11/07/2018

கள்ளியின்_ஏக்கம்




கள்ளியாய்ப் பிறந்ததினால்
களங்கி நான் போகவில்லை
வெயிலில் இருப்பதினால்
வெளிறி நான் வாடவில்லை

தண்ணீர் குறைந்தாலும்
கண்ணீர் நான் விடுவதில்லை
பாலைவனப் பூமியிலும்
பால் சுரக்க மறுப்பதில்லை

முள்மேனி கொண்டாலும்
முரட்டுத்தனம் செய்வதில்லை
இயற்கையின் படைப்பிலே
இலையொன்றும் எனக்கு இல்லை..

ஆனாலும்...நானேதான்
அழகென்று சொல்லிடுவேன்
அணிலுக்கும் பூச்சிக்கும்
அன்போடு பழம் கொடுப்பேன்...

மருந்துக்கு மருந்தாக
மனிதருக்கும் உதவிடுவேன்...
இன்றைக்கு ஏனோ நான்
என்னுள்ளே வாடுகிறேன்;

அன்பான ஒரு பெயரை
அடிக்கடி எழுதிவைத்து
அடுத்தமுறை மறு பெயரை
அடித்தடித்து கிறுக்கி வைத்து

கிறுக்கல் மொழி சுமந்தே
சிறுக்கியாய் சிரித்த என்னை
வெறுத்து ஒதுக்கி வைத்து
வேறெங்கு சென்றீர்கள்....?!!

அக்கால நினைவாலே
இக்கள்ளி வாடுகிறேன்...
இக்காலத் தலைமுறைக்கு
அக்கதையை யார் சொல்வார்?

#கள்ளியின்_ஏக்கம்

No comments: