19/07/2017

தீர்வு உண்டா?/ (மணல் பிரச்சினைக்கு)



கட்டுமானத் தேவைக்குதான்
மணலும் கிடைக்கவில்லை!
கமுக்கமாத்தான் நடக்குதுங்க
மணலும் அங்கே கொள்ளை!


ஆற்று மணல் இல்லையினா
வீடு எப்படி உயரும்?
ஆற்றில் மணலே இல்லையினா
ஆறு எப்படி உருளும்?

ஒரு லோடு மணலின் விலை
ஒரு பவுனு காசாம்!
பல லோடு மணலெடுத்தால்
பாயும் ஆறு தரிசாம்!

பிரச்சனைகள் இரண்டுக்குமே
மணலே பெரிய தொல்லை!
அரசாங்கம் கையிலதான்
அதுக்குத்தீர்வு இல்லை!

செட்டி நாடு வீடுகட்ட
மணலே தேவை இல்லை!
நம்ம நாட்டுத் தொழில்நுட்பம்
நாம காக்கவில்லை!

வெள்ளைக்காரன் தொழில்நுட்பம்
நமக்கு எதுக்கு வேணும்!
நம்ம ஊரு தொழில்நுட்பம்
நமக்கு கிடைச்சால் போதும்!

கட்டிடக்கலையில் நாமதானே
தலைநிமிர்ந்து நின்னோம்!
தரணிபுகழ் கோவில்கட்டி
தமிழனென்று சொன்னோம்!

நம்மூரு மண்ணெடுத்தால்
நமக்கு மணலும் வேணாம்!
தோண்டி வச்ச குழியிலேயே
தண்ணீர் விழும் தானா!

மணலில்லாத வீடு கட்ட
மறுபடியும் முயல்வோம்!
மாற்றுவழி அறிந்திடவே
மதியை நாமும் குடைவோம்!

மாத்தி யோசிப்போம்......

செ. இராசா, கட்டிடப் பொறியாளர்.

No comments: