31/01/2018

தீக்குச்சி

தலைக்கனத்தால் அழிவது
    தீக்குச்சி மட்டுமல்ல
    தீகுண மனிதர்களும்
தான்

தந்நிலை உணர்த்திய தமிழ்


வலிகளை வரிகளாக்கினேன்
வலி குறைந்தது!

பாசத்தை வரிகளாக்கினேன்
பாசம் கூடியது!

காதலை வரிகளாக்கினேன்
காதல் பெருகியது!

நட்பினை வரிகளாக்கினேன்
நட்பு செழித்தது!

சினத்தை வரிகளாக்கினேன்
சிந்தை விரிந்தது!

பக்தியை வரிகளாக்கினேன்
பக்தி புரிந்தது!

இயற்கையை வரிகளாக்கினேன்
இதயம் குளிர்ந்தது!

தமிழை வரிகளாக்கினேன்
தன்நிலை உணர்த்தியது!

—-செ. இராசா—-

நீயின்றி நானில்லையே


வானின்றி கோள்களில்லை- நல்ல
வாழ்வின்றி இன்பமில்லை!

அணுவின்றி அண்டமில்லை- பெண்
அண்டமின்றி பிண்டமில்லை!

உயிரின்றி உடலில்லை- ஒரு
உடலின்றி உயிரில்லை!

நீரின்றி நதியில்லை!- எனக்கு
நீயின்றி நாதியில்லை!

27/01/2018

பத்மவிபூசன் இளையராஜா




ஈன்ற பொழுதைவிட
இன்றுதான் மகிழ்கின்றாள்
இளையமகன் விருதுகண்டு....

#தமிழ்த்தாயின்_தவப்புதல்வன
#பத்மவிபூசன்_இளையராஜா
வாழ்க வளமுடன்

உள்ளவர் கோடி....உழல்பவர் கோடி





"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு"

---கவியரசு கண்ணதாசர்

உனக்கும் மேலே உழல்பவர் கோடி
உலகைப்பார்த்து உண்மையைத் தேடு!


--அவரின் அடிபொடி

தமிழும் மதமும்


தமிழை விரும்பும் ஒருவருக்கு- பிறர்
மதத்தை மதிக்கத் தெரியவில்லை!
மதத்தை விரும்பும் ஒருவருக்கு- உயர்
தமிழை மதிக்கத் தெரியவில்லை!
விமர்சனம் செய்திடும் பலருக்கும்- இங்கு
நடந்திடும் அரசியல் தெரியவில்லை!

மதமுள்ள தமிழனாய்த் திரியாமல்- நல்ல
மனமுள்ள தமிழனாய் மாறிடுவீர்!
மதங்களை விமர்சனம் செய்யாமல்-நல்ல
மண(ன)முள்ள மனிதராய் மாறிடுவீர்!
பைந்தமிழ் அறத்தை சிதைக்காமல்- நல்ல
பண்புள்ள மனிதராய் மாறிடுவீர்!

தமிழால் மதங்கள் வளர்ந்ததுபோல்- நம்
தமிழும் மதத்தால் வளருமெனில்
தமிழை மதத்திற்கு தந்திடுவோம்- நல்ல
தமிழனாய் மதத்தை வாழ்த்திடுவோம்!
தமிழும் மதமும் போட்டியிட்டால்- இனித்
தமிழையே மதமாய் செய்திடுவோம்!

26/01/2018

அந்நியர் புகல் என்ன நீதி?!----களஞ்சியம் கவிதைப் போட்டி (90)-முதலிடம் பெற்றக்கவிதை



யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதெனக் கூறிய தமிழனே கேளீர்
யாவரும் உறவினர் ஆனதன் பின்னே
யாரை நீரும் அந்நியர் என்றீர்?!

தீதும் நன்றும் பிறர்தர வாரா
யாதும் அறிவோம் அறிவிலி தோழா
சூதும் வாதும் பலபல செய்து
சூழ்ச்சியால் வெல்வோர் அந்நியர் ஆவார்
........................................................
வல்லவர் உலகை ஆளுமை செய்து
வெல்பவர் என்பது உலகியல் அன்றோ?
நல்லவர் கெட்டவர் என்பது எல்லாம்
வல்லவர் நெஞ்சினில் இல்லை அன்றோ?

எதிரிக்கு எதிரியாய் வந்துநீ நின்றால்
எங்களின் வலிமை யாதென அறிவாய்?
நண்பனாய் எம்மிடம் புகலிடம் வந்து
நஞ்சினை அளிப்பது நீதியும் அன்றோ?
........................................................
வந்தாரை எல்லாம் வாழ்ந்திடச் செய்து
வசதியாய் வாய்ப்புகள் வழங்கிய தமிழா
பலரும் உன்னை ஆள்கின்ற பொழுது
புதியவன் நானும் ஆள்வது தவறோ?!

நண்பனின் வாயினில் நஞ்சினை ஊட்டிய
நரிகளின் தந்திரம் இனியும் வேண்டாம் !
பச்சைத் துரோகம் இனியும் செய்தால்
பற்களை உடைத்து கையில் தருவோம்!
........................................................

——செ. இராசா——

 https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2019020678416838/

24/01/2018

டாஸ்மாக் அல்ல

தாகம் கொண்ட வாயிக்கு
    தண்ணீர்தான் அமிர்தம்!
    (டாஸ்மாக் அல்ல) 


78வது கவிச்சரம்---வாழ்வின் தேடல்கள்


தமிழ்த்தாய் வணக்கம்:
*********************
அறம் பொருள் இன்பம் சொல்லி
அறிவுக்கண்ணை திறந்து வைத்த
தமிழ்மறையை நமக்குத்தந்த
தலைமகனைப் பெற்றெடுத்தத்
தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!


கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
அற்புதமாய் கவி படைத்து
அனுதினம் அரங்கேற்றி
குன்றின்மேல் விளக்குபோல
குறைவில்லா ஒளி வீசும்
திருமதி. குணா பாலா அக்காவை
மனமாலும் மொழியாலும்
மகிழ்ந்தே நான் வணங்குகின்றேன்!

அவை வணக்கம்:
****************
கம்பனைப் பெற்றடுத்த
கவித்தாயின் மனம்குளிர
கவிதைகள் பலசெய்து
கவிச்சரம் தொடுக்கின்ற
கவிஞர்களின் அவைதனை
கரமுயரத்தி சிரம் தாழ்த்தி
கனிவோடு வணங்குகின்றேன்!

