29/07/2018

வேண்டும் நீ என்னோடு

உன்னோடு இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
உனைவிட்டுப் பிரிந்தாலோ
உலகமே தெரிவதில்லை

என்னோடு நீ இருந்தால்
என்னுணர்வு எனக்கில்லை
எனைவிட்டு நீ பிரிந்தால்
என்றைக்கும் நானில்லை

உயிராக மெய்யாக
உயிர்மெய் உணர்வாக
உள்ளத்தில் நீ இருந்தால்
உணவேதும் தேவை இல்லை....

அன்பான என்னுறவே...
அழகான நல்லுறவே....
என்கவியே...நீ இருந்தால்
எனக்கேதும் தேவை இல்லை...

28/07/2018

உணவே மருந்து (குறளின் குரலில்)


உடம்பில் மூன்று காரணிகள்
உடம்பை நலமுடன் வைத்திடுமே!
மூன்றின் சமநிலை கெடுமென்றால்
தோன்றிடும் நோய்கள் நிச்சயமே!

மண்சார் உணவை உட்கொண்டால்
எண்சாண் உடம்பு பிழைத்திடுமே!
எண்ணெய்கள் இல்லா உணவுண்டால்
பிணிகள் தூரமாய் விலகிடுமே!

பசித்துப் புசிக்கப் பழகிவிட்டால்
பலநாள் பூமியில் வாழ்ந்திடலாம்!
உமிழ்நீர் குழைத்து உட்கொண்டால்
உடலை நோயின்றிக் காத்திடலாம்!

✍️செ.இராசா

25/07/2018

கருவாயன் நான்

என் கரு விழிக்குள்
அகப்பட்ட கவிதாவின்
அன்புக் கவிதைக்குள்
சிறைப்பட்ட கருவாயன் நான்

24/07/2018

இல்லத்தரசி


இல்லாள் இருக்கிற இல்லத்திலே
இல்லா தென்பதே இல்லையய்யா..
இல்லாள் இல்லா இல்லத்திலோ
இல்லா தென்பதே இருக்குமய்யா..

பொல்லா வினைகள் தொடர்ந்தாலும்
இல்லாள் துணையால் ஓடுமய்யா...
சொல்லா சொற்கள் சுட்டாலும்
இல்லாள் சொல்லால் ஆறுமய்யா...

கல்லாய்க் கணவன் இருந்தாலும்
இல்லாள் கண்ணில் கடவுளய்யா..
எல்லாப் பிணக்குகள் இருந்தாலும்
இல்லாள் நமக்கும் தெய்வமய்யா...

22/07/2018

யார் சொன்னது நான் ஏழையென்று?



காற்றை உடையாக்கிய சித்தன் நான்
கல்லை கலையாக்கிய சிற்பி நான்
மண்ணை ஆளுகின்ற மன்னன் நான்
விண்ணை அளக்கின்ற கவிஞன் நான்

யார் சொன்னது நான் ஏழையென்று?

✍️செ. இராசா

பட உதவி: திரு. Sekar Govindasamy அவர்கள்

21/07/2018

தேவதைகளே கவனம்


உருவத்தில் மனிதர்களாய்
உள்ளத்தில் மிருகங்களாய்
உலவுகின்ற சில இனங்கள்
உலகத்தில் இருப்பதினால்
தேவதைகளே கவனம்...

உறவைப் பயன்படுத்தி
உன்னை நெருங்குகின்ற
உத்தம நடிகர்களே
உலகத்தில் இருப்பதினால்
தேவதைகளே கவனம்.....

கடவுள் பெயராலே
காரியம் நடத்துகின்ற
காமப் பித்தர்களே
எங்கிலும் இருப்பதினால்
தேவதைகளே கவனம்...

வாப்பா வயதினரும்
தாத்தா வயதினரும்
சாத்தான் ஆகுகின்ற
சாத்தியம் இருப்பதினால்
தேவதைகளே கவனம்....

இருள் நீங்கும் ஒளியேற்றி---112வது களஞ்சியம் கவிதைப் போட்டி---கிடைத்த இடம்: முதலிடம்



112வது களஞ்சியம் கவிதைப் போட்டி
************************************
கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்_________: கவிஞர் திரு. வாலிதாசன் அவர்கள்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா


 https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2121685094817062/

ஏதேதோ கவி செய்தேன்
எனக்கேதும் திருப்தி இல்லை
என்னிறைவா உனைப்பாட
எனக்கிங்கே தகுதி இல்லை

இருந்தாலும் உனைப்போற்ற
இளங்கவி நான் முயலுகின்றேன்
இறுமாப்பில் சொல்லவில்லை
இறையன்பில் சொல்லுகின்றேன்

ஒரு பானை சோற்றுக்கு
ஓரு சோற்றைப் பதமென்பர்
ஒரு இனத்தின் பெருமைக்கு
ஒரு நூலே சான்றென்பர்

அறம் பொருள் இன்பம் சொல்லும்
அறநூலாய்த் திகழ்கின்ற
அந்நூலே நம்மினத்தின்
அடையாளம் என்று சொல்வேன்..

தமிழரினம் பெருமை கொள்ளும்
தமிழ்மறையே உனைப்பாடி
தமிழனாக என்கவியில்
தன்னிறைவு அடைகின்றேன்

இருள் நீங்கும் ஒளியேற்றி
இடர் நீங்கும் வழிகாட்ட
இறைசொன்னத் தமிழ்மறையை
இமயத்திலும் உயர்வென்பேன்..

தமிழ்த்தாயின் தவப்புதல்வன்
தரணிக்கு செய்ததினை
தமிழடியேன் நானிங்கே
தமிழ்கொண்டே வாழ்த்துகிறேன்

வாழ்க தமிழ்மறை!
வாழ்க தமிழ்த்தாய்!

✍️செ. இராசா

19/07/2018

எது வீரம்?!


எண்ணிக்கை என்பது பொருட்டல்ல
எண்ணத்தின் வலிமையே பொருட்டாகும்
வெற்றியும் தோல்வியும் முடிவல்ல
காட்டிடும் வீரமே பொருட்டாகும்

பாரதப் போரின் நிகழ்வினிலே
பாண்டவர் படைகள் ஏழோடு
பதினோரு அக்ரோனிப் படைமோதி
பகைவரை வென்றது வீரமன்றோ?

ஈழப் போரின் முடிவினிலே
உலகத்துப் படைகள் அத்தனையும்
எதிரியின் படையுடன் இருந்தாலும்
எதிர்த்த நெஞ்சுரம் வீரமன்றோ?!!

✍️செ. இராசா

கடவுள் யார்



கடவுள் யார் என்றக்கேள்விக்கு
கவிதை படைத்திட வேண்டுமென்று
உடன் பிறக்கா உறவொன்று
உடனே தரும்படி வேண்டியதால்
எனக்குள் இருக்கும் சிந்தனையை
எளிதாய் எழுதிட முயலுகின்றேன்!
............................................

யார் கடவுள்? கேள்வியினை
எது கடவுள்? என மாற்றி
உந்தன் கேள்வியின் விடைதேடி
உன்னுள் நீயே உட்கடந்து
உள்ளத்தின் அடியினில் சென்றாலே
உன்னுள் கடவுளைக் கண்டிடலாம்!

அகிலத்தில் உள்ள அத்தனையும்
அணுவின் சேர்க்கை என்றறிந்தால்
மண்ணும் மரமும் மனிதர்களும்
விண்ணும் பொன்னும் கற்சிலையும்
ஆனதன் அறிவியல் புரிந்துவிடும்!
ஆண்டவன் அற்புதம் விளங்கிவிடும்!

உண்மைப் பொருளை அறிவதற்கு
உன்னதப் பாதை காட்டிடவே
உலகில் மதங்கள் வந்தாலும்
மதங்களின் அர்த்தம் தெரியாமல்- தன்
மதமே உயர்வென நினைப்போரால்
மண்ணில் பூசல்கள் நடக்கிறது!

ஆன்மா மீகம்(உயர்வு) அடைகின்ற
ஆன்மீகப் பொருளை நன்குணர்ந்து
அறத்துடன் பொருளை சேர்க்கின்ற
அறநெறி வாழ்வைக் கற்றுணர்ந்து
அகிலத்தை அன்புடன் நேசித்தால்
அதுவே கடவுள் என்றுணர்வாய்!

✍️செ. இராசா

தலைப்பு: Muthu தம்பி
— with Muthu.

சென்ற வினைகள்



நேற்று இருந்த ஒன்று
இன்று இல்லை ஐயா......
இன்று இருக்கும் ஒன்று
என்றோ போகும் ஐயா?!!

அன்றும் இன்றும் என்றும்
ஒன்று உண்மை ஐயா...
நன்றும் தீதும் என்றும்
சென்ற வினைகள் ஐயா..

✍️செ. இராசா

சற்றும் அசராமல்



சற்றும் அசராமல் சுற்றிடும் புவியினில்
முற்றும் துறந்தவர் பெற்றிட்ட ஞானத்தை
விற்றிடும் நூல்களில் கற்றிடும் நண்பர்கள்
கற்றதை வாழ்வினில் பற்றிடும் போதினில்
வற்றிடும் துன்பமே! பெற்றிடும் இன்பமே!

18/07/2018

நெஞ்சு வெடிக்கிறதே



என்ன நடக்கிறது- இங்கே
என்ன நடக்கிறது?
பிஞ்சுக் குழந்தையினை ...ஐயோ
நெஞ்சு வெடிக்கிறதே...

என்ன இருந்தென்ன- இங்கே
என்ன இருந்தென்ன?
கொட்டம் அடக்கிடவே- இங்கே
சட்டம் சரி இல்லையே.....

எதற்கும் எல்லை உண்டு- இங்கே
எதற்கும் எல்லை உண்டு.
நமக்கும் பிள்ளை உண்டு-இங்கே
நமக்கும் பிள்ளை உண்டு

போதும் போதுமய்யா - நாம்
பொறுத்தது போதுமய்யா
இனியும் பொறுத்திருந்தால்- நம்
இழப்புகள் கூடுமய்யா...

ஓங்கிக் குரல்கொடுப்போம்- நாம்
ஒழித்துக் கட்டிடுவோம்....
காமக் கொடூரர்களை- நாம்
காவு வாங்கிடுவோம்....

17/07/2018

கவிச்சரம்- 103 -----உரிமைகள்

தலைப்பு : உரிமைகள்
+++++++++++++++++++++

தமிழ்த்தாய் வணக்கம்
**********************
அகிலத்து மொழிகளிலே
ஆதியிலே பிறந்த மொழி!
அத்தனை மொழிகளுக்கும்
ஆதாரம் ஆனமொழி!
அம்மொழியைப் பெற்றெடுத்த
அன்னையினை வணங்குகிறேன்!


தலைமை வணக்கம்
*******************
அகிலத்தின் பொதுமொழியாம்
ஆங்கிலத்தைப் பயின்றாலும்
அழகுத்தமிழ் செம்மொழியில்
அருங்கவிதை படைக்கின்ற
கவிச்சரத் தலைமையினை
கவிதையினால் வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
*****************
பரிசும் சான்றிதழும்
பாராட்டுப் பத்திரமும்
எதனையும் எதிர்பார்க்கா
எத்தனையோக் கவிஞர்கள்
எழுத்தில் சிறக்கின்ற
எந்தமிழ்ப் பட்டறையை
எளிய கவிஞன்நான்
எம்கவியால் வணங்குகின்றேன்!

உரிமைகள்
***********
மக்களாட்சி தத்துவத்தின்
மகத்துவமாய்த் திகழ்கின்ற
உரிமைகளே நம்முடைய
உடைமையென உணர்ந்திடுவோம்!
உயிரான உரிமைகளை
உருக்குலைக்க முயல்வோர்க்கு
போராட்ட உரிமையினால்
யாரென்று காட்டிடுவோம்!

மொழியுரிமை
**************
நம்முடைய மொழிதானே
நம்முடைய அடையாளம்.....
நம்மொழி அழியுமெனில்
நாமிருந்து என்ன பயன்?!!
நம்முடைய எண்ணங்களை
நம்மொழியில் வெளிப்படுத்த
நமைத் தடுக்கும் அதிகாரம்
நாட்டிலே யாருக்குண்டு?!
அப்பாவின் முதல் எழுத்தை
ஆங்கிலத்தில் போடச்சொன்ன
கையெழுத்து முறைமையினை
தமிழெழுத்தாய் மாற்றிடுவோம்..
முகநூலில் வாழ்த்துகின்ற
முத்தான வாழ்த்தெல்லாம்
சத்தான தமிழ்கொண்டே
நித்தமும்நாம் வாழ்த்திடுவோம்...

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையிலே
கவிஞர்கள் சபையிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையை
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

16/07/2018

இயற்கையின் மடியினில்



இயற்கையின் மடியினில்
இளைப்பாறும் நொடிகளில்
கனங்கள் இலகுவாகும்
கணங்கள் நினைவாகவும்

காண்பதெல்லாம் நீயன்றோ


அதிகாலைப் புலருகின்ற
.....................கதிரவனில்
அழகான... நின்முகத்தைக்
....................காணுகின்றேன்

இலைநுனியில் தொங்குகின்ற
.....................பனித்துளியில்
இனிதான.... நின்இதழைக்
.....................காணுகின்றேன்

காக்கைகளின் கரியநிறச்
...................சிறகினிலே
கவிதா உன்கண்ணழகைக்
.....................காணுகின்றேன்

பூக்களினை நுகருகின்ற
...................பொழுதினிலே
மூக்கில்மோதும் (சு)வாசமாக
...................உணருகின்றேன்

என்னுயிரை இயக்குகின்ற
....................தமிழ்மொழியில்
என்னவளே...நின் இருப்பைக்
....................காணுகின்றேன்!

அண்டம்முதல் பிண்டம்வரை
.......................அத்தனையும்
அடியேநான்...காண்பதெல்லாம்
.....................நீயன்றோ?!!

15/07/2018

கவிதைப்_பெண்ணுடன்_நான்



அணைக்குள் பிடிபட்ட நதிபோல்- என்
அணைவுக்குள் அகப்பட்டக் கவியே-என்
ஆசைக்கு இல்லையடி தாழ்ப்பாள்?!-உன்
அன்பிலே பொங்குதடி கவிப்பால்!

காவிரியால் மகிழ்கின்ற உழவனைப்போல்
கவியினால் மகிழ்கின்ற காதலனே-நீ
காதலிக்கும் நங்கையிந்த கவிமகளை-நீ
காலமெல்லாம் காதலித்தால் இருப்பாள்!

ஆதலால் காதல் செய்...காதலா- தமிழ்க்
காதலால் கவிதை செய்... காதலா

#கவிதைப்_பெண்ணுடன்_நான்

கவிப்பால்

அவன்பால் கொண்ட அன்பால்
அதன்பால் வந்த ஈர்ப்பால்
களிப்பால் வரும் துடிப்பால்
கவிப்பால் தினம் படைப்பாள்!

நம்பிக்கை வை

நம்பிக்கை வை
நம்பி கைவை
நல்லதே நடக்கும்

14/07/2018

மாணிக்க வாசகரே,,,,,,,,,,,,,,



நீர் நடந்த பாதையிலே
யார் நடந்து போனாலும்
காணுகின்ற காட்சியெல்லாம்
ஆண்டவனின் திருவுருவே..

நீர் கொடுத்த வாசகத்தை
யார் பாடிக் கரைந்தாலும்
கண்ணீராய் வடிவதெல்லாம்
என்னிறைவன் பேரன்பே..

நீர் செய்த பக்தியினை
யார் செய்ய முயன்றாலும்
கவிதையாய் வருவதெல்லாம்
கடவுளின் பேரருளே...

நீர் வாழ்ந்த ஆலயத்தை
யார் சென்று பார்த்தாலும்
ஆத்மாவாய் உணர்வதெல்லாம்
ஆதியவன் அற்புதமே...

