06/06/2022

வாய்ப்பு வெண்பாக்கள்

கிட்டிய வாய்ப்பினைக் கெட்டியாய்ப் பற்றித்தான்
எட்டிட வேண்டும் இலக்கு
(1)
 
எளிதாகக் கிட்டுவதை யாதென்று காணார்
ஒளிரும்முன் போகின்றார் ஓய்ந்து
(2)
 
காலமும் நேரமும் கைகூடும் வேளையில்
ஞாலத்தில் கிட்டுமோர் வாய்ப்பு
(3)
 
தலைகால் புரியாமல் தவ்வுகின்ற மாந்தர்
நிலைமாறி வீழ்வார் நிலம்
(4)
 
ஏமாற்றி ஏமாற்றி எங்கேயார் போனாலும்
தாமாக வீழ்வர் தனித்து
(5)
 
திறமைக் குறைவிருந்தும் தேடிவரும் வாய்ப்பில்
திறமையைக் காட்டல் சிறப்பு
(6)
 
நேர்வழியில் செல்வோர்க்கு நேர்கின்ற எத்தடையும்
நீர்த்துதான் போகும் நினை
(7)
 
கிட்டுவது எப்போதும் கிட்டாமல் போகாது
கிட்டுமென எண்ணிக் கிழம்பு
(8.)
 
அதோஇதோ வென்றே அலைக்கழிக்கும் மூடர்
அதோகதி ஆவார் விடு
(9)
 
வாய்ப்புகள் தந்துன்னை வாழ்த்திடும் பேர்களை
வாய்ப்புள்ள போதெல்லாம் வாழ்த்து
(10)
 
✍️செ. இராசா

ஒரே தூசி
குளிரவே இல்லை
குளிரூட்டி

05/06/2022

கல்வி படும்பாடு ------------ கொள்ளை

 


தொடக்கப் பள்ளியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தமிழ்நாட்டின் தலைசிறந்த ஒரு கல்லூரியில் தற்சமயம் B.Ed. படித்து வருகிறார். அந்தக் கல்லூரியில் காலம் காலமாக நடக்கும் ஒரு கொள்ளை சம்பவம்பற்றி நண்பர் பகிர்ந்து கொண்டார். அதாவது இரண்டு வருடப்படிப்பான B.Edன் செய்முறை அறிக்கைகள் சம்பந்தமான தாள்கள் ஒவ்வொன்றிற்கும் 10,000 ரூபாய் கேட்கின்றார்களாம். நண்பரோ இதுவரையிலும் எந்த லஞ்சமும் கொடுக்காதவர், அவர் முடியாதென்று மறுக்கவே, உடன் பயிலும் மாணவர்களே ஏன் வம்பென்று பேசுகிறார்களாம். நீங்கள் பணம் கேட்டால் நான் இதை வெளிப்படையாக ஆதாரங்களுடன் பகிர்வேன் என்று கூறவே, அவர்கள் இப்போது அடக்கி வாசிக்கின்றார்களாம். தமிழ்நாட்டின் வள்ளல் பரம்பரையைச் சேர்ந்தவரின் கல்லூரியிலேயே இந்நிலையென்றால், மற்ற கல்லூரிகள் எப்படியோ?!
 
எனக்கும் இதேபோல் ஒரு சம்பவம், சிறுவயதில் 9ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பிற்குப் போக முற்பட்டபோது ஏற்பட்டது. பொதுவாக எந்தப் பள்ளியிலுமே, 10ஆம் வகுப்பில் சேர்க்க மாட்டார்கள்தான். பத்தாம் வகுப்பு ரிசல்ட் கெட்டுவிட்டால், அவர்களின் வியாபாரம் படுத்துவிடுமென்பதுதான் காரணம். நான் ஒன்பதாம் வகுப்பில் சிவகங்கை மாவட்டம் ஆத்திக்காடு தெக்கூரில் விடுதியில் தங்கி படித்துவந்தது பிடிக்காமல், அடம்பிடித்து சிவகங்கை பள்ளியில் சேர வந்தபோது, அங்கே ஒரு பள்ளியில் 5000 ரூபாயும், ஒரு பள்ளியில் 2000 ரூபாயும் கேட்டார்கள். என் அப்பாவோ ஒரே ஒரு பெஞ்சு மட்டும் போடச்சொன்ன, அரசுப் பள்ளியொன்றில் சேர்த்துவிட்டார்கள். அந்தப் பள்ளியில் அதுவரையிலும் 400 க்குமேல் யாருமே எடுத்ததில்லை. அந்தப் பள்ளியில் என் நேரம் மேலூரில் இருந்து வந்த நல்லமுத்து என்னும் தலைமையாசிரியரால் நான் 432 எடுத்து முதல் மாணவனாக தேர்வானேன். அதுமட்டுமல்லாமல், யார் யாரெல்லாம் 9 ஆம் வகுப்பில் இருந்து தானாகவோ அல்லது விரட்டிவிடப்பட்டு வந்தார்களோ அவர்கள் அனைவரையும் தன் பள்ளியில் சேர்த்துக்கொண்டு பத்தாம் வகுப்பில் முழுத் தேர்வாக்கிக்க காட்டினார். அவர் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? படிக்கும் மாணவனைப் படிக்க வைப்பதல்ல பள்ளிக்கூடம். படிக்காத மாணவனைப் படிக்க வைப்பதே பள்ளிக்கூடம். அந்த மாதிரி ஆசிரியரை இனிமேலும் பார்க்க முடியுமா? எப்படி முடியும்?! இப்போதெல்லாம் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எழுதாத சட்டமாகிவிட்டதே, இதில் ஆசிரியர்களை உருவாக்கும் B.Edமட்டும் விதிவிலக்கா என்ன?!
✍️செ. இராசா

கவிதை நூல்கள்
நிறைய கிடைக்கிறது
பழைய புத்தகக்கடையில்

03/06/2022

பேர் ஆசை

 

யாருக்குத்தான் இல்லை
இந்தப் பேர் ஆசை!
நீங்களே சொல்லுங்கள்....?!
பேர் எடுக்கவேண்டுமென்ற ஆசை
எப்படிப் பேராசையாகும்?
அதற்காகப் பேரையே எடுத்துவிட்டால் எப்படி?
கண்டிப்பாகத் திரும்ப வரும்....
அதுவரையிலும்‌....
காத்திருக்கும் எந்தன் பேர் ஆசை...
 
✍️செ. இராசா

01/06/2022

மௌனக் கதவுகள்

 


இரண்டு கண்கள்
இரண்டு காதுகள்
இரண்டு நாசிகளென
இரண்டிரண்டாய் வைத்த இறைவன்;
ஒரு வாயிருக்க
இரண்டு வேலை தந்ததுபற்றி
என்றாவது எண்ணினோமா?!
 
பொய் சொல்லாதே
புறங்கூறாதே என்றெல்லாம்
பயனில்லாததை தவிர்க்க
பாடம் நடத்தினாரே வள்ளுவர்
உரைத்த கூற்றின்
உட்பொருளை ஆராய்ந்தோமா?
 
புத்தரோ இயேசுவோ
சித்தரோ ஞானியோ
இவர்களெல்லாம்
சிந்தனையுரை ஆற்றவேண்டி
சிந்தித்தார்களா?! இல்லை
சிந்தித்ததன் விளைவாக
சிந்தனையுரை ஆற்றினார்களா?
 
சிந்தியுங்கள்....
சிந்தனையின் மூலம் என்னவென்று...
சிந்தியுங்கள்...
சிந்தையின் நாதம் யாதென்று...
பிறகு பாருங்கள்
வாயடைத்தைப் போவீர்..
 
ஆம்...
அங்கே மௌனக் கதவுகள் திறந்திருக்கும்....
 
