29/10/2017

கைப்பேசிக் காதல்


அவனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கைப்பேசியை....

அவனும் சிரித்தான்
அவளும் சிரித்தாள்
சுயமிக்காக (செல்ஃபிக்காக)...

அவனும் பேசினான்
அவளும் பேசினாள்
சூடானது கைப்பேசி......

அவனும் துண்டித்தான்
அவளும் துண்டித்தாள்
அடுத்த இணைப்பிற்காக......

பணம்


அபாயகரமானது-ஆனால்
அத்தியாவசியமானது-பணம்
நெருப்பைப்போல....

பயங்கரமானது-ஆனால்
பயன்பாட்டிற்குரியது-பணம்
கத்தியைப்போல......

அதிகமானால் கவிழ்க்கும்
குறைவானால் கடிக்கும்- பணம்
செருப்பைப்போல.....

இருப்பின் அலட்சியம்
இல்லாமை உணர்த்தும்- பணம்
மரணத்தைப்போல....

சேர்ந்தால் மகிழ்ச்சி
போனால் அதிர்ச்சி -பணம்
முன்னால் காதலியைப்போல...

கற்றது எங்கே?!


தேனெடுக்கும் ரகசியத்தைத்
தேனீக்கள் கற்றதெங்கே?!

கூடுகட்டும் வித்தையதைக்
குருவிகள் கற்றதெங்கே?!

எடுப்பதை சேகரிக்க
எறும்புகள் கற்றதெங்கே?!

சிக்கவைக்கும் வலைபின்ன
சிலந்திகள் கற்றதெங்கே?!

கூடிஒன்றாய் உணவருந்த
காகங்கள் கற்றதெங்கே?!

ஊர்ந்துமோதி கருசேர
உயிரணுக்கள் கற்றதெங்கே?

பிறந்ததும் பாலுறிஞ்ச
பிஞ்சுகள்தான் கற்றதெங்கே?!

புரிதல் / அணுவை அறிவோம்


விருட்சங்களின் அம்சமெல்லாம்
விதைகளுக்குள் ஒளிந்திருக்கும்!
உயிர்களின் அம்சமெல்லாம்
உயிரணுக்குள் பொதிந்திருக்கும்!
விதை உயிர் ஆவதெல்லாம்
கருமையம் சார்ந்திருக்கும்!

பானை சோற்றின் பதம்பார்க்க
பருக்கை சோறு ஒன்றுபோதும்!
அக்னியை வளர்ப்பதற்கு
அக்னியின் பொறிபோதும்!
நீர்நிலையின் குணமறிய
நீர்த்துளிகள் சிலபோதும்!

சிறுதுளிகள் கூட்டுசேர்ந்து
பெருவெள்ளம் ஆவதுபோல்
சிறுஅணுக்கள் கூட்டுசேர்ந்து
பெருஅண்டம் ஆவதாலே
அணுக்களைப் புரிந்துகொண்டால்
ஆனதெல்லாம் விளங்கிவிடும்!

கொசு


இவனெல்லாம் கொசுவென்று
இனியென்றும் சொல்லாதீர்!
ஏளனத்தின் பொருளென்று
ஏமாந்து போகாதீர்!

கொலையாளி என்பதற்கும்
பகையாளி என்பதற்கும்
கொசுவென்று சொன்னாலே போதும்!

கொடுங்கோலன் செயல்களுக்கும்
கொசுசெய்யும் செயல்களுக்கும்
கொலையென்ற ஒருசொல்லே போதும்!

உதிரத்தை எடுப்பதிலும்
உயிர்வதைகள் செய்வதிலும்
அரசோடு கொசுவந்து மோதும்!

கொலை செய்யாக் கொசுவாலும்
கொசு செய்யும் கொலையாலும்
அரசுக்கே அவமானம் சேரும்!

பட்டிமன்றம்-2017

17 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது என் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அடியேன் மேடையேறிப் பேசிய அனுபவம் என்றும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதோ காணொளிக் காட்சி உங்களுக்காக....(என் பகுதி மட்டும்)
நிகழ்வு: பட்டிமன்றம்
தலைப்பு: மன அழுத்தத்தை அதிகம் தூண்டுவது குடும்பமா? சமுதாயமா?




20/10/2017

தூரம் இல்லை ----களஞ்சியம் கவிதைப் போட்டியில் (76) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை



களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள் 

(20.10.2017)

கண்களில் காண்கின்ற காட்சிகளால்
கருணையால் கண்ணீர் வடிகின்றதா?!
கடவுளும் நமக்கினித் தூரமில்லை!
கருணையால் கடவுளும் வெளிப்படுமே!