நீ நடந்த பாதையிலே
நான் நடந்து போவதற்கு
நாயிலும் நாயடியேன்
நானுன்னை வேண்டுகிறேன்....

மாசில்லா நேசரே
மாணிக்க வாசகரே
வேதம் தந்தநின்
பாதம் பணிகின்றேன்...

திருச்சிற்றம்பலம்....

✍️செ. இராசா

முகநூல்



அகத்தின் அழகெல்லாம்
முகத்தில் தெரியுமென்று
சகத்தில் சொன்னதன்று
நிசத்தின் நிசமன்றோ?!

அகநூல் கருத்தெல்லாம்
முகநூல் சொல்வதினால்
மனநூல் வடிவென்றே
முகநூல் உள்ளதன்றோ?!

13/07/2018

நயம்படப் பேசு (குறளின் குரலில் )


நாணில் கிழம்பிடும் சுடுசரம்போல்
நாவில் கிழம்பிடும் சுடுசொற்கள்
நம்மை நாமே வீழ்த்துகின்ற
நரகத்தின் படுகுழி என்றறிவோம்!

சொல்லிய சொற்கள் எல்லாமே
சொல்லின் பொருளைத் தரும்போது
சொல்லும் சொற்களின் விளைவாக
சொல்லே வெ(கொ)ல்லும் என்றறிவோம்

எண்ணங்கள் பெற்ற பிள்ளைகளாய்
இன்சொல் தீஞ்சொல் இருப்பதினால்
இன்பம் எங்கும் நிலைப்பதற்கு
இனிதே நயம்படப் பேசிடுவோம்!

✍️செ. இராசா

தாய்லாந்து




“தாய்லாந்து”

அன்று
உலகின் பார்வையில்
ஒரு மலிவான தேசம்

ஆனால்.. இன்றோ
உலகமேப் போற்றுகின்ற
உன்னத தேசம்

ஆம்
தாய்மை பூமியாய்
தலை நிமிர்ந்து நிற்கும்
அந்த தாய் தேசத்தில்
அன்று நடந்தது
வெறும் சம்பவமல்ல...
பெரும் ஆச்சரியம்.....
மயிர்கூச்சொறியும் ஆச்சரியம்...

பூமிப்பந்தின் பார்வை
கால்பந்து போட்டியில் இருந்த
அந்தத் தருணத்தில்...

புவிப் பந்தின் மறுபக்கம்
உலக அளவில் இல்லாமல்
உள்ளூர் அளவிலும் நடந்தது
சில சிறார்களின் கால்பந்தாட்டம்

பயிற்சி ஆட்டம் முடிந்தவுடன்
பயிற்சியாளர் துணையோடு
பனிரெண்டு சிறுவர்களின்
படையொன்று கிழம்பியது

சிறுவரில் ஒருவனின்
பிறந்தநாள் விழாவென்று
இனிப்போடு கிழம்பியது
இளஞ்சிறார் பட்டாளம்...

தாம்லுவாங் பெயர் கொண்ட
தாழ்வானக் குகை தேடி
பயமறியா இளங்கன்றின்
படையொன்று சென்றதங்கு

அணுமதி வாங்கித்தான்
அனைவருமே சென்றாலும்
முகப்பைத் தொடுகின்ற
முனைப்போடு சென்றவர்கள்,
பெருமழைக் கொட்டியங்கே
பெருவெள்ளம் புகுந்ததினால்
வெளியேற வழியின்றி
குகையின் உள்ளேயே
சிறைபட்டுப் போனார்கள்...

நீச்சல் தெரியாதோர்
நீர் கண்டு பயந்தார்கள்
வெளியேற வழியின்றி
உள்ளே...உள்ளே சென்றார்கள்

சரியான கும்மிருட்டில்
சகலரும் மாட்டிக்கொண்டு.....
குளிரில் நடுங்கியே
குருவோடு தங்கினார்கள்...

