#அறிமுகம்
கவியில் கதை சொல்லுதல்
புவியில் புதிதல்ல...
உரைநடையில் கவி சொல்லுதல்
உலக நடையில் மரபல்ல..
ஆனால்..
கலவி நடையில் கதை சொல்லுதல்
புலமை நடைக்குப் புதிதே..
அழகு நடையில் அமைத்த கதையை
அடியேன் நடையில் கதைத்தல் என்பது
லெட்சோ லெட்சம் டெராபைட் தமிழை
கொஞ்சமே கொஞ்சம் மெகாபைட்டில்
கிள்ளி அளப்பதே...
இருப்பினும்.....இது
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
சொல்லை சொல்லால் அளக்கும் முயற்சியே
அந்தக் கவியரசரின் விசுவாசிகள்
இந்தக் கவி அரசனை (இராசா)
இல்லை....இல்லை
இந்தக் கவிப்பொடியனைப் பொறுத்தருள்வீராக
#தண்ணீர்_தேசம்
"தண்ணீர் தேசம்" என்றவுடன்
தமிழ்நாடு ஞாபகம் வந்தால்
அதற்குக் கவிஞரும் பொறுப்பல்ல..
அடியேனும் பொறுப்பல்ல...
அரசியல் விற்பனர்களேப் பொறுப்பு..
சொற்பப் பாத்திரங்களை வைத்து
சொற்களில் பூச்சொரியும்
ஆச்சரிய விசித்திரம்தான் இந்த
அற்புதத் "தண்ணீர் தேசம்"
#பாத்திரங்கள்
பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும்
சூத்திரத்தை எங்கு கற்றாரோ கவிஞர்
நேர்த்தியாய் பெயர் வைத்து
நேத்திரங்களைத் திறந்து விட்டாரே
தமிழ் விளையாடும் கதையில்
#தமிழ்ரோஜா எனும் ஒற்றை நாயகியே
கதை முழுதும் வரும்
கதையின் நாயகி..
தமிழை ரசிக்கக் கலை வேண்டாமா?!
எனில்...
கதையின் நாயகன்
காதல் மன்னனுக்கும்
#கலை_வண்ணன் பெயர்.....சரிதானே?
தமிழின் தந்தை #அகத்தியர்
கவிஞரும் மொழிகிறார் பாருங்களேன்
தொல்காப்பிய அகத்தியம்போல்
நம் முன்மொழிக்கே
முன்மொழிந்தார்போல?!
கரையில் கொஞ்சிய காதலர்கள்
தரையைத் தாண்டிச் செல்கின்றனர்
கரை படாதக் காதலோடும்
கரை தொடாத மீனவர்களோடும்...
#பரதனும்_பாண்டியும்
#இசக்கியும்_சலீமுமாய்
அறுவரோடு பயணித்த
அஃறிணைச் #சுண்டெலியுமாய்..
கடலுக்குள் நடக்கும்
கற்பனைக் களேபரம்தான்
கதையின் கரு... இல்லை இல்லை
காவியத்தின் உரு..
#கதைச்_சுருக்கம்
இயந்திரப் பழுதில்
இயங்காதப் படகில்
தண்ணீரின்றி
தண்ணீருக்குள் தவிக்கும்
கண்ணீர் காவியம்தான்... இந்தத்
தண்ணீர் தேசம்..
இன்பம் துன்பம்
சைவம் அசைவம்
ஆத்திகம் நாத்திகம்
கம்யூனிசம் சோசலிசம்
விஞ்ஞானம் மெய்ஞானம்
காதல் கானம்
மழை புயல்
பசி ருசி
ஒளி ஒலி
மது மயக்கம்...
என்ன இல்லை இந்த தேசத்தில்?!
எல்லாம் உண்டு...
நம் கண்ணீர் தேசத்தில்....
மன்னிக்கவும்..
இந்தத் தண்ணீர் தேசத்தில்
.......
.......
#முடிவுரை
தியானம் கைகூடாவிடில்
பிரயாணம் செய்யுங்கள்
தண்ணீர் தேசம் தரிசிக்க..
தியானம் கை கூடிவிடின்
அதையும் களையுங்கள்
மீண்டும் தரிசிக்க....
✍️செ.இராசா
#கடலுக்குத்_துளியின்_வந்தன
No comments:
Post a Comment