✍️செ. இராசா

31/05/2022

ஒவ்வொரு கணமும்
ஜென்நிலையைப் போதிக்கிறது
மாதக் கடைசி

29/05/2022

மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம்

 


இந்தப் படத்தில் உள்ள நபர் யாரென்றால், நான் தினந்தோறும் மாலைநேரத்தில் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் பணிபுரியும் காவலர்களில் ஒருவரான குலசந்த் சிங் என்னும் பஞ்சாபியர். தினமும் என்னை சந்திக்கும் இந்நபரிடம் இன்றுதான் சில நிமிடங்கள் பேசினேன். அவரிடம்நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தியபோது கவிதையெல்லாம் எழுதுகிறேன் என்றுதான் கூறினேன். அப்போது அவர் முகம் ஆயிரம் வோல்ட் விளக்காக மின்னியது. உடனே ஓடிப்போய் தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை எடுத்துவந்து தான் எழுதிய பஞ்சாபிய கவிதைகளை எல்லாம் சொல்லி, மன்னிக்கவும் என்னால் ஹிந்தியில் மொழி பெயர்க்கத் தெரியாதென்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம் நமக்கே ஹிந்தி நம்ம டங்கிலிஷ் போல் ஆங்கிலம் கலந்துதான் பேசவரும். படிக்க வராது. ஆனாலும் அவர் ஏற்றி இறக்கி சொன்ன அந்த விதமே...அது கவிதைதான் என்று அடையாளப்படுத்தியது. ஆகா...மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம் இருக்கிறதே...அதுவே ஒரு கவிதை தாங்க....
 
கூடுதல் தகவலாக, அவரிடம் நான் எழுதிய பஞ்சாபி தமிழ்ப்பாடலைக் காண்பித்தேன். ஆள் மிரண்டுவிட்டார். அந்தக் காணொளியில் வரும் ஆங்கிரீஜ் சிங் புகழ்பெற்ற நபரென்பதை மீண்டும் இவர்மூலமும் தெரிந்து கொண்டேன். அந்தக் காணொளியில் நானும் டர்பன் கட்டி வருவதைப் பார்த்து, அசந்தே விட்டார். அப்போதுதான் அவரிடம் உங்கள் டர்பன் எங்கே என்று கேட்டபோது, கத்தார் வந்து நீக்கிவிட்டதாக மெல்லிய சோகத்துடன் கூறினார். அவரைத் தொடர்ந்து கவிதை எழுதச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
 
அந்தக் காணொளிக்கான இணைப்பு இங்கே உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
 

கேள்விகள் பத்து

 


 #கேள்விகள்_பத்து

சாராயம் பீரெல்லாம் தப்பில்லை என்றா;நீர்
தாராளம் காட்டுகின்றீர் தந்து!
(1)

வாயில் வடைசுட்டே வைத்திடலாம் என்றா;நீர்
வாயினிக்கச் சொல்கின்றீர் வந்து!
(2)

தேர்தலுக்கு முன்னாலே தீர்த்திடலாம் என்றா;நீர்
நேர்மையின்றி பேசுகின்றீர் நின்று!
(3)

ஆண்டவர்கள் தப்பென்றே ஆண்டிடலாம் என்றா;நீர்
வேண்டியதைச் செய்யவந்தீர் வென்று!
(4)

நெஞ்சத்து நீதியும் விற்பனைக்கே என்றா;நீர்
அஞ்சாமல் சொன்னீர்கள் அன்று!
(5)

ஊதிப் பெருக்கிடவே ஊடகங்கள் என்றா;நீர்
சேதிபலச் சொல்கின்றீர் சேர்ந்து!
(6)

யாரென்ன சொல்வார்கள் எம்முன்னே என்றா;நீர்
ஊரெல்லாம் விற்கின்றீர் கள்!
(7)

நக்கீரர் எல்லோரும் மௌனித்தார் என்றா;நீர்
இக்கட்டில் வைத்துள்ளீர் கள்!
(8.)

ஜால்ராக்கள் உள்ளவரை சந்தோஷம் என்றா;நீர்
சால்பின்றி செய்கின்றீர் கள்!
(9)

போசாக்கு பானமெல்லாம் போதையில்லை என்றா;நீர்
போய்சாக விற்கின்றீர் கள்!
(10)

✍️செ. இராசா

26/05/2022

அரும்பு மீசை காலத்தில்

 


அரும்பு மீசை காலத்தில்
பெரிய மீசை வேண்டுமென
அடிக்கடி சிரைத்த நாம்தான்;
கட்டை மீசை காலத்தில்
வைத்த மீசையை
மீண்டும் குறைக்கிறோம்...

✍️செ. இராசா