ஆழக் குகைக்குள்ளே
ஆக்ஸிஜனும் பத்தவில்லை...
உணவுக்கும் வழியில்லை
உடுத்தவும் உடையில்லை
..........
இப்படியே குகைக்குள்ளே
இருளோடு இருந்தார்கள்...
.....
மூச்சை நீட்டிக்கும்
மூச்சுப் பயிற்சியினால்
அனைவரின் உயிர்களையும்
ஆசிரியர் பிடித்து வைத்தார்
..........

பெற்றோரும் மற்றோரும்
பதறினார்கள்... கதறினார்கள்...
எங்கே வென்று எல்லோரும்
எங்கெங்கோ தேடினார்கள்...

அனைவரும் விட்டுச்சென்ற
அத்தனை பொருட்களும்
அவர்களின் இருப்பினை
அடையாளப் படுத்தியது...

தாய்லாந்து அரசாங்கம்- குகை
வாயில் கூடியது
தாய்லாந்து மக்களெல்லாம்
சேய் பிரிவால் வாடியது

எத்தனையோ திட்டங்கள்
எல்லாமே தோல்வியுற
என்ன செய்வதென்று
எல்லோரும் யோசிக்க

உள்குகை அமைப்பறிந்த
உள்நாட்டு வீரர்களும்
உள்நீச்சல் கற்றறிந்த
வெளிநாட்டு வீரர்களும்
ஒன்றாகக் கைகோர்த்து
ஒவ்வொரு குழந்தையாய்
அனைவரையும் மீட்டார்கள்..

பதினேழு நாட்களாய்
பரிதவித்த குழந்தைகளை
பத்திரமாய் மீட்டெடுக்க
பட்டபாடு கொஞ்சமில்லை...

இருப்பிடத்தைக் கண்டறிந்த
இங்கிலாந்து வீரர்கள்
தாய்லாந்து தேசத்தின்- மறு
தாயாகத் தெரிந்தார்கள்

மீட்பு முயற்சியில்
மாட்டிய ஒரு வீரர்
தன்னுயிர்த் தியாகத்தில்
தெய்வமாய் வாழ்கின்றார்..

மனித நேயங்கள்
மலிவுற்ற காலத்தில்
மண்ணில் நிகழ்ந்த
மகத்தான சம்பவம்
மயிர்கூச்சரியும்
ஆச்சரிய அற்புதம்

வாழ்க மனிதநேயம்
வாழ்க தாய்மையுள்ளம்
வாழ்க வளமுடன்

12/07/2018

அதிர்ஷ்டம்

பிறரின் வெற்றியை அதிர்ஷ்டம் என்பவர்கள்
தன் வெற்றியை அப்படிச்சொல்வதில்லை

காதலிக்கும் ஜோடிகள்

கார்ப்பரேட்டு வாசலில்
காதலிக்கும் ஜோடிகள்


சிறகில்லாப் பறவை




(1)
அசுர வேகத்தில்
வேகமாய்ப் பறக்கிறது
விலைவாசி உயர்வு

(2)
உயரத்தைத் தொடாமல்
தாழ்ந்தே பறக்கிறது
அலைபாயும் மனம்

(3)
தினமும் பறக்கும்
சிறகில்லாப் பறவை
குடிமகன்

11/07/2018

கள்ளியின்_ஏக்கம்




கள்ளியாய்ப் பிறந்ததினால்
களங்கி நான் போகவில்லை
வெயிலில் இருப்பதினால்
வெளிறி நான் வாடவில்லை

தண்ணீர் குறைந்தாலும்
கண்ணீர் நான் விடுவதில்லை
பாலைவனப் பூமியிலும்
பால் சுரக்க மறுப்பதில்லை

முள்மேனி கொண்டாலும்
முரட்டுத்தனம் செய்வதில்லை
இயற்கையின் படைப்பிலே
இலையொன்றும் எனக்கு இல்லை..

ஆனாலும்...நானேதான்
அழகென்று சொல்லிடுவேன்
அணிலுக்கும் பூச்சிக்கும்
அன்போடு பழம் கொடுப்பேன்...