வாழ்வின் தேடல்கள்
*******************
கருவறை தோன்றிய காலம் தொட்டு
கல்லறை சென்றிடும் காலம் வரை
வாழ்வில் தேடல்கள் யாதும் இன்றி
வாழ்வினைக் கழிப்பவர் மாக்களாவர்!

குறிக்கோள் யாதென முடிவு செய்து
குறிக்கோள் நோக்கிய பயணம் செய்து
குன்றின்மேல் விளக்கென ஒளியை வீசும்
குணங்களில் உள்ளவர் மனிதராவர்!

தேவையும் ஆசையும் குறையும் போதும்
தேடலில் முயற்சிகள் பெருகும் போதும்
தேவையைத் தெளிவுடன் தேடி நின்றால்
தேடிடும் இலக்குகள் வெற்றியாகும்!

அன்பு
******
ஆயிரம் வசதிகள் வாய்த்தாலும்
ஆயிரம் பதவிகள் கிடைத்தாலும்
அன்பில்லா மனிதரின் வாழ்க்கையிலே
அமைதியும் திருப்தியும் கிடைப்பதில்லை!

இல்லறம் நன்றாய் இருப்பதற்கும்
துறவறம் நன்றாய் அமைவதற்கும்
அடிப்படை மூலம் எதுவென்றால்
அன்புள்ள இதயம் என்றறிவோம்!

நன்றி நவில்தல்
***************
வாய்ப்பளித்த அனைவரையும்
வாழ்த்தி நானும் விடைபெறுகின்றேன்!
வாழ்க வளமுடன்!

——செ. இராசா——

22/01/2018

காகம் கரையும் சேதி


எங்கேனும் உணவிருந்தால்
எல்லோரும் வந்திடுவோம்!
பார்த்திடும் உணவை எல்லாம்
பகிர்ந்தேதான் உண்டிடுவோம்!


தவறாமல் தினம் தோறும்
தலைமேலே நீர் தெளிப்போம்!
தனிமையிலே துணையோடு
தெரியாமல் இணைந்திடுவோம்!

இருந்தவர் இறப்பாலே
இரங்கலில் கரைந்திடுவோம்!
இறந்தவர் இருப்பாகவும்
இல்லத்தில் கரைந்திடுவோம்!

கருப்பாய் இருந்தாலும்
கருப்பென்று கரையாது
கருப்பே அழகென்று
கவுரமாய் கரைந்திடுவோம்!

———செ. இராசா——

21/01/2018

மோகம் கொண்ட கதிரவனால்.....

 (இன்று எடுத்த ஒளிப்படங்கள்)



மோகம் கொண்ட கதிரவனால்
மேகமான கடலன்னை
நீல வான வீட்டைவிட்டு
நில மகளைக் காண வந்தாள்!

—செ. இராசா——


20/01/2018

நீ எந்தன் நிலா



நீ வீசும் பேரொளியால்
மண்ணிலவே உன்னழகால்
வெண்ணிலவும் வெட்குதடி!

நீ என்னை நெருங்கிவர
நெஞ்சத்தின் ஆசையெல்லாம்
வளர்பிறையாய் வளருதடி!

நீ என்னை விலகிச்செல்ல
தேகத்தின் சக்தியெல்லாம்
தேய்பிறையாய் தேயுதடி!

நீ இல்லா வாழ்வெனெக்கு
நிலவில்லா அமாவாசையாய்
இருளாகிப் போகுதடி!

நீ இருக்கும் வாழ்வெனக்கு
முழுநிலவு பௌர்ணமியாய்
முழுமைப்பேறு அடையுதடி!

——செ. இராசா——-

தெர்மாகோல் ஆட்சி

அப்பல்லோ அதிர்ச்சி
வாடிவாசல் எழுச்சி
மெரீனா புரட்சி

ஒருபக்கம் தியானம்
மறுபக்கம் சபதம்
கூவத்தூர் கும்மாளம்


முதல்வர் மாற்றம்
முன்னவர் ஏமாற்றம்
மூலவர் சிறைவாசம்

நீட்டில் கோட்டை
நாட்டில் ஓட்டை
தெர்மாகோல் ஆட்சி

கட்டண உயர்வு
விலைவாசி உயர்வு
கொடுமையில் வாழ்வு

—-செ. இராசா—-

ஆயிரம் வணக்கங்கள்


விதைக்குள் பொதிந்த விருட்சமாய்
கதைக்குள் பொதிந்த கருவாய்
உயிரில் பொதிந்த தமிழே
உமக்கு ஆயிரம் வணக்கங்கள்!

மலரில் மறைந்த தேனாய்
பாலில் மறைந்த நெய்யாய்
எங்கும் ம(நி)றைந்த கவியே...
உமக்கு நூறாயிரம் வணக்கங்கள்!

உடலில் பிறக்கும் செல்களாய்
கடலில் பிறக்கும் அலைகளாய்
தமிழில் பிறக்கும் கவிகளே
உமக்குப் பல்லாயிரம் வணக்கங்கள்!

—-செ. இராசா—-

19/01/2018

அருவி

வெண்மேகம் தழுவியதால்
மலையரசி நாணுகின்றாள்
#அன்பு அருவியானது

18/01/2018

நீரின்றி நிகழாது பிறப்பு


நீரில் தவழ்ந்து
நீரில் இணைந்து
நீரில் உதித்த கருவே!

நீரில் வளர்ந்து
நீரில் மிதந்து
நீர்க்குடம் உடைத்த சிசுவே!

நீரில் குளித்து
நீரைக் குடித்து
நீர்கொண்டு எழுந்த உருவே!

நீருடன் கலந்தோ
நீரெனக் கரைந்தோ
நீராய் மாறிடும் விந்தையே......!

நீரின்றி நிகழாது பிறப்பு!
---செ. இராசா----

14/01/2018

முதல் கோப்பை



முதல் காதல்
முதல் முத்தம்
முதல் வெற்றி
அந்த முதல் வரிசையில்
மறக்க முடியாத மற்றொன்று.....?!!

ஆம்....
அந்த முதல் கோப்பை...
அது வெற்றிக் கோப்பையல்ல
அது வெறியேற்றிய கோப்பை

அக்கணமும் மறவாது
அந்நினைவும் அகலாது
..........
அன்றோடு முடித்தவரும் உண்டு
அன்றுதொட்டு தொடர்பவரும் உண்டு

சிறு தீர்த்தமாய் குடிப்பவரும் உண்டு
பெருந் தீர்த்தமாய் குளிப்பவரும் உண்டு
........
அவன் அருந்தினான் அன்று- அது
அவனை அருந்துகிறது இன்று
........
அவன் மட்டுமா அருந்துகின்றான்
அவளும் தான் அருந்துகின்றாள்...
.........
அட... அங்கே யாரது மாணவர்களா?!!
ஆமாம்...அருகில் யாரது?
................
அய்யகோ....

போதும்....போதும்

——செ. இராசா——-

12/01/2018

தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்


“நான் யார்?!”
எனக்குள் ஒரு கேள்வி
எந்நாளும் ஒலித்தது...

அம்மாவிடம் கேட்டேன்
“நீ லூசா...” என்றார்..

அப்பாவிடம் கேட்டேன்
பதிலே இல்லை...

யாரிடம் கேட்டாலும்
அம்மாவின் பதிலே சொன்னார்கள்

கேட்பதை நிறுத்திவிட்டேன்
தேடலை நிறுத்தவில்லை...

எதேச்சையாய் ஒரு புத்தகம் கண்டேன்
என் தேடலின் பதிலை அங்கே கண்டேன்
பதிலைச் சொன்னது “நான் யார்?” புத்தகம்
பதிலைச் சொன்னவர் “சுவாமி விவேகானந்தர்”

குறிப்பு:
********
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று அவரால் ஆத்ம சுத்தம் அடைந்த எத்தனையோ ஆத்மாக்களில் நானும் இருப்பேன் என்று உறுதி கூறிக்கொள்கின்றேன்.

அவர் ஏற்றிய தீபம் என்னுள் எரிந்து, மயிலாப்பூர், மதுரை, கவுகாத்தி மற்றும் கல்கத்தா இராம கிருஷ்ண மிஷன்கள் வரை அழைத்துச்சென்று, எத்தனை மதங்களோ அத்தனை பாதைகள் என்ற சமத்துவ சிந்தனையை என்னுள் விதைத்து, இன்று அது அழகான விருட்சமாக என்னுள் வளர மிகவும் துணை புரிந்த அந்த மகானை மனமார போற்றி வணங்குகின்றேன்.

தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!

—செ. இராசா—

11/01/2018

???????????????????

என் மகளின் கருணை
அவள் தலையில் தெரிந்தது
......../

அறிஞருக்கு அழகு

அறிஞருக்கு அழகு
அவமதித்து பழிப்பதல்ல...
அனுசரித்து சகிப்பதே...

அறிந்தது அணுவளவு
அறியாதது அண்டமளவு...
அறிவோம் அதை முதலில்


அகிலத்தை தன்னுள்ளும்
அகிலமே தானாகவும்
அறிவாலே உணர்ந்தவன்
அனைவரையும் மதிப்பான்!
அனைத்தையும் ரசிப்பான்!

——செ. இராசா——-

08/01/2018

76வது கவிச்சரம்---நல்வழிக்கான காரணிகள்

 

தமிழ்த்தாய் வணக்கம்
*********************
தன்னம்பிக்கை தந்துயர்த்தும்
தாய்மொழியாம் தமிழ்மொழியை
தலைகுனிந்து வணங்குகின்றேன்!
தலைநிமிர்ந்து வாழ்த்துகின்றேன்!

கவிச்சரத் தலைமை வணக்கம்
***************************
மலரத்துடிக்கும் மொட்டுக்களை
மலரவைக்கும் கதிரவன்போல்
மலைக்கோட்டை மாநகரில்
மதிப்புயர வீற்றிருக்கும்
மாண்புமிகு சகோதரியாம்
திருமதி. காவிய சேகரனை
மனமாலே மொழியாலே
மகிழ்வுடனே வணங்குகின்றேன்!

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
*******************************
ஆயிரம் குழுமங்கள்
அனுதினம் பூத்தாலும்
அனைவருக்கும் முன்னோடியாய்
ஆதவன்போல் ஒளிர்கின்ற
அவையினை நான் வணங்குகின்றேன்!
அனைவரையும் போற்றுகின்றேன்!

நல்வழிக்கான காரணிகள்
************************
நல்லறத்தை போற்றுகின்ற
நன்மைமிகு மனிதர்களும்
நல்வழியைக் காட்டுகின்ற
நல்லபல நூல்களும்
நாளும் பெருகிடவே
நான் இறையை வேண்டுகின்றேன்!

புத்தகங்கள்
************
பெற்ற அறிவைச் சொல்பவர்கள்
பெற்றோர்கள் என்றறிவோம்!
அறிந்த அறிவைச் சொல்பவர்கள்
ஆசிரியர் என்றறிவோம்!

கற்றதையும் பெற்றதையும்
சொல்லுகின்ற நண்பர்களை
சொத்துக்கள் என்றறிவோம்!
சொந்தங்கள் ஆக்கிடுவோம்!

நல்வழி சொல்லும் நட்பிருந்தால்
நமக்கு ஒரு துணையாகும்!
நல்வழி சொல்லும் நூலிருந்தால்
நமக்கு நூறு நண்பனாகும்!

தரணியிலே தலைநிமிர
தமிழ்நூல்கள் பயின்றிடுவோம்!
தமிழ்மறையாம் திருக்குறளை
தவறாமல் படித்திடுவோம்!

நன்றி நவில்தல்
***************
வாய்ப்பளித்த அனைவரையும்
வாழ்த்தி நானும் விடைபெறுகின்றேன்!
வாழ்க வளமுடன்!

—செ. இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=1179148362219632&set=gm.1960711600914413&type=3&theater&ifg=1 

தனிமையிலே இனிமை


அன்பின் ஆழத்தைக் கூட்டிடும் தனிமை!
அறிவின் அடர்த்தியைப் பெருக்கிடும் தனிமை!
அலைச்சுழல் வேகத்தைக் குறைத்திடும் தனிமை!
அசந்தால் அடியினில் வீழ்த்திடும் தனிமை!

கருவில் உருவத்தைப் பதித்திடும் தனிமை!
கவிதையின் உருவமாய் மாற்றிடும் தனிமை!
கடவுள் யாரெனச் சொல்லிடும் தனிமை!
கடமை யாதென உணர்த்திடும் தனிமை!

முதுமையின் நிலைமையை அடைந்திடும் பொழுதில்
இளமையின் நினைவினைச் சொல்லிடும் தனிமை!
வெறுமையை நினைவுகள் உணர்த்திடும் பொழுதில்
இறைவனின் நினைவினைத் தோற்றிடும் தனிமை!

தனிமையின் இனிமை தந்திடும் சுகத்தை
தமிழால் சொன்னது ஔவையின் தனிமை!
தவமும் தனிமையும் தந்திடும் வலிமையை
தரணிக்கேச் சொன்னது தமிழனின் பெருமை!

——செ. இராசா——

அறியாமை

அறியாத ஒன்றை
அறிந்ததாய் நினைப்பதும்,
அறியாதது எதுவென்றே
அறியாமல் இருப்பதும்
அறியாமை என்பதாகும்

சொல்லுங்கண்ணே சொல்லுங்க


வாழ்ந்தவர்கள் வீழ்ந்த கதை
வீழ்ந்தவர்கள் உயர்ந்த கதை
உயர்ந்தவர்கள் சரிந்த கதை
சரிந்தவர்கள் எழுந்த கதை
....................
படிப்பினை பாடம் சொல்லும்
பலரது கதைகள் கண்டும்;
வேண்டுவதை விதைக்காமல்
வெட்டுவதைக் களையாமல்
காலத்தை விரையமாக்கி
காலனிடம் சேருவது
எவ்வகையில் நியாயமென்று
எடுத்துரைப்பீர் நண்பர்களே...

----செ. இராசா----

05/01/2018

இரண்டு கேள்விகள்


கவிதையும் சிசுவும் பிறப்பதற்கு- சிறு
கருவே மூலமாய் அமைகிறது!
கவிதையும் சிசுவும் பிறக்குமுன்னே- மறு
கவிதையும் சிசுவும் தோன்றிடுமா?!

கருவை சிதைப்பது பாவமென்ற- நல்ல
கருத்தினை அறிந்த பெரியோரே....
கருவின் வடிவம் தோன்றுமுன்னே- அந்த
கருவைத் திருத்துதல் சரிதானோ?!

——செ. இராசா——

மதி ஒளிருதடா




என் காதல் கதிரவனே
என்னை நீ நெருங்கிவர
என்னுள் மதி ஒளிருதடா!

—-செ. இராசா—-

மௌனத்தின் வார்த்தைகள் அறியாயோ?!---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (87) பங்குபெற்ற கவிதை


மனமே மனமே நல்மனமே- நீ
மௌனத்தின் வார்த்தைகள் அறியாயோ?!
மௌனத்தை அறிந்தால் நல்மனமே- நீ
மௌனமாய் எமக்கும் சொல்வாயோ?!

தினம்தினம் ஆயிரம் கதைப்போரே- உள்
மனம்கூறும் வார்த்தைகள் மறந்தீரோ?
சினங்களால் சீறிடும் மாந்தர்களே- நீர்
மௌனத்தின் வார்த்தைகள் மறந்தீரோ?

புத்தரின் பல்லினைக் காப்பவரே- அவர்
சித்தமே மௌனம் மறந்தீரோ?
சத்திய காந்தியை அறிந்தவரே- அவர்
சக்தியே மௌனம் அறிவீரோ?

பக்தியின் நாமங்கள் சொல்பவரே- இறை
பக்தியின் மௌனத்தை மறந்தீரோ?
ஆத்திக வாதங்கள் செய்பவரே- நீர்
ஆன்மாவின் மௌனத்தை அறிவீரோ?

சூனிய இரகசியம் அறிவதற்கு- அதன்
சூத்திரம் யாதனெ அறிந்திடுவோம்!
சூட்சுமம் தெளிவுறப் புரிவதற்கு- நாம்
சூனிய மௌனத்தை கடைப்பிடிப்போம்!

எச்சில் படாத வார்த்தைகளால்- நாம்
எண்ணத்தில் மௌனமாய் பேசிடுவோம்!
எங்கும் இருக்கின்ற இறைநிலையை- நாம்
ஏகாந்த மௌனத்தில் உணர்ந்திடுவோம்!

——-செ.இராசா——

04/01/2018

போதை

முகநூல் கவிஞன் சொன்னான்
முகநூலே போதையென்று...

விளையாட்டு வீரன் சொன்னான்
விளையாட்டே போதையென்று...

அரசியல் பேதை சொன்னான்
அதிகாரம் போதையென்று...

அதிகார அடிமை சொன்னான்
அய்யா வார்த்தை போதையென்று...

தன்மானத் தமிழன் சொன்னான்
தமிழ்மொழியே போதையென்று....

தடுமாறும் தமிழன் சொன்னான்
தங்கிலீசு போதையென்று.....

—-செ. இராசா—-

02/01/2018

அறத்துப்பால் அறிவோம்




என்னுரை
***********
அறநூலாம் திருக்குறளின்
அறத்துப்பால் அழகுபற்றி- யாம்
அறிந்த விசயங்களை- பிறர்
அறிய எழுதுகின்றேன்-என்
அறிவில் பிழை இருப்பின்
அறியாதோன் பிழைபொறுக்க
அறிஞர்கள் கால்களிலே- இந்த
அறிவிலிநான் வீழுகின்றேன்!
வணக்கம்
**********
மனித வாழ்வின் தரமுயர்த்த
மதிப்புமிக்க நூல்தந்த
மாண்புமிகு வள்ளுவரை
மனதாலே மொழியாலே
மகிழ்ந்தே நான் வணங்குகின்றேன்!

நான்கு இயல்கள்
*************************
தனிமனித வாழ்வின் நெறி
தலைசிறக்க வேண்டிடவே
நான்கு மறை போலமைந்த
நான்கு இயல் கண்டிடுவீர்;

௧.       அறநூலின் முன்னுரையாய்;- #பாயிரவியல்
௨.       வாழ்வின் முதற்பகுதி சிறப்பதற்கு;- #இல்லறவியல்
௩.       வாழ்வின் இறுதிப்பகுதி சிறப்பதற்கு:- #துறவறவியல்
௪.       மிருந்தும் எதிர்விளைவா?:- #ஊழியல்

. #பாயிரவியல்
**********************
1.       படைத்தவன்  சிறப்பறிய:- #கடவுள்_வாழ்த்து

2.       படைப்பிலேயே சிறப்பான
மழையின் சிறப்பறிய:- #வான்சிறப்பு

3.       படைப்பிலேயே உயர்வான
மனிதரின் தரமறிய:- #நீத்தார்_பெருமை

4.       மனிதரிலேயே சிறப்பான
மனிதராய் ஆவதற்கு:- #அறன்_வலியுறுத்தல்!

