29/01/2017

சாதியம் பேசும் வீணர்களே!



சாதியம் பேசும் வீணர்களே! நீர்
சாக்கடைக் குழியில் வீழ்ந்தவரே!

சாதனையென்றே சொல்லி சொல்லி! நீர்
போதனை பலவாய் செய்கின்றீர்

உயர்வு தாழ்வு எண்ணங்களால்! நீர்
உலகைப் பிரித்தே பார்க்கின்றீர்

மனிதனை மனிதன் ஆண்டிடவா? இந்த
மதமும் சாதியும் தோன்றியது!

மனிதம் தளைத்து ஓங்கிடவே! நல்
மனத்தில் வெறிகளை நீக்கிடுவீர்

சாதிய சங்கம் தேவையெனில்! நம்
தமிழை சாதியாய் மாற்றிடுவோம்

வேதம் வகுத்த சாத்திரங்கள்! அது
வேதனை தந்தால் நீக்கிடுவோம்

பிளவைப் புதிதாய் போடாமல்! நல்ல
பிணைப்பைத் தமிழால் ஆக்கிடுவோம்

வாழ்க தமிழ்!

✍️ செ. இராசமாணிக்கம்

உண்மை எதுவெனத் தெரியாமல்


உண்மை எதுவெனத் தெரியாமல்
உழல்வோர் பலராய் உள்ளனரே!

துன்பம் நீங்கிய நிகழ்வினையே
இன்பம் என்றே நினைக்கின்றார்!

உள்ளம் மகிழ்ந்திட ஆசைகொண்டு
பள்ளம் படுகுழி வீழ்கின்றார்!

மோசம் போவோம் என்றறிந்தும்
வேசம் கலைக்கவே மறுக்கின்றார்!

என்போல் சிறந்தவர் யாரென்றே
தன்போல் அவரே பேசுகின்றார்!

ஆசை வெகுளி காமம் தனில்
ஆதிக்கம் கொண்டே ஆள்கின்றார்!

இல்லறம் நல்லறம் என்றறிந்தும்
தன்னறம் அதுவாய் மாற்றாதார்!

மெய்ப்பொருள் அதனை அறியாமல்
பொய்ப்பொருள் சொல்லித் திரிகின்றார்!

எத்தனை கோடி இன்பமுண்டு !
எங்கும் இறைவன் சாயலுண்டு!

அன்பே சிவமாய் வாழ்ந்திடுவோம்!
அறம் வழிப் பொருளில் இன்புறுவோம்!

உண்மை இதுவெனத் தெரிந்தேநாம்!
உள்ளம் உயர்வுற வாழ்ந்திடுவோம்!


✍️ செ. இராசமாணிக்கம்

28/01/2017

ராஜா கவி ராஜா


தா கவி என்று என்னிடம் நீ
புது கவி ஒன்று கேட்டாயே
பல கவி பாடியவர் உலகினிலே
என் கவி பொடியென நானறிவேன்
ராஜ கவி யாய் வாழ்ந்து வந்த
மகா கவி பாரதி இன்றிருந்தால்
என் கவி(தா)த் திறமை வளர்த்திடவே
தனி கவி ஒன்றை கேட்டிடுவேன்
பொதுக் கவி இயற்றிய வேந்தனிடம்
சுயக் கவி நானும் கேட்டதற்கு
தமிழ் கவி உலகின் கால்களிலே
ராஜா கவி(தாவாய்) நான் வீழ்ந்திடுவேன்

✍️ செ. இராசமாணிக்கம் கவிதா

24/01/2017

அரசியல் வாதிகளே


அரசியல் வாதிகளே
அரசியல் வாதிகளே
அரசின் இயல்பறியா
அரசியல் வி'யாதிகளே!

அறவழிப் போராட்டத்தின்
அதிர்வலை அகலம் கண்டு
உணர்வலைகள் நின்றுபோக
உறைஞ்சுதான் போனீங்க!

மக்களின் மறதிநோயும்
சாதீய தீச்செடியும்
மறைந்திடப் பார்த்ததுமே
மகிழ்ந்திடவும் மறந்தீங்க!

போராட்டம் செய்தவன
பாராட்டிப் பேசியே
சதுரங்க வேட்டையைத்தான்
சரியாத்தான் செஞ்சீங்க!

அதிகார அடக்குமுறையை
கட்டவிழ்த்து விட்டுப்புட்டு
கட்டுக்கட்டா பலபொய்களை
கதைச்சுட்டே இருக்கீங்க!

பல்லாக்கு தூக்கியே
பழகிப்போனஅடிமைகளே
பகுத்தறிவு என்னவென்று
படிக்காத பதருகளே!

அரசியல் வாதிகளே
அரசியல் வாதிகளே
அரசின் இயல்பறியா
அரசியல் வி'யாதிகளே!

19/01/2017

அறவழியில போராடி



அறவழியில போராடி
அகிலத்தையே அதிரவைச்ச
அண்டத்தையே மிரளவைச்ச
அனைவருக்கும் புரியவைச்ச
அடுக்கடுக்காக அளந்துவிட்ட
அரசியல் அடிமைகள
அடிக்காம அடிச்சுப்புட்ட
அடிவயிர கலங்கவச்ச

ஊரெல்லாம் ஒன்னுகூடி பெருந்
தேரெல்லாம் இலுத்தவன
பாரல்லாம் கேக்க வைச்ச
யாருடா இவங்கன்னு

தமிழனோட அடையாளம்
தலைவணங்காத் தன்மானம்
தனியாத்தான் தெரியுதிங்கே
தரணியல்லாம் அதிருதிங்கே

