07/01/2017

மதுவென்ற அரக்கன்

மதுவென்ற அரக்கன்தனை
மகிழ்வுடனே நட்பு கொண்டு
மதிகெட்டுத் திரியும் மானுடா...

வந்த பாதைதனை மறந்து
வகுத்த பாதையதை மறந்து
வாக்குகள் தடம் மாறி
வந்தவர்கள் வெறுத்தோடி
வசதிகள் கரைந்தோடி பல
வருடங்கள் உருண்டோடி


எதற்கடா இவ்வாழ்க்கையென
பதமாய் பலர்கேட்டும் உன்னுள்
ஏனடா தோன்றவில்லை அது
ஏளன வார்த்தையென?

என்றும் கெடா வாழ்க்கைதனை
என்றுமே நீ வாழ்ந்ததில்லை
வாழும் வழி அதுவேயென
வார்த்தைகள் பல நீ உரைத்தாய்

கரம் பிடித்தவளுனைச் சீயென
காரி யுமிழ்ந்தாலும் அதன்
காரணமிதுவெனத் தெரிந்தாலும்
காலனின் வருகைக்கு
காத்திடுமுதிர் கிழவனெனக்
காலத்தை கழிக்கிறாய்
அய்யகோ!!!

ஒருவனுக்கு உணவு இல்லையேல்
அகிலத்தை அழித்திட ஆணையிட்ட
அந்த ஆண்மகன்இன்றிருந்தால்
பாடிடுவான் பலகவிகள்
பலித்திடுவான் இத்தேசம்தனை

அரக்கர்தம் கூட்டத்தைக்
கழுவேற்றிக் கொல்லாத
கடமை மறந்த
அரசன்தனை அழித்திடுவான்
 உனைக்கொல்லும் ஒருநிமிடமுன்னே.....


---செ. இராசமாணிக்கம்

No comments: