17/01/2024

அடடாயிவள் அவடா

 அடடாயிவள் அவடாயென
.....அலைபாய்ந்திட நெஞ்சம்
விடுடாயென விதிடாயென
.......விரைவாகவே அஞ்சும்!

இடராயிலை இனிதாவென
......இழையோடிட நெஞ்சம்
இடியேனென இவளேனென
......இயல்பாகவே அஞ்சும்!

சுடராயிலை இருளாவென
.....சுமையேறிடும் நெஞ்சம்
சுயவேதனை இதுரோதனைத்
......துயரேயென அஞ்சும்!

கடலாயிலை கடுகாவென
......கவிபாடிடும் நெஞ்சம்
கரைசேர்ந்திடும் வழிதேடிட
..... கனிவாகவே கெஞ்சும்!

✍️செ. இராசா

15/01/2024

பொங்கலோ பொங்கலென

 


பொங்கலோ பொங்கலென
....பொங்கலின்று பொங்கிடவும்
எங்கும் இறையருளால்
....இன்பவொளி- தங்கிடவும்
துள்ளும் இசையொலிபோல்
....சூழல் அமைந்திடவும்
அள்ளிக் கொடுத்திடுவோம்
...அன்பு!

12/01/2024

அருள் தொண்டிற்கான விருது

 



இன்றைய தினம் அடியேனுக்கு கத்தார் மனவளக்கலை மன்றத்தின் மூலமாக அருள் தொண்டிற்கான விருது கிடைத்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உறவுகளே..
 
(போன வருடம் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதை இந்த வருடம் ஒரு வகுப்பறையில் வைத்து சிறப்பு செய்த பேராசிரியர் திரு. முத்து ஐயா அவர்களுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்)
வாழ்க வளமுடன்!
 
குருவே துணை!🙏🙏🙏
 
 
----செ. இராசமாணிக்கம்
 
2000-கல்லூரி காலத்தில் புதுக்கோட்டை மன்றம்
 
(2010ல் சங்கர்லால் என்னும் இலங்கை ஓட்டுனரால்)
 
சிந்தனை உரைகள் வழங்கிய தலைப்புகள்
 
 
அல்கோர் பட்டிமன்றம்
அல்கோர், ICC அபுஹாமர் மற்றும் அல்வுக்கைர் WAD நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொண்டாற்றியது.
 
வாராந்திர மற்றும் SKY VISION வகுப்புகளை ஒலிப்பதிவு செய்து அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியது.
 
வெள்ளிக்கிழமை YYE & YHEன் வகுப்புகளில் என்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கிக் கொண்டிருப்பது.

08/01/2024

குரல்


என் குரலும்
அரங்கேற்றம் ஆகாதா?
என் குரலையும்
கேட்டுவிட மாட்டார்களா?
இப்படிக்
குரலுக்காகக்
குரல்கொடுப்போரை
அறிவீர்கள்தானே?!

ஆகா....
என்னே கம்பீரமான குரல்?
ஐயே...
என்ன கேவலமான குரல்?
இப்படிக்
குரலைவைத்தே
குறிப்பிடுவோரையும்
அறிவீர்கள்தானே?!

எனில்..
என்றேனும் இந்தக் குரலைப்பற்றி
சிந்தித்துள்ளீரா?!

காற்றை உள்வாங்கி
ஒலியாய் உருமாற்றி
மொழியாய் வடிவேற்றி
குரலாய்ப் பதிவேற்றும் இந்த
மனித விலங்கைப்போல்
மற்றொரு விலங்குமுண்டா?!

ஆம்...
இந்த இனத்தில் மட்டும்தான்
வயதுக்கு வந்தபின்
மெல்லினம் வல்லினமாகி
ஆண்குரல் கட்டைக்குரலாகும்!
அதுவரைக்கும்
என்ன... என்றவன்
அதன்பின்
என்ன்ன்ன....என்பான்!

இந்த இனத்தில் மட்டும்தான்
திருமணமானபின்
மெல்லினக் குரலுக்கும்
வல்லின வலிமைவரும்!
அதுவரைக்கும்
என்ன்ன்ன என்றவன்
அதன்பின்
ஹி..ஹி..என்பான்!

யாரையும் ஆளைப்பார்த்து மட்டும்
எடைபோடாதீர்...
ஆஜானுபாவாய் இருப்பான்
நயன் தாராபோல் பேசுவான்..
அரைச்சாணே இருப்பான்
அடோல்ப் ஹிட்லர்போல் கர்ஜிப்பான்.
காரணம்
குரலே தவிற...உருவமல்ல!

