31/05/2017

அறிவே தெய்வம்


      

உயிர்களிலே அமைந்துள்ள அறிவுநிலை அனைத்தையுமே...
உணருகின்ற திறன்கொண்டு ஆறாக வகுத்திடலாம்!
படிப்படியாய் பெற்றுவந்த பரிணாம வளர்ச்சியினால்...
பகுத்தறியும் திறனாலே மனிதநிலை உயர்வாகும்!


ஐம்பொறியின் அறிவின்நிலை ஒவ்வொன்றாய் கூடிடவே...
ஐந்தறிவில் மனம்சேர்ந்து மனிதஇனம் வந்ததென்பர்!
வந்தவழி என்னவென்று சிந்தனையில் தோன்றிவிட்டால்...
நுண்ணறிவுக் கண்களாலே இறையறிவைக் கண்டிடலாம்!

பேரறிவாய் இதயத்திலே இறைவனாக இருந்தாலும்...
சிற்றிவாய் தோன்றிடுமே மாசுள்ள மனதினிலே!
மழைநீரின் நிறம்மாறி மண்நிறத்தைப் பெறுவதுபோல்...
மறைபொருளின் நிஜம்மாறி மனம்போலே தெரிந்திடுமே!

கரைபடிந்த மாசுகளை பயிற்சியாலே நீக்கிவிட்டால்...
களங்கமில்லா மனத்தாலே பேரறிவை விளங்கிடலாம்!
கடலின்ஆழம் அதிகரிக்க அலையின் வேகம் குறைவதுபோல்...
அறிவின்ஆழம் அதிகரிக்க மனதின் களங்கம் விலகிடுமே!

அறிவை விரித்து அன்பை பெருக்கி
அகிலம் முழுவதும் இறையைக் கண்டால்...
அமைதிக் கடலாய் உள்ளம் மாறும்!
அறிவே தெய்வம் என்றே தோன்றும்!



🌎வாழ்க வையகம்🌍
🙌வாழ்க வளமுடன்

அம்மன் பட்டி- சொந்த ஊர் நினைவுகள்





 

தாவரங்கள் இடம்பெயர
தாவரத்தின் வேர்களிலே
தாய்மண்ணை சேர்த்திடுவர்!
அதுபோல இடம்பெயர்ந்த
அடியேனின் மனவேரில்
அடிமண்ணாய் பதிந்துள்ள
அழியாத நினைவுகளை
ஆசையோடு எழுதுகின்றேன்!

சட்டை எதுவும் போடாமல்
சத்தம்போட்டு கத்தி நாங்க
ஊரைச் சுத்தி வந்திடுவோம்....
ஒடி ஆடி திரிஞ்சிடுவோம்....

கிட்டிப்புல்லும் கிரிக்கெட் பந்தும்
அடிச்சு பார்த்தால்....தெறிச்சோடும்
பம்பரமும் கோலிக்குண்டும்
பார்த்தாலே...கை உருட்டும்....

மொலத்திண்ணை மேல நாங்க
ஓ..... என்று கூச்சலிட்டு
கல்லைவச்சு ஆடிடுவோம்.......ஆனால்
கள்ளாட்டம் ஆடமாட்டோம்.

பனைமரத்து நொங்கு திங்க
படையோட கிழம்பிடுவோம்...
பறிச்சநொங்க வெட்டிவச்சு
போட்டிபோட்டு குடிச்சிடுவோம்...

மாடுமேய்க்கும் தோழனோட
மத்தியான வேலையில
மாமரத்து கிளை மேல
மாங்குயிலே ..... பாடிடுவோம்....

வயக்காட்டு கிணத்துக்குள்ள
வரிசையாக மேலநின்னு
அந்தர் பல்டி அடிச்சிடுவோம்!
அம்மணமா குளிச்சிடுவோம்!

கண்மாய் அழியும் சேதிவந்தால்
முதல்ஆளா கிழம்பிடுவோம்......
மீன்பிடிக்க மறந்திடுவோம்...
பெருமை மட்டும் பேசிடுவோம்

மாட்டுவண்டி பூட்டிநாங்க
ஆறுமுகம் ஐயாவோட...
நெல் அறைக்க போகும்போது
குச்சி ஐஸ் வாங்கி திங்க
பழைய இரும்ப தேடிடுவோம்...

ஊருணியும்....கண்மாயும்...
வாயிருந்தால் அழுதிருக்கும்....

எழந்தப்பழம்...நாவல்பழம்...
எச்சிஊரும்....பனைம்பழம்
எதையும் நாங்க விட்டதில்லை...

ஊத்துத்தண்ணிய குடிச்சாலே
எந்தநோயும் ஓடிப்போகும்.

காத்து கருப்பு பயமென்றால்
ஆத்தாகாளிய நினைச்சுக்குவோம்..

எங்க ஊரு பிள்ளையாரு
எல்லாருக்கும் முதல் சாமி....
பொங்கல் ஊரில் வந்ததுமே
எங்கள் ஊரே பரபரக்கும்....

அங்காளியும் பங்காளியும்....
பட்டணத்து பாப்பாக்களும்....:
சிங்கப்பூர் சித்தப்பாக்களும்.....
வெளியூர்வாழ் அதிபர்களும்......
வந்ததுமே.....களைகட்டும்

சாமியாட்டம்.....மாடுஓட்டம்...
நடக்கும் ஒருபக்கம்...
சண்டைவந்து மண்டை உடையும்
அதுவும் ஒருபக்கம்....

அரசமரப் பஞ்சாயத்து
அடுத்த நாளில் நடக்கும்....
இரண்டு நாளு போச்சுதுன்னா
கூட்டம் ஓட்டம் எடுக்கும்.,

ஊரே எங்க வீடுதாங்க....
எல்லாருமே சொந்தந்தாங்க...
சாதி மதம் பார்க்காமல்
சமத்துவமா வாழ்ந்தமுங்க.....

காசு பணம் தேவைக்காக
ஊரை விட்டுப் போனாலும் ....
உசுரு மட்டும் உள்ளவரை
மனசு பேசும் மண்ணின் வாசம்.....

கடல் கடந்தவனின் குறிப்புகள் / கத்தார்




'#கத்தார்'.......இது

வளைகுடா நாடுகளில்
வசதிவளம் நிறைந்த தேசம்!

நிகரில்லா இறைவன் நாமம்!
நிற்காமலே ஒலிக்கும் நித்தம்!

நீர்மவாயு பெட்ரோல் வளம்!
நிறைந்ததாலே பெருத்த செல்வம்!

வேலைதேடி வந்தவரை
வாழவைக்கும் தீபகற்பம்!

பணக்கார நாடாய் இருந்தும்
பாகுபாடு பாரா தேசம்!

ஒரு ரியால் குப்பூஸ் விலை
ஏறவில்லை இங்கு மட்டும்!

வெயில் கொடுமை இருந்தாலும்
வெயிலில் உழைக்க விடுவதில்லை!

மின்சாரத் தடையுமில்லை!
மிரட்டும் குண்டாஸ் எவருமில்லை!

சட்டம் ஒழுங்கு கவலையில்லை!
சாதி சண்டை எதுவுமில்லை!

மருத்துவரை பார்த்துவர
மடியில் பணம் தேவையில்லை!

ஒரே சட்டம்! ஒரே நீதி!
வேறுபாடு இங்கு இல்லை!

கர்த்தருக்கும் கோவில் உண்டு!
களித்து மகிழ Passம் உண்டு!

சினிமா தியேட்டர் நிறைய உண்டு!
சிரிச்சு மகிழ இடங்கள் உண்டு!

ஒரு வருடம் மட்டும் என்போர்
பல வருடம் கழித்திடுவர்!

பல வருடம் உருண்டபின்னும்
இவ்வருடம் கடைசி என்பர்!

(Photo courtesy: Mr. Riaz Ahamed)

29/05/2017

துயர வாழ்வு / பூனையும் நானும்




புல்லுமேல படுத்துருளும்
பூனையாரே! பூனையாரே!
நீரும் உணவும் உடனிருக்க
நீர் யாரைத் தேடுகின்றீர்?

கல்லுமேல அமர்ந்திருக்கும்
கருத்த பெரிய மனிதரே!
என்கொடுமை என்னவென்று
எடுத்துரைப்பேன் நீர் கேளும்;

வெயில் கொடுமை தாங்காமல்
வெறும் உடம்பில் உருளவில்லை!
விட்டுப்போன உறவாலே
வெறுப்பாலே வாடுகின்றேன்!

உன்நிறத்தில் எம்புருசன்
ஒருநாளு ஓடிவந்தான்!
பதமாத்தான் பழகியவன்
பொசுக்கென்று ஓடிப்புட்டான்!

சிலநாள் ஆனபின்னே
வயிறுவீங்கிப் போயிறுச்சு!
அடுக்கடுக்கா ஆறுகுட்டிய
அசராம பெத்துபோட்டேன்!

எடுத்துக் கொஞ்ச புருசன் இல்லை!
எங்கே அவன்?!...தெரியவில்லை!

பாத்துப்பாத்து நான் வளர்த்த
பிள்ளைகளும் காணவில்லை......

பாவிநானும் தேடுகின்றேன்....
பார்த்தால் நீரும் சொல்லுமய்யா....

ஐய்யோ பாவம்....பூனையாரே..
என்னவென்று சொல்லிடுவேன்?
உன்சோகம் தீர்த்திடுவேன்?

ஆறறிவு மனுசனோட
பெண் இனத்தின் கொடுமைபோல
உன் கொடுமை உள்ளசேதி
என் மனதைத் தைக்கிறது!
வலி என்னை வதைக்கிறது!

ஐந்தறிவில் ஒன்றுகூடி
ஆறறிவாய் ஆனபின்னும்
பகுத்தறிவு இல்லாத
ஆணினத்தின் சார்பாக
அழுதேநான் வருந்துகின்றேன்!

27/05/2017

நீ என் அதிர்ஷ்டமடி



புவியீர்ப்பு சக்திபோலே
தனியீர்ப்பு கொண்டவளே-உன்
விழியீர்ப்பு பார்வையாலே-எனை
முழுயீர்ப்பு செய்தாயடி!

உரிமையுள்ள உடைமையாக
உணர்வினிலே ஒன்றாக
உன்னுயுரே என்னுள்ளே
உதிரமாக ஓடுதடி!

காதல்மொழி வார்த்தை-எந்தன்
காதின்வழி வருமுன்னே
காதலி உன் எண்ண அலை
காட்சிபோலத் தெரியுமடி!

கலைகள்பல அறிந்தபின்னும்
கர்வம்சிரம் ஏறிடாத
கருணைக்கடல் மனதுக்கு
கடவுளாளே அமைந்ததடி!

சினம்கொண்ட உன்முகத்தை
சிந்தனையால் மனதினிலே
சிலைபோல வடித்துவிட்டால்
சிரம்கவிழ்ப்பாய் சிரித்தபடி!

ஈன்றவளின் தொடராக
இணைந்துவரும் நிழலாக
ஈரமுள்ள இதயமாக- நீ
இருப்பது என் அதிர்ஷ்டமடி!

24/05/2017

சீதையும் திரௌபதியும்- ஓர் ஒப்பீடு





மண்ணில் தோன்றிய சீதையும்
நெருப்பில் உதித்த திரௌபதியும்
பாரதம் போற்றிடும் காவியங்களின்
பாத்திரப் படைப்பின் நாயகிகள்!

------------------------------------------------------

வில்லினை உடைக்கும் போட்டியிலே
வீரத்தைக் காட்டிய இராமனையே
வெற்றியின் பரிசாய் மாலையிட்டு
சூரியகுலம் புகுந்தாள் சீதையம்மா!