முறிக்கிவிட்ட மீசையோட
முரட்டுக்காளை வேகத்தோட
மிரட்டும் அனல் பார்வையோட
மளமளவெனக் கூட்டத்தோட
தகதகவெனக் கோபத்தோட
அலைகடலென வந்துநீயும்
அடிமனச குளிரவைச்ச
அறவழியில போராடி




மறத்தமிழன் மாண்பறியார்
மடத்தனமாய் பேசுகின்றார்

மாட்டிற்கு வதை ஏன் என்றே
மதிகெட்டே வினவுகிறார்

எம் குழந்தை போலதனை
எம் நெஞ்சில் வைத்ததனை

கொஞ்சி கொஞ்சி பாத்துக்கிட்ட
கொழு கொழுவென வளர்த்துவிட்ட

எங்களோட பிள்ளைகள
ஏறுதழுவி விளையாட

எவங்கிட்ட கேக்கனம்னு
ஏதிலார் நினைக்கின்றார்

தமிழனென்ற ஒரு சொல்லைத்
தரணியிலே போற்றிடவே

முடியாதென நீ மறுத்தாய் இனி
முழுநேரம் நீ தவிப்பாய்

18/01/2017

குடங்குடமா குடிச்சபின்னே

குடங்குடமா குடிச்சபின்னே
குடிமறக்க மாலைபோட்டு
குடிக்காமத்தான் இருந்தீக

மலையிரங்கி வந்ததுமே உங்க
மதிகோணல் ஆயிடுச்சு எங்க
மனசு உடைஞ்சி போயிடுச்சி


குலத்தொழிலை தொலைச்சீக
குடும்பத்தையும் மறந்தீக
குணங்கெட்டு திரிஞ்சீக

குலங்கெட்டு போனபின்னும்
குடிக்கிறது குத்தமான்னு
கூசாமக் கேப்பீக

யாருபோட்ட சாபமோன்னு
ஊருக்குள்ள ஒரேப்பேச்சு
உமக்கேனோ தெரியாமப் போச்சு

கருவுல வந்த மகன்
தெருவில கெடக்கிறான்னு
ஊரில சொல்லும்போது

உருக்குலஞ்சு போயிட்டாக
உயிரப் பாதி விட்டுட்டாக
உன்னைப் பெத்துப் போட்டவுக

பில்லி சூனியம் இருக்குமோன்னு
பூசாரி வாக்கு கேக்க
போயிக்கிட்டே இருக்குறாக

காட்சியேதும் மாறவில்லை
காலமின்னும் கூடவில்லை
காத்துமட்டும் கிடக்கிறாக

மீண்டும் மீண்டு வருவீகன்னு

16/01/2017

தவறான புரிதல்


நான் யாரென நானே அறியலையே
நான் யாரென நீயுரைத்தாய் அதுசரியோ?

நின்கூற்றே மெய்யேயென
நீ கதைப்பாய் அதுசரியோ?

உண்மையதை உணர்ந்தாலே
உதிர்ப்பாயோ அனல் வார்த்தை?

நீர் செல்லும் இடமெல்லாம்
நிறம் மாறும் தன்மையென
நீ யெனை நினைத்தாயோ?!
நீரின் குணம் என்னவென்று
நீதானதை யறியலையோ?!

உச்சியிலே உதயமாகி
ஒருவழியாய் ஓடிபின்னே
பலவழியாய் பாதைமாறி
பள்ளதிலே தடுமாறி
படுகுழுயில் வீழ்ந்தாலும்
பக்குவமாயதைத் தாண்டி அப்
பரந்தாமன் கருணை ஆழிப்
பாதம் தொடும் நாழி தனை
பலநாளாய் எண்ணி எண்ணி
பக்தியோடு வேண்டுகின்றேன்
நான் அறிவேன் யாமவன்
நாய் அடியேன் என

எமையறியும் எண்ணம் விட்டு
உமையறியும் உள்ளம் கொண்டால்
உண்மைதனை உணர்ந்திடுவாய்
உயர்வழியில் சென்றிடுவாய்

07/01/2017

மதுவென்ற அரக்கன்

மதுவென்ற அரக்கன்தனை
மகிழ்வுடனே நட்பு கொண்டு
மதிகெட்டுத் திரியும் மானுடா...

வந்த பாதைதனை மறந்து
வகுத்த பாதையதை மறந்து
வாக்குகள் தடம் மாறி
வந்தவர்கள் வெறுத்தோடி
வசதிகள் கரைந்தோடி பல
வருடங்கள் உருண்டோடி


எதற்கடா இவ்வாழ்க்கையென
பதமாய் பலர்கேட்டும் உன்னுள்
ஏனடா தோன்றவில்லை அது
ஏளன வார்த்தையென?

என்றும் கெடா வாழ்க்கைதனை
என்றுமே நீ வாழ்ந்ததில்லை
வாழும் வழி அதுவேயென
வார்த்தைகள் பல நீ உரைத்தாய்

கரம் பிடித்தவளுனைச் சீயென
காரி யுமிழ்ந்தாலும் அதன்
காரணமிதுவெனத் தெரிந்தாலும்
காலனின் வருகைக்கு
காத்திடுமுதிர் கிழவனெனக்
காலத்தை கழிக்கிறாய்
அய்யகோ!!!

ஒருவனுக்கு உணவு இல்லையேல்
அகிலத்தை அழித்திட ஆணையிட்ட
அந்த ஆண்மகன்இன்றிருந்தால்
பாடிடுவான் பலகவிகள்
பலித்திடுவான் இத்தேசம்தனை

அரக்கர்தம் கூட்டத்தைக்
கழுவேற்றிக் கொல்லாத
கடமை மறந்த
அரசன்தனை அழித்திடுவான்
 உனைக்கொல்லும் ஒருநிமிடமுன்னே.....


---செ. இராசமாணிக்கம்