வாட்டிடும் வறுமையில் தவிக்கையிலும்
வாய்ப்பினை சரியாய்க் கணித்தோமா?!
வானமும் நமக்கினித் தூரமில்லை!
வாய்ப்பினால் வானமும் வசப்படுமே!

படுத்திடும் துன்பம் வருகையிலும்
பணியினில் நேர்மையாய் இருந்தோமா?!
பதவியும் நமக்கினித் தூரமில்லை!
பணிவினால் பதவிகள் கிடைத்திடுமே!

இன்னல்கள் எங்ஙனம் வந்தாலும்
எதிலும் நன்மையே கண்டோமா?
இன்பங்கள் நமக்கினித் தூரமில்லை!
எதிர்ப்பிலும் இன்பங்கள் தெரிந்திடுமே!

போட்டியில் கவிதைகள் தோற்றாலும்
படைப்பும் கவிதையும் தோற்றிடுமா?!
வெற்றிகள் நமக்கினித் தூரமில்லை!
வென்றிடும் முயற்சிகள் தொடரட்டுமே!

கவியின் அரசர்கள் படைத்ததுபோல்
கவிதையில் காவியம் மலர்ந்திடுமா?!
காவியம் நமக்கினித் தூரமில்லை!
களஞ்சியக் கவிஞர்களால் சாத்தியமே!

தமிழர்கள் செழிப்புடன் வாழ்வதற்கு
தமிழ்மொழி ஊக்கம் தந்திடுமா?
தமிழாளுமை நமக்கினித் தூரமில்லை!
தமிழ்நூல்கள் படித்தால் சாத்தியமே!

கற்கால மொழியின் நூல்களெல்லாம்
கணினியில் சரளமாய்க் கிடைத்திடுமா?!
தமிழ்நூலகம் நமக்கினித் தூரமில்லை!
தமிழ்ப்பட்டறைக் குழுவால் சாத்தியமே!



15/10/2017

சென்றுவா நண்பா

(நண்பர் பூபதி ஊருக்குப் பயணமாகும் போது எழுதியது)

சென்றுவா நண்பா- சீக்கிரம்
சென்றுவா நண்பா!
வென்றுவா நண்பா- அழுத்தத்தை
வென்றுவா நண்பா!

அன்பினை அள்ளிவா- நண்பா
ஆசையோடு பேசிவா- நண்பா
இன்பமாய்க் களித்துவா- நண்பா
ஈர(நெஞ்ச)த்தைக் காட்டிவா- நண்பா
உரிமையாய்ப் பழகிவா- நண்பா
ஊடலை விலக்கிடு- நண்பா
எப்போதும் மகிழ்ந்திரு- நண்பா
ஏவல்கள் தவிர்த்திடு- நண்பா
ஐங்கரனைத் தொழுதிடு- நண்பா
ஒருமையாய் இருக்காதே- நண்பா
ஓடோடி வந்திடு- நண்பா
ஓளடதமே நீதானே- நண்பா
அஃதுமக்குப் புரியுமா நண்பா?!

புகைப்படக் கலைஞன்




 புகைப்படக் கலைஞனின் தவிப்பு-அது
புரிந்தால் அடைவீர் வியப்பு!
மூளையில் உதிப்பதை செதுக்கி-அவன்
முயற்சியால் தந்திடும் சிற்பி!

கண்களால் கணங்களை ரசித்து-அவன்
காட்சியாய் படைத்திடும் கவிஞன்!
ஓடிடும் நேரத்தை நிறுத்தி- அவன்
ஒளியால் வரைந்திடும் ஓவியன்!

புதுப்புது சோதனை புரிந்தே- அவன்
புதியதைத் தந்திடும் விஞ்ஞானி!
தவமெனத் தனியாய்க் கிடந்தே- அவன்
தருணத்தைப் பிடித்திடும் மெய்ஞானி!

—�செ. இராசா—�

புகைப்பட உதவி: நன்றி Mr. Riaz Ahamed

08/10/2017

நாம் எங்கே போகிறோம்?!




73வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், கவிதையை தெரிவு செய்த நடுவர் நிகரன்
அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.



எந்தைத் தலைமுறை காலத்திலே
விந்தைக் கருவிகள் இல்லாதும்
சிந்தை குன்றாது சிறப்புடனே
தந்தையும் தாயும் மகிழ்ந்தனரே!