. #இல்லறவியல்
************************
1.       இல்லறம் நடத்துகின்றன
ஆண்மகன் கடைமையறிய:- #இல்வாழ்க்கை

2.       இல்லறம் நடத்துகின்ற
பெண்மகள் கடமையறிய:- #வாழ்க்கை_துணைநலம்

3.       பிள்ளைக்கு செய்கின்ற
பிள்ளைகள் செய்கின்ற
கடமைகள் நன்றறிய:- #புதல்வரைப்_பெறுதல்

4.       குடும்பத்தின் ஆதாரமாம்
அன்பினை எடுத்துச்சொல்ல:- #அன்புடைமை

5.       குடும்பத்தின் அன்பானது
வெளியேவும் வழிந்தோட :- #விருந்தோம்பல்

6.       வழிந்தோடும் அன்பானது
சொல்லாக மொழிவதற்கு:- #இனியவை கூறல்

7.       அன்போடு அன்பிணைந்து
நன்றியாய் இருப்பதற்கு:- #செய்ந்நன்றி_அறிதல்

8.       நன்றிக்கடன் பட்டாலும்
நடுவுநிலை பாதுகாக்க :- #நடுவு_நிலைமை

9.       வெற்றிகள் குவிக்கையிலே
பணிவுநிலை எடுத்துச்சொல்ல:- #அடக்கமுடைமை

10.   வெற்றியோ தோல்வியோ
ஒழுக்கம் பிறழாதிருக்க:- #ஒழுக்கமுடைமை

11.   ஒழுங்கீனத்தின் உச்சபட்ச
தவறினைச் சுட்டிக்காட்ட :- #பிறனில்_விழையாமை

12.   பிறரின் கொடுமைகளை 
பொறுத்திடும் தன்மை சொல்ல:- #பொறையுடைமை

13.   பிறர்மேல் பொறாமைகொள்ளும்
பொல்லாதத் தவற்றைச்சொல்ல:- #அழுக்காறாமை

14.   பிறர்பொருள் அபகரிக்கும் 
தவறினை எடுத்துச்சொல்ல :- #வெஃகாமை

15.   பிறர்குறை பேசுகின்ற 
குணத்தினை தடுத்துச்சொல்ல: #புறங்கூறாமை

16.   பிறரிடம் பேசுகின்ற
வீண்பேச்சை நிறுத்தச்சொல்ல:- #பயனில_சொல்லாமை

17.   பிறருக்கு தீங்குதரும்
தீவினையின் விளைவைச்சொல்ல:- #தீவினையச்சம்

18.   பிறருக்கு உதவிசெய்யும்
குணத்தின் பெருமை சொல்ல:- #ஒப்புரவறிதல்

19.   ஏழைக்கு அள்ளித்தரும்
கொடையின் பெருமை சொல்ல:- #ஈகை

20.   அள்ளித்தந்த வாழ்வில்வரும் 
புகழின் பெருமை சொல்ல:- #புகழ்

. #துறவறவியல்
********************
1.       அன்பு கருணையாகி
அனைத்துயிர் மேல்பரவ:- #அருளுடைமை

2.       தனக்காக கொன்றுதின்னால்
கருணையும் சாகுமென்று:- #புலான்மறுத்தல்

3.       இலட்சியம் அடைவதற்கு 
மனப்பயிச்சி தேவைசொல்ல:- #தவம்

4.       இலட்சியம் அடைந்ததைப்போல்
நடிப்பவர்கள் தவறைச்சொல்ல:- #கூடாவொழுக்கம்

எண்ணம் சொல் செயலாலே
வருகின்ற விளைவுகளை  
வரிசையாக இங்கு பாரீர்:

5.       களவு எண்ணம் தவறென்று:- #கள்ளாமை
6.       தீங்குதரா உண்மை பேச:- #வாய்மை
7.       சினத்தின் தீங்கு சொல்ல:- #வெகுளாமை
8.       துன்பத்தின் தீங்கு சொல்ல :- #இன்னா_செய்யாமை
9.       கொலைச்செயலின் தீங்கு சொல்ல:- #கொல்லாமை

10.   நிலையில்லா உலகத்திலே
நிலையென்று எண்ணுவதின்
நிலைபற்றி எடுத்துரைக்க:- #நிலையாமை

11.   அனைத்தையும் அறிந்த பின்னே
பற்றில்லா குணம் வளர்க்க:- #துறவு

12.   அறிவால் தெளிந்தவரே
   அனைத்தையும் பெற்றதாக
அறிவின் பெருமை சொல்ல:- #மெய்யுணர்தல்

13.   அறிவையும் அழிப்பதோடு
அனைத்தையும் அழிக்கின்ற
ஆசையை சீரமைக்க:- #அவாவறுத்தல் 

. #ஊழியல்:
************
1.       அறவழியில் சென்றபின்னும்
வளமில்லா வாழ்வென்றால்
கர்மவினை என்றறிய:- #ஊழியல் 

என்னுரை
****************
இல்லறத்தின் உச்சம் அன்பாகும்!
துறவறத்தின் உச்சம் அறிவாகும்!
இரண்டையும் பயில்வது சிறப்பாகும்!
வாழ்க வளமுடன்! நன்றி!

----செ.இராசா---


திருக்குறள் கட்டுரை-1 (26.12.2017)
***********************************

அனைத்து நல் உள்ளங்களுக்கும் உங்கள் நண்பன் செ. இராசாவின் அன்பார்ந்த வணக்கங்கள்.

அனைவரும் திருக்குறளைப் பற்றி அதிகமாக எழுதிவிட்டதாலும், அனைவருக்கும் திருக்குறளைப் பற்றி நன்றாகவேத் தெரியும் என்பதாலும்  தமிழ்ப்பாடம் அதிகம் படிக்காத ஒரு தமிழ் இளைஞர்களை மையமாக வைத்து, மிகவும் சுருக்கமாக, அவர்களுக்கு சீக்கிரம் புரியும் வகையில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன். இதில் அறத்துப்பால் அமைக்கப்பட்ட விதத்தைப்பற்றி மட்டும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாகவும் சமர்ப்பிக்கிறேன்.

திருக்குறள் என்றால் என்ன?

நாம் புதிதாக ஒரு மின்சாதனப்பொருட்கள் (Household items) வாங்கினால் அதோடு சேர்த்து ஒரு கையேடு (Manual) தருவார்கள். அதைப் படித்தால் நாம் அதை நன்றாக இயக்கவும் பராமரிக்கவும் முடியும். அதைப்போல, இவ்வுலகில் மனிதனுக்கும் அவன் சிறப்பாக வாழ்வதற்கு பல மதங்கள் சார்ந்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவையாவன பகவத்கீதை, பைபிள், குர்ரான்......... போன்ற புனித நூல்களாகும்.

ஆனால், திருக்குறளானது அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான கையேடாகும். மேலும், திருக்குறள் அனைத்து மனிதர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான வாழ்க்கை நெறிமுறை விளக்க நூலாகும்.