வில்வித்தை சுயம்வரப் போட்டியிலே
வீரன் விஜயனை மாலையிட்டு
விதியால் ஐவரை மணந்திடவே
சந்திரகுலம் புகுந்தாள் திரௌபதித்தாய்!

----------------------------------------------------------

பதியுடன் கழித்த வனவாசம்
பதிமூன்று ஆண்டுகள் முடிந்தவுடன்
சிறையினில் கழிந்தது ஓராண்டு!
சிறியோன் இராவணன் செயலாலே!

ஐவருடன் ஒருவராய் வனவாசம்
பனிரெண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்
மறைந்து வாழ்ந்தது ஓராண்டு!
சதிகார சகுனியின் செயலாலே!

----------------------------------------------------------

இலட்சுமணக் கோட்டைத் தாண்டியதால்
இலக்கை அடைந்தான் இராவணனே!
இச்செயல் வினையின் விளைவாக
இழந்தாள் இன்பம் ஜானகியே!

தடுக்கி விழுந்த துரியோதனனை
விடுக்கென உதவிட நினையாமல்
படக்கென சிரித்திட்ட செயலாலே
பட்டாள் துயரம் பாஞ்சாலி!

----------------------------------------------------------

பிறன் மனையாளை கரம்பிடித்து
பிடித்தே இழுத்த பாவிகளில்
பத்துத் தலையோனும் மடிந்தானே!
புத்திகுறை தம்பியும் மடிந்தானே!

----------------------------------------------------------

இராம இராஜ்ஜிய பேரரசி
இராம நீதியின் பெயராலே
கானகம் சென்றாள் துயரோடு!
கடேசியில் புதைந்தால் மண்ணோடு!

பாண்டவர் வெற்றியை பெற்றாலும்
பாஞ்சாலி பிள்ளைகள் அழிவாலே
வாடியே விழுந்தாள் தானாக!
வாழ்வும் கழிந்தது நெருப்பாக!

----------------------------------------------------------

இதிகாசப் புராணங்கள் இரண்டிலுமே
இன்னல்கள் இருவரும் அடைந்தாலும்
இரும்பாய் இதயம் கொண்டதாலே
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்!

23/05/2017

ஊழியரின் மன ஒட்டம்



அடிமைப்படுத்திடும் எண்ணம் கொண்டு
அடக்கிட யாரையும் எண்ணாதே!
சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்
சீற்றம் என்றும் குறையாதே!


காலமும் நேரமும் வந்துவிட்டால்
காற்றாய் உடன்வெளி வந்திடுமே!

பணித்திடும் எல்லாம் செய்துவிட்டால்
பொதிச்சுமை கழுதையாய் நினையாதே!

பொருளைப் பெரிதாய் நினையாதோர்
பாரினுள் உள்ளதை மறவாதே!
கடமையைக் கடவுளாய் காண்பவனை
கயிற்றால் கட்டுதல் அவமானம்!

கயிற்றை சினத்துடன் அறுத்தெறிந்தால்
கடவுளே தருவான் வெகுமானம்!
அன்பாய் அணைத்தால் அடங்கிடுவான்!
அடக்கிடத் துடித்தால் உடைத்திடுவான்!

பண்பாய் கதைத்தால் மதித்திடுவான்!
பதராய் மதித்தால் விலகிடுவான்!
கழிக்கும் கணங்கள் முழுவதுமே
கருத்தில் கண்ணாய் இருந்திடுவான்!

புத்தியின் சக்தியை கூட்டிடவே
புதுப்புது விசயங்கள் கற்றிடுவான்!
புயலாய் அனலாய் வேகத்துடன்
புத்துயிர் பெற்றதும் பாய்ந்திடுவான்!

