குப்பை
*******
“எங்கெங்கு காணினும் குப்பையப்பா?!
ஏனிங்கு இத்தனை குப்பையப்பா?”
என்மகன் இப்படிக் கேட்டவுடன்
என்னுள்ளே இக்கவி தோன்றியது
குப்பை
*******
இயக்கத்தின் கழிவு குப்பை
செயலின் மிச்சம் குப்பை
ஆற்றலின் விரயம் குப்பை
கூட்டலின் மீதம் குப்பை
குப்பை சேமிக்க வேண்டிய ஒன்றல்ல!
குட் பை சொல்ல வேண்டிய ஒன்றே!
இங்கே...
நம்மில்கூட எத்தனை குப்பைகள்?!
உடலில் தள்ளும்
உணவின் சக்கைப் பகுதி
ஒரு வகைக் குப்பை
உறவில் தள்ளும்
உயிரணுவின் கழிவுப் பகுதி
ஒரு வகைக் குப்பை
காற்றில் கலக்கும்
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஒரு வகைக் குப்பை
கண்டதையும் நினைக்கும்
கவலை எண்ணங்கள்
ஒரு வகைக் குப்பை
எதிர்மறையாய்க் கிறுக்கும்
எரிச்சல் பதிவுகள்
ஒரு வகைக் குப்பை
வீட்டுக் குப்பையோ
வயிற்றுக் குப்பையோ
வெளியேறாக் குப்பை ஆபத்தே
கணிப்பொறிக் குப்பையோ
கைப்பேசிக் குப்பையோ
களையாத குப்பையும் ஆபத்தே
தோலோடு வந்த பழமும்
உமியோடு வந்த நெல்லும்
சக்கையோடு வந்த கரும்பும்
இயற்கையாய் வந்த இரட்டைகளே
இவற்றில்
ஒன்றைத் தேவையாக்க
ஒன்று குப்பையாகிறது...
ஒன்றை உருவாக்க
ஒன்று உருக்குலைகிறது...
அப்படித் தேவையானதும்
அப்படி உருவானதும்
பின்னர் மீண்டும் குப்பையாகிறது..
ஆக..
குப்பைகள் தவிர்க்க முடியாததே
ஒரு வகையில் நாமும்
மண்ணில் மக்கப்போகும்
மனிதக் குப்பையே...
இங்கே கேள்வி...
இந்தக் குப்பைகளை
என்ன செய்வது என்பதே?!
வெறும் நெகிழிப் பையை தடைசெய்தால்
அனைத்தும் முடிந்ததா?!
இன்னும் லேய்சாகத் (lays) தொங்கும்
நெகிழிகளை என்ன செய்வது?!
மருத்துவக் குப்பைகளை
எந்த மண்ணில் புதைப்பது?!
இ-குப்பையை
எந்த கடலில் எரிப்பது?!
அணுஉலைக் குப்பையை
எந்த கிரகத்தில் கொட்டுவது?
அதனால் என்ன?!
கொட்டுங்கள் இங்கேயே கொட்டுங்கள்
கொட்டிக் கொண்டே இருங்கள்....
இயற்கை ஒரு நாள்
எரிமலையாய் கொட்டும்
பூகம்பமாய்ப் புரட்டும்
சுனாமியாய் சுருட்டும்...
அப்போது
நீ...நான்...
அது...இது...
அவை...இவை....என
அத்தனைக் குப்பைகளையும்
அப்படியே மக்க வைக்கும்...
அதுவரையும் அப்படியே கொட்டுங்கள்
No comments:
Post a Comment