386788196071/?sfnsn=mo&d=n&vh=e

#குறிப்பு

என் டாடி என்று சொல்லாத
என் பிள்ளைகள் இன்று
ஏன் தாடி என்று கேட்டன
என்னவளைப் போலவே...

அதன் விளைவாய்ப் பிறந்த கற்பனையே இது.

27/05/2020

ஏன் அப்பு.....? ஆத்தா.. செத்துப்போயி


ஏன் அப்பு.....?

ஆத்தா.. செத்துப்போயி
ஆறு வருசமாச்சுதுனா இப்படி...?!

சேர்த்த அரைப் பவனும்
செட்டி வீடு போயிருச்சுனா இப்படி...?!

இத்த ஒத்த வீடும்
இடுப்பொடிஞ்சு போயிடுச்சுனா இப்படி...?!

பெத்த ஒத்த மகளும்
பிள்ளையோட வந்துடுச்சுனா இப்படி...?!

குடிகார மருமகனால்
குடி முழுகிப் போயிடுச்சுனா இப்படி...?!

ஏன்...அப்பு?
இப்படி குடிக்கீக....?!

✍️செ. இராசா

26/05/2020

தண்ணீர் தேசம்



#அறிமுகம்

கவியில் கதை சொல்லுதல்
புவியில் புதிதல்ல...
உரைநடையில் கவி சொல்லுதல்
உலக நடையில் மரபல்ல..
ஆனால்..
கலவி நடையில் கதை சொல்லுதல்
புலமை நடைக்குப் புதிதே..

அழகு நடையில் அமைத்த கதையை
அடியேன் நடையில் கதைத்தல் என்பது
லெட்சோ லெட்சம் டெராபைட் தமிழை
கொஞ்சமே கொஞ்சம் மெகாபைட்டில்
கிள்ளி அளப்பதே...
இருப்பினும்.....இது
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
சொல்லை சொல்லால் அளக்கும் முயற்சியே
அந்தக் கவியரசரின் விசுவாசிகள்
இந்தக் கவி அரசனை (இராசா)
இல்லை....இல்லை
இந்தக் கவிப்பொடியனைப் பொறுத்தருள்வீராக

#தண்ணீர்_தேசம்

"தண்ணீர் தேசம்" என்றவுடன்
தமிழ்நாடு ஞாபகம் வந்தால்
அதற்குக் கவிஞரும் பொறுப்பல்ல..
அடியேனும் பொறுப்பல்ல...
அரசியல் விற்பனர்களேப் பொறுப்பு..

சொற்பப் பாத்திரங்களை வைத்து
சொற்களில் பூச்சொரியும்
ஆச்சரிய விசித்திரம்தான் இந்த
அற்புதத் "தண்ணீர் தேசம்"

#பாத்திரங்கள்

பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும்
சூத்திரத்தை எங்கு கற்றாரோ கவிஞர்
நேர்த்தியாய் பெயர் வைத்து
நேத்திரங்களைத் திறந்து விட்டாரே

தமிழ் விளையாடும் கதையில்
#தமிழ்ரோஜா எனும் ஒற்றை நாயகியே
கதை முழுதும் வரும்
கதையின் நாயகி..

தமிழை ரசிக்கக் கலை வேண்டாமா?!
எனில்...
கதையின் நாயகன்
காதல் மன்னனுக்கும்
#கலை_வண்ணன் பெயர்.....சரிதானே?

தமிழின் தந்தை #அகத்தியர்
கவிஞரும் மொழிகிறார் பாருங்களேன்
தொல்காப்பிய அகத்தியம்போல்
நம் முன்மொழிக்கே
முன்மொழிந்தார்போல?!

கரையில் கொஞ்சிய காதலர்கள்
தரையைத் தாண்டிச் செல்கின்றனர்
கரை படாதக் காதலோடும்
கரை தொடாத மீனவர்களோடும்...

#பரதனும்_பாண்டியும்
#இசக்கியும்_சலீமுமாய்
அறுவரோடு பயணித்த
அஃறிணைச் #சுண்டெலியுமாய்..
கடலுக்குள் நடக்கும்
கற்பனைக் களேபரம்தான்
கதையின் கரு... இல்லை இல்லை
காவியத்தின் உரு..

