30/09/2019

மகாபாரதம் பிராமண காவியமா?!



பாண்டு பாண்டவர்களின்
.............தந்தைதான்; ஆனால்
ஐவரும் பாண்டுவுக்குப் பிறக்கவில்லை

திருதராஷ்டிரன் கௌரவர்களின்
..............தந்தைதான்; ஆனால்
திருதராட்டினன் மட்டும் காரணமில்லை!

விசித்திரவீரியன் இந்த இருவருக்கும்
..............தந்தைதான்; ஆனால்
விசித்திரன் இவர்களைப் பெறவில்லை!

பீஷ்மர் இவர்கள் அனைவருக்கும்
.............தாத்தாதான்; ஆனால்
பீஷ்மரோடு எந்த ரத்த சம்பந்தமுமில்லை!

சந்திரகுல விருக்திக்குக் காரணம்
..........மீனவகுல சத்யவதிதான்; ஆனால்
மகாபாரதம் மீனவகுல காவியமில்லை!

பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்
........யாதவகுல கண்ணன்தான்; ஆனால்
மகாபாரதம் யாதவகுல காவியமுமில்லை!

ஆனால் மகாபாரதம் பிராமண காவியமாம்?!
எப்படி....?!!!

✍️செ. இராசா

(ஒரு புரிதலுக்காக மட்டும்....யாரையும் புண்படுத்த அல்ல)

*வியாசரின் தந்தை என்பதால் இருக்குமோ?!

#மனம்போல்






இந்த மனமென்னும் துப்பாக்கியில்தான்
எத்தனை வகைத் தோட்டாக்கள்?!!

என்ன......தோட்டாக்களா?
என்ன தோட்டாக்கள்?!
ஆம்...எண்ணத் தோட்டாக்கள்..!!

அவை..
கூடவே இருந்து
கழுத்தைக் கவ்வும்
சயனைடு வகைத் தோட்டாக்கள்!!
ஆனால்;
அன்பை செலுத்தினால்
அருளை விளைவிக்கும்
அற்புத வகைத் தோட்டாக்கள்!!

அவை “பூ” தூவும்
அல்லது “ப்பூ” தூவும்
பூமராங் வகை தோட்டாக்கள்!!

பண்பினைப் பொறுத்தே
பண்பலையாய்ப் பரவுவதால்
மனமெனும் துப்பாக்கியை
மௌனித்து வைத்து
எண்ணத் தோட்டாக்களை
எண்ணிப் பார்த்தால் தெரியும்
அவையே..
வண்ண வாழ்விற்கு
வாசல் திறக்கும்
அதிசயத் தோட்டாக்கள் என்று!

#மனம்போல்_வாழ்வு

29/09/2019

தமிழை எனக்கு(ம்) ஊட்டிவிடு!!



ஒவ்வொரு நாளும் ஏங்குகிறேன்!
உனையே நினைத்து உருகுகிறேன்!

உன்னை உன்னால் வென்றிடவே
என்னை உன்னுடன் இணைக்கின்றேன்!

உன்னில் கரையும் பொழுதெல்லாம்
என்னை நானே இழக்கின்றேன்!!

இன்னும் இன்னும் வேண்டுமென்றே
இன்னும் உன்னை வேண்டுகின்றேன்!

தமிழே தாயே வந்துவிடு
தமிழை எனக்கு(ம்) ஊட்டிவிடு!!

#வாட்சப்_இல்லா_உலகது



பாடல் மெட்டு: #வாசமில்லா_மலரது
******************************^^
#வாட்சப்_இல்லா_உலகது
வசந்தத்தைக் கொண்டது
வைகை நல்ல வைகை அது
வைத்ததெல்லாம் விளைந்தது...

ஏதேதோ தேசம்
எந்நாளும் தேடும்
அழைக்காத போதும்
அலைபோலே மோதும். (வாட்சப்....)

வீட்டுக்கொரு திண்ணை
கட்டிவைத்த தமிழா
உனைப்போல் இங்கே
நினைந்தோர் எங்கே?!

பட்டிதொட்டி எங்கும்
கொடிகட்டி பறந்தாய்
உனைப்போல் இங்கே
உயர்ந்தோர் எங்கே? (2 முறை)

...........(வாட்சப் இல்லா)

அகம்புறம் இரண்டும்
அறம் கொண்ட தமிழா
அதன்வழி நின்றே...
ஆண்டவன் நீயே...

எல்லைகள் தாண்டி
எங்கிலும் சென்றாய்
தமிழினைப் போலே
தலைநிமிர்ந் தாயே... (2 முறை)

.............(வாட்சப் இல்லா)

முகநூல் முழுதும்
முழங்கிடும் தமிழா
இறங்கிவா நீயும்
மாற்றுவோம் பாதை

கீழடி தாண்டி
மேலடி வைப்போம்
உண்மையின் வேர்களைக்
கண்டறிவோமே... (2 முறை)

.............(வாட்சப் இல்லா)


https://youtu.be/3T7EPvsgTLE

26/09/2019

ஆழ்ந்த இரங்கல்கள்--நஷீர் ஐயா



உன்னை
நேற்றுதான் நினைத்தேன்..
ஆனால்....
காற்றோடு போவாய் என்று
சத்தியமாய் நான் நினைக்கவில்லையே..

நீ என் சாரதியாக மட்டுமா இருந்தாய்?!
நீ என் அன்பின் அதிபதியாக அல்லவா இருந்தாய்?!!

உன்னொடு எத்தனை நாட்கள்
உரையாடியுள்ளேன்...!!!
உன்னோடு எத்தனை நாட்கள்
உணவருந்தியுள்ளேன்...!!!

ஆனால்.. இன்று
நீ இல்லை என்ற செய்தியை
நான் எப்படி ஜீரணிப்பேன்..

ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா

நான் சாக விரும்புகிறேன்



நான் சாக விரும்புகிறேன்!- ஆம்
நான் சாகவே விரும்புகிறேன்!!

நான் இருப்பதால்தானே
நான் நான் என்று எல்லோரும்
நான் பற்றியே அழைகின்றோம்?!

நான் இருப்பதால்தானே
நான் நீ என்று எப்போதும்
நாம் வேற்றுமை பார்க்கின்றோம்?!

ஆமாம்.....#நான்_யார்?!

குழந்தையாய் இருக்கும்போது
குதூகலமாய் இருந்த நான்;
சிறுவனாய் இருக்கும்போது
சிலிர்ப்போடு இருந்த நான்;
இளைஞனாய் இருக்கும்போது
எழுச்சியோடு இருந்தநான்;
முதுமையாய் மாறும்போது மட்டும்
முனங்கிப்போய் முடங்குகிறேனே ஏன்?!

எனில்
நான் உருவாய்த் தெரியும் உடலா?!
நான் உடல் என்றால்
நான் ஏன் உயிரிழந்தால் பிணமாகிறேன்?

எனில்
நான் அழியும் உயிரா?!
நான் உயிர் என்றால்
நான் ஏன் உடலுக்குள் பிணைகின்றேன்?

எனில்
இந்த நான் யார்?!
இந்த நான் பிறப்பது ஏன்?!
இந்த நான் இறப்பது ஏன்?!

இந்த உலகில்தான்
எத்தனை எத்தனை நான்கள்
இந்த நான்களின் தேவைதான் என்ன?!

ஒவ்வொரு நானும் பிறந்து
ஒவ்வொரு நானும் இறந்து
இந்த நான் விளையாட்டு எதற்காக?!

எது எப்படியோ
நான் சாக விரும்புகிறேன்- ஆம்
நான் சாகவே விரும்புகிறேன்!
ஓரு பித்தனைப்போல...
ஒரு சித்தனைப்போல..

உறைவோன் பெறுவான் உயர்வு!



இயந்திரம் போலே இருக்கிற வாழ்வை
உயர்வாய் நினைப்போர் உலகில்- இயற்கை
இறைவன் இருக்கும் இடமாய் உணர்ந்தால்
உறைவோன் பெறுவான் உயர்வு!

#இருவிகற்ப_நேரிசை_வெண்பா

25/09/2019

கீழடியின் கீழும் கிளறு



கீழடியின் காலடியில் கிட்டியதைக் கண்டவுடன்
கீழடிகள் செய்தவர்க்குக் கிட்டியதும்- கீழடியே
கீழடியில் கிட்டியதால் கீழடியில் நின்றிடாது
கீழடியின் கீழும் கிளறு
புதைந்த கல்லறைக்குள்
எழுந்து நிற்கிறது
கீழடி நாகரிகம்
உடைந்த பானைக்குள்
நிறையவே இருக்கிறது
காலத்தின் சுவடுகள்

20/09/2019

#காப்பான்





விவசாயிகளின் பிரச்சனை
இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு
இந்திய அரசியல் நகர்வுகள்
கார்ப்பரேட் அரசியல் சதிகள்
பயோ வார் (BioWar)
காஷ்மீர் பிரச்சனை
என அத்தனை விசயங்களையும் உள்ளடக்கி
கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையாமல்
அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்திய அருமையான திரைப்படம்

👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

சூர்யா, ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, KV ஆனந்த் & ஹரீஸ் ஜெயராஜ் கூட்டணி கலக்கிட்டாங்க.....

என்னடா படம் மிகவும் விறுவிறுப்பா இருக்கேன்னு பார்த்தால் நம்ம பட்டுக்கோட்டை பிரபாகர் இப்படத்தை ஆனந்துடன் சேர்ந்து எழுதி உள்ளார்.

இனிமேலாவது அவர் மாதிரியான திறமையான ஆளைப்பயன்படுத்துங்கப்பா...
தமிழ்சினிமா நன்றாக இருக்கும்.

#மனம்_பழகு // #மனத்தைப்_பழக்கு






புலன்களுக்கும் புலப்படாத ஒன்று
புரியாமல் இருப்பது இன்னும்
புரியாத புதிர்தானே..
புரியும்படியே சொல்கிறேன்

20 ஹெர்ட்சுக்குக் கீழேயும்
20 கிலோ ஹெர்ட்சுக்கு மேலேயும்
நம்மால் கேட்க முடியாதாம்...

ஒருவேளை கேட்டிருந்தால்
சுனாமி வரும் போது
சுதாரித்திருப்போமே...
ஆனால்..
சுத்தும் பூமியின் பெரும் சப்தம்
நம்மை தூங்க விடுமா?!

இரவிலேயும் நன்றாய்ப் பார்க்கும்
உயிரினங்கள் பற்றி
எப்போதாவது யோசித்திருக்கிறோமா?!

ஒரு சூரியனையே
உற்றுப் பார்க்க முடியாதநாம்
ஓராயிரம் சூரியனாம் பரந்தாமனை
அருகில் பார்த்தானே பார்த்தன்
அந்த அனுபவத்தை
என்றாவது யோசித்திருக்கிறோமா ?!

வாசமில்லா மலரென்றும்
வாசமுள்ள மலரென்றும்
வாய்க்கு வந்தபடி பேசுகிறோமே..
எல்லா வாசத்தையும்
எல்லோராலும் உணரமுடியுமா?!

ஹைட்ரஜன் சல்பைடு என்ற
கொடுமையான வாயு (H2S)
மணம் இல்லாமலேயே
மரணம் தரும் விந்தையை
விக்கியிலாவது வாசித்திருக்கிறோமா?!

காகிதப்பூவின் மணத்தை
நம் மூக்கு உணராவிடில்
காகிதப்பூவிற்கு மணமில்லையென
நாம் கதைப்பது நியாயமா?!

சளி பிடித்த மூக்கில்
சந்தணம் மணக்காதபோது
சந்தணங்களே மணக்காதென
நாம் சத்தியம் செய்யலாமா?!

இனிப்பு சுவைத்த நாக்கில்
தேனீர் இனிக்காவிடில்
இனிப்பே இனிக்காதென
எங்காவது கதைக்க முடியுமா?!

தீயினால் சுட்டது ஆறுமென்றும்
நாவினால் சுட்டது ஆறாதென்றும்
பாவினால் சுட்டாரே வள்ளுவர்..
ஐயா...மன்னியுங்கள்
தீக்குழியில் இறங்கினாலும்
பூக்குழியாய் மாறும்போது
நா மட்டும் சுடுமா என்ன?!

வார்த்தைகளின் வெப்பம்
வாங்குபவர் பொறுத்ததல்லவா?
அவர்களின்..
மனத்தைப் பொறுத்ததல்லவா?!

இங்கே..
புலன்களின் எல்லையை
புலன்களால் தாண்ட முடியாதுதான்
ஆனால்...
மனம் நினைத்தால்
புலன்களை மட்டும் அல்ல
புவனத்தையே தாண்டலாமே..
அவ்வளவு ஏன்?!
மனம் நினைத்தால்
மனத்தையே தாண்டலாமே...!!!
ஆம்...
#மனம்_மகத்துவமானது!!!

#மனம்_பழகு
#மனத்தைப்_பழக்கு

19/09/2019

யாரால் உருவானது- சாதியம்



யாரால் உருவானது- சாதியம்
யாரால் உருவானது?! (2)
உன்னையும் என்னையும்...(2)
உன்னையும் என்னையும்
வேறெனச் சொல்லிடும்
வேற்றுமை வேரானது...
யாரால் உருவானது- சாதியம்
யாரால் உருவானது?!

வெள்ளையன் தோலினைக் கண்டதுமே
உள்ளதை எல்லாம் தந்தவரே..(2)
ஆதியில் வந்த மானிடரை
சாதியில் வேற்றுமை கொள்வீரொ?
ஆதியில் வந்த மானிடரை
சாதியால் இன்னும் கொல்வீரோ?!

(யாரால் உருவானது)

சாமியைக் கோவிலில் கும்பிடவே
சாத்திர கோத்திரம் பாப்பவரே...(2)
சோற்றினைத் தந்திடும் சூத்திரரை
வேற்றுமை செய்துதான் பார்ப்பனரோ?!
சோற்றினைத் தந்திடும் சூத்திரரை
போற்றியே வாழ்த்திட வேண்டாமோ?!