களிமண் பொம்மை



மகள் செய்த பொம்மையதின்
மனம் சொல்லும் சேதிகேளீர்;

இளஞ்சிவப்பு நிறத்திலோரு
பெண் பொம்மை

நீல நிறத்திலொரு
ஆண் பொம்மை

எப்போதும்
இவை இரண்டும்
இணைந்தேதான் இருக்கனுமாம்!
இல்லையெனில்
இவள் கண்கள்
விழி நீரால் நனைந்திடுமாம்!

அப்பப்பா! என் சொல்வேன்?!
பிரிவின் வலி
அது கொடுமை

அக்கொடுமை செய்திடவே
அப்பாவும் நினைப்பேனோ?!

சில நிமிடம் கழிந்ததுமே......
இரு பொம்மை ஒன்றாக
இணைத்துவிட்டாள்
என் குழந்தை!

விதி வலிமை
இது உண்மை
யார் தடுக்க முடியுமடா?

களிமண்ணில் வந்த பொம்மை
களிமண்ணாய் ஆனதடா!!

இறை செய்யும் அற்புதத்தை
இவள் செய்து காட்டிவிட்டாள்!

22/05/2017

போட்டியின் தொடக்கம்-முடிவு?







உயிரணு போட்டியின் வெற்றியிலே
உயிராய் உலகினில் ஜனித்திடுவோம்!

மரபணுப் பதிவின் போட்டியிலே
பரம்பரை யாதெனப் பதிவாகும்!

படிப்பில் போட்டி வந்துவிட்டால்
பண்பும் அறிவும் தமதாகும்!

பதவிப் போட்டி வந்துவிட்டால்
பழகிய நட்பும் பகையாகும்!

அதிகாரப் போட்டியின் விளைவாக
அமைதியின் இருப்பு இழப்பாகும்!

சகோதரப் பாசப் போட்டியெல்லாம்
பிரிவினை வந்தால் வேறாகும்!

ஆயுதப் போட்டியின் உச்சத்திலே
அகிலம் அழிந்திடும் போராகும்!

அறத்தை சேர்ப்பதில் போட்டியென்றால்
அன்பின் குணமே செழித்தோங்கும்!

பொருட்கள் சேர்ப்பில் போட்டியென்றால்
பொறாமை குணமே தலையோங்கும்!

மனிதன் போட்டி கொள்ளாத
மரணம் உயிரின் முடிவாகும்!

21/05/2017

எதிரியும் இறைவனே!



தடையில்லா பயணமதில் சுவாரசியம் இருப்பதில்லை!
தப்பில்லா முயற்சியிலே அனுபவங்கள் கிடைப்பதில்லை!

மண்ணோடு போராடி விதை முளைத்தால் விருட்சமாகும்!
கல்லோடு போராடி சிலை வடித்தால் சிற்பமாகும்!

எதிரியின் ஏளனங்கள் ஏற்றிவிடும் ஏணியாகும்!
எதிர்ப்பின் வீரியங்கள் வெற்றிக்குப் படியாகும்!

பகைவனை அருள்செய்ய பாரதியும் வேண்டுகின்றான்!
பாய்ந்திடும் புலியினிலும் சக்தியையே காணுகின்றான்!

பலரது உயிர்களிலே படைத்தவனே உறங்குகின்றான்!
சிலரது இதயங்களிலோ சிவமாக விழிக்கின்றான்!

நட்பும் எதிர்ப்பும் குணத்தாலே வளர்ந்திடுமே!
நல்லதும் கெட்டதும் வினையாலே விளைந்திடுமே!

இரட்டைகள் இருப்பதெல்லாம் இயற்கையை புரிந்திடவே!
இயற்கையை
ப் புரிந்துவிட்டால் எதிரியும் இறைவனாவான்!

ஏதுமில்லை-சொல்லிடாதீர்



பாரினிலே பல உயிர்கள்
பட்டினியால் அலறுது!
பாலூட்ட தாயில்லாமல்
பசியினால் துடிக்குது!
பருக்கை அரிசி கிடைக்காமல்
பச்சைமண்ணு புறளுது!