மருந்துக்கு மருந்தாக
மனிதருக்கும் உதவிடுவேன்...
இன்றைக்கு ஏனோ நான்
என்னுள்ளே வாடுகிறேன்;

அன்பான ஒரு பெயரை
அடிக்கடி எழுதிவைத்து
அடுத்தமுறை மறு பெயரை
அடித்தடித்து கிறுக்கி வைத்து

கிறுக்கல் மொழி சுமந்தே
சிறுக்கியாய் சிரித்த என்னை
வெறுத்து ஒதுக்கி வைத்து
வேறெங்கு சென்றீர்கள்....?!!

அக்கால நினைவாலே
இக்கள்ளி வாடுகிறேன்...
இக்காலத் தலைமுறைக்கு
அக்கதையை யார் சொல்வார்?

#கள்ளியின்_ஏக்கம்

10/07/2018

நிலையில்லா வாழ்க்கை



ஆழக்குழி தோண்டி
அடித்தளங்கள் போட்டாலும்
அழகழகாய்ப் பொருள் சேர்த்து
அமைப்போடு கட்டினாலும்
அரசாங்க உத்தரவில்
அனைத்துமே இடிவதுபோல்

எத்தனையோ மனிதர்களின்
எழில்மிகு வாழ்க்கையினை
ஒற்றை நிமிடத்திலே
வெற்றாய் மாற்றுகின்ற
நிலையில்லா வாழ்க்கையினை
நினைவிலே நிறுத்திடுவோம்

08/07/2018

மரப் பாக்கள்


(1)
அறுத்திடும் ஆறறிவால்
அறுபடும் ஒரறிவு
வெட்டுப்படும் மரங்கள்

(2)
உயராத மனிதரால்
உயர்ந்தவை அழிகிறது
வெட்டுப்படும் மரங்கள்

(3)
தன்னை வெட்டுவதற்கு
தன்னினமே கைப்பிடியாம்
சொல்வது மரங்கள்

வீழ்ந்தது போதும்--145-களஞ்சியம் கவிதைப் போட்டி--வெற்றிக் கவிதை



வீழ்ந்தது போதும் தமிழா- நாம்
வீழ்ந்தது போதும் தமிழா
இழந்தது போதும் தமிழா- நாம்
இழந்தது அதிகம் தமிழா

நடித்திடும் தலைவனின் பேச்சில்- அன்று
துடிப்புள்ளத் தொண்டனாய் இருந்தாய்
அடித்திடும் கொள்ளையைக் கண்டும்- இன்று
வெடித்திட ஏனோ மறந்தாய்!

இலவசம் இலவசம் என்றே- அன்று
இலவசப் பரப்புரை கேட்டாய்!
அதன்வசம் ஆட்சியைப் பிடித்தே- இன்று
அவர்விசம் கொடுப்பதும் கண்டாய்!

கொடுமை கொடுமை என்றால்- அந்தக்
கொடுமை நீங்குமா நண்பா!
கொடுமைக் கெதிர்குரல் கொடுத்தே- அந்தக்
கொடுமையைக் களைந்திடு நண்பா!

சாக்கடை அரசியல் செய்தால்- இனி
மூக்கினை மூடிட வேண்டாம்!
நாக்கிலே அரசியல் செய்தால்- இனி
வாக்கிலே புதுமை செய்வோம்!



https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2255202768131960?sfns=mo

07/07/2018

வெண்ணிலா நீ!--களஞ்சியம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை



நீலவானில் உலவுகின்ற
நிலவினைப்போல்- எந்தன்
நினைவு வானில் சுற்றுகின்ற வெண்ணிலா நீ!

அண்டத்திலே மின்னுகின்ற
மீன்களைப்போல்-உயிர்ப்
பிண்டத்திலே ஒளிர்கின்ற உள்ளொளி நீ!

மேகத்திலே தோன்றுகின்ற
மின்னலைப்போல்- தமிழ்
மோகத்திலே வெடிக்கின்ற காவியம் நீ!

புவியுலகை இயக்குகின்ற
சூரியன்போல்- தமிழ்க்
கவியுலகை ஆளுகின்ற கம்பனும் நீ!