#கதைச்_சுருக்கம்

இயந்திரப் பழுதில்
இயங்காதப் படகில்
தண்ணீரின்றி
தண்ணீருக்குள் தவிக்கும்
கண்ணீர் காவியம்தான்... இந்தத்
தண்ணீர் தேசம்..

இன்பம் துன்பம்
சைவம் அசைவம்
ஆத்திகம் நாத்திகம்
கம்யூனிசம் சோசலிசம்
விஞ்ஞானம் மெய்ஞானம்
காதல் கானம்
மழை புயல்
பசி ருசி
ஒளி ஒலி
மது மயக்கம்...
என்ன இல்லை இந்த தேசத்தில்?!
எல்லாம் உண்டு...
நம் கண்ணீர் தேசத்தில்....

மன்னிக்கவும்..
இந்தத் தண்ணீர் தேசத்தில்
.......
.......
#முடிவுரை

தியானம் கைகூடாவிடில்
பிரயாணம் செய்யுங்கள்
தண்ணீர் தேசம் தரிசிக்க..

தியானம் கை கூடிவிடின்
அதையும் களையுங்கள்
மீண்டும் தரிசிக்க....

✍️செ.இராசா

#கடலுக்குத்_துளியின்_வந்தனம்
அகிலம் முழுவதும் அன்பை விரித்து
மகிழும் மனமே மனம்

✍️செரா

25/05/2020

சிரத்தில் தருமமாம் சீ



தருமர் விதுரர் துரோணரோடு பீஷ்மர்
இருந்த சபையிலே எங்கே- கருணை?
மரபின் பெயரில் மதியை இழந்து
சிரத்தில் தருமமாம் சீ

✍️செ.இராசா

மரபின் பெயரால் நாம் பின்பற்றும் தருமம் சங்கடத்தைத் தருமாயின் கருணையின் பொருட்டு அதை உடைக்கலாம். அங்கே நாம் தர்மவான் என்று அகங்காரம் கொள்வோமாயின் அது மிகுந்த துன்பத்தையே விளைவிக்கும்.

--------பகவான் கிருஷ்ணர்

உன் மெய்க்கு உயிர்கொடு




கடிகாரங்கள் ஓடவில்லை..
கற்கண்டுகள் இனிக்கவில்லை
கானங்கள் கேட்கவில்லை
காட்சிகள் நகரவில்லை
கவிதைகள் ருசிக்கவில்லை; ஏன்?
கடவுளும் பிடிக்கவில்லை; ஆம்
நீ இல்லாத நாட்களில்
'நான்' இருந்தால் தானே....

எங்கே கற்றாய் இக்கலையை?
உடலை உலவவிட்டு
உயிரைக் கொள்(ல்)கிறாயே..
கொலைகாரா....
எப்போது உயிர்பிப்பாய் இச்சிலையை?!
தலையில்லா முண்டம் போல்
தலை இல்லா முண்டம் நான்...

வா...வந்து
உண்மைக்கு உருகொடு
உன் மெய்க்கு உயிர்கொடு

✍️செ.இராசா

சினிமாவில் கதாநாயகர்களுக்கு அறிமுகப் பாடல்போல்

(சினிமாவில் கதாநாயகர்களுக்கு அறிமுகப் பாடல்போல் எனக்கு நானே எழுதியது. இது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நமக்குலாம் வேற யாருங்க எழுதப்போறா?!! ஆனாலும் காலத்தை யார்தான் அறிவார்?!

சுய வரலாறாய் அமைந்த இப்பாடலைத் தயவுகூர்ந்து விளையாட்டுப் பிள்ளையின் ஆசையாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

(தொகையறா)

சீக்கிரமா ஜெயிக்கணும்னு
.........ஆசைப்பட்டேன் கடவுளே!
தீப்பொறிபோல் பற்றிடநான்
.........தூண்டிவிடு கடவுளே!
எல்லாத்தையும் எழுதுகிறேன்
........... ஏத்துக்கநீ கடவுளே!
இல்லாததை ஒதுக்குகிறேன்
...........எள்ளாதநீ கடவுளே!

ஆத்தாடி ஆத்தாடி #அம்மன்பட்டி ஆளு- இவன்
பார்த்தாலே பத்திக்கிற #பாகனேரித் தேரு
நாட்டாரும் நாடிவரும் #நகரம்பட்டி ஏறு- இவன்
வேற்றாளாய்ப் பார்க்காத #வீழனேரி வேரு?!