உடைமை என்று எதுவுமில்லை!
உடுக்க ஒரு துணியுமில்லை!
படுக்கை விரிப்பு எதுவும் இல்லை!
படுக்க ஒரு இடமும் இல்லை!
பத்தினி பெத்தபிள்ளை
படும்பாடு கொஞ்சமில்லை!

எள்ளவும் புரியவில்லை
என்னிறைவன் கர்மமது?!
இக்கொடுமை கண்டபின்னும்
இடர்பாட்டு பாடுவோரே..
ஏதுமில்லை என்ற சொல்லை
இனியென்றும் சொல்ல வேண்டாம்!

-----------------------------------------------------------------
" உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.........."
----------------------------------------------------------------

நட்பே-நட்பின் சிறப்பே!


அன்பில் வாடா மலரே!
ஆதவன் அளித்திடும் ஓளியே!
இதயம் பேசிடும் மொழியே!
ஈன்றவள் தந்திடா உடன்பிறப்பே!
உண்மை நிறைந்த உறைகல்லே!
ஊனுயிர் கலந்த உறவே!
என்றும் வாழ்த்திடும் மனமே!
ஏற்றம் கொடுத்திடும் ஏணியே!
ஐம்பொறி தராத நிறைவே!
ஒருமையில் வாழா பெருமையே!
ஓதிடும் அறிவுறை மறையே!
ஔடதம் போன்ற(து) நட்பே!
அஃதே நட்பின் சிறப்பே!

17/05/2017

விடியுமா? / தமிழனோட விடிவுகாலம்?!!!!



தமிழகமே! தமிழகமே!-ஏன்
தலைகுனிந்தாய் தமிழகமே!
வாழ்ந்த இனம் வீழ்வதாலே
வருந்தி நீயும் வாடினாயோ?!


ராஜராஐன் ஆண்ட இடம்-இன்று
ராட்சகர்கள் கையில் போச்சு!
காமராஜர் வாழ்ந்த இடம்- வெறும்
கானல் நீரின் வெள்ளமாச்சு!

அண்ணா நாமம் கொண்ட கட்சி!
அண்ணாவுக்கு நாமம் போட்ட கட்சி!
இரண்டு கட்சியும் ஆண்டாதால
இருப்பு எல்லாம் களவு போச்சு!

திராவிடன்னு சொல்லி சொல்லி
தமிழன் வாழ்வு கேள்வி ஆச்சு!
சாராயக்கடை திறந்து திறந்து
சாதி மத சண்டை ஆச்சு!

ராம ராஜ்யம் என்று சொல்லி
ரவுடி ராஜ்யம் நடத்தும் கட்சி
தமிழ்நாட்டின் வளத்தை எல்லாம்
தரிசா மாத்தத் துடிக்குதிங்கே!

தடுக்கக்கூட முடியாமல்
தலையிலடிச்சு போராடுறோம்!
தரித்திரக் காரனெல்லாம்
தனிக்கட்சி தொடங்குதிங்கே!

ஒன்னும் இங்கே புரியவில்லை!
ஒருத்தன்கூட ஒழுங்கு இல்லை!
தமிழனோட விடிவுகாலம்
தலைவிதியின் கையில்தானோ?!!!

16/05/2017

தமிழ்-2




உடைபோல் அணிவோம் பிறர்மொழியை
உயிராய் மதிப்போம் தாய்மொழியை
உடையை வேறாய் அணிந்திடலாம்
உயிரை இழந்தால் யாதென்போம்?

ஆங்கிலம் அறிவது தனி-கலையே!
தமிழை விடுவதோ தற்கொலையே!
நாக்கின் நுனியில் இருந்துவிட்டால்
நாகரீகம் என ஆகிடுமோ?!

டாடி என்றால் அவமானம்!
அப்பா என்பதே அடையாளம்!
அடிமைத் தளையை அறுத்தெறிய
ஆங்கில மோகம் வெறுத்திடுவோம்!