(யாரால் உருவானது)

மாயஜால வித்தைகோடி

மாயஜால வித்தைகோடி காட்டுகின்ற வாழ்விலே
ஞாலஞான வித்தைகாட்டி காத்திடுவாய்
ஈசனே!!!  

18/09/2019

50,000 கட்டுங்கள்

எங்களிடம் வெறும் ரூபாய் 50,000 கட்டுங்கள் உங்களை ஒரே நாளில் அதுவும் ஆறு மணி நேரத்தில் விமானம் ஓட்ட கற்றுத்தருகின்றோம் என்று ஒரு விளம்பரம் வந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு விளம்பரம் எனக்கு வாட்சப்பில் வந்தது. இங்கே விமானம் ஓட்ட அல்ல பாடலாசிரியராக்க!!! ஆனால் பணம் ரூபாய் 50,000 என்பதில் மாற்றம் இல்லை. இது சலுகை கட்டணமே....ஏனெனில் வெளிநாட்டு நபர்களுக்கு ரூபாய் 5,00,000 மாம்.
முக்கிய குறிப்பு: இதை நடத்துபவர் சாதாரண ஆளில்லை, அவரின் அப்பா பல தேசிய விருதுகள் வாங்கியவர், மிகச்சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர். இவரும் பாடலாசிரியர் தான் ஆனால் அவரைப்போல் அல்ல.......இல்லை இல்லை...அவரைவிட நன்றாகப் பிழைக்கத் தெரிந்த மனிதர். காரணம் இனிமேல் சினிமாவில் பாடல் எழுதி சம்பாரிப்பதைவிட இதுவே நல்ல தொழில் என்று சரியாக புரிந்து கொண்டவர். மேலும் ஒரு கூடுதல் தகவல். அந்த விளம்பரமும் ஆங்கிலத்தில் உள்ளது. (அப்போதுதானே தமிழ்நாட்டில் கூடுதல் மதிப்பாக இருக்கும்).

ஏற்கனவே ஒரு பாடலாசிரியர் ஆறு மாத வகுப்பு (மாதம் 4 நாட்கள்) நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் கட்டணத்தை முன் கூட்டியே வாங்கினாலும் இவர் அளவுக்கு வாங்குவதில்லை. மேலும் கூடுதல் நேரம் செலவளிக்கிறார். ஆனால், நம்ம ஆளு இருக்காரே...அவரு பலே கில்லாடி. நம்ம மாதிரி சில ஆர்வக்கோளாறுகள்தான் அவரின் இலக்கே...............கண்டிப்பாக அவர் வலையில் விழும் ஒரு சில நபர்கள் போதும், அவரின் கைச்செலவுக்கு ஆகும்.

இங்கே நமக்குத்தான் சுயபரிசோதனை அவசியமாகிறது. இப்போது சினிமாத்துறையில் பாடலாசிரியர்களுக்கு தேவை உள்ளதா?!....அப்படியே இருந்தாலும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது? தொடர்ந்து கிடைக்கிறதா? இல்லை புகழ் மட்டும்தான் இலக்கா?.....இப்படி நிறைய கேள்விகள் உள்ளது. சரி அதை விடுங்க....இவர் மாதிரி ஆட்கள், பாடல் எழுதுவது பற்றி ஒரு புத்தகம் போடலாமே அல்லது youtubeல் காணொளி போடலாமே.....அதை விட்டு ஏன் பிறரின் தலைமேல் ஏறுவதிலேயே குறியாக உள்ளார்கள் .அட போங்க சார்....எங்களுக்கு பணம் தான் முக்கியம்...எங்கள் புகழை வைத்து பணம் சம்பாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அப்பாவும் மகனும் கேட்டாலும் கேட்பார்கள்.நமக்கு ஏன் வம்பு? நாம நம்ம கடமையை மட்டும் செய்வோம்.

17/09/2019

#இந்தியப்_பிரதமருக்குப்_பிறந்தநாள்_வாழ்த்துகள்






சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும்
சிலரைப் பார்க்கப் பார்க்க பிடிக்கும்
சிலரைக் கண்டால் எரியும்
சிலரை நினைத்தாலே எரியும்

உங்களுக்குத் தெரியுமா?!

பிடிப்பது பற்றாகி
பிடிக்காமல் போனால்
ஏமாற்றங்கள் தரும் வலியால்
ஏடாகூடமாய்ப் போவது
ஏமாற்றியவர்கள் அல்ல
ஏமாந்தவர்களே...

பிடிக்காத ஒன்றையே
பிடித்துக் கொண்டு இருந்தால்
இரசாயண மாற்றங்களால்
இரணமாகப் போவது
எதிராளிகள் அல்ல
ஏற்றுக் கொண்டவர்களே..

ஒன்றை மட்டும் உணருங்கள்...!!!

அதிகப் பற்றும்
அதீத வெறுப்பும்
ஆபத்தாய்ப் போவது
ஆள்பவர்களுக்கல்ல
ஆட்படுபவர்களுக்கே.....!!!

✍️செ. இராசா

#இந்தியப்_பிரதமருக்குப்_பிறந்தநாள்_வாழ்த்துகள்💐💐💐💐

#கவிக்குறள்_அந்தாதி



கண்டதை எல்லாம் கவிதையாய்க் காண்கிற
கண்களே செய்யும் கவி!

கவியை நினைத்தே கரைந்திடும் எந்தன்
தவிப்பைத் தமிழே தணி!

தணிகை மலைவாழ் தமிழின வேந்தே
மணியாய்க் கவிதை அருள்!

அருளைத் தருகிற அன்னைத் தமிழே
இருப்பாய்க் கவியாய் இனி!

இனிக்க இனிக்க எழுதிக் குவிக்க
கனிவாய் வரணும் கவி!

✍️செ. இராசா

tagTag Photopin

16/09/2019

#வாழ்க்கைச்_சக்கரம்

விதைகள் விருட்சமாவதும்
விருட்சம் விதைகள் தருவதும்;

வினைகள் விளைவாவதும்
விளைவு வினைகள் ஆவதும்;

படிப்பது படைப்பாவதும்
படைப்பது படிப்பினையாவதும்;

விழுவது உயர்வாவதும்
உயர்வது வீழ்ந்துவிடுவதும்;

மரபுகள் மதிப்பை இழப்பதும்
மறுபடி மரபே வெல்வதும்;

இயற்கை செயற்கை ஆவதும்
செயற்கை இயற்கை எய்வதும்;

இவை எல்லாமே..
காலத்தின் சக்கரத்தில்
ஞாலத்தின் ஊர்வலங்கள்....!!!