#ஒக்கூரு #சோழபுரம்
........... ஒன்னும் விடவில்லை- இவன்
#தெக்கூரு #சிவகங்கை
............ #தேவகோட்டை பிள்ளை
அப்படியே போனானே
.............அங்கிருந்து #தில்லை- அவன்
எப்படியோ போனாலும்
.............எல்லைதாண்ட வில்லை!

படிச்சு முடிச்சுப் பணிக்குப் போனால்
........படிச்சபடி இல்லை
அடிச்சுப் பிடிச்சு அடுத்துப் போனால்
........அதுவும்சரி இல்லை
கடன அடைக்கக் கடமை செஞ்சால்
........கடனுமடைய வில்லை
உடனே அதையும் உதறி விட்டால்
........உதவிவேறு இல்லை
அதுக்குத் தானே ஆசைப் பட்டான்
........அயல்நாட்டு எல்லை
அதுவும் தானே அமையவில்லை
.........அவனும்விட வில்லை
கடவுள் கொண்ட கருணையினால்
........கையில்வந்த வேலை
தடத்தப் பிடிச்சு தனிச்சதினால்
.........தகுதிதந்த மாலை
இருந்து இன்னும் எழுதுகின்றான்
.........இறைவனுக்கோர் ஓலை
வருமா என்று வணங்குகின்றான்
.........வரிகளுக்கோர் நாளை

✍️செ. இராசா

#சுயம்
விதைக்குள் பொதிந்த விருட்சம் துளிர்க்க
விதையை உறங்க விடு

✍️செ. இராசா

24/05/2020

சாதி கானா



எஸ்ஸி எஸ்டின்னு சொல்லாதீங்க டா
எங்கள ஜாதிக்குள்ள தள்ளாதீங்கடா
பிஸி எஃப்சியின்னா உசத்தி இல்லைடா
பிறந்த மனுசன் எல்லாம் ஒன்னுதானடா

உலகம் இப்போ கொரானாவ
............ஒழிக்கத் தானே துடிக்குது
உங்களோட ஜாதி எல்லாம்
............ஒதுங்கித் தானே கிடக்குது
கோவில் எல்லாம் கூட்டமின்றி
.........முடங்கித் தானே கிடக்குது
கூச்சல் போட்ட கூட்டமெல்லாம்
........கூனிக் குறுகி நிக்குது

........(எஸ்ஸி எஸ்டின்னு...)

போதும் போதும் மக்கா- நீ
......புதுசா யோசி கிக்கா
சாகும் வாழ்வு மக்கா- உன்
...... சாதி என்ன கொக்கா?!

உன்னுள் என்னுள் ஓடுறது
.........ஒரே ரத்தம் தானே...
இன்னும் இங்கே போடுகிற
.......எல்லாம் சத்தம் வீணே...
சாதி என்னும் பேதமெல்லாம்
.......சண்டை மூட்ட தானே
நீதி இன்றிப் பேசுகின்ற
.......அந்தப் பேச்சுவீணே..

போதும் போதுண்டா போதும் விடுங்க டா
பொல்லா வேசமெல்லாம் போடாதீங்க டா
யாரும் யாருக்கும் அடிமை இல்லை டா
இன்னும் ஏதேதோப் பேசாதீங்க டா

✍️செ. இராசா

(சாதி இல்லா சமத்துவ சமுதாயம் உருவாகுமா யின் தமிழரை வெல்ல எவராலும் முடியாது)

பகடையின் எண்களில்.....

பகடையின் எண்களில் பாய்கிற காய்கள்
நகர்வதில் கிட்டிடும் நம்பலன் போலே
அகமதின் எண்ணங்கள் ஆள்வதைக் கொண்டே
சகமதில் கிட்டிடும் சான்று
✍️

பிரியாணி


பெருநாளில் கிட்டும் பிரியாணி போலே
வரும்நாளில் மாறட்டும் வாழ்வு

✍️செ.இராசா

குறிப்பு:

இதைப் பார்த்தவுடன் பிரியாணி அனுப்பி வைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி😊😊😊😊😊

23/05/2020

நீ.... நீயேதான்..

உன்னை...
மானே தேனே என்றால்
நானே..சிரித்திடுவேன்...
நிலவே மலரே என்றால்
நீயும்.... சிரித்திடுவாய்

அறிவேன்‌‌...
உன்னை அளக்க
எச்சில் உவமைகள்
எப்போதும் உதவாதென..
உன்னை விளக்க
மொழிகள் எல்லாம்
மௌனம் சாதிக்குமென...