பிழைக்கும் வழியாய் இருப்பதாலே!
பிள்ளைக்கு பலமொழி கற்பிப்போம்!
அறிவைப் பெருக்கிட மொழியறிவோம்!
அனைவரும் மகிழ்வுற வாழ்ந்திடுவோம்!

கற்க கசடற கற்றிடுவோம்!
கல்வியில் சிறந்தே விளங்கிடுவோம்!
தமிழை மூச்சாய் சுவாசித்தே
தலைமுறை தாண்டி நிலைத்திடுவோம்!

தமிழின் சிறப்பை அறிந்திடுவோம்!
தமிழைத் தாயாய் போற்றிடுவோம்!
தமிழ்மறை குறளைப் படித்திடுவோம்!
தமிழனாய் குரலை உயர்த்திடுவோம்!

வாழ்க தமிழ்!

இன்ப(ம்) மழையாகும் கவிதை




கல்லின் சிலைபோல
சொல்லில் உருசெய்ய
அகத்தின் அன்பெல்லாம்
எழுத்தில் பதிவாக
இறையின் வடிவாகும்
கவிதை!

காலம் மறைந்துவிட
தூரம் தொலைந்துவிட
உயிரும் உருகிவிட
உறைந்தே நின்றுவிட
உண்மைக் காதலாகும்
கவிதை!

வலியே வரியானால்
ருத்தம் எழுத்தானால்
ருத்தும் ரணங்கூட
விரைவில் பறந்தோட
விரும்பும் மருந்தாகும்
கவிதை!

மனதின் பதிவாலே
அழுத்த விளைவாலே
உணர்ச்சிக் குழம்பாலே
உதிக்கும் ஊற்றாகி
வழியும் மொழியருவி
கவிதை!

மொழியின் வழியாலே
எழுத்தின் சீராலே
அணியின் அழகாலே
நளின நதியாகி
கருத்தால் கடலாகும்
கவிதை!

வார்த்தைப் பொருளாலே
வாசிக்கும் திறத்தாலே
உள்ளம் இளகிவிட
இதயம் குளிர்ந்துவிட
இன்ப(ம்) மழையாகும்
கவிதை!

15/05/2017

அலுவலக கிருஷ்ணா

கிருஷ்ணா! கிருஷ்ணா!!

அலுவலக நண்பரெல்லாம்
அன்பாக அழைக்கின்றார்!

உன்நாமம் திருநாமம்
உச்சரிக்கும் அனைவருமே
உன்வேகம் யாதென்று
உண்மையிலே அறிந்தோரே!

சின்னவேலை பெரியவேலை
சிந்தனையில் தேவையில்லை
சிரத்தையோடு பணிசெய்தால்
சிரம்ஓங்கும் நிச்சயமாய்!

வாழ்க பல்லாண்டு!
வாழ்க வளமுடன்!

மனதில் வெறுமை ஏனோ?

மனதில் வெறுமை ஏனோ?
மதியில் தனிமை ஏனோ?
அமைதியை இழந்தேன் ஏனோ?
அவனை மறந்தததால் தானோ?!

அனைத்தும் அறிந்த அவனா-என்னை
அமைதியை அறிந்திட பணித்தான்
புயலாய் வீசிய என்னை
புழுவாய் பணித்தது ஏனோ?!

புதிராய் என்னுள் கேள்விகள்
புதிதாய் முளைக்குது இங்கே
புரிந்தால் என்னுள் மகிழ்வேன்
புதினம் புதிதெனக் கொள்வேன்

கண்ணன் பாடல்




கண்ணனின் வாயினில் அண்ட சராசரம்
கண்டதும் தாயினுள் வந்த பரவசம்

என்னென சொல்வேனோ?!- அதை
எப்படிச் சொல்வேனோ?!