பாட்டன் தலைமுறை காலத்திலே
பாடலைப் பதிந்திட இயலாதும்
பாடலில் காவியம் புனைந்தேதான்
பாடியே பாடங்கள் படித்தனரே!

பண்டையத் தமிழர் காலத்திலே
அண்டையர் சிலரின் தொல்லையிலும்
பண்பும் அறமும் குன்றாது
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்தனரே!

நாம் எப்படி எப்படி வாழ்ந்தவர்கள்
நாம் எப்படி இப்படி ஆகிவிட்டோம்?!
நாம் எங்கோ பாதையைத் தவறவிட்டு
நாம் எங்கே எங்கே போகின்றோம்?!

காலத்தை வென்றதாய் கூறிவிட்டு
காலமே இல்லையெனக் கதறுகின்றோம்!
அறிவு பெருத்ததாய் கூறிவிட்டு
அழித்திடும் அணுகுண்டு செய்கின்றோம்!

அருகில் இருப்பதை அறியாமல்
அகிலமே அறிந்ததாய் அலசுகின்றோம்!
பலநாள் நட்பினை மதியாமல்
முகநூல் நட்பினில் மயங்குகின்றோம்!

கள்வனை கயவனை ஆளவிட்டு
கழுதையாய் எரும்பாய்த் தேய்கின்றோம்!
தமிழை மெதுவாய் சாகவிட்டு
தமிழே சிறந்ததாய் கூவுகின்றோம்!

வள்ளுவர் கம்பரை வணங்காமல்
வந்தாரை எல்லாம் வணங்குகின்றோம்!
நாம்போகும் பாதையேத் தெரியாமல்
நாம்எங்கே எங்கே போகின்றோம்?!

-------செ. இராசா------

தனிமனித வாழ்வு பற்றி


தனி மனித வாழ்வுதனை
எட்டு எட்டாய் வகைப்படுத்தி
எளிமையாக பாட்டமைத்த
எழில் கவிஞர் வரிகள் கண்டோம்;

முதல் எட்டில் விளையாட்டும்
இரண்டாம் எட்டில் கல்வியும்
மூன்றாம் எட்டில் திருமணமும்
நான்காம் எட்டில் குழந்தையும்
ஐந்தாம் எட்டில் செல்வமும்
ஆறாம் எட்டில் சுற்றுலாவும்
ஏழாம் எட்டில் ஓய்வென்றும் கூறிவிட்டு
எட்டாம் எட்டிற்கு மேல் ஏனோ...?
நிம்மதி இல்லை என்றார்.....

(எட்டாம் வரிமட்டும்
எட்டா வரியாக
எம்சிந்தை கேட்டிடவே
பின்னோக்கி பயணித்தேன்)

தனி மனித வாழ்வுதனை
நான்காக வகைப்படுத்தி
முன்னோர்கள் கூறியது;

முதல் பருவம் (பிரம்மச்சரியம்) கற்கவும்;
இரண்டாம் பருவம் (கிரகஸ்தம்) வாழவும்;
மூன்றாம் பருவம் (வானபிரபஸ்தம்) ஒதுங்கவும்;
நான்காம் பருவம் (துறவறம்) துறக்கவுமாய்
வாழ்வின் நிலைகளை விளக்கியது.

(இன்னும் சுருக்கமாக
ஆனால் விளக்கமாக
கருத்தில் ஆழமாக
தமிழ் மறையில் காண்கின்றேன்)

தனி மனித வாழ்வுதனை
இரண்டாக வகைப்படுத்தி
வள்ளுவர் கூறுகின்றார்;

இல்லறம் வாழ்வதெல்லாம்
துறவற வாழ்வுக்கென
கூறாமல் கூறியதை
அறமாக விளக்கியதை
அறிந்தாலே சிறப்பு அன்றோ?

—�-செ.இராசா—

சமூகத்தின் பிரிவுகள்


வருணாசிரம தர்மத்தினை
வகுத்தது சரியென்றும்
வகுத்தவை தவறென்றும்
வாதிடும் நண்பர்களே....

வாதங்கள் வைக்கும் முன்
வகுப்புகள் தோன்றியதன்
காரணம் அறிந்திடுவீர்!
உண்மையை உணர்ந்திடுவீர்!

சமூக நிர்வாகத்தில்
சகநிலை மனிதர்களை
செய்தொழில் வகையறிந்து
நான்காய் வகுத்தனரே..