✍️செ. இராசா

#வாழ்க்கைச்_சக்கரம்

#என்_சுவாசக்_காற்றிலே






#என்_சுவாசக்_காற்றிலே
எனைத் தீண்டும் தென்றலே..
உயிரின் உயிராய் நீ வருவாய்
அழகின் அழகாய் நீ மலர்வாய்

நீ தான் என் காதல் தேவதையே
நீ தான் என் கனவின் காரிகையே
நீ தான் என் காதல் வெண்ணிலவே...
நீ தான் என் கண்ணில் பெண்ணிலவே

மண்ணில் என்று நீ பிறந்தாய்?
கண்ணில் இன்றுதான் விழுந்தாய்
மின்னல் வேகத்தில் புகுந்தாய்
உன்னை என்னிலே தைத்தாய்

உருகும் பனிமலை நீ தான்
உருக்கும் சூரியன் நான் தான்
உருகி உருகியே நதிபோல் வருவாய்
மலரும் பூக்களில் நீ தான்
உலவும் காற்றிலே நான் தான்
ஏறி என்னிலே இசைபோல் வருவாய்

கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசும்
என் காதல் நிலவே....
மிஞ்சி மிஞ்சிப் மிஞ்சிப் போகும்
உன் கோபம் அழகே

(இன்னும்....)


அஞ்சி அஞ்சி அஞ்சிப் பேசும்
உன் சுவாபம் அழகே

விழியின் மொழியால் நீ விதைத்தாய்
செவியின் வழியால் நீ செழித்தாய்

நீ தான் என் காதல் தேவதையே
நீ தான் என் கனவின் காரிகையே
நீ தான் என் காதல் வெண்ணிலவே...
நீ தான் என் கண்ணில் பெண்ணிலவே

மண்ணில் என்று நீ பிறந்தாய்?
கண்ணில் அன்றுதான் விழுந்தாய்
மின்னல் வேகத்தில் புகுந்தாய்
உன்னை என்னிலே தைத்தாய்

உருகும் பனிமலை நீ தான்
உருக்கும் சூரியன் நான் தான்
உருகி உருகியே நதிபோல் வருவாய்
மலரும் பூக்களில் நீ தான்
உலவும் காற்றிலே நான் தான்
ஏறி என்னிலே எங்கும் வருவாய்

என்ன என்ன என்ன மாற்றம்
என் உடலில் இன்று....
என்ன என்ன என்ன வேகம்
என் உயிரில் இன்று..

நீ தான் என் காதல் வெண்ணிலவே...
நீ தான் என் கண்ணில் பெண்ணிலவே

நான் பாடும் பாட்டிலே
நீ தான் என் ராகமே
என்னுள் இருந்தே நீ ஒலிப்பாய்
என்னைக் கொண்டே நீ ஜெயிப்பாய்
நீ தான் என் காதல் வெண்ணிலவே...
நீ தான் என் கண்ணில் பெண்ணிலவே

பாடல் வரிகளில் நீ தான்
பாடும் ராகத்தில் நான் தான்
இசையின் கானமாய் எங்கும் செல்வாய்
வாட்சப் கூகுளில் நீ தான்
ஆண்ட்ராய்ட் ஆப்பிளில் நான் தான்
இணைய உலகினை என்னில் காண்பாய்

சின்ன சின்ன சின்ன ஊடல்
நம் வாழ்வில் வேண்டும்
இன்னும் இன்னும் இன்னும் மோதல்
நம் அன்பைக் கூட்டும்

En swasak kaatrile
Enai theendum thendrale
Viliyin moliyaal nee vithaithaai
Seviyin valiyaal nee selithaai

Nee thaan en kadhal thevathaiye
Nee thaan en kanavin kaarigaiye

Nee thaan en kaathal vennilave
Nee thaan en kannil pennilave

Mannil endru nee piranthaai?!
Kannil andruthaan vilunthaai
Minnal vegathil pugunthaai
Unnai ennile thaithaai

Urugum panimalai nee thaan
Urukkum soriyan naan thaan
Urugi urugiye nathipol varuvaai
Malarum pookalil nee thaan
Ulavum katrile naan thaan
Eri ennile engum varuvaai

Enna Enna Enna matram
En udalil indru
Enna Enna Enna vegam
En uyiril indru

Nee thaan en kadhal vennilave
Nee thaan en kannil pennilave

Naan paadum paatile
Nee than en ragame
Ennul irunthe nee olippai
Ennaik konde nee jaiyupaai
Nee thaan en kadhal vennilave
Nee thaan en kannil pennilave

Paadal varigalil nee thaan
Paadum raagathil naan thaan
Isayin ganamai engum selvaai
Whatsup googleil nee thaan
Android Applil Naan thaan
Inaya ulaginai ennil kaanbaai

Chinna chinna oodal
Nam vaalvil vendum
Innum innum modhal

Nam anbaik kootum

15/09/2019

அழு(குனி)மித்ஷா நம்முன்னே ஆடு!



மயிலாடும் காட்டுக்குள் வாழுகின்ற ஆடு
மயிலாட்டம் தோகையினை வைத்திடவே எண்ணி
அழகுமயில் முன்னாலே ஆடியது போலே
அழு(குனி)மித்ஷா நம்முன்னே ஆடு!

கவிஞனாய் எங்கேனும் காட்டு!

எதுகையும் மோனையும் இல்லாத போதும்
புதுக்கவி என்றே புதிதாய்- செதுக்கிக்
கவியால் தினமும் களிப்புறும் நீயும்
கவிஞனாய் எங்கேனும் காட்டு!

14/09/2019

என்னுள் வெளிச்சம் தருவாயா?!



ஒளியைப் பூட்டிய அறைக்குள்ளே
ஒளிந்து கொண்ட என்னவளே
இருளின் கதவைத் திறந்துவைத்து
என்னுள் வெளிச்சம் தருவாயா?!

✍️செ. இராசா

#கிடுகிடுவென கடகடவென



#கிடுகிடுவென கடகடவென
அடிக்கும் உந்தன் உடுக்கை
அடிக்கும் உந்தன் உடுக்கை

தடதடவென படபடவென
எரிக்கும் தீய நெருப்பை
எரிக்கும் தீய நெருப்பை

சிடுசிடுவென விறுவிறுஎன
வளையும் உந்தன் திருக்கை
வளையும் உந்தன் திருக்கை

அடிபொடியென முடிமுடியென
அடித்து நொறுக்கும் திமிரை
அடித்து நொறுக்கும் திமிரை

ஜகஜகவென ஜிகுஜிகுவென
ஜொலிக்கும் முத்துச் சலங்கை
ஜொலிக்கும் முத்துச் சலங்கை

அரகரவென சிவசிவயென
முழங்கும் நாம கிருபை
முழங்கும் நாம கிருபை

#நிலா_பேசுகிறது



புவியுலா செய்கிற என்னுருவைக்
கவியுலா செய்கிற மாந்தரைப்போல்
கனவுலா செய்திட நினையாமல்
நனவுலா செய்திட நினைப்பவரே
நிலவுலா செய்திடும் முன்னாலே
நிலவென் சொல்லைக் கேட்பீரோ?!

ரவியைச் சுற்றியே வருகின்ற
புவியைச் சுற்றியே வந்தாலும்
ரவியில் ஒளியை உள்வாங்கி
புவியில் புன்னகை செய்பவனின்
நிலத்தை தொட்டிடும் முன்னாலே
நிலவென் சொல்லைக் கேட்பீரோ?!

செயற்கைக் கோளில் ஏறிக்கொண்டு
இயற்கைக் கோளுக்கு வருபவரே..
அரசியல் கொள்ளையர் கூட்டத்தை
அவ்விடம் தனியே விட்டுவிந்தால்
இஸ்ரோ சிவனார் துணைகொண்டே
இவ்விடம் ராக்கெட் ஏவிடலாம்!!

12/09/2019

#சொல்






சொல்லென்ற சொல்லே
சொல்லென்று சொல்லி
சொல்லியது என்னை...
சொல்லாமல் விடுவேனா?!
சொல்கின்றேன்!
சொல்பற்றிச் சொல்கின்றேன்!
சொல் பற்றிச்சொல்கின்றேன்!!

எண்ணங்கள் ஒலியானபோது
எழுந்த ஒலியே சொல்லானது!
சொல்லும் மொழி எழுத்தானபோது
சொற்கள் எல்லாம் வரியானது!
ஒலியும் வரியும் ஊடாடியபோது
மொழியின் அங்கம் உருவானது!

இங்கே
சொற்கள் என்பது
வெறும் சொற்கள் அல்ல
அது...
சொல்பவனின் அடையாளம்!

ஒருவேளை...ஒருவன்
சொல்லில் சாயம்பூசினால்?!
எப்படி அடையாளமாகும்?!
என்னதான் வர்ணம் பூசினாலும்
எண்ணத்தின் சொல்
எட்டிப் பார்க்காமலா போகும்?!

ஆனாலும்
சொல்லும் சொல்லைவிட
சொல்லே இல்லாத
மௌனம்தானே மதிப்பு வாய்ந்தது!

உண்மைதான்.... ஆனாலும்
உரிமைகள் பறிக்கப்படும்போது
ஊமையாக இருக்கலாமா?
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லாமல் விடுவது
சொல்குற்றமில்லையா?

ஆக....சொல் நீ சொல்!

அளந்து சொல்
ஆய்ந்து சொல்
இனியதைச் சொல்
ஈவுடன் சொல்
உண்மையைச் சொல்
ஊறு இன்றி சொல்
எளிதாய்ச் சொல்
ஏசாது சொல்
ஐயமின்றி சொல்
ஒன்றைச் சொல்
ஓங்கிச் சொல்
ஔவியமின்றி சொல்
அஃதுன் உயர்குரலில் சொல்
அஃதும் திருக்குறள்போல் சொல்

சொல் புதிது! சுவை புதிது!
சொல்லும் பொருள் புதிது
பாடும் கவி புதிதென
பாரதிபோல் சொல்!

சொல்...இவர்களைப்போல் சொல்!

சொல்லில் பிறழாமையே
கற்பின் நெறியாகும்!
இது யாரும் சொல்லாத சொல்!
இது ஔவையின் சொல்!

வில்லம்பு வேகத்திற்கு
சொல்லம்பே ஈடு!
இதுவும் யாரும் சொல்லாத சொல்!
இது கம்பனின் சொல்!

சொல்...
சொன்னதையே சொல்லாமல்
சொல்லாததைச் சொல்!

அசைகளாள் ஆன சொல்லை
அழகுச்சீராய் அடுக்கி
தளையால் பிணைத்த சொல்லை
கவியால் மாலைகட்டி
மரபின் வழியால் சொல்!
மரபையும் புதிதாய்ச் சொல்!

சொல்....
சொன்னதாய் இருந்தாலும்
சுவையாய்ச் சொல்!
அதையும்
சுருங்கச் சொல்!

10/09/2019

பிரபலப் பதிவுகள் இருக்கும்போது

பிரபலப் பதிவுகள் இருக்கும்போது
பிற பலப் பதிவுகள் இருப்பதும்;

ஆபாசப் பதிவுகள் இருக்கும்போது
ஆ- பாசப்பதிவுகள் இருப்பதும்;

ஆத்திரப் பதிவுகள் இருக்கும்போது
ஆத்திகப் பதிவுகள் இருப்பதும்;

திட்டும் பதிவுகள் இருக்கும்போது
தீட்டும் பதிவுகள் இருப்பதும்;

ஆச்சரியமே....!!!

#காற்று


ஆகாயம் பெற்றெடுத்த
ஆகாச சூரன் நீ!
எங்கும் நிறைந்துள்ள
இரண்டாம் பூதம் நீ!
நெருப்பு நீர் நிலமாகி
நிற்கின்ற மாயோன் நீ!

சூரியக் கனல் அடுப்பை
சூத்திரக் கணக்கிட்டு
சத்திரக் கூரையிலே
சக்கரக் கவசமிட்டு
ஐந்தடுக்கு கோட்டைகட்டி
அனைவரையும் காப்போன் நீ!

இருதய இயந்திரத்தை
இயக்குகின்ற எரிபொருளாய்
உயிர்களின் கணினிக்குள்
உலவுகின்ற மென்பொருளாய்
பிறப்பிலே உள் வந்து
இறப்பிலே பிரிவோன் நீ!

தெற்கிலே தென்றலாகி
வடக்கிலே வாடையாகி
கிழக்கிலே கொண்டலாகி
மேற்கிலே கோடையாகி
கவியாகவும் உறவாடி
கஜாவாகவும் கலக்குவோன் நீ!

உன்னிடம் ஒரு கேள்வி!

மரம் விடும் மூச்சை
மனிதனுக்குத் தந்து
மனிதன் விடும் மூச்சை
மரத்திற்குத் தந்து
மாறிமாறி இயங்கவைத்து
மாயாஜாலம் செய்கின்றாயே...
வளிவைத்து நீ செய்யும்
வழி மாற்றும் வித்தையில்
வலியில்லையா உனக்கு?!!

உண்மையில்..
உன்மேல் விடும் புகையென்பது
உன்னைக் கெடுக்க அல்ல...
எங்களுக்கு நாங்களே வைக்கும்
எரிகொல்லியே...

எங்களை மன்னித்துவிடு..
எங்களுக்காக நீ செய்த
ஓசோன் போர்வையைத்தான்
ஓட்டையிட்டுக் கெடுத்தோம்!

எங்களுக்காக நீ செய்த
வானலை வீதியில்தான்
வானொலிகள் ஏற்றி வதைத்தோம்!

பாவம்...
எங்கள் சுயநலத்தில்
எங்களோடு மாய்வது
எத்தனையோ ஜீவ ராசிகள்தான்

இப்படியெல்லாம் நடக்குமென
எப்போதோ தெரிந்துதான்
புராணங்களில் எழுதி வைத்து
பரிகாரமும் செய்கிறோம்போல்
ஆம்..
ஆஞ்சனேயராய் மாற்றியே
ஆழிமேல் பறக்க விட்டோம்!
பீமனாய் மாற்றியே
பிரித்து மேயவிட்டோம்!

காற்றே...
நீ ஊதும் தருணத்தில்
பாய்ச்சலில் செல்வது
பாய்மரப் படகு மட்டுமல்ல..
பாய்ந்திடும் உயிரணுக்களும்தான்..

காற்றே...
நீ ஊதும் தருணத்தில்
வேகமாய்ச் சுற்றுவது
காற்றாலைக் கருவி மட்டுமல்ல
கன்னியின் கருவண்டமும்தான்..

உண்மையில்...நீதான்
இயற்கையை இசையூட்டும்
புல்லாங்குழல்!