ஆம்....

நீ
பழைய பிரம்மனின்
புதிய முயற்சி
இந்த
ஏழைக் கவிஞனின்
இன்ப அதிர்ச்சி..

நீ....
நீயேதான்..

✍️செ. இராசா

குறள் வெண்செந்துறைகள்

#குறள்_வெண்செந்துறைகள்
கவிதை ஒன்று எழுதிடத்தான் கனவு காண்கிறேன்!
புவியில் நின்று புலங்கிடத்தான் புதிது
கேட்கிறேன்!

அரைத்த மாவில் அரைத்திடாமல் அசத்தப் பார்க்கிறேன்!
கரையும் வாழ்வில் கரைந்திடாமல் கலக்கப்
பார்க்கிறேன்!

✍️செ. இராசா

22/05/2020




தாய்க்கு மகனாற்றும் தாராள நல்லுதவி
ஆய்ந்தால் அதுதானே அன்பு

✍️செ.இராசா



(குறிப்பு: இது எங்களுக்கும் பொருந்தும்😊😊😊😀😀)

சிநேகவல்லி




#நாவல் எல்லாம் படிப்பதற்கு
நமக்கெல்லாம் பொறுமை இல்லை
இல்லாத ஒன்று பற்றி
இப்படி ஏன் அளக்கிறார்கள்
என்றெல்லாம் எண்ணித்தான்
ஏனோ நான் தவிர்த்து வந்தேன்...


இராஜேஷ் குமார் நாவல் மட்டும்
இதில் ஏனோ விதிவிலக்காய்..
இரயில் பயணங்களில்
இரகசியக் காதலியாய்..

சிலபல நாவல்களை
தின்றன்று செரித்துள்ளேன்
கட்டுரையும் கவிதையும்
கட்டுக் கட்டாய் சுவாசித்தேன்..

கட்டுக்கதை நாவல்களாய்
கட்டம்போட்டு விலக்கி விட்டேன்..
தொட்டில் மீனைப் போல்
தொட்டிலே கடல் என்றேன்...


பட்டி ஆட்டைப்போல்
பட்டியே உலகென்றேன்...
சங்க இலக்கியம்போல்
சாமானிய இலக்கியமா?
மதியில் ஏற்றாமல்
மடையனாய் உளறிவந்தேன்..

சித்தம் கலங்கியவன்
பித்தம் தெளிந்ததுபோல்
பொன்னியின் செல்வனால்
கண்கள் திறந்து கண்டேன்..

கல்கியின் பாத்திரங்கள்
கல் மனதில் சிலையாக
கற்பனைச் சித்திரங்கள்
கவிப்பதைக் கண்டு கொண்டேன்..

கள்ளுண்ட தமிழன்போல்
சொல்லுண்ட தமிழாலே
அடுத்தடுத்த நாவலுக்கு
அடிமனம் ஆசையுற
#பாகைநாடன்_ஐயாவின்
படைப்பிலே மூழ்கி விட்டேன்..
(Shanmugam NV ஐயா)

"#சிநேகவல்லி" என
அவரிட்ட தலைப்பே
சினேக நதிபோல
சீண்டியது என்னை..
மீண்டும் ஆதித்தன்
இளங்கோவாய் மின்னுகிறான்

காதல் லீலையுடன்
ராஜாங்கம் செய்கின்றான்..
பாகம் ஒன்று முடிந்தபின்னும்
தேகம் மட்டும் சிலிர்க்கிறது...
ஆம்...
தேகம் இன்னும் துளிர்க்கிறது

✍️செ.இராசா

(எத்தனையோ விடயங்களைப் பதிவு செய்துள்ளீர்களே எப்படி ஐயா என்றேன்? 20 வருட உழைப்பு என்றார்.

காதல் காட்சிகளில் புகுந்து விளையாடி உள்ளீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டே.... நாங்கள் விளையாடிவிட்டோம் நீயும் விளையாடய்யா ஏன்றார்..... சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் பாகம்-2ஐத்தேடி....)

அன்பே..அமுதே.. ஐ லவ் யூ








அன்பே..அமுதே.. ஐ லவ் யூவென
அவனையும் அறியாமல் உளறினான்
அவள் யாரென்று
அருகிலிருந்தவள் அலறினாள்...
அதகளமானது அவர்களின் இரவு..

சத்தியம் செய்து
சமாதானம் செய்தவன்
நித்திரை சென்றுவிட்டான்..

பாவம்..
அவன் கண்ட கனவு மட்டும்
உறங்கவே இல்லை....
அவன் மனைவியைப் போலவே

✍️செ.இராசா

மறந்தால் என்னாவோம்?



விடியலைத் தருகிற கதிரவனும்
.......விடுமுறை கேட்டால் என்செய்வோம்?
இடிமழைப் பொழிகிற இந்திரனும்
.......இடிவரி போட்டால் என்செய்வோம்?
துடிப்பினைத் தொடர்கிற இருதயமும்
....துடிப்பதைத் துறந்தால் என்னாவோம்?
படிப்பினைக் கொடுக்கிற அனுபவமும்
...படிப்பதை மறந்தால் என்னாவோம்?

✍️செ.இராசா

21/05/2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ



நானென்ற மண்குடத்தை நாடிவந்த சோதரனே
நானென்றும் உம்குணத்தை நன்றியுடன் காண்கின்றேன்
ஈரோட்டில் காளானாய் என்றும்மைச் சொன்னாலும்
பாரோட்டும் வாமனனே நீ

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ

மகாபாரதச் சுருக்கம் குறள் வெண்பாவில்

#மகாபாரதச்_சுருக்கம்
#குறள்_வெண்பாவில்

சந்திர வம்சத்து சந்தனு மன்னனுள்
வந்தது சஞ்சல வாழ்வு
1. #தொடக்கம்

மீனவ நங்கையில் வேட்கை மிகுந்திட
ஆனது சங்கடம் அன்று
2. #சந்தனு_சத்தியவதி_காதல்

கங்கைப் புதல்வனைக் காவலன் ஆக்கியே
நங்கைப் புதல்வனுக்கு நாடு
3. #பீஷ்மரின்_சபதம்_
#விசித்திவீரியன்_பதவியேற்ப

நடந்த செயலால் நலிந்த அரசன்
விடையின்றிப் போனானே வீடு
4. #சந்தனு_மரணம்

குடிகாக்கும் வேந்தன் குடியால் மடிய
குடிகாக்க வேண்டாமா கோன்?!
5. #விசித்திரவீரியன்_மரணம்

வியாச முனிவனின் விந்தைத் திறனால்
வியாபித்து விட்டது வேர்
6. #வியாசர்_வழியில்_புத்திரர்கள்

குருடாய்க் குறையாய்க் கொடுத்தது போக
ஒருவனைத் தந்தார் உவந்து
7.#திருதராஷ்டிரன்_பாண்டு_விதுரர்_பிறப்பு

கண்ணிலான் பிள்ளைகள் கௌரவர் நூறுக்கும்
கன்னனே கண்கண்ட காப்பு
8. #கௌரவர்களுடன்_கர்ணன்

பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர் ஐவர்க்கும்
ஆண்டவர் கண்ணன் அரண்
9. #பாண்டவர்களுடன்_கண்ணன்

விதுரர் அறமும் விரயமாய்ப் போக
சதியால் விளைந்த சரிவு
10. #விதுரர்_அறிவுரை_வீண்

பகடை உருட்டிய பாவியின் ஆட்டம்
சகலர்க்கும் ஊதியது சங்கு
11. #சகுனியின்_சதியும்_விளைவும

அக்னியில் தோன்றிய அம்மணி சக்தியும்
அக்னி குணமே அறி
12. #பாஞ்சாலி

தர்மத்தின் வாழ்வினை சங்கடம் கவ்வினும்
கர்மமே வென்றது காண்
13. #முடிவு

✍️செ.இராசா

20/05/2020

நீ இன்றி வாடுகின்றேன்


அள்ளஅள்ளக் குறையாத
..............அமுத சுரபியாய்
அள்ளிஅள்ளிக் கொடுத்தவளே
..............அன்பு அன்னையே!

வந்துவந்து சோராத
.............அலையின் பயணமாய்த்
தந்துதந்து சோராத
..............கர்ண வள்ளலே!


சொல்லசொல்ல இனிக்கின்ற
..............கம்ப சந்தமாய்
மெல்லமெல்ல உளமாற்றித்
..............தந்த சொந்தமே!

வெல்லவெல்ல வருகின்ற
..............உள்ளக் கிளர்ச்சியாய்
நல்லநல்லக் கவிதந்த
..............கத்தார் கார்னிஷே...!

நீ இன்றி வாடுகின்றேன்

✍️செ. இராசா

(கத்தாரில் என் உணர்வோடு ஒன்றாய்க் கலந்த கடற்கரை இது. இதைப்பிரிந்திருக்கும் வேதனையை எப்படிச் சொல்வேன்?!)

வரிகள் இல்லாமலே





வரிகள் இல்லாமலே
வாசிக்க முடிகிறது
அவள் விழிகள்
(1)

தவம் செய்யாமல்
முக்தி கிடைக்கிறது
மோனப் பார்வையில்
(2)

நிகழ் காலம்
ஸ்தம்பித்து விட்டது
ஒற்றைப் பார்வையில்
(3)

✍️செ. இராசா

18/05/2020

நீருக்குள் தீப்பந்தம்


மதுஅருந்தப் பறக்குமே வண்டு; ஆனால்
மதுவருந்தப் பறக்குதே மனிதம்
குடி உயர உயருமே அறம்; ஆனால்
குடி உயர விழுகுதே சிரம்!

பிறர் சாரா பிராந்தியமாய்‌ நேற்று
பிறர் சாராயம் பிராந்தியுமாய் இன்று!
கள்ளுண்ணான்மை கடைபிடித்தார் அன்று
கள்ளுண் ஆண்மை கடைவிரித்தார் இன்று

நீரின்றி வாழ்வேது மீனுக்கு; சோம
நீரின்றி வாழ்வுண்டா பாருக்கு?
நீரினுள் மலருமா தீப்பந்தம்?!- சோம
நீரினால் மலருதே தீ-பந்தம்!

✍️செ. இராசா

செஞ்சுவச்சக் கஞ்சிவாசம்




செஞ்சுவச்சக் கஞ்சிவாசம் செஞ்சுதந்த வஞ்சிபோல
நெஞ்சினிலே வந்துவந்து நின்றுகவி -கொஞ்சுகையில்
இஞ்சிதிண்ண மந்திபோல இங்கிருந்து அங்குதாவ
கஞ்சிகொட்டி காஞ்சிடுச்சே கை

✍️செ.இராசா

16/05/2020

மூன்று விதமாக கண்ணனின் கன்னி





#மூன்று_விதமாக
*******************
கண்ணனின் வாயினில் புல்லாங் குழல்
...கன்னியின் பார்வையில் காதல் அனல்
சந்தங்கள் கொஞ்சிடும் சங்கீத மோகம்
... வந்தனம் செய்திட வந்திடும் ராகம்

லல்லல்ல லாலா லே...லல்லல்ல லாலா லே

#கொஞ்சம்_புதுசாப்_பாடுங்க_நாதா..

கொரானா கண்ணால
.............கொய்யாத நீயென்னை
ஊரெல்லாம் உன்னாலதான்...
.............நோயா போனதடி (2)

#ஆகா.... #இன்னும்_எதிர்பார்க்கிறேன்..

சூமில் உன்னைக் கண்டதும்
.....கூகிள் எல்லாம் உன்முகம்
வாட்சப் ஸ்டேடஸ் போட்டதும்
... பூக்கும் உன்னுள் இன்முகம்
you are entire my world
......Now world is under my heart (2)

✍️செ. இராசா

கட்டிய வீட்டினைக் கையால்



கட்டிய வீட்டினைக் கையால் இடிக்கின்ற
சுட்டிக் குழந்தையின் சூட்சம ஆட்டம்போல்
கொட்டிக் கொடுப்பதைக் குட்டிக் கொடுத்தவன்
தட்டிப் பறிக்கிறான் பார்

✍️செ. இராசா

15/05/2020

கலர் கலரா டோக்கன் போட்டு


#கலர்_கலரா_டோக்கன் போட்டு
கவர் கவரோ போத்தல் போட்டு
கோடி கோடியா குவிக்க ஒரு திட்டம்- நீங்க
ஓடி ஆடி வரலையினா நட்டம்!

கொஞ்சம் குடிச்சாக்க குடிக்கிறது குத்தமுங்க
தஞ்சம் புகுந்தாக்க தடுக்குறது யாருயிங்க
கடைக்கு வந்தாக்க கவுர்மண்டு ஓடுமுங்க
அடங்கிக் கிடந்தாக்க அனைவருக்கும் நட்டமுங்க

அம்மாபோல நாங்க...அள்ளிக்கிட்டு போங்க
சும்மாஏங்க நீங்க... சுருண்டுகிடக்கு ரீங்க
நல்லா ஃபுல்லா குடிச்சுட்டு
உல்லா லான்னு கிடங்க

✍️செ.இராசா
#கானா

அரைச்ச மாவ அரைச்சிக்கிட்டே

அரைச்ச மாவ அரைச்சிக்கிட்டே
...........‌ஆடுதொரு கூட்டம்
சிரைச்ச முடிய சிரைச்சிக்கிட்டே
...........சிரிக்கிதொரு கூட்டம்
உரைச்சபோதும் ஒன்னும் விளங்கள
இரைச்சலோசை இன்னும் அடங்கள


ஐயோ ஐயோ போதும் சாமியோவ்
மெய்யோ பொய்யோ போதும் சாமியோவ்

✍️செ. இராசா

14/05/2020

கவிஞனாய்த் தான் இருந்தான்...
கவிஞனென அவன் உணராதவரை...

✍️செ. இராசா

சூனியம்



இல்லாத ஒன்றை
இல்லை என்று சொல்லும்
இந்த வார்த்தைக்குள் தான்
எத்தனை அர்த்தங்கள்...

கணித மொழியில்
சூனியம் என்றால் பூஜ்யம்

பூஜ்யத்திற்கு மதிப்புண்டா என்றால்
இல்லை என்போம்
பூஜ்யமின்றி கணிதமுண்டா என்றால்
இல்லை என்போம்

எனில் இல்லாத ஒன்றிற்கு
இருப்பு எதற்கு?!
இருப்பதால் தானே
இல்லை என்கின்றார்

எனில்
நாத்திக வாதம்தான்
சூனிய வாதமா?!

ஆனால்
ஆத்திக வாதமும்
அதைத்தானே சொல்கிறது

இதோ
முன்னால் நாத்திகரும்
பின்னால் ஆத்திகருமான
கவியரசரைக் கேட்போம்;

"பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்"

இது
பௌத்தம் சொல்லும்
மாயா வாதம்போல் உள்ளதே...
ஆம்
அதுவும் சூனிய வாதம் தானே?!

ஆன்மீக வாதம் விடுங்கள்
அறிவியல் வாதம் கேளுங்கள்

பிக் பேங்க் தியரி சொல்லும்
பிரபஞ்சக் கோட்பாட்டில்
பெரிய வெடியொன்று
திடீர் என்று வெடித்ததாமே?!

ஆமாம்..
இந்தத் "திடீர்" என்பதன்
மூலப்பொருள் எங்கே?
இல்லாத ஒன்றா வெடிக்கும்?
முன்பே இருந்தது என்றால்
முன்பே வந்தது எப்படி?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே எல்லாம் வெறும் சூனியமே
இந்த சூனிய ஞானம் புரியாவிடில்....
மன்னியுங்கள்..
இங்கே எல்லாம் ஞான சூனியமே

13/05/2020

வாங்கப் பழகலாம்- கொரானா



வாங்கப் பழகலாம்- கொரானா
வாங்கப் பழகலாம்
வாங்கப் பழகலாம்- கொரானா
வாங்கப் பழகலாம்

எங்கோ சுத்தீங்கோ- நீங்கோ
இங்கே வந்தீங்கோ!
வந்து நல்லாங்கோ- நீங்கோ
வச்சு செஞ்சீங்கோ!
இன்னும் செய்யுங்கோ- நீங்கோ
இன்னா ஆளுங்கோ!
எம்மாம் பேருங்கோ- வாங்கோ
சும்மா வாருங்கோ!

என்ன வேணுங்கோ- நீங்கோ
எண்ண வேணுங்கோ!
சங்க ஊதுங்கோ- நீங்கோ
பங்கம் பண்ணுங்கோ
கண்ண மூடிங்கோ- நீங்கோ
காட்டு காட்டுங்கோ!
நம்ம நாடுங்கோ- வாங்கோ
நம்ம(ல) நாடுங்கோ!

எங்க சரக்குங்கோ- நீங்கோ
கொஞ்சம் ஊத்துங்கோ?!
குடியின் ஆட்சிங்கோ- நீங்கோ
குடிக்க வேணுங்கோ?
கேடி கோடிங்கோ- நீங்கோ
ஓடி வாருங்கோ!
பாடி ஆடுங்கோ- ச்சும்மா...
பாடி தூக்குங்கோ

✍️செ. இராசா

(துன்பம் வருங்கால் நகுக...என்ற குறளின் வாக்கிற்கிணங்க இன்று கவிஞர் Kalidasan காளிதாசர் ஐயா எழுதியிருந்தார்கள். அதன் உந்துதலில் எழுதியது இப்பாடல்.
இப்படிக் கொரானாவை அழைத்துப் பாடுவது தவறுதான் என்றாலும் மன வேதனைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கடவுளே மன்னியுங்கள்...)
செவ்வாயில் கால்வைக்க சிந்தித்த விஞ்ஞானம்
பவ்யமாய் நிற்கிறது பார்

11/05/2020

பிறந்த நாளுக்கான பொதுவான புதிய பாடல்

பிறந்த நாளுக்கான பொதுவான புதிய பாடல் 

*****************************************************************
(ஹாப்பி பர்த்டே டூ யு-என்று ஆங்கிலத்தில் பாடும் பாடலுக்கு மாற்றாக கவிஞர் அறிவுமதி எழுதிய "நீண்ட நீண்ட காலம்" என்ற பாடல்போல் எழுத முயன்றேன்...ஆனால், என்னால் அந்த டியூனைத் தாண்டி வர முடியவில்லை. அந்தப் பாடலைக் கேட்காதவர்கள் கீழே உள்ள பாடலை பாடி அனுப்பினால் நாம் இவ்வுலகிற்கு புதிய பிறந்த நாள் பாடல் ஒன்றை வழங்கலாம்.
*******************************************************************

புதிய உலகைக் காண- நீர்
புவியில் உதித்த நாளே-(அது)
வெளிச்ச உலகைக் காண-நீர்
வெளியில் குதித்த நாளே!

இதயம் இரண்டும் மகிழ- உம்
உதயம் நிகழ்ந்த நாளே-(அது)
இன்பம் எங்கும் பெருக- நீர்
இறங்கி வந்த நாளே!

இனிய பிறந்த நாளே!
இனிய பிறந்த நாளே!
இனிமை மிகுந்த நாளே!
இனிய பிறந்த நாளே

வாழ்க வாழ்க வாழ்க!
வாழ்க என்றும் வாழ்க!

ஆலம் விழுது போலே
ஆழம் ஆள வாழ்க!
ஞான வேதம் போலே
ஞாலம் ஆள வாழ்க!

அன்பும் அறமும் சேர
பண்பில் நின்று வாழ்க!
தன்மை இன்னும் உயர
தமிழைக் கற்க வாழ்க!

வாழ்க வாழ்க வாழ்க!
வாழ்க என்றும் வாழ்க!

----இராசா---

10/05/2020

பாராமல் போயினும்

பாராட்டை எண்ணாமல் பாடுகின்ற பூங்குயிலாய்
பாராமல் போயினும் பாடு ✍️

09/05/2020

அகிலத்தின் ஆதாரம் அம்மா

#அன்னையர்_தின_வாழ்த்துகள்

(இன்று காலையில் வந்த மெட்டுக்கு எழுதிய பாடல்)
https://m.facebook.com/story.php?story_fbid=1897632810371469&id=1529793087155445%3Fsfnsn%3Dmo&d=n&vh=e

👆👆👆👆👆#பாடல்_கேட்க👆👆👆👆

அகிலத்தின் ஆதாரம் அம்மா
தியாகத்தின் ஆகாயம் அம்மா
பக்தியின் திருக்கோவில் அம்மா
பிரம்மனின் அடையாளம் அம்மா

கண்ணினிமைபோல் காத்து வளர்த்தாய் என்னை
ஆதிக்கே குருவானாய் அம்மா நீயே...

அம்மா ஏற்றிய அன்பின் தீபம்
அணையாதென் இருதயத்தில்
நினைந்து நினைந்து என்னுள் என்றும் ஒளிரும்

அம்மா அம்மா அம்மா அம்மா
உயிருக்கே மெய்யாய் நிற்கும் அம்மா

********************************************
ஆதி பகவன் அவர்களை ஈன்றோரும்
ஆதியில் அன்னைதான்; ஆம்