ச்சும்மா இருக்கிறேன் என்று
சும்மா சொல்லாதீர்..
சும்மாவா இருக்கிறோம்
சுற்றிக்கொண்டல்லவா இருக்கிறோம்
அதுவும் சும்மாவா சுற்றுகிறோம்?
ஆயிரம் மைல் வேகத்தில்*
ஆடாமல் குலுங்காமல்
ஆகாயத்திலல்லவா சுற்றுகிறோம்!
ஆனாலும்
நாம் சும்மாதான் சுற்றுகிறோம்
ஆகா...புரியவில்லையே
ஆம்...
இப்படியெல்லாம் சுற்றிச்சுற்றிவர
இங்கே என்ன செலவா செய்கிறோம்?!
இலவசமாய் உலாவரும் மந்திரிபோல்
எப்போதுமல்லவா சுற்றுகிறோம்?!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே எதுவும்
சும்மா இருப்பதே இல்லை!
அப்பா சும்மா இருந்திருந்தால்
எப்படியப்பா வந்திருப்போம்?
ஆதியப்பா...சும்மா இருந்திருந்தால்
ஏதப்பா இவ்வுலகம்?
இங்கே யாரும் சும்மா இல்லை
இங்கே எதுவும் சும்மா இல்லை
உயிரினங்களில் ஓடும்
இரத்த ஓட்டம் முதல்
காற்றோட்டம் வரை
எந்த ஓட்டமும் இல்லாமல்
இங்கே யாரும் சும்மா இல்லை
அட
உயிரே அல்லாத
சடப்பொருளில்கூட
புரோட்டான் முதல்
எலெக்ட்ரான் வரை
எந்த அணுவோட்டமும் இல்லாமல்
இங்கே ஏதும் சும்மா இல்லை
இனியும்..
சும்மாய் இருப்பதாய்
சும்மாச் சும்மா சொல்லாதீர்!
இதோ நீங்களும் சும்மா இல்லை
இதை அல்லவாப் படிக்கின்றீர்!
இதோ சிரிக்கவும் செய்கின்றீர்!
😊😊😊😊😊
நன்றி! நன்றி!!
✍️செ. இராசா
#சும்மா
(*பூமி சுழற்சியின் வேகம் 1000 மைல்/ மணி
No comments:
Post a Comment