எளியவன் ஒருவன் கைகட்டி நின்றால்
எலியென அவனை அலட்சியம் செய்து
வலிகளைத் தருகிற அறிவிலிக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!
குறைவிலா செல்வம் தன்னிடம் இருந்தும்
நிறைவிலா மனதுடன் மேலும் சேர்த்து
செலவுகள் செய்யாக் கஞ்சனுக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!
கல்வியை இளமையில் ஏளனம் செய்து
கல்லா மனிதராய் காலத்தைக் கழித்து
கல்லாய் இருக்கும் குருடருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!
கள்ளினை நாளும் விரும்பிச் சுவைத்து
களிப்புடன் போதையில் தன்னை மறந்து
காலத்தைப் போக்கும் மூடருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!
ஆட்சியை சூழ்ச்சியால் தன்வசம் செய்து
சாட்சிகள் இன்றியே தவறுகள் செய்து
காட்சியை மாற்றிய கயவருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2019022691749970/
No comments:
Post a Comment