திருக்குறள் கட்டுரை-2 (27.12.2017)
****************************************************
(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான நேற்றைய பதிவின் தொடர்ச்சியாகும்)
அறம் என்றால் என்ன?
அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே அறமாகும்.

அறநூல்கள் என்றால் என்ன?
 
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லித்தரும் அனைத்து நூல்களும் அறநூல்களாகும்.

திருக்குறள் முழுவதுமே அறநூல் என்றால், அறத்துப்பால் தவிர்த்து மற்ற இரண்டு பால்களும் ஏன் உள்ளன?
 
அறத்தின் சிறப்பையும் அதன் பயனையும் அறத்துப்பாலில் கூறும் வள்ளுவர், பொருளீட்டுவதில் கடைப்பிடிக்க வேண்டிய அறத்தை பொருட்பாலிலும், இன்பத்தை அனுபவிப்பதில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறத்தை கவிச்சுவையோடு காமத்துப்பாலிலும் கூறுவதால் மற்ற இரண்டு பால்களும் திருக்குறள் என்னும் அறநூலில் உள்ளன.

பாயிரம் என்றால் என்ன? ஏன்?

எந்த ஒரு காவியமோ அல்லது அறநூலோ படைப்பதற்கு முன்பாக கடவுளை வாழ்த்தியோ அல்லது நூல் முழுமையிலும் உள்ள கருத்தை ஒரு முன்னுரை போலவோ எடுத்துச்சொல்வது வழக்கம். அப்படி பாடியதே பாயிரம்.

படைத்தவரின் (கடவுளின்) சிறப்பினை கடவுள் வாழ்த்தில் கூறிய வள்ளுவர், பொதுவான இறைவனையே கூறுகின்றார். அறம், பொருள், இன்பம் பயில்வதன் நோக்கமே வீடுபேறு அடைவதற்காகத்தான் என்ற கருத்தை நாம் கடவுள்வாழ்த்தின் மூலமாகக் அறியலாம்.

படைத்தவரை படைப்பில் காணலாம் என்பதால், இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமான மழை பற்றி வான் சிறப்பில் சொல்கின்றார்.

மனிதரில் யார் உயர்ந்தவர்கள் என்றும், அறம் ஏன் பயிலவேண்டும் என்றும் மேலும் நூல் படைத்ததன் நோக்கத்தையும் மற்ற இரண்டு அதிகாரங்களிலும் சொல்கின்றார். (துறவியின் சிறப்பினை நீத்தார் பெருமை அதிகாரத்திலும், அறத்தின் சிறப்பை அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும் காணலாம்.)


திருக்குறள் கட்டுரை-3 (28.12.2017)
***************************************

(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான முதல் இரண்டு பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?
***********************************************
அறத்துப்பாலில் மொத்தம் நான்கு இயல்கள் (பிரிவுகள்) உள்ளன. அவையாவன;

1. பாயிரவியல் (முந்தைய பகுதியில் பார்த்தோம்)
2. இல்லறவியல்
3. துறவறவியல்
4. ஊழியல்

உண்மையில் பார்த்தால் இரண்டு இயல்களையே (2 & 3) நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பாயிரவியல் என்பது அனைத்து பால்களுக்குமே உள்ள பொதுவான ஒரு இயலாகும்.

நான்காவது வரும் ஊழியல் என்பது, விதிக்கொள்கை சம்பந்தமான ஒன்று. அதை, ஏன் அறத்துப்பாலில் வைத்தனர் என்பதை பின்பு பார்ப்போம்.
ஆக, நாம் இப்பொழுது இரண்டு இயல்களான இல்லறவியல் மற்றும் துறவறவியலை வைத்ததன் காரணத்தை மட்டும் இங்கே விரிவாகக் காண்போம்.

இல்லறவியல் மற்றும் துறவறவியல் ஏன் வைக்கப்பட்டுள்ளது?

பொதுவாக ஒரு தனிமனிதனுடய வாழ்வானது அவன் வயதினை அடிப்படையாக வைத்து நான்காக வகுக்கப்படுகிறது.

அவையாவன;
1. பிரம்மச்சரிய நிலை (கற்கும் பருவம்)
2. கிரகஸ்த நிலை (குடும்பஸ்தன்)
3. வானபிரபஸ்த நிலை (துறவுக்குத் தயாராகும் நிலை)
4. துறவற நிலை (துறவற நிலை)

மனித வாழ்வானது இறைநிலையை நோக்கியப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு படியாக மனிதன் முறையாகக் கடந்தால்தான் அந்நிலையை அடையமுடியும்.

பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை உள்ள பருவம் கல்வி பயில்வதற்கான பருவம். அதுவே முதல் நிலை.

திருமணம் ஆனதலிருந்து தன் மகன்/மகள் திருமணம் ஆகும்வரை உள்ள பருவம் கிரகஸ்த நிலை. அதுவே இரண்டாம் நிலை.

மகன்/ மகள் திருமணமான பிறகு, அவனுக்கு வழிகாட்டிக்கொண்டு ஆனால் முழுமையாக ஆளுமை செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிவருதல் வானபிரபஸ்த நிலை. அதுவே மூன்றாம் நிலை.

முழுமையாக விலகி, இறைவனை நோக்கிப் பயணித்தல் துறவுநிலை. அதுவே நான்காம் நிலை.

வள்ளுவர் மேலே உள்ளவற்றை மேலும் சுருக்கி முதல் இரண்டு நிலைகளை இல்லறவியல் என்றும், அடுத்த இரண்டு நிலைகளை துறவறவியல் என்றும் சுருக்கிவிட்டார்.

ஆக, ஒரு தனி மனிதனுடைய ஒழுக்க நெறியானது அவனுடைய இரண்டு பருவநிலைகளுக்கும் சொல்ல வேண்டி உள்ளதால் இவை இரண்டும் அறத்துப்பாலில் வருகின்றது. இல்லறத்தின் முடிவில்தான் துறவறம் ஆரம்பிக்கிறது. இவை இரண்டுமே தனி மனித வாழ்வியல் முறைக்குத் தேவையாக உள்ளதால். இவை இரண்டையும் அறத்துப்பாலில் வள்ளுவர் வைக்கின்றார்.

திருக்குறள் கட்டுரை-4 (29.12.2017)
***************************************


(வணக்கம் நண்பர்களே. இது திருக்குறள் சம்பந்தமான முதல் மூன்று பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

இனி நாம் இல்லறவியல் மற்றும் துறவறவியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் வரிசை முறை அமைக்கப்பட்ட விதத்தைப்பற்றி காண்போம்.
ஒரு குடும்பம் என்பது குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி மற்றும் அவர்தம் மக்கள் இணைந்த அமைப்பாகும்

குடும்பத்தலைவனின் கடமையைஇல்வாழ்க்கைஅதிகாரத்திலும், குடும்பத்தலைவியின் கடமையைவாழ்க்கைத் துணைநலம்அதிகாரத்திலும், பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் அந்த மக்கள் திருப்பிச் செய்ய வேண்டிய கடமையினைபுதல்வரைப் பெறுதல்அதிகாரத்திலும் காணலாம்.

ஒரு குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழ்வது அன்பாகும். ஆகவே, “அன்புடைமைஅதிகாரம் அடுத்ததாக வருகிறன்றது.

ஒரு குடும்பத்தில் ஆரம்பித்த அன்பானது அப்படியே அதிகரித்து வெளியிலும் பரவ ஆரம்பிக்கிறது. அடுத்தவர்களிடம் நம் அன்பை காட்டும் வழி அவர்களை அழைத்து விருந்து கொடுத்து இன்ப மொழி பேசி உறவாடுவதிலே சாத்தியம் என்பதால்விருந்தோம்பல்மற்றும்இனியவைகூறல்அதிகாரங்கள் வருகின்றன.

அழைத்து விருந்து கொடுத்த குடும்பத்திற்கு பதில்விருந்து கொடுத்து பிற குடும்பங்களுக்கு இடையில் ஒரு இணக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டு நன்றி பாராட்ட வேண்டும் என்றுசெய்ந்நன்றி அறிதல்அதிகாரம் வருகின்றது.

இப்பொழுது நாம் ஒருவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பதற்காக வழக்கு என்று வரும்போது அவர்கள் சார்பாக சாய்ந்துவிடக்கூடாது என்றுநடுவு நிலைமைவருகின்றது.

ஒரு விசயத்தில் வென்று விட்டால் துள்ளுவதும், தோற்றுவிட்டால் துவண்டு போய் ஒழுக்க மீறல் விசயங்களில் ஈடுபடுவதும் தவறென்று சொல்வதற்காகஅடக்கமுடைமைமற்றும்ஒழுக்கமுடைமைஅதிகாரங்கள் வருகின்றன.
ஒழுக்கமீறலில் உச்சபட்ச ஒழுங்கீனமாக அமைவது அடுத்தவர் மனைவியை பார்ப்பதாகும். ஆகவே தான் ஒழுக்கமுடமைக்கு அடுத்தாற்போலபிறனில் விழையாமைவருகின்றது.

பிற குடும்பங்களுக்கு இடையிலான உறவை வளர்ப்பதற்குத் தேவையான மற்றும் தவிர்க்க வேண்டிய விசயங்களை அதற்கடுத்தாற்போல் உள்ள அதிகாரங்களில் வரிசைபடுத்தப் படுகின்றது. அடுத்தவர்கள் தீமை செய்தாலும் பொறுமை காக்க வேண்டும் என்றுபொறையுடைமைஅதிகாரத்திலும், அடுத்தவர் வைத்துள்ள வளம்பார்த்து பொறாமை படக்கூடாது என்பதனைஅழுக்காறாமைஅதிகாரத்திலும், அடுத்தவர் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பதைவெஃகாமைஅதிகாரத்திலும், அடுத்தவர்கள் இல்லாத நேரத்தில் புறணி பேசக்கூடாது என்பதனைபுறங்கூறாமைஅதிகாரத்திலும், அடுத்தவர்களிடம் சும்மா வெட்டிக்கதை பேசக்கூடாது என்பதனைபயனில சொல்லாமைஅதிகாரத்திலும், அடுத்தவருக்கு தீங்கு செய்யக்கூடாது என்பதனைதீவினையச்சம்அதிகாரத்திலும் காணலாம் 
.
குடும்ப வாழ்க்கையின் அழகே ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொள்வதில்தான் உள்ளது என்பதற்காகஒப்புரவறிதல்அதிகாரம் வருகின்றது. எதுவும் இல்லாத வறியவர்களுக்கு, எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் உதவியே பேருதவியாகும், அதுவேஈகைஎன்ற அதிகாரத்தில் வருகின்றது.

இவை அனைத்தையும் முறையாகச்செய்து நாம் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதான புகழ் நிறைந்த வாழ்வாக அமையவேண்டும் என்றுபுகழ்என்ற அதிகாரம் இல்லறவியலில் இறுதியாக வருகின்றது.

திருக்குறள் கட்டுரை-5 (30.12.2017)
******************************************************
(வணக்கம் நண்பர்களே, இது திருக்குறள் பற்றிய முதல் நான்கு பகுதிகளின் தொடர்ச்சியாகும்)
இதற்கு முந்தைய பதிவில் இல்லறவியலில் அமைத்துள்ள அதிகாரங்களின் வரிசை அமைப்பு பற்றியும் அவை அமைந்த விதம் பற்றியும் பார்த்தோம்.

அன்பை ஆதாரமாக வைத்து ஆரம்பித்த இல்லறமானது அடுத்தவர்க்கு உதவியும், வறியவர்களுக்கு ஈகையும் செய்து, புகழ்பெற வாழும் வாழ்க்கையைப்பற்றிக் கூறியதைப் போன பதிவில் விபரமாகப் பார்த்தோம்.

இல்லறத்தின் முடிவில், அதன் தொடர்ச்சியாக துறவறம் உள்ளதால்அதனை வரிசைப்படுத்திய ஒழுங்குமுறையை நாம் இப்போது காண்போம்.

அன்பானது குடும்பத்தில் தொடங்கி சமுதாயத்தில் பரவி அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிடத்திலும் அது கருணையாக மாறுவதை "அருளுடைமை" அதிகாரத்திலும், அதன்பொருட்டு தனக்காக பிற உயிர்களைக் கொன்று புசிக்கக்கூடாது என்பதை "புலால் மறுத்தல்" அதிகாரத்திலும், சரியான பயிற்சிமுறையுடன் நாம் தினம் முயன்றால் நாம் எண்ணிய அனைத்தும் நடக்கும் என்பதனை "தவம்" என்ற அதிகாரத்திலும், தவத்தால் தோன்றும் சிறிய அளவிலான ஆன்மீக ஞானத்தால் தான் அனைத்து ஞானமும் கிடைத்ததாகத் எண்ணி சிலர் செய்யும் வெளிவேஷங்களும் அது தேவையற்ற நடிப்பு என்பதையும் "கூடாவொழுக்கம்" அதிகாரத்திலும், எண்ணத்தால் கூடத் தவறியும் திருட்டு எண்ணம் கொள்ளக்கூடாது என்பதை "கள்ளாமை" அதிகாரத்திலும் கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் துறவறம் பயில்பவர்கள் எண்ணம், சொல், செயலில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் பற்றி "வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை மற்றும் கொல்லாமை" அதிகாரங்கள் வாயிலாகக் கூறுகின்றார்.

