31/07/2019

ஏழை ஷாஜகான்கள்




எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள்?
காதலின் சின்னம் “தாஜ்மகால்” என்று
இங்கே....இன்னும்...
ஏழை ஷாஜகான்கள் கட்டிய
எத்தனையோ தாஜ்மகால்கள்
நிறையவே இருக்கின்றன..

புகைப்பவனின் வாழ்வு



ஒவ்வொரு இழுவையிலும்
குறைந்துகொண்டே வருகிறது
புகைப்பவனின் வாழ்வு
(1)

நெருப்புக் குச்சிகள்
நிறைய வீணாகிறது
புகைப்பவனைத் தீமூட்ட
(2)

பற்ற வைத்த நெருப்பு
புகைந்து கொண்டே இருக்கிறது
புகைப்பவனின் வாயில்
(3)

பாராட்டும் பண்பு

பாராட்டும் பண்பு பழக்கத்தில் வந்திட
பாழாகும் தீதான பண்பு
✍️
(பாராட்டும் உள்ளத்தில் பொறாமை குடியேறாதாம்)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்--RAMESH DEVAR



நகரம் பட்டியில்
அகரம் போட்டு- நீ
தஞ்சை மண்ணிலே
தஞ்சம் புகுந்தாய்!

தகர வறுமையைத்
தங்க மாக்கி- நீ
சிங்கை மண்ணிலே
சிகரம் தொட்டாய்!

உகரக் கடவுளின்
உதவி பெற்று- நீ
உன்னை நம்பியே
உயர்ந்து நிற்கிறாய்!

வாழ்க வளமுடன் தம்பி!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐

(கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்து இன்று சிங்கப்பூரில் பல உணவகங்கள் நடத்தி உலகளாவில் விரிவுபடுத்த உள்ள அன்புக்குரிய தம்பி Ramesh Devar அவர்கள் (#சிந்தாமணி) வாழ்வு நம் போன்ற அனைவருக்கும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல. உண்மை)

குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மு.வரதராசன் விளக்கம்:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
— with Ramesh Devar.

30/07/2019

பகிர்ந்து உண் (குறளின் குரலாய்)


பகிர்ந்து உண்ணும் பண்பிருந்தால்
அகிலமே உந்தன் வசமாகும்!
தனியாய் உண்ணும் குணமிருந்தால்
தனிமையும் உனக்கு விசமாகும்!

விரும்பிய உறவை வரவேற்று
விருந்து அளிப்பதே வாழ்வாகும்!
விருந்து என்கிற பயமின்றி
இருப்பதைப் பகிர்வதே சிறப்பாகும்!

காகத்தைப் போலே பகிர்பவர்க்கு
யாக தர்மங்கள் தேவையில்லை!
வெந்ததைத் தனியாய்த் திண்பவர்க்கு
எந்த பந்தமும் நிலைப்பதில்லை!

✍️செ. இராசா

29/07/2019

அண்ணாமலை அப்பா!---இன்னா தொலையவைத்தாய்! என்”நான்” புரியவைத்தாய்!!




எல்லாமும் எப்போதும்
எல்லோர்க்கும் கிட்டாது!
எப்படியோ சிலசமயம்
எப்போதோ கிட்டினாலும்
வாய்க்கு கிட்டியது
வயிற்றுக்கு எட்டாது!

அடிமுடி இல்லாதோன்
ஆலயம் போக வேண்டி
அடியேனின் வாழ்க்கையிலும்
அடிமனதில் ஓர் விருப்பம்...
அவ்வாசை முழுமையாய்
அன்றைக்கு நடக்கவில்லை..

காலம் வரும் வரைக்கும்
காய்கள் காய்வதுபோல்
காலன் வரும் வரைக்கும்
காய்வோன் காய்வதுபோல்
காத்திருந்த மூடனுக்கு
காட்டிவிட்டாய் இன்று!

அண்ணாமலை அப்பா!
உண்ணாமுலை அம்மா!
என்னா அழகய்யா..
என்னா அழகு!!

இன்னா தொலையவைத்தாய்!
என்”நான்” புரியவைத்தாய்!!
இனிநான் நானில்லை
இனிநீ வேறில்லை
...

(சீவனே சிவன்)

✍️செ. இராசா

*நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி

நினைத்தாலே முக்திதரும் ............நிமலனைத் தேடி!