உண்மையில்..நீதான்
உலகை உயிர்ப்பிக்கும்
நாதஸ்வரம்!

இங்கே...நீயின்றி இல்லை கானம்!
இங்கே....நீயின்றி இல்லை யாதும்!

(உறவுகளே.....பஞ்ச பூதங்களையும் கவிதையாகப் படைத்த திருப்தியோடு 😊😊😊😊😊🙏🙏🙏😊 நன்றி நன்றி)

✍️செ. இராசா

09/09/2019

#அன்பின்_மிகுதியில் (கிராமியப் பாடல் வடிவில்)


சொக்கா நல்லா போட்டுக்கிட்டு
முக்காப் பேண்டு மாட்டிக்கிட்டு
செட்டப்பண்ணப் போறீயாடா மாமா- நான்
மட்டப்பண்ணிப் போட்டுடுவேன் ஆமா!

நாக்கு மேல பல்லப்போட்டு
ஏட்டி போட்டி பேசிக்கிட்டு
பாட்டுப் பாட வேணாமுடி புள்ள- நான்
சீட்டுக்கட்டு ஜோக்கரொன்னும் இல்லை!

தொட்டுத் தொட்டுப் பேசிக்கிட்டு
வெட்டி வேலைப் பார்த்துக்கிட்டு
சிக்குமுக்கி கல்லப்போல நின்னை- நான்
உக்கிபோட வச்சிடுவேன் உன்னை!

கொட்டுந் தேளாக் கொட்டிக்கிட்டு
வெட்டும் வேலா வெட்டிக்கிட்டு
தப்புத்தப்பா பேசாதடி புள்ள- நான்
தப்புப்பண்ணும் ஆளுவொன்னும் இல்லை!

கட்டிக்கிட்ட என்னைவிட்டு
கண்டுக்காமல் ஓடிக்கிட்டு
எட்டிஎட்டிப் போவெதன்ன மாமா- வா
சண்டைபோட்டு பாத்திடலாம்! ஆமா!

ஆத்தாடி ஆத்தா...

08/09/2019

#தலைமகனே_கலங்காதே


நிலவுகாட்டி சோறுவூட்டி
.............. நின்றதோடு அன்று
உலவுகின்ற கோளெழுப்பி
...............ஓடவிட்டாய் நன்று!
விலகிவிட்ட மூடரெல்லாம்
..............வெற்றியினைக் கண்டு
கலங்கியதால் தோல்வியென்று
..............கத்துகிறார் இன்று!

முயற்சிகளின் சோதனையில்
..............முட்டிமுட்டிச் சென்றே
வியக்கவைக்கும் சாதனையில்
...............மின்னிடுவாய் மீண்டு(ம்)
அயற்சியின்றி சூரியனாய்
...............ஆற்றலோடு நின்றே
தயக்கமின்றி சென்றிடுவாய்
...............சத்தியமே வெல்லும்!!

✍️செ. இராசா

பிரதமர் சொன்ன ஆறுதல் வரிகள்
********************************
"அறிவியலில் வெற்றி அல்லது முடிவை நோக்கி குறிவைக்க கூடாது. சோதனைகளைதான் செய்ய வேண்டும். அந்த சோதனை முயற்சிகள் வெற்றிக்கு அழைத்து செல்லும்”

(எவ்வளவு அருமையான உண்மை)

#மண்






ஒரு மண்ணும் இல்லையென
யாரேனும் சொன்னால்
கவலைப்படாதீர்!

இங்கே மனிதனை விட
மண் ஒன்றும் மட்டமில்லை; ஆம்
மண் என்றும் மட்டுமில்லை

ஒருவேளை..
மண் என்றால் மட்டமெனில்
மண்ணிற்கு ஏன் இத்தனை அடிதடி?

வரலாற்றுப் பக்கங்களின்
வருகைப் பதிவேட்டைப் புரட்டுங்கள்;
மன்னர் கணக்காய் இருப்பதெல்லாம்
மண்ணாண்டோர் கணக்கே..:

வரப்புகளை இடம்மாற்றும்
வாய்க்கால் சண்டை முதல்
எல்லையில் கோடமைக்கும்
எதிரிநாட்டு சண்டை வரை
மண்ணில் நடப்பதெல்லாம்
மண்ணிற்கான சண்டையே...

ஆம்...இங்கே
தசரதச் சக்கரவர்த்தி முதல்
தருதலைச் சக்கரவர்த்திகள் வரை;
துரியோதனாதி முதல்
ஆல்பெர்ட் ஜியார்ஜ்வரை;
ஜவகர்லால் நேரு முதல்
நரேந்திர மோடி வரை;
ஆள்வோர் அனைவருமே
ஆள்வது மண்ணினையே..

மண்ணை வென்றதாய்
மமகாரம் கொள்ளாதீர்!
மண்ணே வெல்வதை
மரணத்தில் உணர்வீர்!

ஆனாலும்
சொந்த மண்ணின்றி
நொந்து சாவோர்க்கே
மண்ணின் மகத்துவம்
மண்டையில் உரைக்கிறது!

இங்கே...
மண் மட்டும் இல்லையெனில்
மரங்களுக்கு ஏது இருப்பிடம்!
மரங்கள் மட்டும் இல்லையெனில்
உயிர்களுக்கேது உறைவிடம்!

எனவே
மண்ணே மூலம்!
மண்ணே ஞாலம்!
மண்ணே ஞானம்!
மண்ணே எல்லாம்!

நிலமின்றிப் போகுமாயின்
நீர் இளைப்பாற இடமுண்டு
நிலமின்றிப் போகுமாயின்
நீர் இளைப்பாற இடமுண்டா?!

ஆமாம்...
மண்ணைப் பெண்ணென்று சொன்னது
சீதையைப் பிரசவித்ததற்காக அல்ல
பொன்னையும் பொருளையும்
தன்னகம் கொண்டதால் மட்டுமே..

எது எப்படியோ?!

கரி புதையுண்டால்
வைரமாகும்..
மனிதா நீ புதையுண்டால்
என்ன ஆவாய்?!
மண்ணாவாய்..
மறந்துவிடாதே...

மாண்புமிகு மண்ணாவாய்..

✍️செ. இராசா

07/09/2019

சுட்ட மீனோடு கப்பக் கிழங்கு வச்சு


சுட்ட மீனோடு
கப்பக் கிழங்கு வச்சு
பழைய மீன்குழம்பை
பக்கத்துல ஊத்தி வச்சு
அவிச்ச கடலைய
அதுகூட உடைச்சு வச்சு
அத்தை மகள் கூட
அத்தனையும் தொட்டாக்கா....
அட அட அடா.......

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே...




முத்து விளைவிச்ச
கத்தாரு தேசத்தில
முத்தாய்ப் நீ பூத்த
முத்தான தருணத்த
இப்ப நினைச்சாலும்
அப்பப்பப புல்லரிக்கும்!


சொடக்கிடும் வேகத்தில்
படக்கென்று வந்ததுபோல்
பத்து வருசங்களும்
பறந்தோடிப் போயிடுச்சு!