கோவிந்தன் குழலொலி ராகத்தைக் கேட்டதும்
கோபியர் நெஞ்சினுல் பூத்திடும் காதலை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கிருஷ்ணனின் சங்கொலி காதினில் வீழ்ந்ததும்
கிராதகன் துரியனின் சேனைகள் அதிர்ந்ததை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

மாதவன் வாய்மொழி கீதையை கேட்டதும்
ஆதவன் போல்ஒளி மின்னிடும் ஞானத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

கேசவன் கையினில் சுழன்றிடும் சக்கரம்
கேடையம் ஆகியே காத்திடும் தர்மத்தை

என்னெனச் சொல்வேனோ?- அதை
எப்படிச் சொல்வேனோ?

ஒவியம்: நதியா நாகராஜ்

14/05/2017

நன்றி(டா) அப்பா



பிறந்தநாள் விழாவொன்றில்
பிள்ளைகள் மகிழ்வுறவே
பற்பல நிகழ்ச்கசிளை
படிப்படியாய் அங்கேற்றினர்....

அங்கிருந்த பிள்ளைகளோ
ஆர்வத்தின் மிகுதியாலே
ஆனந்தக் கூத்தாடினர்....,
ஆசையோடு என்மகனும்
ஆடிடவே எண்ணமுற்று
எம்கரத்தை பற்றியங்கே
ஏக்கமான பார்வையோடு
'வாங்கப்பா' என்றழைக்க!

என்ன செய்ய? ஏது செய்ய?
என்றே நான் தயங்கி நிற்க!
என்னவளோ ஏற்றிவிட்டாள்
ஏறிவிட்டேன் மேடையிலே..

சோழபுரம் பள்ளியிலே
கோலாட்டம் ஆடியுள்ளேன்
அதைத்தவிற இதுவரையில்
ஆடவில்லை மேடையிலே!

கூட்டத்திலே ஒருவனாக
ஆட்டத்திலே குதித்துவிட்டேன்
ஆச்சரியம் என்னவென்றால்?!
ஆடியதில் சிறந்தவரில்
அடியேனும் உண்டாமாம்...!!!

அகத்தினிலே சிரித்துவிட்டேன்
அப்படியே அடக்கிவிட்டேன்

சந்தோச மனத்தோடே
சிரிப்பான முகத்தோடே
அலையெல்லாம் அடங்கியதும்
அமைதியான இடமொன்றில்
வந்தமர்ந்த எம்மகனின்
வாய்மொழியை யாதுரைப்பேன்?!

'நன்றி அப்பா வந்ததற்கு'
என்றேதான் சில வார்த்தை
உதிர்த்தானே அன்போடு...
உளமாறக் கூறியதில்
உறைந்துவிட்டேன் அப்படியே.....

உண்மையிலே நானும்தான்
அவனாலே வளர்கின்றேன்

நன்றிடா அப்பா உமக்கும்

01/05/2017

அணுவை அறிவோம்



அண்டம் பிண்டம் அனைத்திலுமே
அணுவின் இருப்பே ஆதாரம்!
அணுவை ஆதியில் அறிந்தவர்கள்
அறிவில் சிறந்த தமிழர்களே!


ஐன்ஸ்டீன் கூறிய விஞ்ஞானம்!
பிரபஞ்ச ரகசிய மெய்ஞானம்!
அனைத்தும் அறிந்த சித்தர்களை
அகிலம் போற்றிட வேண்டாமா?!

அணுவின் புரோட்டான் எலெக்ட்ரான்கள்
சிவனின் லிங்கக் குறியீடே!
ஒளியின் வேகத் தாக்குதலில்
உட்கரு சக்தியாய் வெளிப்படுமே!

காலமும் தூரமும் மறைகின்ற
சாத்திரக் கதைகள் பொய்யில்லை
சார்பியல் கொள்கை விதிபோலே
பார்க்கும் கண்களே ஆதாரம்!

தூணிலும் துரும்பிலும் இருப்பதுபோல்
ஊனிலும் உயிரிலும் உறைகிறதே!
என்னிலும் உன்னிலும் இருக்கின்ற
அணுவே ஹரியென அறிந்திடுவோம்!