மேற்கூறிய அனைத்து ஒழுக்கநெறிகளையும் கடைபிடித்து, இந்த உலகில் எதுவும் நிலையில்லை என்பதனை அறிந்து, எந்த ஒரு பொருளிலும் பற்றற்று தொடர்பு கொண்டு, உண்மையான ஞானத்தை அல்லது பேரறிவை அறிவதோடு மட்டுமல்லால் தெளிந்து உணரவேண்டும் என்ற கருத்துக்களை "நிலையாமை, துறவு மற்றும் மெய்யுணர்தல்" அதிகாரங்கள் வாயிலாக வரிசையாகத் தெளிவாகக் கூறுகின்றார்

அறிவை அடைந்து உண்மையை உணர்தலே மனிதப்பிறப்பின் நோக்கம் என்ற கருத்தைத் தெளிவாகக் கூறும் வள்ளுவர், என்னதான் நாம் அறிவை உணர்ந்தாலும், மீண்டும் மீண்டும் நம்மை கீழே இழுக்கும் மாய வலையான ஆசையில் சிக்கிக்கொண்டால் அகல பாதாளத்தில் தான் விழுவோம் என்பதால், ஆசையை ஒழித்து உண்மை ஞானத்தை அடைவோமாக என்று மீண்டும் எச்சரிக்கும் விதமாக "அவா அறுத்தல்" அதிகாரத்தில் முடிக்கின்றார்.
அன்பில் ஆரம்பித்த இல்லறமானது, உண்மை ஞானத்தை அடையும் துறவறத்தில் முடிந்தாலே மனிதவாழ்வு சிறக்கும் என்பதை அழகாக அந்த அதிகாரங்களை வரிசைப்படுத்திய விதத்திலேயே நாம் அறிந்துகொள்ளலாம்.
-------(தொடரும்)

திருக்குறள் கட்டுரை-6 (31.12.2017)
******************************************************
(வணக்கம் நண்பர்களே, இது திருக்குறள் பற்றிய முதல் ஐந்து பகுதிகளின் தொடர்ச்சியாகும்)

முந்தைய பதிவுகளில் ஒரு தனி மனிதன், அவன் பருவ முதிர்ச்சிக்கு ஏற்றார்போல் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை இல்லறமென்றும், துறவறமென்றும் திருவள்ளுவர் பட்டியலிடுகின்றார் என்பதை பார்த்தோம்.
இல்லறத்தின் உச்சம் உதவிசெய்து புகழ் பெற வாழும் வாழ்வு என்றும், அதன் தொடர்ச்சியான துறவறத்தின் உச்சம் உண்மையான ஞானத்தை அடைந்து அதற்குத் தடையாக உள்ள ஆசையை ஒழிப்பது என்றும் கூறியதோடு அறத்துப்பாலை அவர் முடித்திருக்கவேண்டும். ஆனால் ஊழியல் என்ற விதிக் கொள்கையை அறத்துப்பாலின் முடிவில் ஏன் வைத்தார் என்பதை நாம் இங்கு பாப்போம்.

திருக்குறளில் ஒரே அதிகாரம் உள்ள ஒரு இயல் என்றால் அது ஊழியல் மட்டுமே. எதையும் சரியாகச் செய்யும் வள்ளுவர் ஊழியலை காரணமில்லாமலா அறத்துப்பாலின் முடிவில் வைத்திருப்பார்?....மிகவும் தெளிவான காரணத்தோடு தான் அவர் வைத்துள்ளார். என்னதான் ஒருவன் சரியாக இல்லறம் மற்றும் துறவற விதிகளை பின்பற்றினாலும், சில பல சமயங்களில் அவனுக்கு சறுக்கல் ஏற்படுவதற்குக் காரணம் யாதென்றால் அது அவனின் முந்தைய கர்மவினை என்று சொல்லப்படுகின்ற  விதியே ஆகும். ஆகவே நாம் என்னதான் முயற்சி செய்தாலும் சில சமயங்களில் தோல்வியும் வருத்தமும் வருவதற்குக் காரணம் ஊழ் என்று  உணர வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

அனைத்தும் விதியின் செயலென்று, செய்ய வேண்டிய முயற்சியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உழியலை முதலில் சொல்லாமல் அறத்துப்பாலின் இறுதியில், பொருட்பால் தொடங்குவதற்கு முன்பாகச் சொல்லுகின்றார். ஏனெனில் ஒருவன் பொருள் ஈட்டி இன்பம் அனுபவிப்பதற்கும் ஊழ் சரியாக அமைய வேண்டும் என்பதால், ஊழியலை சரியான இடத்தில் வள்ளுவப் பெருமகனார் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கின்றார்.

அருட்தந்தை வேதாந்த மஹரிஷி அவர்களும் இதையே பின்வருமாறு விளக்குகின்றார். ஒருவன் பிறந்ததிலிருந்து என்னதான் தவம் தற்சோதனைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவனுடைய பிராரப்த கர்மா என்று சொல்லப்படுகின்ற முன்வினைப் பதிவு வேறு மாதிரி இருந்தால், அதைப்பொறுத்தே இப்பொழுது உள்ள வாழ்வு அமையும் என்கின்றார். அதற்காக நாம் அனைத்தும் விதி என்று சும்மாவே முயற்சி இல்லாமல் இருந்தால் வருங்காலம் மேலும் வீணாகும் என்று அதற்கான வழிமுறைகளையும் விளக்குகின்றார்.

வள்ளுவர் வகுத்த ஊழியலானது தெளிவாக உணர்த்துவது யாதெனில்,  நாம் இன்று அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் இன்பங்கள் நேற்றைய வினைகளின் விளைவுகளாகும் என்பதை உணர வேண்டும். மேலும், நாம் அறம் செய்யும் நோக்கத்தில் என்றும் தவறிவிடாது தொடர்ந்து அறம் செய்து இன்றைய வாழ்வும் நாளைய வாழ்வும் சிறப்புற வாழ வேண்டும் என்பதாகும். இப்படியாக ஒரு தனிமனிதன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறம் இவையென அறத்துப்பாலில் திருவள்ளுவர் கூறுகின்றார்.

------அறத்துப்பால் இனிதே முடிந்தது-----

(முற்றும்)