அப்பா அப்பான்னு
அப்பாவ சுத்தி வந்த
அப்பாவ நீ சுத்தி
அப்பான்னு சொல்லயில
அப்பா அப்பப்பா....
எப்போதும் மின்னலப்பா...!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே...

06/09/2019

மலரின் வண்டாய்-





மலரின் இதழில் மதுவினைத் தேடி
வலம்வரும் அற்புத வண்டாய்- அழகே
உனையே நினைந்திங்(கு) உலவிடும் என்னை
அனுமதி தந்தே அணை!

கரைந்தும் கரையா கணபதி போலே



கரைந்தும் கரையா கணபதி போலே-நான்
கரைந்து உருகிக் கரைகிறேன் மானே!
புரிந்தும் புரியா புதுக்கவி போலே-நீ
புரியாப் புதிராய் இருப்பது வீணே!

✍️செ. இராசா

#RANU_MARIA_MANDAL #ராணு_மரியா_மண்டல்


In English, the word “#Potential” is always saying something to me.

Yes, the man who is having any special potential with him, he should always concentrate and increase his potential at any cost or any time, even if he doesn’t get any opportunity/success in the beginning/middle of his life. But this potential will explode one day heavily. Until that wait...wait...wait...but increase your potential. Sure it will blast like Ranu Maria Mondel.

நேற்றுவரை வெறும் ரயில்ப்பாடகி!
யாரோ சிலர் போடுகின்ற
சில்லறைக்காசுகள்தான்
இவரின் பாடலுக்கான அங்கீகாரம்!
ஆம்...
அன்று அவரின் வயிற்றை மட்டுமே அடைத்தது அந்தக் காந்தக் குரல்
ஆனால்...இன்று
அகிலத்தின் காதுகளில் எல்லாம்
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது!
🎼🎼🎼🎼🎼🎼

இதை
விதி என்று சொன்னாலும்
விதியின் விதை யார் போட்டது?!
விதை மட்டும் வீரியமாய் இருந்தால்
அது வெடித்துத் துளிர்த்தே தீரும்...
கண்டிப்பாக வெடிக்கும்!!
காத்திருங்கள்!!
இந்த இசை மங்கையைப்போல்....

✍️செ. இராசா

05/09/2019

கண்ணீர்

வெற்றிக் களிப்பில்
வேகமாய்ப் பிறக்கிறது
கண்ணீர்
(1)

அன்பின் உச்சம்
அழுத்தமாய்ப் பதிகிறது
கண்ணீர்த் துளிகளில்
(2)

நவீன இந்தியாவில்
நாளுக்குநாள் கூடுகிறது
#கண்ணீர்...
(3)

04/09/2019

இருப்பு குறைந்திட

இருப்பு குறைந்திட இன்பம் குறையும்
இருப்பு நிறைந்திட இன்பம் நிறையும்
இருப்பதை எண்ணியே இன்புறல் நீக்கி
இருப்பதை இன்புற ஈ!

03/09/2019

இரைதேடும் பறவைக்கு ....




இரைதேடும் பறவைக்கு
இரைவைக்கும் ஒருவன்
இரைவைத்த பின்னால்தான்
இரையுண்ணப் போவான்!!!

இரைபோடும் பழக்கத்தில்
இரைவதைக் கண்டால்
இரைதரும் இவனே
இறைவனாய்த் தோன்றும்!!

இரைபோடும் அந்நாளில்
இரையிடும் போதே
இரையுண்ணும் பறவைகள்
இரையாவதும் கண்டான்!!

இரையுண்டு கொழுவெடுத்த
இரக்கமிலாப் பூனை
இரையென்று தின்றதனால்
இரைந்தானொரு கல்லை!

இரையாகும் சங்கிலியை
இறைசெய்த போது
இறை எதை ஆய்ந்தானோ
இறைவனிடமே கேட்போம்!!

✍️செ. இராசா

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_கதை


முன்னுரை
**********
அக நானூற்றிலும்
புற நானூற்றிலும்
சிலப்பதிகாரத்திலும்
சிற்சில இலக்கியத்திலும்
கரிகாலற் சோழன் பற்றி
கண்டபல பதிவுகளை
சகமறிய செய்துதந்த
சகந்நாதர்* அடி தொட்டு
அடியேனும் இக்கதையை
அடிசுருக்க முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அன்னைபோல் பொறுத்தருள்வீர்!

சோழ முன்னோர்கள்
********************
எச்சோழன் முதற்சோழன்
அச்சோழன் நாமறியோம்!
முற்சோழன் வழி வந்த
நற்சோழன் கதையிதுவே!!

#இளஞ்சேட்சென்னி என்னும்
இளஞ்சோழன் ஒருவனுக்கு
#அழுந்தூரான்_மகளொருத்தி
அரசியாய் வந்திருந்தார்!

சோறுடைத்த சோழநாட்டில்
சோழனுக்கு வாரிசில்லை!
சோகத்திலே மூழ்கியவன்
சோர்வுடன் இருக்கையிலே
அனைவரும் மகிழுமாறு
அரசியார் கருவுற்றார்!

ஆயினும் அம்மகிழ்ச்சி
அதிகநாள் தொடராது
ஏதோ நோய்வந்து
இளஞ்சோழன் மாண்டுவிட
சோழநாட்டு மண்மீது
சோகமேகம் கவ்வியது!!!

திருமா வளவன் பிறப்பு
**^****^************
கருவுற்ற சேதியினை
ஒருவருக்கும் சொல்லாமல்
இராணியை இடம் மாற்றி
இரகசியம் காத்து வந்தார்;
#இரும்பிடர்_தலையாரெனும்
அருங்குணத் தமையனார்!

சாதகக் கணக்கொன்று
சாதகமாய் வருமானால்
தங்கையின் வாரிசு
தரணியையே ஆளுமென
மூன்று நாழிகைகள்
மூச்சடக்க வேண்டினார்!

தலையானார் சொல்படியே
தலைகீழாய்த் தாய்தொங்கி
#திருமாவளவன் எனும்
திருமகனை பெற்றெடுத்து
வரலாற்றின் பக்கத்தில்
வீரத்தாய் இடம்பிடித்தார்!

கொலை முயற்சி
****************
மகன் பிறந்த சேதியினை
மாயமாய் வைத்திருந்தும்
அவன் வளரும் சேதியோ
அனல் காற்றாய்ப் பரவிவிட
கயவர்கள் கூட்டமொன்று
கவ்வியது வளவனை!

தங்கையின் மனவலியைத்
தாங்காத தமையனும்
வளவனைக் காணாமல்
வருவதில்லை எனச்சொல்லி
உறுதிபூண்டவராய்
ஊரூராய்த் தேடினார்!

கரிகாலன்
**********
எங்கே எங்கேயென
எல்லைவரைச் சென்றபோது
எரியும் குடிசையொன்றில்
வளவன் குரல் கேட்டார்!

கதவை உடைத்தெறிந்து
காளையைக் கண்டபோது
எரிந்த காலோடு
இளவரசு ஓடி வந்தான்!

திருமாவளவன் எனும்
திருநாம இளவரசன்
கருகிய காலாலே
#கரிகாலன் என்றானான்!