ஈரடியில் உலகளந்த
இறைவனைப்போல்- எழில்
ஈரடியில் குறள்படைத்தப் புலவனும் நீ!

சிறகடித்து உயருகின்ற
பறவையைப்போல்- சிந்தைச்
சிறகாலே விண்ணுயர்ந்த பாரதி நீ!

தட்டிதட்டிச் செதுக்குகின்ற
சிற்பியைப்போல்- தமிழ்
பட்டறையில் படைப்போரின் நற்றமிழ் நீ

பொறுமை


போற்றிய பலரை மனதில் நினைத்து
தூற்றிய சிலரை மறந்திடுவாய்- நீ
ஆற்றிடும் கடமையை மனதில் நினைத்து
தூற்றிடும் சொற்களைப் பொறுத்திடுவாய்

புகழ்ச்சி வார்த்தையை ஏற்றது பொலவே
இகழ்ச்சி வார்த்தையும் ஏற்றிடுவாய்-மனம்
மகிழ்ச்சி நிலையில் நின்றிட வேண்டின்
நெகிழ்ச்சித் தன்மையும் கற்றிடுவாய்!

06/07/2018

சென்று வா மகளே


சென்று வா மகளே..சென்று வா...
அன்பால் வென்று வா.. மகளே வென்று வா..

தாய்தந்தை உறவெல்லாம் கண்டு வா- நீயும்
தாயோடு மகிழ்வாகச் சென்று வா....

ஆட்டோடு அன்பாகப் பேசி வா- நீயும்
மாட்டுக்கும் புல்கொஞ்சம் போட்டு வா..

கருப்பனின் வாலினைத் தடவி வா- அவன்
குரைத்தால் அவனோடு கொஞ்சி வா..

தமிழைச் சரியாக கற்று வா- நீயும்
தந்தைக்கும் தமிழமுது கொண்டு வா....

05/07/2018

பிறந்த நாள் வாழ்த்துகள்: இம்ரான் கான்


இதயத்தில் இருக்கின்ற உறவுகளில்
இளவளாய்த் துடிக்கின்ற இம்ரானே...
இயற்கைக் களஞ்சியமாம் புதுவயலில்
இரண்டாம் இரணியனாய் இருப்பவனே..

கட்டிடத்தின் தொழில்நுட்பம் கற்றாலும்
கம்பிவடத் தொழிலும்கற்ற வித்தகனே
பட்டிதொட்டி எங்கெங்கு சென்றாலும்
பண்பாட்டைத் தொழைக்காத நல்லவனே

அகவையில் ஒன்றுகூடும் இந்நாளில்
அகமதில் மகிழ்வோடு வாழ்த்துகின்றேன்
சகமதில் பிறப்பெடுத்த இந்நாளில்- நபி
முகமதின் வழிநடக்க வாழ்த்துகிறேன்

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

தம்பியுடன் உள்ள ஒரு காணொளி

https://youtu.be/UhK6oKA5phU

✍️செ. இராசா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

04/07/2018

தமிழரின் அடையாளம்




தமிழரின் அடையாளம்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தஞ்சைப் பெரியகோவில்

வண்ணப் பூவே....வாசம் வீசு....

🎼🎤🎼🎤🎸🎺🎼🎧🎻🎼🎧🎼

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு

உந்தன் பூவிழிப் பார்வையில்
தோன்றிடும் ராகங்கள் நூ...று
உன்னைப் பாடிடும் வேளையில்
தோன்றிடும் இன்பங்கள் நூ...று

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு

தேடி வரும் வேளையில்
ஓடி விடும் காதலா...
நாடி வந்த என்னிடம்
மாட்டிக்கொண்டாய் மன்மதா...

கோடி நூறு ஆசையில்
பாடி வந்த பைங்கிளி
கட்டிக்கொண்ட உன்னிடம்
கட்டுப்பட்டேன் நானடி

வண்ணப் பூவே....வாசம் வீசு....
எண்ணப் பூவே.....காதல் பேசு...

🎶🎻🎺🎻🎤🎺🕺💃💥🎸🎼🎼