உற்பத்தி சூத்திரத்தால்
பொருள் ஈட்டும் அனைவரையும்
உற்பத்தியாளர் (சூத்திரர்) என்றேதான்
முதல் பிரிவை வகுத்தனரே!

உருவான பொருள்களெல்லாம்
தேங்காமல் பகிர்ந்தளிக்க
வாணிபர் (வைசியர்) தேவை என்றே
இரண்டாம் பிரிவை வகுத்தனரே

சிலபல வாணிபரால்
சமூகத்தில் குழப்பம்வர
மேலாளர் (சத்திரியர்) தேவை என்றே
மூன்றாம் பிரிவை வகுத்தனரே

அத்தனைத் துறைகளிலும்
அறிவியல் புதுமை சொல்ல
கல்வியாளர் (அந்தணர்) தேவை என்றே
நான்காம் பிரிவை வகுத்தனரே

சகலரின் நன்மைக்காய்
சமூகத்தின் தேவைக்காய்
வருணாசிரம வகுப்புகளை
வகுத்திட்ட சான்றோர்களின்
நோக்கங்கள் உயர்வாகும்!

ஆனாலும்... அவை பின்னர்
சாதியமாய் மாறியதே
சமூகத்தின் அவலமாகும்!

—�- செ. இராசா—�—

ஆன்மீகம்



ஆன்மீகப் பாதையிலே
அடியெடுத்து வைத்திடுவோர்
அறிந்திடவே எழுதுகின்றேன்!
அறிந்ததையே எழுதுகின்றேன்!
அடியேனின் வணக்கங்கள்!

ஆன்மாவையோ ஆண்டவனையோ
அணுவையோ அகிலத்தையோ
ஆனதையோ அழிவதையோ
அறிவதும் உணர்வதும்
ஆன்மீகம் என்றறிவோம்!

ஆன்மீக இலக்கினை
அடைகின்ற பாதைகள்
யோகங்கள் என்றாகும்!
அதன் பிரிவுகள் நான்காகும்!

உருவமோ அருவமோ
ஒருமையோ பன்மையோ
நம்பிய ஒன்றினை
நம்பியேத் தெளிவதும்
அன்பாலே அடைவதும்
பக்தி யோகம் என்றாகும்!

உடலினை வில்லாக்கி
மூச்சுக்காற்றினை அம்பாக்கி
இலக்கினை அடைவதற்கு
இயன்றதைச் செய்வதும்
பயிற்சியாலே வெல்வதும்
ராஜயோகம் என்றாகும்!

‘நான் யார்?’ என்றே சிந்தித்து
தானாய் தன்னுள் கடந்துசென்று
தான் யாரெனத் தெளிவுற்று
தன்நிலை இறைநிலை அறிவதும்
தியானத்தில் இருந்தே மகிழ்வதும்
ஞானயோகம் என்றாகும்!

முடிவை எண்ணி கலங்காது
முயற்சியிலே பிறழாது
முழுமையான சிரத்தையோடு
கர்வம் தலையில் ஏற்றாது
கடமைகளைச் செய்வது
கர்மயோகம் என்றாகும்!

நான்கினில் ஒன்றையோ
நான்கையும் ஒருங்கிணைத்தோ
எவ்வழி விருப்பமோ
அவ்வழி செல்வதே
ஆதியை அடைவதே
ஆன்மீக நோக்கமாகும்!

—செ. இராசா—

என்னவளின் சமையல்



என்னவளின் பாச நேசம்
அவள்வைக்கும் குழம்பே பேசும்!
கருவாட்டுக் குழம்புகூட
கற்பூர மணமாய் வீசும்!
இல்லை... இல்லை...
என்னவளின் மனம்போல் வீசும்!

காய்கறிக் குழம்பு வைத்தால்
காதலின் ரசமாய் மாறும்!
கடல்மீன் குழம்பு வைத்தால்
கண்மாய்மீன் ருசியாய் மாறும்
இல்லை... இல்லை...
என்னவளின் மனமாய் மாறும்!

பிரியாணி அவள் சமைத்தால்- பிறர்
பிரியாணி மறந்தே போகும்!
பலகாரம் அவள் செய்தால்
பலகாலம் ஊரே பேசும்!
இல்லை....இல்லை
படுத்துவதாய் என்னையே ஏசும்!

---செ. இராசா----

மறதியும் நியதியும்



கெட்டதை மறக்க
மருந்தாய் இருப்பது மறதி!
நல்லதை மறந்தால்
மறைவோம் என்பது நியதி!

