கல்லூரி முடிந்த காலகட்டத்தில் முதன்முதலில் மதகுபட்டி நூலகம் தான் எனக்கு
ஓஷோவை அறிமுகப்படுத்தி வைத்தது. பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்திற்கு அவர்
எழுதிய தலையணை அளவுப் புத்தகம். அதுதான் நான் முதன்முதலில் வாசித்தது.
தொடர்ந்து இடைவிடாமல் படித்த முதல் அனுபவம், நான் என்ற உணர்வு கரைவதுபோல்
இருந்தது. அவருடைய பல புத்தகங்கள் அப்படி இருந்தாலும், அவற்றில் சில
நம்மோடு ஒட்டவே ஒட்டாது. காரணம் அவை அனைத்தும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களே. மேலும், அவர் புத்தகங்கள் எல்லாம் பேசிய சொற்பொழிவுகளின் எழுத்து வடிவங்களே.
வாழ்க்கையின் இரகசியம் பற்றிய ஒரு கதையில் வரும் புகழ்பெற்ற வாசகமான "இந்த
நிலையும் மாறிவிடும்" என்ற வரிகளை என்னால் மறக்கவே முடியாது. இந்த வரிகளை
என் தம்பியின் அலுவலகத்தில் ஒட்டி இருந்தேன். இவ்வரிகள் படிப்பவரின் மன
நிலைகளைப் பொறுத்து அர்த்தம் தரும். பிற்காலத்தில் ஒரு கடையின் முகப்பிலேயே
பெரிய அளவில் இதே வரிகளை எழுதி இருந்தார்கள்.
ஒருமுறை இவரின்
திருச்சி ஆஸ்ரமத்திற்குச் சென்றுவர துவாக்குடி வரை ஆவலுடன் சென்ற நான். ஏனோ
உள்ளே போகாமல் திரும்பி வந்துவிட்டேன். அது தனிக்கதை.
அரசியல்
வாதிகள் முதல் ஆன்மீகத் தலைவர்கள் வரை பலரும் ஓசோவின் கதைகளையேச் சொல்வதாக
சுகி சிவம் சொல்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, சினிமாத் துறையினரும் யூடியூப்
காணொளி செய்பவர்களும் கூட அவரின் கதைகளையேச் சுடுகிறார்கள். ஆம்,
சமீபத்தில் அவரின் புகழ்பெற்ற அல்லது மற்றவர்கள் அவரின் புகழைக் கெடுக்க
முனைந்த "From Sex to Super consciousness" (காமத்திலிருந்து கடவுளுக்கு)
என்ற புத்தகம் படித்தேன்.
அதில் வரும் முதல் கதை ரஜினியும்
செந்திலும் ஒரு படத்தில் "மாப்பிளை அவர்தான் அவர் போட்டுள்ள கோட் என்னது"
என்று லூட்டி அடிப்பார்கள் அல்லவா?! அந்தக் காட்சி இருந்தது. இரண்டாம் கதை
"இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்" என்று பார்த்திபன் வடிவேலு இருவரும்
ஒருபடத்தில் செய்யும் காட்சி இருந்தது.மூன்றாம் கதை ஒரு மரத்தையும்
சிறுவனையும் வைத்து அன்பைப் போதிக்கும் ஒரு அருமையான கதை (அதை அடுத்த
கட்டுரையில் பார்ப்போம்). என்னை மிகவும் கவர்ந்த கதை. அப்படியே
குறிப்பெடுத்து என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என் மகளும் மகனும்
என் அருகில் வந்து இதெல்லாம் ஏற்கனவே யூடியூபில் வந்ததாகச் சொல்லி எனக்கும்
காண்பித்தார்கள். ஆனால் கதையின் நீதியை மாற்றிவிட்டார்கள். அது
கிடக்கட்டும், இங்கே எல்லாமே சுடப்பட்டதுதானா?
அந்த புத்தகம்
மட்டுமல்ல, அவரின் அனைத்து நூல்களும் அறிவைத் திறக்கும் அதி அற்புதப்
பொக்கிஷங்களே. மொழி பெயர்ப்பு சரியாக இருந்தால் நம்மைப் புரட்டிப்போடும்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
---இராசமாணிக்கம்--- தொடரும்