யாருக்கும் தெரியாமல்
ஊருக்கும் திரும்பாமல்
கருவூரின் ஒரு ஓரம்
கரிகாலன் வளர்ந்து வந்தான்!

அரசியல் குழப்பமும் தீர்வும்
***************************
இளவேந்தன் இருந்திருந்தால்
என்றைக்கோ வந்திருப்பான்
இல்லாத ஒருவனுக்கு
இதற்குமேல் பொறுக்க வேண்டாம்!

அரசனாய் ஆள்பவனை
அரன் வந்து சொல்லட்டும்!
கோவில் யானையிடம்
கொடுத்திடுவோம் மாலையினை;
கழுத்தில் விழும் மாலை
காட்டட்டும் மன்னவனை!

அனைவரும் முடிவுசெய்து
அவிழ்த்துவிட்ட யானையோ
ஓடியது ஓடியது
எல்லை வரை ஓடியது
ஓடிக்களைத்த யானை
ஒதுங்கியது கருவூரில்

என்ன ஆச்சிரியம்?!
எதிர் பட்டான் “கரிகாலன்”
கழுத்தில் மாலை விழ
இளவரசே மன்னனான்!

வெண்ணிப்போர்
****************
சின்னப் பையனுக்கு
என்ன தெரியுமென
சின்னக் கணக்கிட்டார்
சிறுநில மன்னரெல்லாம்!

#பதினோரு_மன்னரோடு
#பாண்டிய_மன்னனும்;
#பெருஞ்சேர_லாதனெனும்
#பெருஞ்சேர_மன்னனும்;
சுருங்கிய மனத்தோடு
பெரும்படை திரட்டிவந்தார்!

இளங்கன்று ஆனாலும்
பயமின்றிப் பாய்ந்துவந்த
கரிகாலன் வீரம் கண்டு
கலங்கிவிட்டார் அனைவருமே!

பலமில்லா வேளிர் படை
குலமழிந்து ஓடியது..!
பாண்டிய மன்னர் படை
மண்டியிட்டு கதறியது...!!
பெருஞ்சேர மன்னர் படை
குருதியாற்றில் குளித்தது..!!!

இளஞ்சோழன் விட்ட அம்பு
பெருஞ்சேரன் நெஞ்சில் பட;
பொசுக்கென்று குருதியோடு
புகந்த அம்பு முதுகில்வர;
கன்னிப்போர் கண்டவனால்
காயம்பட்ட காரணத்தால்;
பலபோர் கண்ட சேரன்
பரிதவித்து உயிர் நீத்தான்!

வெண்ணி ஊரில்
கண்ட போரில்
வெற்றி பெற்ற கரிகாலன்;
மக்கள் அனைவராலும்
மதிப்பு மிக்க மன்னனானான்!

சோழத் தமிழ் நாடு
********************
அடிக்காமல் விட்ட பாம்பு
அடிக்கடி வருவதுபோல்;
மீண்டும் ஒரு கூட்டம்
மாண்டிட ஆசையுற்று;
வாகை எனும் ஊரில்
வாங்கிக்கட்ட வந்தார்கள்!

#எயினர்_நாகர்_ஒளியரென
எண்ணிக்கையில் ஒன்பதென
வந்த கூட்டம் அத்தனையும்
நொந்த கூட்டம் ஆகிநின்றார்!

இப்படியே விட்டுவிட்டால்
இனியும் வருவாரென
தமிழ்நாடு அத்தனையும்
தன்நாடாய் மாற்றிவிட்டான்!

சோழ இந்திய நாடு
*******************
பெரும் படை சேர்த்தபின்னே
பெருந் தேசம் வேண்டாமா?!
எல்லை விரிவடைய
இமயம் வரை போர் தொடுத்தான்!

சோழமலை சோழன்ஏரி
சோழன் பெயர் சொல்வதனை
சிக்கிம் பற்றி தேடிடுங்கள்
விக்கிகூட** சொல்லிடுவான்!

இமயம் வரை சென்ற வேந்தன்
ஏற்றி வைத்த புலிக்கொடியால்
வடநாட்டில் சிலமன்னர்
வரும்வழியில் போர்தொடுத்து
வலியெடுக்க வாங்கிக்கொண்டார்!
வரவேற்று(ம்) உபசரித்தார்!

காவிரிபூம்பட்டிணம்
********************
கண்ட வெற்றி அத்தனையும்
காண வைக்கும் சாட்சியாக
#அவந்தி_நாட்டு_மன்னன் வந்து
அழகுத்தோரண வாயில் செய்தான்!
#மகத_நாட்டு_மன்னன் வந்து
மண்டபத்தை கட்டி வைத்தான்!
#வச்சிர_நாட்டு_மன்னன் வந்து
முத்துப்பந்தல் செய்து தந்தான்!

இன்னும் இன்னும் எத்தனையோ
மின்னும் மின்னும் மண்டபங்கள்
நகரைச் சுற்றி கட்டி வைத்தான்
நாட்டை ஆண்ட கரிகாலன்!

கல்லணை
**********
பொங்கி வரும் காவிரியை
பொறுமையோடு அணையிட்டால்
நீர் வளத்தைப் பெருக்கிடலாம்!
நில வளத்தை உயர்த்திடலாம்!
எண்ணிய எண்ணம்போலே
எழுப்பிவிட்டான் கல்லணையை!

அழிவில் செய்த பட்டணமோ
ஆழியிலே மூழ்கியது!
ஆக்க செய்த கல்லணையோ
அவன் பெயரைச் சொல்கிறது!

உறையூர்
*********
இரண்டாம் தலைநகரம்
இப்போது பேசுகிறார்!
அன்றைக்கே அமைத்திருந்தான்
அன்றைய தமிழ் மன்னன்!

கல்லணையை பார்வையிட்டு
கரிகாலன் வரும்போது
பறந்து வந்த கோழி ஒன்று
பருந்துபோல கொத்தியதில்
துடிதுடித்த யானை கண்டு
துடிப்போடு யோசித்தான்!

அற்புத மண்ணில்தான்
அதிசயம் உறையுமென
உறையூர் மண்ணையே
உறைவிடமாய் மாற்றிவிட்டான்!
இரண்டாம் தலைநகரம்
இதுவென்றே கொக்கரித்தான்!

முடிவுரை
********
வீரனாய் வாழ்ந்த வேந்தன்
வள்ளலாய் வாழ்ந்த வேந்தன்
கல்லணையின் திறம்போலே
காலமெல்லாம் நிற்கின்றான்!- இன்று
ஞாலமெல்லாம் தெரிகின்றான்!

வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் மன்னவனை!
வாழ்க தமிழ் மன்னா!
வாழ்க நின் புகழ்!

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_வாழ்க

02/09/2019

பேரியக்க மண்டலமே பிள்ளையார்



பிள்ளையார் யாரென்று பிள்ளைகள் கேட்கையில்
பிள்ளையார் தெய்வமென பிள்ளைக்கு சொல்லுமுன்
பேரியக்க மண்டலமே பிள்ளையார் என்கின்ற
பேருண்மை சொல்வாய் இனி!

✍️செ. இராசா

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்😊😊😊