தேர்தல் வெற்றிக்கு
துணையாய் நிற்பது மறதி!
தேர்வில் மறந்தால்
தோற்போம் என்பது நியதி!

உறவினை வளர்க்க
உதவியாய் நிற்பது மறதி!
உதவியை மறந்தால்
உழல்வோம் என்பது நியதி!

பகைமையை ஒழிக்க
பண்பாய் நிற்பது மறதி!
பிறர்குறை மறந்தால்
சிறப்போம் என்பது நியதி!

------செ. இராசா----

என்னவளே அடி என்னவளே


என்னவளே அடி என்னவளே
என்விழிப் பாவையில் பதிந்தவளே...
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்விழி கண்ணீரில் புதைகிறதே...

என்னவளே அடி என்னவளே
என்இருதய அறையினில் நுழைந்தவளே..
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்இருதயம் அதிர்ச்சியில் துடிக்கிறதே...

என்னவளே அடி என்னவளே
என்உதிரத்தில் உதிரமாய் கலந்தவளே..
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்உதிரம் தனலாய் தகிக்கிறதே..

என்னவளே அடி என்னவளே
என்சுவாசத்தின் காற்றாய் இருப்பவளே
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்சுவாசத்தின் காற்றும் சுடுகிறதே...

என்னவளே அடி என்னவளே
என்னுள் உயிராய் உறைபவளே
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்னுயிர் என்னையே வதைக்கிறதே..

பெண்ணும் கைப்பேசியும்


 
 
 
உன்குரலோசை வரும்திசையை கண்களும் தேடும்!
உன்குரலோசை அடக்கிடவே கரமுன்னைப் பற்றும்!
உன்குரலோசை அடங்கியதும் சிரம்நோக்கித் தூக்கும்!
உன்குரலோடு குரல்சேர்ந்து உறவாடி மகிழும்!

(தூண்டுதல் தந்த திரு.சேதுமாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி)

(2)

கண்பேசி சொல்பேசி கைபேசி மொழிபேசி
நான்பேசி நீகேட்க நீபேசி நான்கேட்க
என்னோடு எப்போதும் உறவாடும் பைங்கிளியே
உன்னோடு இல்லாத நாளொன்றும் இருந்திடுமா?!!!

06/10/2017

மனம் இருக்கு...... சிறகுகள் எதற்கு?-----------களஞ்சியம் கவிதைப் போட்டியில் (74) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை)



களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள் 


(06.10.2017)

பிரபஞ்சம் முழுவதும் சுற்றிவர-மனம்
சிறகுகள் எதற்கெனக் கேட்டிடுமே!
ஒவ்வொரு கணத்திலும் இடம்மாறி-மனம்
ஒளியின் வேகத்தில் விரைந்திடுமே!

எங்கும் எளிதில் செல்கின்ற-மனம்
எதையும் உலகில் செய்திடுமே!
எரிபொருள் இல்லாமல் பாய்கின்ற-மனம்
எதிரியின் மனதையும் வென்றிடுமே!

அழகினை அதிகமாய் ரசிக்கின்ற-மனம்
அருவியாய் கவிதைகள் வடித்திடுமே!
அன்பினை அதிகமாய்ப் பொழிகின்ற-மனம்
அமைதியில் நாளும் நிலைத்திடுமே!

காதலின் போதையில் பறக்கின்ற-மனம்
காலத்தை நேரத்தை மறந்திடுமே!
களிப்புடன் பொழுதினைக் கழிக்கின்ற-மனம்
காலத்தை நீட்டிக்க வேண்டிடுமே!

சொல்களில் நஞ்சினைத் தூவுகின்ற-மனம்
கொல்வதில் காலனை வென்றிடுமே!
வார்த்தையில் வாஞ்சையாய்ப் பேசுகின்ற-மனம்
பார்த்திடும் எவரையும் வென்றிடுமே!

துன்பத்தில் துவழ்ந்து மடிகின்ற-மனம்
துணைக்கு இறைவனை வேண்டிடுமே!
கடவுளை மனிதனில் காண்கின்ற-மனம்
கடவுளின் இருப்பிடம் ஆகிடுமே!

கழுகாய் உயரத்தில் பறக்கின்ற-மனம்
கவனமாய் இலக்கினை வென்றிடுமே!
சிறகுகள் எதற்கெனக் கேட்கின்ற-மனம்
சிறகில்லா பீனிக்சாய் உயிர்த்தெழுமே!