இங்கே எவ்வளவு பெரிய
பேச்சாளராய் இருந்தாலும் சரி
பாடகராய் இருந்தாலும் சரி
குரலொலியைப் பொறுத்தே
கரவொலி மேலோங்கும்!
எனில்;
கரவொலி மேலோங்க
குரலொலியைப் பாதுகாப்பீர்!

✍️செ. இராசா

06/01/2024

எப்ப வருவாயோ

 


எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ
எப்ப வருவாயோ- அப்பா
எப்ப வருவாயோ.....

நாளைக்கே வருவதாக
நாளுபூராம் சொல்லுமப்பா
நாளைக்கும் நாளையின்னா
நாளை எப்ப வருமப்பா?!!

வாங்கித்தந்த பொம்மையெல்லாம்
வக்கனையா தூங்கு தப்பா
ஏங்கிப்போன என்னைக்காண
வந்தாயென்ன தப்பா அப்பா?!

04/01/2024

நேர்மையோடும் வாய்மையோடும்

நேர்மையோடும் வாய்மையோடும்
.......வாழுகின்ற மாந்தரை
கூர்மையான வார்த்தையாலே
........கூசிடாமல் ஏசுவார்!
ஆர்வமோடும் ஆசையோடும்
.......தொண்டுசெய்யும் நேசரை
கோவமூட்டி வேகமூட்டி
.......கொள்கைமாறத் தூண்டுவார்!

✍️செ. இராசா

03/01/2024

தட்டுங்க தட்டுங்க

 


தட்டுங்க தட்டுங்க கைகளைத் தட்டுங்க
கொட்டுக்கு தக்கன தட்டுங்களே..
தட்டுங்க தட்டுங்க ஓங்கியேத் தட்டுங்க
திக்கெட்டும் கேட்டிடத் தட்டுங்களே...
 
வந்தவர் யாவரும் சொந்தமே என்றிட
சிந்தையில் ஏற்றிடத் தட்டுங்களே..
முன்னவர் பின்னவர் பேதங்கள் நீங்கிட
வேகமாய்க் கைகளைத் தட்டுங்களே...
 
உள்ளத்தில் எப்போதும் உற்சாகம் பொங்கிட
எல்லோரும் நன்றாகத் தட்டுங்களே..
மன்னாதி மன்னரும் மக்களும் ஒன்றென
எல்லோர்க்கும் கேட்டிடத் தட்டுங்களே..
 
✍️செ. இராசா 
 
(முன்போர்முறை கடல் சார்ந்த பாடல் செய்தபோது கடலூரில் இருந்துவந்து கத்தாரில் மீன்பிடிப்புத் தொழிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நம் மீனவ நண்பர் வீரகுமார் அவர்களையும் அவர் மகனையும் சந்தித்திருந்தேன். இன்று அவர்களை மீண்டும் சந்தித்தபோது எடுத்த ஒளிப்படம்)
 

02/01/2024

காந்திவேசம்

 


கால்வயித்துக் கஞ்சிக்குத்தான்
காந்திவேசம் போடுறான்....
காக்காசப் பார்த்ததுமே
டாஸ்மாக்கத் தேடுறான்....

நாலுபேரு நிக்கசொல்ல
நாயகனாக் காட்டுறான்
ஆளுயாரும் இல்லையினா
நாராசமாப் பேசுறான்...

எல்லாம் நடிப்பு சாமி- இது
பொல்லாதவர் பூமி!
என்னப் பொழப்பு சாமி- இதில்
நல்லவர்‌..யார் காமி?!

✍️செ. இராசா

01/01/2024

இன்றுமுதல்

இன்றுமுதல் மாறுவதாய் எப்போதும் சொல்லுவதால்

'இன்றுமுதல்' என்றாலே ஏசுகிறார்- என்னசெய்ய?! 

'இன்றுமுதல்' என்றசொல்லை இங்குள்ளோர் முன்னாலே

இன்றுமுதல் சொல்லேன் இனி!

புத்தாண்டு நன்நாளில்

புத்தாண்டு நன்நாளில்
...பொய்நீங்கி மெய்யோங்க
......பூதூவி வேண்டுகின்றேன்!

எத்திக்கும் எல்லோரும்
... என்றென்றும் வாழ்வோங்க
...... என்நெஞ்சில் வாழ்த்துகின்றேன்!

சித்தர்கள் ஞானத்தை
...சிந்தைக்குள் வைத்தோங்க
.....செந்தமிழைப் போற்றுகின்றேன்?

எத்தர்கள் மூடர்கள்
.... எல்லோரும் நன்றாக
....... என்பாட்டை ஏற்றுகின்றேன்!

✍️செ. இராசா