நினைத்தாலே முக்திதரும்
............நிமலனைத் தேடி!
வினைநீக்க வந்திங்கு
...........வேண்டுபவர் கோடி!

ஈகைமிகு நாயகனாம்
...........ஈசனைத்தேடி!
வாகைபல சூடிடவே
..........வந்தவர்கள் கோடி!

அண்ணா மலையானின்
...........ஆசியினைத் தேடி!
உண்ணா திருந்திங்கு
...........ஓடிவந்தோர் கோடி!

விண்ணாளும் மண்ணாளும்
.............வித்தகனைத் தேடி!
எந்நாளும் எப்போதும்
...........ஏங்குபவர் கோடி!

✍️ஓம் நமசிவாய

மொட்டை மாடியில்.

இயற்கையன்னையின் தாலாட்டில்
இயந்தரமில்லா தூக்கம்
மொட்டை மாடியில்...

28/07/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்--SANTHOSH MART



ஈரோட்டுத் தம்பியே! ஈடில்லா அம்பியே!
ஊரோடு பாராட்டி ஒய்பவன் நானாசொல்?
சீராக ஞானத்தைச் சேர்க்குமுன் சிந்தைக்கு
நே(வே)ராக நிற்பவன் நான்!

அன்புடன் தம்பி

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

27/07/2019

மௌனமாய்ப் பயணிப்போம் நூலக ஆலயங்களில்


ஆண்ட்ராய்டும் ஆப்பிளும்
ஆதிக்கம் செலுத்தாமல்
கூகிளும் வாட்சப்பும்
கோலாச்சி நிற்காமல்
தொலைக்காட்சி ஊடகங்கள்
தொந்தரவு புரியாமல்
கைப்பேசி அழைப்புகள்
கழுத்தறுப்பு செய்யாமல்
சில நேரம்
சில நேரம் மட்டும்...
சில நேரமாவது...
......
......
மௌனமாய்ப் பயணிப்போம்
நூலக ஆலயங்களில்

✍️செ.இராசா
(பிள்ளைகளுடன் காரைக்குடி கிளை நூலகத்தில்....)

எச்சில் வடிகிறதே ஏன்?!



உச்சிப் பனையேறி ஊறுகிற கள்ளிறக்கி
பக்குவமாச் செய்த பதநீரைப் பார்த்தாலே
இச்சை மிகுதியிலே ஏங்குகிறக் காளையைப்போல்
எச்சில் வடிகிறதே ஏன்?!

26/07/2019

மறுமலர்ச்சி கண்டாயோ நீ!


மறுமலர்ச்சி என்றகட்சி மாநிலத்தில் கண்டு
மறுமலர்ச்சி என்றாலே மாற்றமெனச் சொல்லி
மறுபடியும் மாறிமாறி வாய்கிழியப் பேசி
மறுமலர்ச்சி கண்டாயோ நீ!

25/07/2019

நேற்றைய மதிப்பு
இன்றைக்கு இல்லை
செய்தித்தாள்களுக்கு
செய்தியைச் சுமந்தவை
கண்டதையும் சுமக்கிறது
தினசரி பத்திரிக்கையாய்
புத்தகமானால் சரஸ்வதி
பணமானால் லெட்சுமி
இரண்டுமே காகிதம்தான்
சின்னத் தோல்விகள் வருவது
பெரிய தோல்விகளைத் தவிர்க்கவே....

24/07/2019

அன்பு(அந்நியோன்யம்)

தலை நரைக்க நரைக்க
கூடிக்கொண்டே போகிறது
#அன்பு(அந்நியோன்யம்)

23/07/2019

#இலங்கை_ஜெயராஜ் ஐயா








அணு அணுவாய் ரசித்தவரை
அருகில் இருந்து பார்க்கையிலே
ஆயிரம் அழுத்த மின்சாரம்
அகத்தின் அடியில் பாய்வதுண்டு!
அப்படி ஒருவரின் சந்திப்பு
எப்போ என்றோ நடப்பதுண்டு!

திருக்குறள் என்னுள் ஊற்றியவர்!
திருவாசகம் யாதெனக் காட்டியவர்!
ஔவை சேக்கிழார் யாவரையும்
அழகாய்த் தமிழால் ஊட்டியவர்!
கம்பனில் முழுதாய்க் கரைந்தவர்!
கம்ப வாரிதியாய் மாறியவர்!

#இலங்கை_ஜெயராஜ் ஐயாவை
இலக்கிய உலகம் கொண்டாடும்
நிகழ்வை அறிந்த மறுகணமே
அகத்தில் ஆயிரம் பேரின்பம்!
கண்ணில் கண்ட அக்கணமே
என்னுள் கோடி உற்சாகம்!

காணொளி மூலம் கண்டவரை
கண்ணை என்னுள் திறந்தவரை
காணும் வாய்ப்பு கிட்டியதும்
கண்ணில் கண்ணீர் முட்டியது!
ஆகா..ஆகா..ஆனந்தம்!!
ஆயுள் முழுமைக்கும் ஆனந்தம்!!

✍️செ. இராசா

(நேற்று புதுக்கோட்டை கம்பன் கழகம் நடத்திய விழாவில் அவரின் அழகிய சொற்பொழிவில் கரைந்த தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று)

22/07/2019

“உ” என்பது உயிருக்கான உலை






என்னதான் இருக்கிறது என்ற
எண்ணம்தான் போடுகிறது
“உ” என்ற முதல் சுழியை..

அப்போது
ஏனோ தெரிவதில்லை
“உ” என்பது
உயிருக்கான உலை என்று

முதல் அனுபவம்
இலவசமாகவே
பரிமாறப்படுகிறது...
உரிமையான உறவுகளால்...

கானல் கணங்கள்
கசந்து தொலைவதாய்
நாக்கு நர்த்தனம் புரிந்தாலும்
உறவு ஊறுகாய்கள்
சுவையை மாற்றும் சூட்சமத்தை
கலைபோல் கற்றுத்தருகிறது..

முதல் மயக்கம்..
முதல் உளறல்..
முதல் வாந்தியென
முதல்”கள்” அனைத்தும்
முன்னேற்றம் அடைந்து
முன்னிலை அடைகிறது...

விழித்துப் பார்க்கையில்...
விலையின்றி தந்த உறவுகள்
வெறுப்பாடு உமிழ்கிறது

“த்தூ” என்று.....

#உயிருக்கு_விலை

20/07/2019

ஆதிமூலனே சோதிரூபனே




ஆதிமூலனே சோதிரூபனே
...............ஆவுடை நாயகா!
நீதிதேவனே வேதஞானனே
................நீருடை மன்னவா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

ஆத்மநாதராய் எம்முள்நிற்கிற
....................அற்புத நாயகா!
ஆற்றலாகியே எம்மையாள்கிற
....................அர்த்தநா ரீசுவரா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

சுத்தபுத்தியில் சித்தனாக்கிடும்
.....................சூட்சமம் சொல்லவா!
செத்தபுத்தியில் வித்தைகாட்டிடும்
.....................சூத்திரம் காட்டவா!

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

19/07/2019

அத்தை மகள் போட்ட காப்பியாக்கும்.




இனிப்பு போடாத காப்பியும்
இனிக்கிறதே....

அத்தை மகள் போட்ட காப்பியாக்கும்..

18/07/2019

நீரோடு நீராக




நீரோடு நீராக நீர்விட்டு நீர்விட்டு
நீராடி நிற்கின்றாய் நீ!

செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!!




காதறுந்து போன நீ
காலுக்கினி வேணாமாம்..
ஊணமுற்றாய் என்றே
உதறிவிட்டான் ஒருவன்.

குப்பையில் கிடந்தாலும்
குப்புறக் கிடந்தாலும்
குணத்தினை உயர்த்திவிட்டால்
குன்றாகி விடலாமென
செருக்காய் இருப்போர்க்கு
செருப்பாய்(ல்) சொன்னாயோ...?!!!

நிலைமாறிப் போகாது நில்!


நிலையில்லா வாழ்வே நிலையென்று நீயும்
நிலையாமை யுண்மை நினைந்து- நிலைமைத்
தலைகீழாய் மாறித் தடுமாறும் போதும்
நிலைமாறிப் போகாது நில்!

✍️செ. இராசா

17/07/2019

கண்டதுமே களிப்புற்றேன்..




கண்டதுமே களிப்புற்றேன்..
கை தொடவே விருப்புற்றேன்..
அழகான மென்சூட்டை
அப்படியே அனுபவித்தேன்..
விரல்களால் கிள்ளியுனை
விழுக்கென்று விழுக வைத்தேன்
என்னுள்ளே நீ கரைய
உன்னை நான் சுவைத்த கதை
அப்பப்பா என் சொல்வேன்?!
ஆனந்தம்.. ஆனந்தம்..

#அல்வா

16/07/2019

பொங்குமின்ப ஊற்று!




முள்வந்து முத்தமிட முந்திவந்த ரத்தமாய்
உள்ளூரப் பொங்குமின்ப ஊற்று!

15/07/2019

படைப்புகள் ஆயிரம் பார்ப்பவர் நூறு
படைப்பைப் படிப்பவர் யார்?!
படைத்தோன் படைத்த படைப்பில் சிறந்த
படைப்பே மனிதப் படைப்பு

தேயத்தேய மணக்கும் சந்தனம்போல்



தேயத்தேய மணக்கும்
சந்தனம்போல்- நீ(ர்)
பாயப்பாய பூக்கும் நந்தனமே!

காயக்காய வருத்தும்
கதிரவன்போல்- நீ
காயமின்றி எரிக்கும் அதிசயமே!

தோண்டத்தோண்ட ஊறும்
கேணியைப்போல்- நீ
தீண்டத்தீண்ட இனிக்கும் நற்கரும்பே!

படிக்கபடிக்க சுவைக்கும்
கவியினைப்போல்- நீ
கடிக்ககடிக்க இனிக்கும் கல்கண்டே!

அறியஅறிய அறியா
அறியாமைபோல்- நீ
அறிந்தும் அறியாத புது இனமே!

தெளியத்தெளிய அருந்தும்
குடிமகன்போல்- நான்
தெளிந்தும் தெளியாத ஆணினமே!

✍️செ. இராசா

குப்பை



குப்பை
*******
“எங்கெங்கு காணினும் குப்பையப்பா?!
ஏனிங்கு இத்தனை குப்பையப்பா?”
என்மகன் இப்படிக் கேட்டவுடன்
என்னுள்ளே இக்கவி தோன்றியது

குப்பை
*******
இயக்கத்தின் கழிவு குப்பை
செயலின் மிச்சம் குப்பை
ஆற்றலின் விரயம் குப்பை
கூட்டலின் மீதம் குப்பை

குப்பை சேமிக்க வேண்டிய ஒன்றல்ல!
குட் பை சொல்ல வேண்டிய ஒன்றே!

இங்கே...
நம்மில்கூட எத்தனை குப்பைகள்?!

உடலில் தள்ளும்
உணவின் சக்கைப் பகுதி
ஒரு வகைக் குப்பை

உறவில் தள்ளும்
உயிரணுவின் கழிவுப் பகுதி
ஒரு வகைக் குப்பை

காற்றில் கலக்கும்
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஒரு வகைக் குப்பை

கண்டதையும் நினைக்கும்
கவலை எண்ணங்கள்
ஒரு வகைக் குப்பை

எதிர்மறையாய்க் கிறுக்கும்
எரிச்சல் பதிவுகள்
ஒரு வகைக் குப்பை

வீட்டுக் குப்பையோ
வயிற்றுக் குப்பையோ
வெளியேறாக் குப்பை ஆபத்தே

கணிப்பொறிக் குப்பையோ
கைப்பேசிக் குப்பையோ
களையாத குப்பையும் ஆபத்தே

தோலோடு வந்த பழமும்
உமியோடு வந்த நெல்லும்
சக்கையோடு வந்த கரும்பும்
இயற்கையாய் வந்த இரட்டைகளே

இவற்றில்
ஒன்றைத் தேவையாக்க
ஒன்று குப்பையாகிறது...
ஒன்றை உருவாக்க
ஒன்று உருக்குலைகிறது...

அப்படித் தேவையானதும்
அப்படி உருவானதும்
பின்னர் மீண்டும் குப்பையாகிறது..

ஆக..
குப்பைகள் தவிர்க்க முடியாததே
ஒரு வகையில் நாமும்
மண்ணில் மக்கப்போகும்
மனிதக் குப்பையே...

இங்கே கேள்வி...

இந்தக் குப்பைகளை
என்ன செய்வது என்பதே?!

வெறும் நெகிழிப் பையை தடைசெய்தால்
அனைத்தும் முடிந்ததா?!
இன்னும் லேய்சாகத் (lays) தொங்கும்
நெகிழிகளை என்ன செய்வது?!

மருத்துவக் குப்பைகளை
எந்த மண்ணில் புதைப்பது?!

இ-குப்பையை
எந்த கடலில் எரிப்பது?!

அணுஉலைக் குப்பையை
எந்த கிரகத்தில் கொட்டுவது?

அதனால் என்ன?!
கொட்டுங்கள் இங்கேயே கொட்டுங்கள்
கொட்டிக் கொண்டே இருங்கள்....

இயற்கை ஒரு நாள்
எரிமலையாய் கொட்டும்
பூகம்பமாய்ப் புரட்டும்
சுனாமியாய் சுருட்டும்...

அப்போது
நீ...நான்...
அது...இது...
அவை...இவை....என
அத்தனைக் குப்பைகளையும்
அப்படியே மக்க வைக்கும்...
அதுவரையும் அப்படியே கொட்டுங்கள்

13/07/2019

மது இல்லாத் தமிழகம்


சிந்தையில் சிறந்தவர்கள்
விந்தையின் வித்தகர்கள்
எங்கும் நிரம்பியுள்ள
எந்தமிழ் நாட்டினிலே
தெள்ளுத்தமிழ்ப் புலவனாம்
வள்ளுவன் சொன்னதுபோல்
கள்ளினைத் தள்ளிவைத்தே
நல்லோராய் வாழ்கின்றார்!!

கள்ளில்லா காரணத்தால்
சொல்லிலே பிழையில்லை!
பிழையில்லா காரணத்தால்
பிரச்சனையும் இங்கில்லை!
சட்ட ஒழுங்கு மீறலில்லை!
கற்புநெறி தவறு இல்லை!
அத்தனையும் இல்லாததால்
கட்சிபேதம் இங்கில்லை!

மது இல்லா மாநிலத்தில்
மதி குறைய வாய்ப்பில்லை..
மதி குறையா காரணத்தால்
மது இங்கே நுழையவில்லை...

இப்படிநான் எண்ணுகையில்
கட்டிலிலே விழுந்துவிட்டேன்..
குடிமகன் நான் விழுந்ததிலே
குடிபற்றி தெளிவுற்றேன்..

ஆம்..

கெட்ட சரக்கடித்தால்
கெட்ட கனவே வருமென்று...

12/07/2019

செங்கிடாய்க் கருப்பர் துணை

எங்கிலும் வெற்றியை ஈட்டிட வேண்டியே
எங்குலங் காக்கும் இறைவனை- செங்கிடாய்
தெய்வத்தை வந்து தொழுதிட; வந்திடும்
மெய்யென்ற ஞான முவந்து!

#அம்மா_வச்ச_மீன்_குழம்பு


அம்மா நான் வர்ரேன்னு
அலைபேசி தகவல் வர
தலைகால் புரியாமல்
தாய்மனசு பட்டபாடு
வச்ச மீன் குழம்பில்
வாசமாய் வந்துடுச்சு..

கருத்த புளி கரைச்சு
கண்மாய் மீனு குழம்பு வச்சு
சட்டியில உள்ளதெல்லாம்
தட்டுமேல வைக்கையில
ஆத்தா கண்ணோரம்
ஆறாய்ப் பெருகிடுச்சு..

வறுத்த மீனெடுத்து
வாஞ்சையோடு வைக்கையில
இதையும் சாப்பிடுன்னு
இன்னும்...இன்னும்..போடயில
வருசம் முழுசுக்கும்
வயிறு(ம்) நிரம்பிடுச்சு...

✍️செ. இராசா

11/07/2019

அழைப்பார் ஏதுமின்றி//
அநாதையாய்த் திரிகிறது//
இக்கால காகங்கள்

கரைவதை நிறுத்தவில்லை... காகம்

கொட்டிக் கொடுத்தாலும்//
கரைவதை நிறுத்தவில்லை//
காகம்

#மணல்_கடிகாரம்



இன்று ஓரு பயணத்தில் எந்தப் புத்தகம் படிக்கலாம் என்று யோசித்தபோது, கவிஞர் பனிப்பூக்கள் பார்த்திபன் அனுப்பிய “மணல் கடிகாரம்” என்ற புத்தகம் ஞாபகம் வந்தது. மிகவும் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன், ஆனால் படிக்கப்படிக்க மெய்சிலிர்த்து உறைந்து போனேன்.

அணிந்துரை “பா. விஜய்” எழுதி இருந்தார்கள். தயவுகூர்ந்து மன்னிக்கவேண்டும்; பொதுவாக பெரிய கவிஞர்கள் ஏதோ பெயருக்குத்தான் எழுதி இருப்பார்கள் என்றே நினைத்துப் படித்தேன். ஆனால், என் நினைப்பை முற்றிலும் பொய்யாக்கி விட்டார்கள். அத்தனை பெரிய நல்ல உள்ளங்களும், கவிஞரின் மெய்யான வரிகளுக்கு மெய்யான உரை எழுதியுள்ளார்கள்.

அனைத்து கவிதைகளும் மிகஅற்புதமாக இருந்தாலும், அதில் நான் மிகவும் ரசித்த கவி வரிகளை மட்டும் இங்கேச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்....

1. மரத்தின் குச்சிகள்
மரத்திற்கேத் திரும்புகிறது
பறவையின் கூடு.....அருமையான கோணத்தில் அணுகிய பார்வை!

2. கொத்துவதற்கு மரங்களின்றி
தன் சிறகுகளைக் கொத்திக்கொள்கிறது
மரங்கொத்தி........மரத்தின் பெருமையை இதைவிட எப்படி சொல்ல முடியும்?!

3. இழுத்து மூடிய ஸ்டெர்லைட் ஆலையின் பூட்டில் தொங்குகிறது
இறந்தவர்களின் ஆன்மாக்கள்.......வேதனையின் உச்சமான வரிகள் இவை.

4. எதிர்வீட்டுக் குழந்தைக்கு
எப்படிச் சொல்வேன்
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று......
உண்மை.....ஆவணக்கொலைகள் இன்னும் நடக்கும் இந்த சமூகத்தில் சாதிகள் இன்னும் இருக்கிறதே?!!

5. பசியை ஆகாயத்தில்
பறக்க விடுகிறான்
பலூன் வியாபாரி.......பசியின் சுவாசத்தில் பறக்க விட்ட பலூன்கள் விற்காவிடில், அவன் பசி எப்படி அடங்கும்?!!...என்ன ஒரு பார்வை?!!

6. ரேசன் அட்டையில்
பொம்மையின் பெயரை
இணைக்கச் சொல்லி
அடம்பிடிக்கிறது குழந்தை.....கவிஞர் குழந்தையாக மாறாவிடில் எப்படி இப்படைப்பு வரும்?!! அருமை

7. திருநங்கைக் கவிதையில் இந்தச் சமூகத்திற்கு சரியான சாட்டையடி..,ஆம் “நீங்கள் உருவாகத் தேவையான அங்கம்தானே அங்கும்” பொளேர் என அறைகிறார் கவிஞர்.

8. ரெட்ஓயின் நிரம்பி விழியும் மதுக்கோப்பை ரோஜா....என்ன ஒரு கலைநயப் பார்வை!

9. வயது என்கிறக் கவிதையில் கவிஞரின் பயணம் தன் வயதையும் தாண்டிப் பயணிக்கிறது...அது “அடித்த டையில் மறைமுகமாய்த் தெரிகிறது வெள்ளை மீசை” என!

10. கடலில் மிதக்கும் சிலந்திவலை “ஆக்டோபஸ்” அருமையான ஒப்பீடு.

11. ஒரு நிமிட சுதந்திரத்தின் விலை பத்து ரூபாய் கூண்டுக்கிளிக்கு....ஆகா ஆகா செம்ம!

12. ஒரு கவிதையில் விழுந்த பூவை புயல் காற்று ரசிக்கிறது. அதுவும் புத்தரின் ஞான நிலையில்....!

13. இன்று அனைவரும் ஆழ்மயக்க நிலையில்...காரணம் ஆண்ட்ராய்டு என உண்மையைத் தெறிக்க விடுகிறார் கவிஞர்.

14. குயவன் இரு பானைகள் படைத்துவிட்டு அடுத்த பானை செய்ய கிளம்பிவிட்டான். ஆனால் ஒரு கூட்டம் எப்பானை உயர்வு என்று அடித்துக்கொள்கிறதாம். சே..எவ்வளவு உயர்ந்த கருத்தை எவ்வளவு எளிதாகச் சொல்லி உள்ளார் என நான் வியந்து வியந்து உருகிய கவிதை இது.

15. “ஒற்றை இலக்கை// இனவிருத்தி செய்கிறது// பூஜ்ஜியம்” என்கிற கவிதையில் அசந்துபொனேன். கவியரசர் சொன்ன “பூஜ்ஜியத்துக்குள்ளே ராஜ்ஜியம் செய்து புரியாமல் இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் நீ இறைவன்” என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அதுமட்டுமா?!! இந்த உலகமே சூனியம் அல்லது சுத்தவெளியில் இருந்துதானே வந்தது.

16. ராணுவ வீரன் பற்றிய கவிதையில் “நிராயுதபாணியான என்னை நீ என் நினைவுகளால் சுடுகின்றாய்” என்று வள்ளுவரை நெஞ்சோடு புலக்க வைக்கிறார் கவிஞர்.

17. மாங்கல்யம் ஏறும் வரை தன் முன்னால் காதலியாக மாறப்போகும் தேவதையை ரசிக்கும் கவிதை நிதர்சனம்.

18. காதலித்தால் என்ன என்ன நடக்கும் என எழுதியதில் வைரமுத்துவையேத் தாண்டிவிட்டார் என்றால் அது மிகையல்ல.

19. ஆற்றில் மீன்பிடித்த சமுகம், ஆற்று மணலில் நண்டுபிடுத்து, ஆற்றின் சுவடுகளைத் தேடுகிறது.....உண்மை தானே?!!

20. யாதுமாகி என்ற கவிதையில் “எங்கும் நிறைந்தவனே கவிஞன்” என மிகத் தெளிவான வரிகளில் தன்னைக் காட்டிவிடுகிறார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

உண்மையில் இந்த “மணல் கடிகாரம்” என்னைப் புரட்டிய ஞானக் கடிகாரம்......அருமையான புத்தகம். கவிஞர் பனிப்பூக்கள் பார்த்திபன் மிகச் சிறந்த கவிஞராகத் தன் படைப்பைத் தந்துள்ளார்கள். மேலும் மேலும் அவர் படைப்புகள் தொடர வேண்டும் என வேண்டி விடைபெறுகின்றேன்.

#மணல்_கடிகாரம்
என் மமதை அழித்த கடிகாரம்
என் காலத்தை உணர்த்திய கடிகாரம்
என் மனதை வென்ற கடிகாரம்
நீங்களும் படியுங்கள்
உங்களையும் புரட்டும்
இது சத்தியம்......

இப்படிக்கு

செ. இராசா

ஊட்டி


இருபது வருடங்களுக்கு முன்
இங்கே வந்தது முதல்முறை...
எல்லையில்லா துள்ளல் நிறைந்த
கல்லூரிப் பருவமது...


பத்து வருடங்களுக்கு முன்
கட்டியவளோடு வந்தது இரண்டாம்முறை
எல்லையில்லா ஆர்வம் மிகுந்த
இளைமைப் பருவமது...

ஊட்டி வளர்த்த பிள்ளைகளோடு
ஊட்டி வந்தது மூன்றாம்முறை
எல்லையில்லா பொறுப்பு மிகுந்த
பிள்ளைக்குட்டி பருவமிது...

ஒவ்வொரு இடமும்
ஒவ்வொரு தருணமும்
ஒவ்வொரு பருவமும்
ஒவ்வொரு காலமும்
ஒவ்வொரு நினைவுகளாய்...
ஒவ்வொரு நினைவுகளும்
ஒவ்வொரு பதிவுகளாய்...
ஒவ்வொரு பதிவுகளும்
ஒவ்வொரு கவிதைகளாய்...

நன்றி இறைவா🙏🙏🙏

08/07/2019

வண்டுகளாய் மாறினால்....



இதழ்களின் மத்தியில்
இத்தனை இன்பமா?!!
வண்டுகளாய் மாறினால்
வாசனை புரியும்...

தடைபட்ட ஆசைகள் அத்தனையும்

தடைபட்ட ஆசைகள் அத்தனையும்
தாண்டி வந்தால் சினமாகும்!
அடைபட்ட சினங்கள் அத்தனையும்
அழுத்தம் பெற்றால் பகையாகும்!

பகையுற்ற பதிவுகள் அத்தனையும்
பலநாள் பொதிந்தால் வஞ்சமாகும்!
பொதிந்த வஞ்சங்கள் அத்தனையும்
பொறுமையை இழந்தால் போராகும்!

ஆசையை சரியாய்ச் சீரமைத்தால்
அத்தனைப் பகையையும் தவிர்த்திடலாம்!
சினத்தை முறையாய் அறுத்துவிட்டால்
மனத்தை மகிழ்வாய் வைத்திடலாம்!

✍️செ. இராசா

07/07/2019

வெக்காளியம்மன்

வெக்காளியம்மன் துணை
***********************
அகிலத்து நாயகியுன்
...............அன்பாலே தானே
அடியேனும் இன்றைக்கோர்
...............ஆளாக உள்ளேன்
உறையூரில் வாழ்கின்ற
..............உன்னாலே தானே
குறையேது மில்லாது
.............கோலோச்சு கின்றேன்!

06/07/2019

பாறையிலும் பூபூக்கும்



பாறையிலும் பூபூக்கும் பாலையிலும் நீரூரும்
பாதையினை மாற்றாதே போ!

#இந்தா_வந்துக்கிட்டே_இருக்கேன்

(தோகா-கொழும்பு-திருச்சிராப்பள்ளி)

04/07/2019

தந்தையின் தந்தையார்----வெண்பா




#குறள்_67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

#கலைஞர்_உரை:

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

#செஇராசா_வெண்பா
**********************
தந்தையின் தந்தையார் தந்தைக்குத் தந்ததை
தந்தையார் தம்மிடம் தந்தது- விந்தையா!
தந்தையின் தந்தையார் தந்தது போலவே
தந்தையும் தந்தார் இது!

* திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் - க.அன்பழகன் அறிவிப்பு

03/07/2019

உண்மையில் யார்தான் சைவர்கள்?


உயிர்க்கொலை புரியா
உணவினைப் புசித்து
உயிரினை வளர்க்கிற மாண்பு- சைவம்
உயர்வாய்ப் போற்றிடும் நோன்பு!

உயிர்க்கொலை இல்லா
உணவுகள் என்பது
உலகில் இங்கே சாத்தியமா- சைவ
உணவுகள் ஆத்திக பாத்தியமா?!

ஆத்திக நாத்திக
கோத்திர சூத்திர
அறிவினை எல்லாம் விடுவோம்- புதிய
அறிவியல் கொஞ்சம் தொடுவோம்!

கோடிகோடி அணுக்களிலே
ஓட்டத்தில் ஒன்றைப் பிழைக்கவைத்து
மற்றதை மாய்க்கும் மனிதர்களே
எப்படி நீங்கள் சைவர்கள்?!

தாவர உயிர்களைக் கொன்றுவிட்டு
தானிய விதைகளைத் தின்றுவிட்டு
தன்னை சைவமாய் நினைப்பவரே..
எங்ஙனம் நீங்கள் சைவர்கள்?!

இட்லி தோசையை ருசிக்க வைக்க
இறக்கிற பாக்டீரியா எத்தனையோ?
தயிரை மோரைப் புளிக்க வைக்க
சாகிற பாக்டீரியா எத்தனையோ?

பூச்சியை உண்கிற தாவரமும்
பூமியில் இங்கே பல உண்டு...
பிள்ளைக் கறியைக் கேட்டதற்கும்
தில்லைக் கதையில் சான்றுண்டு

உண்மையில் யார்தான் சைவர்கள்?
உண்மையை அறிந்தால் சொல்லுங்கள்!!!

✍️செ. இராசா

(புண்படுத்துவதற்காக அல்ல, புரிதலுக்காக மட்டுமே)

02/07/2019

வாழ்க்கை என்கிற கிரிக்கெட்டில்


வாழ்க்கை என்கிற கிரிக்கெட்டில்
வருகிறப் பிரச்சனைப் பந்துகளை
கணித்து ஆடிடும் மாந்தர்களே
கடைசியில் வெற்றியை ருசிக்கின்றார்